Friday, September 3, 2010

டேக்ஸ் கட்டாத கோடீஸ்வரர்கள்.


சென்ற வாரத்தில் ஒரு நாள் அவினாசி பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ் ஏற சென்றேன். வேகமாக சென்று பஸ்ஸை நெருங்கும் போது ஒரு பிச்சைக்காரப் பெண் திடீரென குறுக்கே வந்து பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டாள்.

எனக்கு ஒரே எரிச்சல். 'சுத்த நாகரிகம்' இல்லாமல் குறுக்கே வந்து நிற்கிறாளே எரிச்சல் படுத்துகிராளே என்று.

சரிதான்.. பிச்சைக்காரர்களுக்கு ஏது நாகரிகம்?!

அவள் கையில் குழந்தை வேறு. அங்கு நிற்கும் அனைவரின் பார்வையும் என்மீதே இருப்பது போன்ற பிரமை. அவளுக்கு ஏதும் தராமல் முறைத்துக்கொண்டே பேருந்தில் ஏறினேன்.

ஓட்டுனர், நடத்துனரை காணவில்லை. சாவகாசமான பின் அவளை பார்த்தேன். வருவோரையெல்லாம் 'மடக்கி'கொண்டிருந்தாள். பரட்டை தலையுடன் கையில் குட்டி குழந்தை. பிச்சைக்காரர்களுக்கு வர்ணனை எதற்கு?. அவர்கள் தான் அனைவருக்கும் தெரிந்த 'பொது ஜனமாயிற்றே!'

இளம் வயது பெண். பாவம் காசு ஏதும் போட்டிருக்கலாமோ?

சிறிது நேரம் கழித்து டிரைவர் வந்தார். நடத்துனர் அப்பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். என்ன என்று எட்டிப் பார்த்தேன்.

நடத்துனர் கேட்பதற்க்கெல்லாம் அப்பிசைக்காரி 'கட்டுப்படாது' என்கிறாள். இவரும் விடுவதாக இல்லை. வாக்கு வாதம் போய்க்கொண்டே இருந்தது. போக போக நடத்துனர் அப்பிசைக்காரியிடமே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

நான் புரியாமல் டிரைவரை பார்த்தேன். அவருக்கோ ஒரே சிரிப்பு. நடத்துனர் அப்பெண்ணிடம் மல்லுக்கட்டிகொண்டிருந்ததை பார்த்து இவருக்கு வேடிக்கை போலும் .

''என்ன சார்?'' என்றேன் அவரிடம்.

''500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுட்டு இருக்கார். அந்த அம்மா கொடுக்க மாட்டேன்றது. அதான்'' என்றார்.

ஏனாம்?'' என்று கேட்டேன்.

''நேத்து வரைக்கும் 100 க்கு 5 ரூபா கமிசன் வாங்கிச்சு. இப்போ 7 ரூபா கேக்குது.''

என்ன, கமிசனா? '' என்றேன் ஆச்சர்யமாக.

''ஒரு நாளைக்கு 1000 ரூபா வரைக்கும் 'வசூல் பண்ணுது'. இங்க பஸ்சுல எல்லாம் சில்லறை தட்டுப்பாடு இருக்கிறதால, இவங்க கிட்ட சில்லறை வாங்க போட்டா போட்டி. யார் அதிகமா கமிசன் தராங்களோ அவங்களுக்கு காச தரும்'' என்றார் டிரைவர்.

' பிசினஸ் டீலிங் ' முடிந்து வெற்றி பெருமிதத்துடன் வந்தார் நடத்துனர்.

''ஒரு நாளைக்கு 1000 ம்னா.. மாசம் 30000 ரூபா. லீவு நாள்ள, விசேச நாள்ள எல்லாம் இன்னும் அதிகம். எப்படியும் 40000 ஆயிரம் வருமானம் இவங்களுக்கு. மதியம் வரைக்கும் ஆனா வசூல் தான் இந்த 500 '' என்றார் நடத்துனர்.

எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.

அரசு சுதாரிப்பது நல்லது. பிசைக்காரர்களிடன் வரி வசூலிப்பது நல்ல வருமானத்தை தர வல்லது.

நாமெல்லாம் மாதம் முழுக்க 'மாங்கு மாங்கென்று' வேலை செய்தாலும் 4 இலக்கத்தை தாண்டுவதே கனவாக இருக்கிறது. சிலருக்கு மட்டும் தான் அது.

நான் இப்போது அவளை பொறாமையுடன் பார்த்தேன்.

பிச்சை எடுப்பது நல்ல தொழில் போலவே !

என்ன கேவலமான தொழிலா? மானம் மரியாதையை என்னாவது என்கிறீர்களா?

நமது அ.உ.க்களும், மா.மி.க்களும் கூட இதை தான் செய்கிறார்கள். பெட்டி பெட்டியாக தலைமுறை தலைமுறைக்கும் சேர்த்து வைத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் என்ன கேவலமா பார்கிறார்கள்?

அவர்கள் தன்மானத்தோடு வாழவில்லையா?

என்ன அவர்கள் கெஞ்சி கேட்கிறார்கள். இவர்கள் அதட்டி கேட்டு பிடிங்கிக் கொள்கிறார்கள்.

அசல் பிச்சைக்காரர்களுக்கு அது தான் தொழிலே! இவர்கள் சம்பளமும் பெற்றுக்கொண்டி 'சைடு பிசினஸ்'

அவர்கள் அழுக்காகவும், சிலர் ஊனமுற்றும் இருப்பார்கள். இவர்கள் நல்ல கையும், காலும், முக்கும், முழியுமாகவே இருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நாகரிக மாந்தர்கள், நாளைய தலைவர்கள், நாமெல்லாம் லட்சியத் தலைவர்களாக நினைப்பவர்கள் எல்லாம் தன்மானம் இல்லாத போது, நாமேன் அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பானேன் !.

ஒரு நான்கு மாதம் மாறு வேஷத்தில் பிச்சையை முடித்துக்கொண்டு விட்டு பிறகு தன்மானம் வளர்க்கலாம்.

நாமும் நம் உயர் அதிகாரிகளிடமும் பயந்து பயந்து எத்தனை காலம் வாழ்வது. இவர்கள் எந்த அதிகாரிகளுக்கு பயப்பட வேண்டும்!.

அரசு அலுவலகங்கள் போவதென்றால் நம் மரியாதையை, தன்மானத்தை எல்லாம் வீட்டிலேயே மூட்டை காட்டி வைத்து விட்டல்லவோ செல்லவேண்டி இருக்கிறது !

வேஷம் தரித்து மறைந்து வாழ்வதில் உள்ள சுதந்திரம் எதில் உண்டு !


10 comments:

இராகவன் நைஜிரியா said...

பிச்சை எடுப்பது ஒரு பெரிய தொழில் போல ஆயிடுச்சு... கேட்டா யாரையும் ஏமாத்தல, வழிப்பறி பண்ணல... அவங்களா போடறாங்கன்னு சொல்லுவாங்க.

எப்போதோ படிச்ச ஒரு செய்தி இப்ப ஞாபகத்துக்கு வருது... பிச்சைக்காரர்களிடமும் மாமூல் வாங்கும் லோக்கல் ரவுடிகள் உண்டு... இது அதைவிட கேவலம் இல்லையா?

VISA said...

எழுத்து படு சரளமாக வருகிறது. வாழ்த்துக்கள்.

பிரவின்குமார் said...

அருமையாக சொல்லியிருக்கீங்க.. அசத்துங்க..!!!

DrPKandaswamyPhD said...

பரவாயில்ல, பிச்சை எடுப்பதும் நல்ல தொழில்தான் போல.

Thamizhan said...

எழுத்து அருமை தான்
பிச்சைக்காராரைப் பார்த்துப் பொறாமையா
உலகே உனக்கு என்னாகுமோ
இக்கரைக்கு அக்கரை பச்சை தான்!
அவரவர் படும் பாடு அவரவருக்கே
மகிழ்ச்சி என்னவோ உள்ளிருந்து தான் !

Jayadeva said...

அரசியல் வாதிங்க பணம் சம்பாதிக்கும் விதம், பிச்சை எடுப்பதை விட கேவலமானது என்பதைச் சூசகமாகச் சொல்லிவிட்டீர்கள், ஆனாலும் அவர்கள் திருந்தப் போவதில்லை, ஏனெனில் சூடு சொரணை இருப்பவர்கள் தானே திருந்துவார்கள்!

GSV said...

:) !!!

Anonymous said...

like you

PARGAVI said...

ithellam palagi kolla vendiya oru visayam.....

SECURITY INDUSTRY said...

unmaithan aannal matha sambalakararkal than remba pavam