Wednesday, October 27, 2010

'சைபிகூ' கவிதைகள் -சுஜாதாஅடுத்த நூற்றாண்டு கவிதைகள் இப்படிதான் இருக்கும் என்று சுஜாதா குறிப்பிட்டவைகள்

விஞ்ஞான கற்பனைகளை பற்றி ஹைக்கூ எழுதுவது 'சைபிகூ' என்று பெயர். இதோ சில அருமையான 'சைபிகூ' கவிதைகள்.

* எரிகற்கள்
ஒரு சப்தமுமின்றி மோத
சிதறல்களினூடே செல்கிறோம்'


* புராதன நகரில்
தோண்டி எடுத்தோம்
டென்னிஸ் ஷூவின் பதிவை.

* உடை கலைந்த போது
அவள் மனுஷி இல்லை.

* சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும் போது
கதவை பூட்டினேனோ?

* குப்பை பொறுக்கும்
சிறுமியின் கையில்
ப்ளாப்பி டிஸ்க் !!

மரணம் பேசுகிறது

மரணம் பேசுகின்றதா!?

ஆம்.

ஓர் ஆழ்ந்த மெளனத்தில் மரணம் நம்மை சுற்றி இருப்பவர்கள் மேல் வியாபித்து நம்மோடு தொடர்புக் கொள்கிறது. அவை மனித மனத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் உலகம் முழுவதும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

மரணத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை. ஜெப்ரி ஆர்ச்சரின் சிறுகதை தொகுப்பில் இருக்கும் அரபிக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதை அது. அந்த கதையினைப் படைத்த ஆதி கர்த்தா யாரென்று தெரியவில்லை. கதை இது தான்.

பாக்தாத்தில் ஒரு வியாபாரி. தன் வேலைக்காரனை கடைத் தெருவிற்கு சரக்கு வாங்கி வர அனுப்பினான். போனவன் சிறிது நேரத்தில் வெளிறிய முகத்துடனும் நடுங்கும் கைகளுடனும் திரும்பி வந்து விட்டான்.

'எஜமானே, மார்க்கெட்டுக்கு சென்ற போது கூட்டத்தில் ஒரு பெண், என் மேல் இடித்தாள். திரும்பி பார்த்தால்.. அது மரண தேவதை. என்னை பயமுறுத்தும் சைகை செய்தாள். உங்கள் குதிரையை உடனே கொடுங்கள். நான் என் விதியில் இருந்து தப்பிக்க, இந்த கணமே நகரத்தை விட்டு சமாராவுக்கு ஓடிப்போய் விடுகிறேன்' என்றான்.

வியாபாரி தன் குதிரையை அவனுக்கு கொடுக்க, வேலைக்காரன் பாய்ந்து ஏறிக்கொண்டு, குதிரையை இரண்டு குதிகால்களாலும் தூண்டி விரட்டி தலைதெறிக்க சமாராவை நோக்கி சென்று விட்டான்.

அதன் பின் வியாபாரி கடைத் தெருவிற்கு சென்றான். அங்கே கூட்டத்தில் மரண தேவதையை பார்த்தான்.

'இன்று காலை என் வேலைக்காரன் வந்தபோது, ஏன் பயமுறுத்துவது போல சைகை செய்தாய்?' என்று கேட்டான்.

'அது பயமுறுத்தும் சைகை இல்லை.. ஆச்சர்யம். அவனை நான் பாக்தாத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நான் அவனை சந்திக்க வேண்டியது சமாராவில் அல்லவா??'

ந்தியாவிலும் கருட புராணத்தில் அதே போல் ஒரு கதை வருகிறது. எமன் ஒரு விருந்திற்கு செல்கிறான். வாசலில் இருக்கும் ஒரு எலியை சற்று நேரம் உற்று பார்த்து விட்டு உள்ளே போகிறான். பயந்துப் போகும் எலி பருந்து ஒன்றின் உதவியோடு மலை உச்சியில் இருக்கும் பொந்து ஒன்றில் மறைந்துக் கொள்கிறது. என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்ள பருந்து மீண்டும் விருந்து நடக்கும் இடத்திற்கு வருகிறது. வெளியில் வரும் பொழுது எலியை காணாமல் திகைக்கும் எமனிடம் என்னவென்று விசாரிக்கிறது பருந்து. 'இங்கிருந்த எலியின் உயிர் மலை உச்சி ஒன்றில் பாம்பின் மூலமாக போகும் என்பது விதி. இவ்வளவு விரைவில் எலியால் எப்படி அவ்விடத்திற்கு போக முடிந்தது என்றெண்ணி வியப்படைகிறேன்' என்று எமன் பதிலளித்தான்.

இந்தியாவோ, ஈராக்கோ மரணம் என்பது மாறாத உண்மை. அவை நம்முடன் பேசிய வண்ணமே தான் உள்ளன. ஆனால் மரணம் குறித்த பிரமிப்பும், பயமும் இன்னும் விலகியபாடில்லை.

Tuesday, October 26, 2010

இழந்த அடையாளங்கள்

'ஒன்றா, இரண்டா இழந்தவை.. எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா?' என காக்க காக்க பட பாடல் பாணியில் இழந்தவைகள் அனைத்தையும் பட்டியல் இட்டால் எழுத எனக்கும், படிக்க உங்களுக்கும் நேரம் போதாது.

மாதர்களின் கை வண்ணமாய் திகழும் கலை வண்ண வாசல் கோலங்கள்.. அடுக்குமாடி கட்டிடங்களின் வரவு, நகரமயமாதல் போன்றவற்றால் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. சாணம் கலந்த தண்ணீரால் சாப்பிட அமர்ந்த இடத்தை சுத்தம் செய்யும் பழக்கத்தை இழந்து விட்டோம். சொந்த பந்தங்கள் ஒன்றாய் கூடி ஒரு மாத காலம் களை கட்டும் கல்யாண வீடுகள், கூட்டு குடும்ப கலாச்சாரம், எளிமையான அரசியல் போன்ற நாம் இழந்த இழந்து வரும் புற அடையாளங்கள் எண்ணற்றவை.கூட்டுக் குடும்பம்- நாம் இழந்ததிலேயே அதி முக்கியமானது. ஏன் அதி முக்கியம்? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு அன்றோ!! ம்ம்.. ஆனால் இன்று அதெல்லாம் அங்கே? தனி குடித்தனம் என்ற பெயரில்.. வந்ததை தின்று, இயந்திரமாய் கூடி மகிழும் இரண்டு தனி தனி தீவுகள் அன்றோ ஓர் அறையில் அடைப்பட்டுள்ளது. அதுவும் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால்.. முடிந்தது கதை. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ள கூட நேரமில்லாமல்.. பறந்து பறந்து சம்பாதிப்பது. அப்படி சம்பாதிப்பது எதற்கு அல்லது யாருக்கு?

முதலில் எதற்கு என்பதை பார்ப்போம். வேறு எதற்கு.. செலவு செய்ய தான். ஆனால் வேலை பளு மற்றும் மேலதிகாரிகளின் நெருக்கடி தாளாமல்.. அந்த நேர தப்பித்தலுக்காக கை நிறைய சம்பாதிக்கும் பணத்தினை செலவு செய்யும் வழி தெரியாமல் ஓட்டையில் கசியும் நீர் போல் இழப்பவர் தான் ஏராளம் இங்கு. பணத்தினை செலவு செய்தல் அல்லது உபரி பணத்தை முதலீடு செய்தல் என்பதெல்லாம் அனுபவத்தால் கைக் கூடும் திறமை. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை இன்றைய இளம் தனிக் குடித்தனக்காரகளுக்கு கிடைப்பதில்லை.

அடுத்து சம்பாதிப்பது யாருக்கு என்ற கேள்விக்கு அடுத்த தலைமுறையினர் என்பதே நம் அனைவரின் ஏகோபித்த பதிலாக இருக்கும். தனியாக பிரிந்து சென்ற இளம் பெற்றோர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் வீட்டு குழந்தை படுத்தும் பாடு. அவ்வொற்றை குழந்தையை சமாளிக்கும் வழி தெரியாமல் செல்லம், செல்வம் என பாசத்தினை வாரி வழங்குகிறார்கள். விளைவு? வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ துளி மரியாதையும், மதிப்பையும் கொடுப்பதில்லை. இன்று முரட்டு பிடிவாதம் மட்டுமே இன்றைய குழந்தைகளின் பொது குணமாக உள்ளது. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தையை பிடிப்பதில்லை. தொலைகாட்சி பிரமாதப்படுத்தும் நாயகன் வழி்பாட்டினை பார்த்து பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மூர்க்க குணம் தோன்றுவது இயற்கை தானே!! குழந்தைகள் நம்மை பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். அன்று கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்களிடம் இளையவர்கள் காட்டும் மரியாதையை பார்த்து குழந்தைகள் தானாகவே கற்றுக் கொண்டனர்.

ம்ம்.. அதெல்லாம் ஒரு கனா காலம்!!கோலங்கள்- விடியற்காலையில் எழுந்து வளி மண்டல ஓசோனின் தூய காற்றை நுரையீரல் முழுவதும் நிரப்பி.. பெண்கள் கற்பனை குதிரையை ஓட விட்டு கோலம் போடும் வழக்கம் எத்தகைய மகத்தானது. நுண்ணுயிர்களான எறும்பிற்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற ஈகை சிந்தனையை பிரதிபலிக்கும் கோலம் போடுதல் வழக்கொழிந்து வருகிறது. அது கூட பரவாயில்லை.. பெற்றவர்களுக்கே உணவளிக்க யோசிக்கும் அவல நிலை இன்று நிலவுகிறது. நாம் எதை இழந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பதற்கே அருவருப்பாக உள்ளது.பானை- இது ஓர் அடையாளமா என்று சிரிப்பது கேட்கிறது. கண்டிப்பாக அதுவும் நமது அடையாளம் தான். வெயில் காலத்தில் தொண்டை வறண்ட நேரத்தில் ஒரு சொம்பு பானையின் குளிர்ந்த நீரின் சுவையை அனுபவித்தது உண்டா? அதுவும் அந்த பானையில் வெள்ளை துணியில் கட்டப்பட்ட வெட்டிவேர், அதி மதுரம் போன்ற மூலிகைகள் மிதந்ததால்.. நீரின் வாசமும், மருத்தவ தன்மையும் மிகுந்த புத்துணர்ச்சியை அளிக்கும். பானையின் மாற்றாக வந்திருக்கும் குளிர்சாதனப் பெட்டி ஒரு சபிக்கப்பட்ட கண்டுபிடிப்பாகவே எனக்கு படுகிறது. உணவுகளை பதப்படுத்தும் தற்காலிக வசதியை அது தருவதால்.. வாரத்திற்கு ஒருமுறை சமைத்து அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் பொழுது அந்த உணவின் தரம் எப்படிப் பட்டதாக இருக்கும். அப்படியே தினமும் சமைக்க வேண்டுமா என்ற கேள்வினையும், சோம்பேறித் தனத்தையும் அல்லவா நம் மனதில் சேர்த்து விளைக்கிறது. அது கூட போகட்டும்.. குளிர்சாதனப் பெட்டி வெளியிடும் 'க்ளோரோ ஃப்ளூரோ கார்பன்: CFC- ChloroFluoroCarbon) என்னும் நச்சுக் காற்று ஓசோனில் துளைகள் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. புவி வெப்பமயமாதல் என்னும் பூதாகர பிரச்சனையை உருவாக்கும் குளிர் சாதனப் பெட்டியை விட இயற்கையோடு இணைந்த பானை எத்தகைய அருமையான ஒன்று.
இப்படி ஒன்றொன்றாக நாம் இழக்கும் பல அருமையான அடையாளங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

அகமும், புறமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. நாம் உண்மையில் இழந்தது நமது அக அடையாளங்களையே!! இப்படி ஒவ்வொன்றாக நாம் இழக்க காரணம் நாம் நமது சுயத்தினை தொலைத்ததால் தான்.

ஒருவரின் சுயம் அவர் பெறும் கல்வி, அனுபவம், கேள்வி ஞானம், சான்றோர்களுடனான பழக்கம் முதலியவற்றால் கட்டமைக்கப் படுகிறது. ஆனால் இன்றைய கல்வி ஒருவனின் சுயத்தை கட்டமைக்கிறதா? 'ஆம் கட்டமைக்கிறது' என எவரேனும் நினைத்தால்.. உங்களுக்கான கட்டுரை இது இல்லை.


ந்திய திருநாட்டினை அடிமைப்படுத்த அந்நாட்டின் முதுகெலும்பான செவ்வியல் பண்பாட்டினையும், பழைமை சிறப்புடைய கல்வி முறையினையும் சீர் குலைத்தல் அவசியம் என்று நம்பினார் மெக்காலே துரை அவர்கள். அதை தனது 'மெக்காலே கல்வித் திட்டம்' மூலம் அவர் அன்று நடைமுறைப்படுத்தியும் காட்டி விட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு விலகினாலும், அவர்கள் நம் மீது திணித்து விட்டு சென்ற நச்சு கல்விமுறை வேரூன்றி இன்று விருட்சமாகி நம்மை பலவீனர்களாக்கி வருகிறது. அதே போல் அவர்களின் குள்ளநரி யுக்தியான பிரிவினையும் அது தொடர்பான சங்கடங்களும் இன்னும் விலகியபாடில்லை. பாரதியார் அன்றே இக்கல்விமுறையை ஒதுக்கி புறந்தள்ளி 'பேடிக்கல்வி' என இகழ்ந்தார். அத்தீர்க்கதரிசியின் வாயில் சக்கரையை தான் போட வேண்டும்.நமது கல்விமுறை நம்மை விஞ்ஞானத்தை நோக்கி தள்ளும் பகுத்தறிவாதிகளாக மாற்றுவதாக ஒரு வாதம் எழுப்பப் படலாம். சுயமற்றவர்கள் ஆன நாம் வள்ளுவர் விரும்புவது போல் கேள்விகள் எழுப்புவதில் மட்டும் வல்லவர்களாகி வருகிறோம். கேள்விகள் எழுப்புவது ஒரு தவறா என நீங்கள் சிரிக்கக் கூடும். தவறே இல்லை. செல்வத்துள் எல்லாம் தலையாக செவிச்செல்வத்தையே வள்ளுவரும் வழிமொழிகிறார்.

ஆனால் கேள்வி கேட்கிறவன் அறிவாளி என்ற மாய மயக்கங்களில் மூழ்கி, விதண்டவாத கேள்விகளையே எழுப்புகின்றோம். உதாரணத்திற்கு நாம் இதே போல் நாம் பெரியவர்களை கேள்வி கேட்போம்.

"ஏன் சாப்ட்ட அப்புறம் சாணி தண்ணி தெளிச்சு மொழுவுறீங்கம்மா?"

"தெர்லப்பா.. எங்கம்மா எனக்கு சொன்னாங்க. எங்கம்மாவுக்கு அவங்கம்மா சொன்னாங்க. நாங்க எல்லாம் உங்கள் மாதிரி படிச்சோமா என்ன?"

"சும்மா லூசுத்தனமாக அந்தக் காலத்தில் சொல்லி வச்சுட்டு போனதை எல்லாம் இனிமே செய்யாதீங்க. சரியா?"

படிப்பு நமக்கு மேதைமையை தந்துள்ளது என பெற்றவர்களுக்கு நம்மைப் பற்றி பூரிப்பு. விடையற்ற கேள்விகளை எழுப்பி விட்டோம் என நாமே நம்மை அறிவாளி என மெச்சிக் கொள்கிறோம். தளும்பினால் அது குறை குடம் அன்றோ!!

பகுத்தறிவு என்பது கேள்விகள் கேட்பது மட்டும் அல்ல. பகுத்து ஆய்ந்து அறிவது. கேள்வி கேட்டு மற்றவர் வாயை மூடிவிட்டால் போதுமென்று நினைக்கும் நம் பொன்மனத்தை தான் நான் சுயமற்ற தன்மை என்று சொல்கிறேன். சுயமற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்பதாக கேள்வி. நமது கேள்விகள் "மாட்டு சாணம்" சிறந்த கிருமி நாசினி என்ற பதிலினை நோக்கி நம்மை தள்ளவில்லை. தேடல்கள் மற்றும் உள்ளார்ந்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு எழுப்ப படாத கேள்விகளால் என்ன பயன்? பாழும் பயன் என்பதே நிதர்சனம்.

சாப்பிடும் உணவையே அப்படியே வாந்தி எடுப்பதால் உடலிற்கு ஏதேனும் நன்மை விளைகிறதா என்ன? அப்படி தான் உள்ளது நமது கல்வி. புத்தகத்தில் இருப்பதை மாங்கு மாங்கு என முடிந்த அளவு மனனம் செய்து, தேர்வில் வாந்தி எடுத்து விட்டால் பெரும் சுமை நீங்கியதாக நமது மாணவர்கள் குதூகலிக்கின்றனர். என்னத்த சொல்ல!!

அசோகர் சாலையின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டார்.

சுமார் 2200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அசோகர் செய்தவை எல்லாம் நாம் இப்ப தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமென்ன? அதை நம் ஞாபகத்தில் நிறுத்தி நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த வரலாறு நமக்கு சோறு போடுமா? என்று நமக்கு கேள்விகள் சரளமாக எழும்.

இந்த வரலாற்றினை புத்தகத்தில் மனனம் செய்யும் மாணக்கரை சித்திரை அல்லது வைகாசி மாத நண்பகல் வேளை ஒன்றினுள் அழைத்து.. மரமற்ற சாலையில் நடக்க வைத்தால், மரங்களின் அவசியமும் வெயிலும் அவர்களுக்கு உச்சி மண்டையில் 'சுர்ர்ர்ர்ர்' என ஏறும். பிறகு 'இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க தான் அசோகர் சாலைகளில் மரங்கள் நட்டார்' என்று ஒரு தடவை சொன்னால் போதாதா?

நம்முள் செல்வது வெறும் எழுத்துக்களாகவே இருக்கின்றன.பல் உள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுவார்கள். அதே போல் சுயம் உள்ளவர்கள் சிந்திக்கிறார்கள். சிந்திக்க தெரியாதவர்கள் தங்களது அக, புற அடையாளங்களை தாமாகவே தொலைத்து இழக்கின்றனர். உயிர்ப்புள்ள சிந்தனையை தட்டி எழுப்பாத கல்வி தான் மெக்காலேவின் வெற்றி.

சிந்திக்க தெரியாத நம் மூளைகளை ஏதேனும் ஒன்று பலமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏன்? 'Faith heals fear' என்பார்கள் ஆங்கிலத்தில். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகை பயம் அல்லது தேவைகளினால் அல்லலுறுகிறோம். அதிலிருந்து தப்பிக்கவே கெட்டியாக எதையாவது பற்றிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு மதம், சினிமா, அரசியல் என்று அச்சங்களை மறக்கவே நமக்கு விருப்பானவற்றை தேர்ந்தெடுக்கிறோம்.

அது தவறில்லை. எனினும்.. தேர்ந்தெடுத்த துறையில் நம் சிந்தனையை முழுவதுமாக ஈடுபடுத்துகிறோமா?

'காந்தீஜி பெரியவர். தூய வாழ்வு வாழ்பவர். அதனால் அவர் சொல்வதை எல்லாம் சரியானதாக இருக்கும் என்று சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்று பகவத்சிங் 'நான் ஏன் நாத்திகன் ஏன்?' என்ற புத்தகத்தில் தனது கருத்தினை பதிந்துள்ளார். அவர் சுயம்பு. சிந்திக்க தெரிந்த வீர இளைஞர். அப்படி தான் நாம் அனைவரும் சிந்திக்கிறோமா?

சிந்திக்க தெரிந்த சமூகமே தனது அடையாளங்களை இழக்காமல்.. புதியன தோன்றுவதில் நன்மை செய்பவைகளை ஆராய்ந்து தனக்குள் இழுத்துக் கொண்டு, பழைமையானவற்றில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றி மேன்மையுறும். தேவை நல்லதையும், கெட்டதையும் பகுத்தாயும் சிந்தனை மட்டுமே!!

Tuesday, October 19, 2010

பகுத்தறிவு - கண்ணதாசன்


கண்ணதாசனின் 'கடைசி பக்கம்' புத்தகம் படிக்க கிடைத்தது. பகுத்தறிவு பற்றி அவர் சொல்லிய அருமையான கருத்துக்கள்...

---

பகுத்தறிவு உலகத்தை மாற்றி அமைத்தது.

காற்றில்லாத வீடுகளுக்குள்ளே மனிதர்கள் அடைபட்டு கிடந்த காலம் போய், சொகுசான ஒரு காலத்தை பகுத்தறிவு கொண்டு வந்தது.

உட்கார்ந்த இடத்திலேயே காற்று,படம்,ஒலி, ஒளி, செயற்கை மழை போன்ற ஷவர் பாத்; சிங்கார வாகனங்கள்; செவ்வாய் கிரகனதுக்கே பயணம் செய்ய கூடிய எல்லாவற்றையும் விஞ்ஞானம் நமக்கு கொடுத்ததற்கு காரணம் பகுத்தறிவுதான். அணுவை பகுத்து அதன் அளப்பரிய சக்தியை கண்டு பிடித்த அறிவு. உண்மையிலேயே அற்புதமான அறிவுதான்.

அந்த பகுத்தறிவு, அதிலே இது உண்டு. இதிலே அது உண்டு. என்று காட்டிற்றே தவிர, எதையும் 'இல்லை இல்லை' என்று சொல்ல முயன்றதில்லை.

ஆனால், நமது ஊர் பகுத்தறிவோ, அது இல்லை, இது இல்லை; அது பொய்' என்று சொல்ல முனைந்ததே தவிர, எதிலே எது அடக்கம் என்று கண்டு கொள்ளக்கூடியதாக இல்லை.

ஒரு பகுத்தறிவாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

''அய்யா, 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்கிறார்களே, 'சிவாய நம' என்று சொல்லிக்கொண்டே ஆயிரம் வால்ட் மின்சாரத்தை தொட்டால் அபாயம் ஏற்படாதா?''

__என்று கேட்கிறார்.

நல்லது. அபாயம் ஏற்படத்தான் செய்யும்.

கொஞ்சம் அறிவோடு ஆராய்ந்தால் விஷயம் விளங்கும்.

அந்த பாடலை பாடிய அடியவர் ' 'சிவாய நமவென்று மின்சாரம் தொடுவோர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்று சொல்லவில்லை. 'சிந்தித்திருப்போர்க்கு' என்று தான் சொன்னார்.

அவர் சிந்தனையை சொன்னாரே தவிர செயலை சொல்லவில்லை.

கடிதம் எழுதியவர் மீது குற்றமில்லை. எல்லாம் நம்ம ஊர் பகுத்தறிவு படுத்தும் பாடு.

நம்ம ஊர் பகுத்தறிவு ஓர் அழகான பெண்ணை கண்டால் அவளது அழகையோ, பண்பையோ சிந்திப்பதில்லை. அவளுடம்பில் எத்தனை வீசை கறி, எத்தனை வீசை எலும்பு என்றுதான் ஆராயும்!.

'மனதைப் பகுத்தறியலாம்;உடம்பை பகுத்தறியலாமா?என்றுகூட யோசிப்பதில்லை!

இந்து மத தத்துவங்கள் எடுத்த வேகத்தில் பிடித்து வைத்த பொம்மைகளில்லை. பகுத்து பகுத்து அறிந்த பின்பே உருவாக்கப்பட்டவை.

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் , உடம்புக்குள்ளே ஒரு காற்று எந்த சக்திக்கு கட்டுப்பட்டு நீண்ட காலம் வெளியேறாமல் நிற்கிறது?

விஞ்ஞானிகளே யோசிக்கும் இடம் இது .

ஆனால், நம்ம ஊர் பகுத்தறிவு இதை யோசிக்காது. 'இது இயற்கையாகவே நிற்கிறது ' என்று சொல்லும்.

எது அந்த இயற்கை ?

மண்ணா ?.. மரமா ?. செடியா ..? கொடியா ..?

இப்போது மேல்நாட்டு விஞ்ஞானிகள் உடம்பில் இருந்து வெளியேறும் உயிர் எவ்வளவு வேகத்தில் வான மண்டலத்துக்கு பயணமாகிறது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறும் உயிரின் வேகம்தான் ஆராய்ச்சியில் இருக்கிறதே தவிர , அது வெளியேறாமல் இருக்கும் வழி அவனுக்கும் தோன்றவில்லை ; அடுத்த தலைமுறைக்கும் தோன்றவில்லை.

மானிட சக்திக்கு மேற்ற்பட்ட மூலத்தை புகழ் பெற்ற விஞ்ஞானிகளே மறுத்ததில்லை .

சந்திர மண்டலத்து பயணிகள் சர்ச்சுக்கு போய்வந்து தான் பயணமானார்கள் .

ஞானம் என்ற மூலத்திலிருந்துதான் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே தோன்றின .

இரண்டுமே ஒரு மூலத்தை நம்புகின்றன.

'சுடு 'என்று சொன்னவுடனே யாரை சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு

வெற்றி தேடி தந்திருக்கின்றன.

அதே நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால், பகுத்தறிவு மிஞ்சும் . நாடு மிஞ்சாது.

'போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் அதை தான் சொன்னான்.

'போர் என்று வந்தபின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது ' என்றான்.

கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தை தூக்கினான் ; முடிவு வெற்றியாக கனிந்தது .

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுதுகின்றது .

பக்தி யோகம் தியானத்தை வலியுறுத்துகிறது .

கடமையும் நம்பிக்கையுடன்தான் நடை பெறுகிறது ; தியானமும் நம்பிக்கையுடன்தான் நடைபெறுகிறது .

'மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு .

அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும் .

ஆகவே தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி நான் வருந்தவில்லை.

''இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப் போகிறார்கள் '' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே , யார் என்ன செய்ய முடியும் !.

Saturday, October 16, 2010

ஆதாம் ஒரு பிற்பகல்

புதிதாக குடிவந்திருக்கும் எதிர்வீட்டுக்காரரின் மகனுக்கு நீண்ட தலை முடி. ஏதோ ஒன்றை சுற்றி, நீள முடியை ஒரு சிறு வளையத்தின் மூலம் சீராக கட்டியிருந்தான். ஒரு கையால் பெயின்ட் வாளியை பிடித்தபடி மறு கையால் சுவற்றிற்கு வண்ணம் அடித்துக்கொண்டிருந்தான். சுவற்றிற்கு ஏதோ வலிக்கும் என்பது போல மிகுந்த ரசனையுடன் மெல்ல மெல்ல தடவிக்கொண்டிருந்தான்.

மாடியிலிருந்து அவனை பார்த்துகொண்டிருந்த யோகிதா, சுவற்றிற்கு வண்ணம் அடிப்பது எவ்வளவு அழகான குதூகலமான வேலை என நினைத்துக்கொண்டாள். அவன் அரைக்கால் டவுசரும், சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய நீண்ட தலைமுடி பெண்ணினுடைய தோற்றத்தை அவனுக்கு தந்திருந்த போதிலும் அவன் வளர்ந்த ஒரு இளைஞன் என்பதை அவளால் அறிய முடிந்தது.

அவள் வேடிக்கையை நிறுத்தி விட்டு தன் இரு கையையும் தட்டினாள்.

''ஏ.. பையா..'' அவள் அழைத்தாள்.

அந்த பையன் தலையை நிமிர்த்தி யோகிதாவை பார்த்து புன்னகை செய்தான். அவள் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தாள். இவ்வளவு நீள தலைமுடியுடன் ஒரு பையனையோ, அவன் தலையிலிருந்ததை போன்றதொரு வளையத்தையோ அவள் இதுநாள் வரை பார்த்திராததும் சிரிப்புக்கு காரணம்.

அந்த பையன் அவளை அழைக்கும் வகையில் ஒரு கையால் சைகை செய்தான். அவனுடைய வேடிக்கையான செய்கையை பார்த்து யோகிதா விடாமல் சிரித்ததோடு என்ன என்பதுபோல பதில் சைகை செய்தாள். ஆனால் அந்த பையன் மறுபடியும் சைகை மூலம் அழைத்ததோடு மறுகையால் பெயின்ட் வாளியை தூக்கிகாட்டினான்.

அவள் மாடியிலிருந்து இறங்கி வந்து வாசலில் நின்று கொண்டு அந்த பையனை பார்த்து சிரித்தாள்.

''இங்க வா..'' என்றான் அந்த பையன்

''என்ன அது''

''பெயின்ட். இங்க வந்து பார்..''

''எதற்கு என்று சொல்''

'' நீ இந்த சுவற்றிற்கு வெள்ளை அடிக்கிறாயா?. இதோ இப்படி'' அவன் செய்து காட்டினான்

''நான் போக வேண்டும் . அம்மா திட்டுவாள்.''

''உனக்கு இது வேண்டாமா?உடனே வா''

''கொஞ்சம் பொறு'' யோகிதா வீட்டை திரும்பி பார்த்து விட்டு அந்த பையனை நோக்கி நடந்தாள்.

அவள் குதிகாலை தூக்கிக்கொண்டு துள்ளி நடந்து வந்தாள். அவளின் நடை எப்போதுமே அப்படித்தான். அவளுக்கு சின்னஞ்சிறிய வட்ட வடிவ முகம். காலர் கொண்ட பூப்போட்ட சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளின் கள்ளங்கபடமில்லாத முகம் யாரையும் எளிதில் ஈர்த்து விடும். மற்றவர்களின் பேச்சுக்காக அல்லது அவளுக்குள்ளேயே நிகழும் பேச்சுக்காக என அவள் எப்போதுமே சிரித்துகொண்டிருந்தாள்.

''ஹலோ'' என்றால் யோகிதா.

''ஹலோ'' என்றான் அந்த பையன். அவனுடைய கழுத்து , மார்பு, முகம் எல்லாம் பெயின்ட் அப்பியிருந்தது.

''உன் பெயர் என்ன?'' யோகிதா கேட்டாள்

''அபுபக்கர்.''

''அபுபக்கர்.. அபுபக்கர்... என் நண்பன் பெயர் கூட அபுபக்கர் தான். ''

''யார் அது?''

''என் பள்ளித்தோழன். ஆனால் அவனுக்கு இவ்வளவு நீளமான முடி இல்லை. ''

'' நீ என்ன படிக்கிறாய்?'' கேட்டான் அபுபக்கர்.

''பத்தாவது. நீ?''

'' நான் பள்ளிக்கு போவதில்லை.''

''நீ ஏன் பள்ளி செல்வதில்லை?''

''படிப்பு வரலை. அப்பாவிற்கு ஒத்தாசையாக இருக்கிறேன்''

''உங்கள் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டாரா?''

''மாட்டார்''

''உன் பெயர் என்ன?''

''யோகிதா. எதற்காக கூப்பிட்டாய்?''''

''வண்ணம் அடிக்கிறாய இவற்றிக்கு?'' என்றபடி பிரஷை அவளிடம் கொடுத்தான்.

அவள் உடனே உற்சாகமாகி பிரஷை அவனிடமிருந்து வாங்கிகொண்டு வாளியை தூக்கிகொண்டாள்.

''இரு.. நான் எப்படி என்று சொல்லித் தருகிறேன்'' என்றபடி அபுபக்கர் அவளுக்கு விளக்கினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் ஒரு பக்க சுவரை முடித்தார்கள்.

''சரி.வா. நான் உனக்கு ஒன்று காண்பிக்கிறேன்'' வாளியை கீழே வைத்தபடி அவள் கையை பிடித்தான்.

யோகிதா தயங்கினாள். ''முதலில் என்னவென்று சொல்''

''காண்பிக்கிறேன் வா.. அதை உனக்கு அன்பளிப்பை தருகிறேன்.''

''அதை எனக்கு தருவாயா''

ஆம். தருகிறேன். அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று இரண்டு அறைகளை கடந்து பின்வாசலை அடைந்தான்.

வெளியே அவர்களின் தோட்டம் பரவி இருந்தது.

மலர் தோட்டத்தின் ஒரு மூளைக்கு அழைத்து சென்றான்.

ஆகாயத்தை நோக்கி கம்பீரமாக மொட்டு அரும்பி இருந்த அள்ளி மலர்க் கூட்டத்தினிடையே நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாக பார்த்த படியும் தன் கைவிரல்களை அங்குமிங்குமாக அலைய விட்டபடியும் தன் உள்ளங்கையில் எதையோ மறைத்த படியுமாக அபுபக்கர் இருந்தான்.

மலர் கூட்டத்தினிடையே யோகிதா செல்லவில்லை. மௌன புன்னகையோடு அவனை கவனித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?. அபுபக்கர் எல்லா அல்லி செடிகளின் மீதும் பார்வையை படரவிட்டான். ஒரு கையால் மறு கையை பொத்தியபடி யோகிதாவை நோக்கி வந்தான்.

'' உன் கையை திற'' என்றான். யோகிதா தன் கைகளை ஒரு கிண்ணம் போல் குவித்திருந்த போதிலும் அவனுடைய கைகளுக்கு கீழாக கொண்டு போக பயந்தாள்.

'' உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய்?''

''அருமையான ஒன்று''

'' முதலில் காண்பி''

அபுபக்கர் அவள் பார்க்கும் வகையில் தன் கைகளை திறந்தான். அவன் உள்ளங்கை முழுவதும் பல வண்ண சில்வண்டுகள் நிறைந்திருந்தன. சிவப்பு, கருப்பும் ஊதா, என இருந்த போதிலும் பச்சை வண்ணம் மிக அழகாக இருந்தது. அவை மென்னிரைச்சலோடும் ஒன்றோடொன்று முட்டி மோதி உரசிக்கொண்டு சிறிய கால்களை காற்றில் அலைய விட்டபடி இருந்தன. யோகிதா பயந்து போய் பின் வாங்கினாள்.

'' இப்படி நீட்டு..'' என்றான் அபுபக்கர். ''உனக்கு பிடிக்கவில்லையா..?''

''தெரியலை'' நிச்சயமில்லாமல் சொன்னாள் யோகிதா.

''இவை கடிக்காது. கையை நீட்டு''

அவள் மருட்சியோடு தன் கைகளை நீட்டினாள். அபுபக்கர் எல்லா நிறங்களிலுமான சில்வண்டுகளை அலையலையாக அவள் கைகளில் கொட்டினான்.

''அம்மா...'' அவை கடிக்ககூடும் என்று அவள் அறிந்திருக்கவில்லை. கைகளை திறந்து விட்டாள். சில்வண்டுகள் சிறகு விரித்தன. அழகிய வண்ணங்கள் மறைந்தன. கருப்பு பூசிக்கூட்டம் மறைந்ததை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

''ச்சே.. எவ்வளவு அழகானவைகள். விட்டுவிட்டாயே..''

''நான் போக வேண்டும். அம்மா தேடுவாள். யோகிதா தன் செயலுக்காக வருத்தப்பட்டாள்.

''அவ்வளவு தானா. நான் உனக்கு காண்பிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.''

''என்ன அது''

''வந்து பார்'' மீண்டும் அவள் கையை பிடித்து கொண்டு நடந்தான். தோட்டத்தை கடந்து வெகு தூரம் சென்றார்கள்.

ஓரிடத்தில் நின்று அபுபக்கர் கத்தினான். ''அங்கே பார்''

அவன் காட்டிய திசையில் ஒரு பாம்பு புற்று நான்கடி உயரத்தில் இருந்தது.

யோகிதா பயந்து கொண்டு பத்தடி பின் வாங்கி ஓடினாள். ''பயப்படாதே வா'' என்றான் அபுபக்கர் சிரித்தபடி.

''நான் மாட்டேன்''

''நாம் அதில் பாம்பு இருக்கிறதா என பார்க்கலாம் வா. நான் கையை விடப்போகிறேன்''

''உனக்கென்ன பைத்தியமா? அது விஷம். நேரம் ஆகிறது. நாம் போகலாம்.'' அவள் கத்தினாள்.

அபுபக்கர் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் புற்றை நோக்கி நடந்தான். அவள் பயந்தபடியே விலகி இருந்தாள். அவன் கையை உள்ளே விட்டபடி யோகிதாவை பார்த்து பளிப்பு காட்டி சிரித்தான்.

கொஞ்ச நேரத்தில் ''இங்கே பார்'' உள்ளிருந்து எதையோ எடுத்தான்.

யோகிதா பயந்தபடி ''என்ன அது?'' அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

''பொறு''

யோகிதா அவனின் தோள் வழியாக கூர்ந்து பார்த்தாள். ''ஐயோ.. என்ன அது. முட்டையா?.. பாம்பினுடையதா ?''

''ஆமாம் ஆனால் இது உடைந்திருக்கிறது. தொட்டு பாரேன் ''

''என்ன கன்றாவி இது? வா போகலாம். நான் போகிறேன்''. அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

''இரு இரு. பயந்து விட்டாயா?

அபுபக்கர் மீண்டும் அவள் கையை பிடித்துக்கொண்டு நடந்தான். அங்கிருந்த அணில்களை துரத்தி விளையாடினார்கள்.

எலுமிச்சை தோட்டத்தில் புகுந்து காய்களை பறித்தார்கள். தோட்டதுக்காரர்களுக்கு தெரியாமல் மாம்பழம் , கொய்யா பழங்களை பறித்துக்கொண்டு ஓடினார்கள். ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டார்கள்.

யோகிதா ஒரு மாம்பழத்தை தின்ன ஆரம்பித்தாள். அபுபக்கர் பாறையில் படுத்துக்கொண்டான்.

''நீ ஏன் நீள முடி வைத்திருக்கிறாய்? என்றாள்.

''ஏன் என்றால்.. அதுவாக வளருகிறது. ''

''உனக்கென்ன வயது?''

''பதினைந்து. உனக்கு..''

''பதினாலு''என்றபடி யோகிதா அவனை பார்த்தாள். எவ்வளவு வேடிக்கையானவன். எவ்வளவு சுதந்திரமாக சுற்றித்திரிகிறான். வேடிக்கை காரன்.

அப்போது தோட்டக்காரனின் சத்தம் கேட்டு மீண்டும் எழுந்து ஓடினார்கள். அப்போது கள்ளிசெடிகளை நோக்கி அபுபக்கர் குனிந்தான். யோகிதா அவன் பின்னால் நின்றபடி எட்டிப்பார்த்தாள்.

''இதோ பாரேன் . அட்டை. அவை கைகளில் மீது ஊறும் போது ஒரு மாதிரியாக சிலிர்க்கும் பாரேன். '' என்றபடி ஒரு அட்டையை தூக்கி அவள் கையில் போட்டான். அவள் அலறியபடி உதறிக்கொண்டு ஓடினாள்.

அபுபக்கர் பலமாக சிரித்தான். அவன் ஓவ்வொரு அட்டையையும் எடுத்து தன் கை மீது போட்டுக்கொண்டான். அவைகள் வெகு வேகமாக குதித்துக்கொண்டு அவன் மீது ஏற ஆரம்பித்தன. முழங்கை, கழுத்து என பரவிக்கொண்டிருந்தன.

யோகிதா கத்தினாள் ''உதறிவிடு அபுபக்கர்..''

அவளின் பயத்தை பார்த்து அவன் இன்னும் பலமாக சிரித்தான். ஆனால் உதறிவிடவில்லை.

யோகிதா நேராக வந்து அவன் மீதிருந்த அட்டைகளை எல்லாம் தட்டி விடத் தொடங்கினாள். பயத்தில் அவள் அழுவதற்கு ஆயத்தமானது போல கண்களில் நீர் கோர்த்துகொண்டது. அவனுடைய பழுப்பு மற்றும் வெண் சிரிப்போடு அபுபக்கர் அசட்டையாக கைகளை துடைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் நெகிழ்ந்து போய் விட்டதென்னவோ உண்மை.

''சரி. நான் உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். நீ எப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்.?''

''இன்னும் நான்கு நாட்களில்.''

''ஒ..அதற்குள் தந்துவிடுவேன்.''

அவர்கள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் கழித்து வாசலில் ஏதோ சத்தம் கேட்டு யோகிதா வெளியே வந்தாள். அபுபக்கர் சிரித்தபடி நின்றிருந்தான்.

''யோகிதா. நான் உள்ளே வரட்டுமா? உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்..''

''இல்லை. அம்மா திட்டுவாள். அது என்ன கையில்..? அச்சமயத்தில் அவள் அம்மா அழைக்க சிட்டாக பறந்து விட்டாள்.

அவள் திரும்ப வந்து பார்த்த போது அபுபக்கர் அங்கே இல்லை. சுற்றிலும் தேடியும் எங்கும் அவனை காணவில்லை. வாசலில் ரிப்பன் காட்டிய ஒரு பரிசுப் பெட்டி ஒன்று இருந்தது.

யோகிதா அதை பிரித்து பார்த்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் ஒரு கண்ணாடி சீசா நிறைய பல வண்ணங்களில் சில்வண்டுகள் சிறகடித்துக்கொண்டிருந்தன . ஒரு அழகிய வெள்ளை முயல் கழுத்தில் மணியுடன் அவளை மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தது. மலர்ந்த அழகிய சிகப்பு ரோஜா ஒன்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது .

Sunday, October 10, 2010

எந்திரன் vs அவதார்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலாப்பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர் தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன் பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பீய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம் பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.


இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்

Tuesday, October 5, 2010

எந்திரன் -- பரபரப்பு செய்திகள்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலாப்பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர் தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன் பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பீய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம் பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.


இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்.

Sunday, October 3, 2010

தேர்தல் தேசமிது

ஓட்டுப் போட்டு
தேசம் ஆக்கினான்
அந்நியன்..

ஓட்டுப் போட்டு
சேதம் ஆக்கினான்
இந்தியன்..

தேர்தலை சந்தித்தே
தேய்ந்து போன
தேசமிது..

ஒருமுறை ஓட்டுப்போட்டு
ஒரு பக்கம் படுத்தால்

அடுத்த தேர்தல்
வரும் வரை
அசையவே மாட்டான்

திரும்பி படுக்கிறான்
என்றால்
அடுத்த தேர்தல் !

மதம் + மதம் = சம்மதமில்லை

மதத்திற்கு
மதம் பிடித்திருக்கிறது..

மனிதனுக்கு
மதம் பிடித்திருக்கிறது..

மானுடம்
இருவருக்கும்
பிடிக்கவில்லை..!

Saturday, October 2, 2010

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?


நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''

இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது''