Monday, September 20, 2010

அழியா ஓவியம்


சென்ற வாரத்தில் ஒரு நாள் என் அத்தையுடன் பவானி பயணம். சேலம் பேருந்தில் ஏறினோம்.

கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. அத்தையும் இன்னபிறரும் நின்றபடி இருக்க, நான் டிரைவருக்கு எதிர்தார்ப்போல முன் கண்ணாடியை ஒட்டி ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டேன்.

பயணத்தில் ஏதேனும் ஒரு சிந்தனையில், அல்லது வேடிக்கையில் அனைவரும் லயிந்திருக்க, சிலர் நித்திய சயனத்திலும்.

எனக்கு போரடித்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தபடி இருந்தேன்.

அதில் ஒரு முதுகலை பட்டதாரி போன்ற தோற்றத்தில் ஒரு இளைஞன். நீளமான முடி டென்னிஸ் ரபேல் நடாலை போல. அவனின் கண்கள் ஒரே பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. அவ்வளவு அழகான கண்கள்.

அழகு என்றால் எதனோடு ஒப்பிட்டு சொல்வது?

ஒரு சில கோவில் சிற்பங்களில் நடனமாடும் மாந்தர்கள் இருப்பார்கள். அவர்களின் கண்கள் பாதி திறந்து, பாதி மூடிய நிலையில் ஆனந்த மயமாக தங்கள் நடனத்தில் லயிதிருப்பார்கள்.

அந்த கண்கள் அந்த இளைஞனிடம் !

அந்த கண்களில் தான் எவ்வளவு சாந்தம், அமைதி !

நான் பேந்த பேந்த அந்த கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

'பேந்த பேந்த' காரணம் பக்கத்தில் அத்தை.

எனக்கு புதுமை பித்தனின் 'சிற்பியின் நரகமும்' , ஆஸ்கர் ஒய்ல்டின் 'அழியா ஓவியமும்' நினைவுக்கு வந்தன.

கோவிலுக்காக செதுக்கிய அழகிய சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் அது தன் அழகை இழந்து கோரமாக மாறிவிடுவதை கண்டு மனம் வெம்பும் சிற்பி. அவனுக்கு அது நரகம். புதுமை பித்தனின் பிரமாதமான கதை.

ஒரு ஓவியம் ஒருவனை படுத்தும் பாடுதான் அழியா ஓவியம். இரண்டு கதைகளும் படித்தவர்களால் மறக்க முடியாதவைகள்.

இரண்டிலுமே கண்களை தான் பிரமாதப்படுத்தி இருப்பார்கள்.

கண்களோடு தொடர்புடைய நிகழ்சிகள் யாவும் நம் நினைவை விட்டு அகல்வதில்லை.

சிற்பங்களின் கண்கள் எப்போதும் அழகானவை.

சிலைகளும் அவ்வப்போது எழுந்து உயிர்பெற்று வந்துவிடுமோ...

சிந்தனையை நீக்கி அவனை மீண்டும் பார்த்தேன். அழகிய கண்களை பெற்ற பாக்கியவான்!

இப்போது தான் 'செல்போன் கேமரா' வின் அவசியத்தை உணர்ந்தேன்.

2 மணிநேரம் ஓடி பவானியை நெருங்கிக்கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய பாராட்டுதலையாவது அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனது நச்சரிக்க,

யோசித்தேன்.

திடீரென்று கவிதையும் வந்து தொலைக்கவில்லை.

''அழகான கண்கள்''
பத்திரமா பாத்துக்கோங்க''

என்று ஒரு சீட்டில் எழுதிகொடுத்துவிட்டு இறங்கி விடலாமா?

ஒருவேளை என்னை 'லூசு' என்று நினைத்து விட்டால் என்ன செய்வது? முன் பின் அனுபவமில்லாத இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு இறங்கி நடந்தேன்.

அத்தையும் நானும் நடந்து சென்றுகொண்டிருந்தோம்.
''ஏண்டி, உனக்கு எதிர்த்தாப்போல ஒரு பையன் உக்காந்திருந்தானே பார்த்தியா?'' அத்தை.

''ஆமா'' (அந்த ரபேல்)

''அவன் பஸ்ஸு ஏறுனதில இருந்து என் மூஞ்சிய மூஞ்சிய பாக்கராண்டி. இந்த காலத்து பசங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகுதோ. நானே பாட்டி!'' என்றாரே பார்க்கணும்.

என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் குபீர் என சிரித்துவிட்டேன்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது.

அவனும் யாரையோ பார்த்தபடிதான் இருந்தான். ஆனால் அது அத்தை என்பதை நான் அறியவில்லை.

முன்னால் சென்று அத்தையின் முகத்தை உற்று பார்த்தேன்.

''அப்படி ஒன்னும் சிற்பக்கலை ஒண்ணும் தெரியலையே..
ஒரு வேலை அவன் கண்ணுக்கு ஏதும் தெரிஞ்சதோ என்னவோ '' என்றேன் சிரித்தபடி.


4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

பழனியில் ஒரு குழந்தையைப் பார்த்தபோது.. ம்ம்ம்ம்.. இன்னும் சில பெண்களைப் பார்க்கும்போது.. இந்த மாதிரியான உணர்வுகள் எனக்கும் ஏற்பட்டதுண்டு தோழி..:-)))

GSV said...

இந்த இடுக்கைய உங்க அத்தை படித்தா உங்களுக்கு இன்னும் ஒரு ஐடியா கிடைக்கும் சாந்தி (சண்ட) தெரு 2 எழுத !!! :) :) அப்பறம் சரளமான எழுத்து நட, நல்லா இருக்கு !!!

பிரவின்குமார் said...

//''அவன் பஸ்ஸு ஏறுனதில இருந்து என் மூஞ்சிய மூஞ்சிய பாக்கராண்டி. இந்த காலத்து பசங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகுதோ. நானே பாட்டி!'' என்றாரே பார்க்கணும்.//

நீங்க... கொஞ்சம் அவசரப்பட்டிருந்தால் அவ்வளதோன் போல....
அவன்... மகா ரசிகனா இருப்பான் போலிருக்கே..!!

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்