Friday, September 10, 2010

சாந்தி (சண்டை) தெரு


நான்கு வீடுகளை கொண்ட காம்பௌன்ட் . கீழே இரண்டு குடியிருப்புகள். மாடியில் இரண்டு. கீழே வசிப்பவர்களின் வரலாறுகள் தெரியவில்லை. மாடியில் ஒன்றில் வீட்டு உரிமையாளரும் , 'டீச்சரம்மா ' என்ற அடைமொழி கொண்ட பெண்ணின் குடும்பமும் .

இந்த காம்பௌன்டை ஒட்டி சிமென்ட் சீட் போடப்பட்ட மிக மோசமான சுவர்களை கொண்ட ஒரு வீடு . அதில் அய்யர் அம்மா என்றழைக்கப்ப்படும் 60 வயது முதியவர் .அவர் அய்யர் அல்ல . அய்யருக்கும் அவருக்குமான 'வரலாறும் ' கிடைக்கப்பெறவில்லை . பின் வரும் சம்பவங்கள் நடக்க காரணமான , காரணமானவர்கள் வசிக்கும் பிரதான சாந்தி தெரு .

எப்போதும் போல ஒரு நாள் பொழுது புலர்ந்தது. கிழே வசிக்கும் பெண்மணி ஒருவர் வழக்கம் போல துணி துவைப்பதற்காக பக்கெட்டோடு வெளியே வந்தார்.

கல்லோ ரோட்டின் ஓரத்தில். காம்பௌண்டை ஒட்டி.
துணியை துவைக்க ஆரம்பித்தார்.

ஒரு பாவமும் அறியாத அந்த கல்லை தன் துணிகளின் மூலம் அடித்து துவைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

ஈரத்தோடு இருக்கும் ஒரு பொருளை தூக்கி அடித்தால், அதில் இருக்கும் தண்ணீர் சிதறி வெளியேறுவது தானே இயற்பியல் நியதி (?!)

அதன் படியே அந்த பெண்ணும் துவைத்த போது அதிலிருந்து அழுக்கு தண்ணீர் சிதறி வெளியேறியது.

இதில் என்ன பாதகம் என்கிறீர்களா?

பாதகம் இதுதான். சிதறி வெளியேறிய அழுக்கு தண்ணீர், அவர் அடித்த அடியில் சிதறலாக பறந்து சென்று பக்கத்து வீட்டு 'அய்யர்' அம்மாவின் சுவரோடு ஒட்டி உறவாடியது.

அடுத்தது என்ன?

அய்யர் அம்மா ஆக்ரோஷ அம்மாவாக வெளியே வந்தார். அந்த பெண்மணியை வாக்கு வாதத்திற்கு அழைத்தார்.

வாக்குவாதம் முற்றினால் சண்டையாகும். ஆகியது.
சண்டை தெருச்சண்டையானது .

இந்த நேரடி சண்டைக்காட்சி ஒளிபரப்பை பார்க்க தெருவே கூடியது .

அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க இருவரின் குடும்ப வம்சங்களும் பிரிந்து மேயப்பட்டன . இருவரின் பிறவி ரகசியங்களும் ஆராயப்பட்டன. இருவரின் ரகசிய உறவுகளும் தெருவில் அம்பலத்திற்கு வந்தன.

இவை இல்லாத பெண்களின் சண்டை ஏது?

சண்டையில் அய்யர் அம்மாவிற்கு உதவியாளர் தேவைப்பட, தன் மகனை அழைத்தார். 45 வயது மகன் 'ரவுடி' என்ற பெயருக்கு தகுதியானவன். கடுகடுவென்ற முகம். மலை போன்ற தோற்றம். தெருவில் உள்ள அனைத்து குடும்பங்களோடும் சண்டை செய்து பெயர் பெற்றவன். இவை போதுமான தகுதிகள் தானே !

தாயாரின் அழைப்பை கேட்டு விழுந்தடித்துக்கொண்டு வந்தவன், தாயை வணங்கினான். அவள் இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை' சொல்லி அதனோடு தானாக தயாரித்த 'கதை, திரைக்கதையையும்' சேர்த்து சொல்லி ஒப்பாரி வைத்தாள்.

ஆக்ரோஷமான அவனுக்கு கையில் நரம்புகள் தெறிக்க, ஜெட் வேகத்தில் அந்த கல்லை அணுகினான்.

தன் மொத்த பலத்தையும் சேர்த்து அந்த கல்லை உடைத்தெடுத்து தெருவில் வீசியெறிந்தான். பின் சுற்றிலும் பார்வையை வீசினான்.

ஒரு சின்ன பாரட்டுதலையோ, கை தட்டலையோ எதிர்பார்த்தான் போலும்
அதை புரிந்து கொள்ளாத அம்மக்கள், அதிர்ச்சியோடு அவனையே பார்த்தனர். இதனால் கோபமாக சென்றுவிட்டான்.

அந்த தெருவாசிகள் இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ' பற்றி பிரமாதமாக பேசிக்கொண்டு கலைந்தனர்.

''நான் என்னடா பாவம் பண்ணேன்'' என்று பரிதாபமாக தெருவில் கிடந்தது அந்த கல்.

அன்று மாலை..

மேல் வீட்டு டீச்சரம்மா, மிக நாகரீக பெண்மணி என பெயர் பெற்றவர். காரணம் எதையும் கண்டு கொள்ள மாட்டார். யாரிடமும் பேசமாட்டார். காலையில் நடந்த களேபாரத்தையும் வழக்கம் போல கண்டும் காணாமல் சென்றுவிட்டார்.

எப்போதும் போல மாலை வந்தது. சிறிது நேரத்தில் பெரிய கூப்பாடு போட்டுக்கொண்டு கிழிறங்கி வந்தார்.

காரணம்?

அவரின் 4 ம் வகுப்பு படிக்கும் மகன் பள்ளி விட்டு திரும்பி வரும்போது தெரு முனையில் இருந்த நாய் துரத்தி இருக்கிறது. பயந்து போன அவன் தான் தாயிடம் சொல்லி அழுது விட்டான்.

விளைவு?

இந்த டீச்சரம்மா நேராக சென்று அந்த நாயின் உரிமையாளரை பார்த்து இதற்கு பதில் சொல்லுங்க என கேட்டார்

ஆனால் அந்த ஆசாமியோ, தங்கள் நாய் அப்படிப்பட்டதல்ல என்றும் இந்த தெருவில் வேறு யாரும் இப்படி தங்கள் நாயின் மீது பழி கூறியதில்லை என்றும் ஆதாரம் இருந்தால் சமர்பிக்குமாறும் மிக அசட்டையாக அவளை பார்த்தான்.

இதற்கிடையில் அந்த தெருவில் நாய்கடி வரலாறுகளை ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள்.

இந்த பதிலை கேட்ட அந்த பெண் நாகரீகம் துறந்தார்.

பத்ரகாளியானார் .

நாயின் உரிமையாளரை நாயாக பாவித்து திட்ட ஆரம்பித்து விட்டார். கணவனுக்கு ஆதரவாக அவர் மனைவியும் தெருவில் இறங்கினார். சண்டையில் உபயோகப்படும் அத்தனை வார்த்தைகளும் அவர்களின் வாயில் தாண்டவமாடின.

பிறகு என்ன?

நாய் சண்டை தெருச்சண்டையானது.

மீண்டும் ஒரு நேரடி ஓளிபரப்பு தெருவாசிகளுக்கு

இதனை களேபாரத்திர்க்கும் காரணமான அந்த நாய் இவர்களின் சண்டையை பார்த்து மிரண்டு ஓடியது.

அதன் கண்களில் மிரட்சி. பயம்

';இவர்கள் என்ன மனிதர்கள் தானா. என்னை 'நாயே ' என்பவர்கள் , இப்படி பேயா நடந்து கொள்கிறார்களே! என்னை திட்ட இவர்களுக்கு என்ன யோக்கியதை?. மடையர்கள் ! '' என அதன் மனதில் எண்ண ஓட்டங்கள்.

நாய் இத்தனையையும் சிந்திக்கிறதா ?

ஆம். சிந்திக்கிறது .

மனிதன் நாயாக மாறும்போது, நாய் மனிதன் ஆகாதோ.

நீதி: மனிதர்களே !. நீங்கள் மனிதர்களாக இருங்கள். நாயாக, நரியாக, மாறி அவைகளிடம் மனித மானத்தை வாங்காதீர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் எங்கள் சாந்தி தெருவில் சென்ற வாரத்தில் அரங்கேறியவை. பெயரளவில் இருக்கும் சாந்தி, தெருவில் இல்லாததால் பெயர் மாற்றத்திற்கான பரிசீலனையில் உள்ளது.

4 comments:

periyar said...

yen kannu namaku yen oor vambu ellam.....

ஜானகிராமன் said...

அநியாயமும் அக்கிரமும் தனக்கு நேராத வரை, ஊருக்கு அமைதியை உபதேசிப்பது ரொம்ப சுலபம். முகமறியா பிரச்சனையில் உண்மையை ஒதுங்கிச்செல்வதன் மூலம் வெளிப்படுத்த இயலாது நண்பரே.

புன்னகை தேசம். said...

ஜானகிராமன் said...

அநியாயமும் அக்கிரமும் தனக்கு நேராத வரை, ஊருக்கு அமைதியை உபதேசிப்பது ரொம்ப சுலபம். முகமறியா பிரச்சனையில் உண்மையை ஒதுங்கிச்செல்வதன் மூலம் வெளிப்படுத்த இயலாது நண்பரே.


---------------


கவலைப்படாதீங்க ஜானகிராமன் இதுபோல இன்னும் 100 கதையாவது வரும் வரணும்....

இதையெல்லாம் தாண்டணும்...

drbalas said...

கதை ரெம்ப நல்லா இருக்குதுங்க....
(பதிவரும் அதே தெருவில் குடியிருப்பாரோ என்னவோ ! நமக்கு எதுக்கு வம்பு. வோட்டும் போட்டுடேங்க....)