Wednesday, October 27, 2010

மரணம் பேசுகிறது

மரணம் பேசுகின்றதா!?

ஆம்.

ஓர் ஆழ்ந்த மெளனத்தில் மரணம் நம்மை சுற்றி இருப்பவர்கள் மேல் வியாபித்து நம்மோடு தொடர்புக் கொள்கிறது. அவை மனித மனத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் உலகம் முழுவதும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

மரணத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை. ஜெப்ரி ஆர்ச்சரின் சிறுகதை தொகுப்பில் இருக்கும் அரபிக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதை அது. அந்த கதையினைப் படைத்த ஆதி கர்த்தா யாரென்று தெரியவில்லை. கதை இது தான்.

பாக்தாத்தில் ஒரு வியாபாரி. தன் வேலைக்காரனை கடைத் தெருவிற்கு சரக்கு வாங்கி வர அனுப்பினான். போனவன் சிறிது நேரத்தில் வெளிறிய முகத்துடனும் நடுங்கும் கைகளுடனும் திரும்பி வந்து விட்டான்.

'எஜமானே, மார்க்கெட்டுக்கு சென்ற போது கூட்டத்தில் ஒரு பெண், என் மேல் இடித்தாள். திரும்பி பார்த்தால்.. அது மரண தேவதை. என்னை பயமுறுத்தும் சைகை செய்தாள். உங்கள் குதிரையை உடனே கொடுங்கள். நான் என் விதியில் இருந்து தப்பிக்க, இந்த கணமே நகரத்தை விட்டு சமாராவுக்கு ஓடிப்போய் விடுகிறேன்' என்றான்.

வியாபாரி தன் குதிரையை அவனுக்கு கொடுக்க, வேலைக்காரன் பாய்ந்து ஏறிக்கொண்டு, குதிரையை இரண்டு குதிகால்களாலும் தூண்டி விரட்டி தலைதெறிக்க சமாராவை நோக்கி சென்று விட்டான்.

அதன் பின் வியாபாரி கடைத் தெருவிற்கு சென்றான். அங்கே கூட்டத்தில் மரண தேவதையை பார்த்தான்.

'இன்று காலை என் வேலைக்காரன் வந்தபோது, ஏன் பயமுறுத்துவது போல சைகை செய்தாய்?' என்று கேட்டான்.

'அது பயமுறுத்தும் சைகை இல்லை.. ஆச்சர்யம். அவனை நான் பாக்தாத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நான் அவனை சந்திக்க வேண்டியது சமாராவில் அல்லவா??'





ந்தியாவிலும் கருட புராணத்தில் அதே போல் ஒரு கதை வருகிறது. எமன் ஒரு விருந்திற்கு செல்கிறான். வாசலில் இருக்கும் ஒரு எலியை சற்று நேரம் உற்று பார்த்து விட்டு உள்ளே போகிறான். பயந்துப் போகும் எலி பருந்து ஒன்றின் உதவியோடு மலை உச்சியில் இருக்கும் பொந்து ஒன்றில் மறைந்துக் கொள்கிறது. என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்ள பருந்து மீண்டும் விருந்து நடக்கும் இடத்திற்கு வருகிறது. வெளியில் வரும் பொழுது எலியை காணாமல் திகைக்கும் எமனிடம் என்னவென்று விசாரிக்கிறது பருந்து. 'இங்கிருந்த எலியின் உயிர் மலை உச்சி ஒன்றில் பாம்பின் மூலமாக போகும் என்பது விதி. இவ்வளவு விரைவில் எலியால் எப்படி அவ்விடத்திற்கு போக முடிந்தது என்றெண்ணி வியப்படைகிறேன்' என்று எமன் பதிலளித்தான்.

இந்தியாவோ, ஈராக்கோ மரணம் என்பது மாறாத உண்மை. அவை நம்முடன் பேசிய வண்ணமே தான் உள்ளன. ஆனால் மரணம் குறித்த பிரமிப்பும், பயமும் இன்னும் விலகியபாடில்லை.

2 comments:

VELU.G said...

நல்ல கருத்து

GSV said...

நல்ல அலசல்!!! மரணம் என்பது மாற்ற முடியாதது...

நான் பயப்பிடுவது என்னக்கு தவறு ன்னு தெரிஞ்ச விசயத்த செய்றத்துக்குm & "நாய்" க்கும் தான் .

"விதி" இதுல நம்பிக்கை இல்லை."இது கூட விதி தான்னு சொல்ல கூடாது "