Saturday, October 16, 2010

ஆதாம் ஒரு பிற்பகல்

புதிதாக குடிவந்திருக்கும் எதிர்வீட்டுக்காரரின் மகனுக்கு நீண்ட தலை முடி. ஏதோ ஒன்றை சுற்றி, நீள முடியை ஒரு சிறு வளையத்தின் மூலம் சீராக கட்டியிருந்தான். ஒரு கையால் பெயின்ட் வாளியை பிடித்தபடி மறு கையால் சுவற்றிற்கு வண்ணம் அடித்துக்கொண்டிருந்தான். சுவற்றிற்கு ஏதோ வலிக்கும் என்பது போல மிகுந்த ரசனையுடன் மெல்ல மெல்ல தடவிக்கொண்டிருந்தான்.

மாடியிலிருந்து அவனை பார்த்துகொண்டிருந்த யோகிதா, சுவற்றிற்கு வண்ணம் அடிப்பது எவ்வளவு அழகான குதூகலமான வேலை என நினைத்துக்கொண்டாள். அவன் அரைக்கால் டவுசரும், சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய நீண்ட தலைமுடி பெண்ணினுடைய தோற்றத்தை அவனுக்கு தந்திருந்த போதிலும் அவன் வளர்ந்த ஒரு இளைஞன் என்பதை அவளால் அறிய முடிந்தது.

அவள் வேடிக்கையை நிறுத்தி விட்டு தன் இரு கையையும் தட்டினாள்.

''ஏ.. பையா..'' அவள் அழைத்தாள்.

அந்த பையன் தலையை நிமிர்த்தி யோகிதாவை பார்த்து புன்னகை செய்தான். அவள் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தாள். இவ்வளவு நீள தலைமுடியுடன் ஒரு பையனையோ, அவன் தலையிலிருந்ததை போன்றதொரு வளையத்தையோ அவள் இதுநாள் வரை பார்த்திராததும் சிரிப்புக்கு காரணம்.

அந்த பையன் அவளை அழைக்கும் வகையில் ஒரு கையால் சைகை செய்தான். அவனுடைய வேடிக்கையான செய்கையை பார்த்து யோகிதா விடாமல் சிரித்ததோடு என்ன என்பதுபோல பதில் சைகை செய்தாள். ஆனால் அந்த பையன் மறுபடியும் சைகை மூலம் அழைத்ததோடு மறுகையால் பெயின்ட் வாளியை தூக்கிகாட்டினான்.

அவள் மாடியிலிருந்து இறங்கி வந்து வாசலில் நின்று கொண்டு அந்த பையனை பார்த்து சிரித்தாள்.

''இங்க வா..'' என்றான் அந்த பையன்

''என்ன அது''

''பெயின்ட். இங்க வந்து பார்..''

''எதற்கு என்று சொல்''

'' நீ இந்த சுவற்றிற்கு வெள்ளை அடிக்கிறாயா?. இதோ இப்படி'' அவன் செய்து காட்டினான்

''நான் போக வேண்டும் . அம்மா திட்டுவாள்.''

''உனக்கு இது வேண்டாமா?உடனே வா''

''கொஞ்சம் பொறு'' யோகிதா வீட்டை திரும்பி பார்த்து விட்டு அந்த பையனை நோக்கி நடந்தாள்.

அவள் குதிகாலை தூக்கிக்கொண்டு துள்ளி நடந்து வந்தாள். அவளின் நடை எப்போதுமே அப்படித்தான். அவளுக்கு சின்னஞ்சிறிய வட்ட வடிவ முகம். காலர் கொண்ட பூப்போட்ட சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளின் கள்ளங்கபடமில்லாத முகம் யாரையும் எளிதில் ஈர்த்து விடும். மற்றவர்களின் பேச்சுக்காக அல்லது அவளுக்குள்ளேயே நிகழும் பேச்சுக்காக என அவள் எப்போதுமே சிரித்துகொண்டிருந்தாள்.

''ஹலோ'' என்றால் யோகிதா.

''ஹலோ'' என்றான் அந்த பையன். அவனுடைய கழுத்து , மார்பு, முகம் எல்லாம் பெயின்ட் அப்பியிருந்தது.

''உன் பெயர் என்ன?'' யோகிதா கேட்டாள்

''அபுபக்கர்.''

''அபுபக்கர்.. அபுபக்கர்... என் நண்பன் பெயர் கூட அபுபக்கர் தான். ''

''யார் அது?''

''என் பள்ளித்தோழன். ஆனால் அவனுக்கு இவ்வளவு நீளமான முடி இல்லை. ''

'' நீ என்ன படிக்கிறாய்?'' கேட்டான் அபுபக்கர்.

''பத்தாவது. நீ?''

'' நான் பள்ளிக்கு போவதில்லை.''

''நீ ஏன் பள்ளி செல்வதில்லை?''

''படிப்பு வரலை. அப்பாவிற்கு ஒத்தாசையாக இருக்கிறேன்''

''உங்கள் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டாரா?''

''மாட்டார்''

''உன் பெயர் என்ன?''

''யோகிதா. எதற்காக கூப்பிட்டாய்?''''

''வண்ணம் அடிக்கிறாய இவற்றிக்கு?'' என்றபடி பிரஷை அவளிடம் கொடுத்தான்.

அவள் உடனே உற்சாகமாகி பிரஷை அவனிடமிருந்து வாங்கிகொண்டு வாளியை தூக்கிகொண்டாள்.

''இரு.. நான் எப்படி என்று சொல்லித் தருகிறேன்'' என்றபடி அபுபக்கர் அவளுக்கு விளக்கினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் ஒரு பக்க சுவரை முடித்தார்கள்.

''சரி.வா. நான் உனக்கு ஒன்று காண்பிக்கிறேன்'' வாளியை கீழே வைத்தபடி அவள் கையை பிடித்தான்.

யோகிதா தயங்கினாள். ''முதலில் என்னவென்று சொல்''

''காண்பிக்கிறேன் வா.. அதை உனக்கு அன்பளிப்பை தருகிறேன்.''

''அதை எனக்கு தருவாயா''

ஆம். தருகிறேன். அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று இரண்டு அறைகளை கடந்து பின்வாசலை அடைந்தான்.

வெளியே அவர்களின் தோட்டம் பரவி இருந்தது.

மலர் தோட்டத்தின் ஒரு மூளைக்கு அழைத்து சென்றான்.

ஆகாயத்தை நோக்கி கம்பீரமாக மொட்டு அரும்பி இருந்த அள்ளி மலர்க் கூட்டத்தினிடையே நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாக பார்த்த படியும் தன் கைவிரல்களை அங்குமிங்குமாக அலைய விட்டபடியும் தன் உள்ளங்கையில் எதையோ மறைத்த படியுமாக அபுபக்கர் இருந்தான்.

மலர் கூட்டத்தினிடையே யோகிதா செல்லவில்லை. மௌன புன்னகையோடு அவனை கவனித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?. அபுபக்கர் எல்லா அல்லி செடிகளின் மீதும் பார்வையை படரவிட்டான். ஒரு கையால் மறு கையை பொத்தியபடி யோகிதாவை நோக்கி வந்தான்.

'' உன் கையை திற'' என்றான். யோகிதா தன் கைகளை ஒரு கிண்ணம் போல் குவித்திருந்த போதிலும் அவனுடைய கைகளுக்கு கீழாக கொண்டு போக பயந்தாள்.

'' உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய்?''

''அருமையான ஒன்று''

'' முதலில் காண்பி''

அபுபக்கர் அவள் பார்க்கும் வகையில் தன் கைகளை திறந்தான். அவன் உள்ளங்கை முழுவதும் பல வண்ண சில்வண்டுகள் நிறைந்திருந்தன. சிவப்பு, கருப்பும் ஊதா, என இருந்த போதிலும் பச்சை வண்ணம் மிக அழகாக இருந்தது. அவை மென்னிரைச்சலோடும் ஒன்றோடொன்று முட்டி மோதி உரசிக்கொண்டு சிறிய கால்களை காற்றில் அலைய விட்டபடி இருந்தன. யோகிதா பயந்து போய் பின் வாங்கினாள்.

'' இப்படி நீட்டு..'' என்றான் அபுபக்கர். ''உனக்கு பிடிக்கவில்லையா..?''

''தெரியலை'' நிச்சயமில்லாமல் சொன்னாள் யோகிதா.

''இவை கடிக்காது. கையை நீட்டு''

அவள் மருட்சியோடு தன் கைகளை நீட்டினாள். அபுபக்கர் எல்லா நிறங்களிலுமான சில்வண்டுகளை அலையலையாக அவள் கைகளில் கொட்டினான்.

''அம்மா...'' அவை கடிக்ககூடும் என்று அவள் அறிந்திருக்கவில்லை. கைகளை திறந்து விட்டாள். சில்வண்டுகள் சிறகு விரித்தன. அழகிய வண்ணங்கள் மறைந்தன. கருப்பு பூசிக்கூட்டம் மறைந்ததை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

''ச்சே.. எவ்வளவு அழகானவைகள். விட்டுவிட்டாயே..''

''நான் போக வேண்டும். அம்மா தேடுவாள். யோகிதா தன் செயலுக்காக வருத்தப்பட்டாள்.

''அவ்வளவு தானா. நான் உனக்கு காண்பிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.''

''என்ன அது''

''வந்து பார்'' மீண்டும் அவள் கையை பிடித்து கொண்டு நடந்தான். தோட்டத்தை கடந்து வெகு தூரம் சென்றார்கள்.

ஓரிடத்தில் நின்று அபுபக்கர் கத்தினான். ''அங்கே பார்''

அவன் காட்டிய திசையில் ஒரு பாம்பு புற்று நான்கடி உயரத்தில் இருந்தது.

யோகிதா பயந்து கொண்டு பத்தடி பின் வாங்கி ஓடினாள். ''பயப்படாதே வா'' என்றான் அபுபக்கர் சிரித்தபடி.

''நான் மாட்டேன்''

''நாம் அதில் பாம்பு இருக்கிறதா என பார்க்கலாம் வா. நான் கையை விடப்போகிறேன்''

''உனக்கென்ன பைத்தியமா? அது விஷம். நேரம் ஆகிறது. நாம் போகலாம்.'' அவள் கத்தினாள்.

அபுபக்கர் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் புற்றை நோக்கி நடந்தான். அவள் பயந்தபடியே விலகி இருந்தாள். அவன் கையை உள்ளே விட்டபடி யோகிதாவை பார்த்து பளிப்பு காட்டி சிரித்தான்.

கொஞ்ச நேரத்தில் ''இங்கே பார்'' உள்ளிருந்து எதையோ எடுத்தான்.

யோகிதா பயந்தபடி ''என்ன அது?'' அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

''பொறு''

யோகிதா அவனின் தோள் வழியாக கூர்ந்து பார்த்தாள். ''ஐயோ.. என்ன அது. முட்டையா?.. பாம்பினுடையதா ?''

''ஆமாம் ஆனால் இது உடைந்திருக்கிறது. தொட்டு பாரேன் ''

''என்ன கன்றாவி இது? வா போகலாம். நான் போகிறேன்''. அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

''இரு இரு. பயந்து விட்டாயா?

அபுபக்கர் மீண்டும் அவள் கையை பிடித்துக்கொண்டு நடந்தான். அங்கிருந்த அணில்களை துரத்தி விளையாடினார்கள்.

எலுமிச்சை தோட்டத்தில் புகுந்து காய்களை பறித்தார்கள். தோட்டதுக்காரர்களுக்கு தெரியாமல் மாம்பழம் , கொய்யா பழங்களை பறித்துக்கொண்டு ஓடினார்கள். ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டார்கள்.

யோகிதா ஒரு மாம்பழத்தை தின்ன ஆரம்பித்தாள். அபுபக்கர் பாறையில் படுத்துக்கொண்டான்.

''நீ ஏன் நீள முடி வைத்திருக்கிறாய்? என்றாள்.

''ஏன் என்றால்.. அதுவாக வளருகிறது. ''

''உனக்கென்ன வயது?''

''பதினைந்து. உனக்கு..''

''பதினாலு''என்றபடி யோகிதா அவனை பார்த்தாள். எவ்வளவு வேடிக்கையானவன். எவ்வளவு சுதந்திரமாக சுற்றித்திரிகிறான். வேடிக்கை காரன்.

அப்போது தோட்டக்காரனின் சத்தம் கேட்டு மீண்டும் எழுந்து ஓடினார்கள். அப்போது கள்ளிசெடிகளை நோக்கி அபுபக்கர் குனிந்தான். யோகிதா அவன் பின்னால் நின்றபடி எட்டிப்பார்த்தாள்.

''இதோ பாரேன் . அட்டை. அவை கைகளில் மீது ஊறும் போது ஒரு மாதிரியாக சிலிர்க்கும் பாரேன். '' என்றபடி ஒரு அட்டையை தூக்கி அவள் கையில் போட்டான். அவள் அலறியபடி உதறிக்கொண்டு ஓடினாள்.

அபுபக்கர் பலமாக சிரித்தான். அவன் ஓவ்வொரு அட்டையையும் எடுத்து தன் கை மீது போட்டுக்கொண்டான். அவைகள் வெகு வேகமாக குதித்துக்கொண்டு அவன் மீது ஏற ஆரம்பித்தன. முழங்கை, கழுத்து என பரவிக்கொண்டிருந்தன.

யோகிதா கத்தினாள் ''உதறிவிடு அபுபக்கர்..''

அவளின் பயத்தை பார்த்து அவன் இன்னும் பலமாக சிரித்தான். ஆனால் உதறிவிடவில்லை.

யோகிதா நேராக வந்து அவன் மீதிருந்த அட்டைகளை எல்லாம் தட்டி விடத் தொடங்கினாள். பயத்தில் அவள் அழுவதற்கு ஆயத்தமானது போல கண்களில் நீர் கோர்த்துகொண்டது. அவனுடைய பழுப்பு மற்றும் வெண் சிரிப்போடு அபுபக்கர் அசட்டையாக கைகளை துடைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் நெகிழ்ந்து போய் விட்டதென்னவோ உண்மை.

''சரி. நான் உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். நீ எப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்.?''

''இன்னும் நான்கு நாட்களில்.''

''ஒ..அதற்குள் தந்துவிடுவேன்.''

அவர்கள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் கழித்து வாசலில் ஏதோ சத்தம் கேட்டு யோகிதா வெளியே வந்தாள். அபுபக்கர் சிரித்தபடி நின்றிருந்தான்.

''யோகிதா. நான் உள்ளே வரட்டுமா? உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்..''

''இல்லை. அம்மா திட்டுவாள். அது என்ன கையில்..? அச்சமயத்தில் அவள் அம்மா அழைக்க சிட்டாக பறந்து விட்டாள்.

அவள் திரும்ப வந்து பார்த்த போது அபுபக்கர் அங்கே இல்லை. சுற்றிலும் தேடியும் எங்கும் அவனை காணவில்லை. வாசலில் ரிப்பன் காட்டிய ஒரு பரிசுப் பெட்டி ஒன்று இருந்தது.

யோகிதா அதை பிரித்து பார்த்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் ஒரு கண்ணாடி சீசா நிறைய பல வண்ணங்களில் சில்வண்டுகள் சிறகடித்துக்கொண்டிருந்தன . ஒரு அழகிய வெள்ளை முயல் கழுத்தில் மணியுடன் அவளை மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தது. மலர்ந்த அழகிய சிகப்பு ரோஜா ஒன்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது .

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சொன்ன விதம் நல்லாயிருக்குங்க.. கதைல இருக்குற புதிர்த்தன்மை ரசிக்க வைக்குது.. முடிவும் அழகு..;-))

சாம்ராஜ்ய ப்ரியன் said...

அருமை :-)

பயணமும் எண்ணங்களும் said...

மிக அருமையான கற்பனை..

dheepan said...

nala iruku...ivalavu quick ah story over?? i was expecting ( thodarum ) at the end

GSV said...
This comment has been removed by the author.
GSV said...

//புதிதாக குடிவந்திருக்கும் எதிர்வீட்டுக்காரரின் மகனுக்கு நீண்ட தலை முடி//

இந்த லைன் னுக்காகவே இந்த இடுக்கைக்கு கமெண்ட் கிடையாது