கண்ணதாசனின் 'கடைசி பக்கம்' புத்தகம் படிக்க கிடைத்தது. பகுத்தறிவு பற்றி அவர் சொல்லிய அருமையான கருத்துக்கள்...
---
பகுத்தறிவு உலகத்தை மாற்றி அமைத்தது.
காற்றில்லாத வீடுகளுக்குள்ளே மனிதர்கள் அடைபட்டு கிடந்த காலம் போய், சொகுசான ஒரு காலத்தை பகுத்தறிவு கொண்டு வந்தது.
உட்கார்ந்த இடத்திலேயே காற்று,படம்,ஒலி, ஒளி, செயற்கை மழை போன்ற ஷவர் பாத்; சிங்கார வாகனங்கள்; செவ்வாய் கிரகனதுக்கே பயணம் செய்ய கூடிய எல்லாவற்றையும் விஞ்ஞானம் நமக்கு கொடுத்ததற்கு காரணம் பகுத்தறிவுதான். அணுவை பகுத்து அதன் அளப்பரிய சக்தியை கண்டு பிடித்த அறிவு. உண்மையிலேயே அற்புதமான அறிவுதான்.
அந்த பகுத்தறிவு, அதிலே இது உண்டு. இதிலே அது உண்டு. என்று காட்டிற்றே தவிர, எதையும் 'இல்லை இல்லை' என்று சொல்ல முயன்றதில்லை.
ஆனால், நமது ஊர் பகுத்தறிவோ, அது இல்லை, இது இல்லை; அது பொய்' என்று சொல்ல முனைந்ததே தவிர, எதிலே எது அடக்கம் என்று கண்டு கொள்ளக்கூடியதாக இல்லை.
ஒரு பகுத்தறிவாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
''அய்யா, 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்கிறார்களே, 'சிவாய நம' என்று சொல்லிக்கொண்டே ஆயிரம் வால்ட் மின்சாரத்தை தொட்டால் அபாயம் ஏற்படாதா?''
__என்று கேட்கிறார்.
நல்லது. அபாயம் ஏற்படத்தான் செய்யும்.
கொஞ்சம் அறிவோடு ஆராய்ந்தால் விஷயம் விளங்கும்.
அந்த பாடலை பாடிய அடியவர் ' 'சிவாய நமவென்று மின்சாரம் தொடுவோர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்று சொல்லவில்லை. 'சிந்தித்திருப்போர்க்கு' என்று தான் சொன்னார்.
அவர் சிந்தனையை சொன்னாரே தவிர செயலை சொல்லவில்லை.
கடிதம் எழுதியவர் மீது குற்றமில்லை. எல்லாம் நம்ம ஊர் பகுத்தறிவு படுத்தும் பாடு.
நம்ம ஊர் பகுத்தறிவு ஓர் அழகான பெண்ணை கண்டால் அவளது அழகையோ, பண்பையோ சிந்திப்பதில்லை. அவளுடம்பில் எத்தனை வீசை கறி, எத்தனை வீசை எலும்பு என்றுதான் ஆராயும்!.
'மனதைப் பகுத்தறியலாம்;உடம்பை பகுத்தறியலாமா?என்றுகூட யோசிப்பதில்லை!
இந்து மத தத்துவங்கள் எடுத்த வேகத்தில் பிடித்து வைத்த பொம்மைகளில்லை. பகுத்து பகுத்து அறிந்த பின்பே உருவாக்கப்பட்டவை.
ஒன்பது ஓட்டைகள் இருந்தும் , உடம்புக்குள்ளே ஒரு காற்று எந்த சக்திக்கு கட்டுப்பட்டு நீண்ட காலம் வெளியேறாமல் நிற்கிறது?
விஞ்ஞானிகளே யோசிக்கும் இடம் இது .
ஆனால், நம்ம ஊர் பகுத்தறிவு இதை யோசிக்காது. 'இது இயற்கையாகவே நிற்கிறது ' என்று சொல்லும்.
எது அந்த இயற்கை ?
மண்ணா ?.. மரமா ?. செடியா ..? கொடியா ..?
இப்போது மேல்நாட்டு விஞ்ஞானிகள் உடம்பில் இருந்து வெளியேறும் உயிர் எவ்வளவு வேகத்தில் வான மண்டலத்துக்கு பயணமாகிறது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வெளியேறும் உயிரின் வேகம்தான் ஆராய்ச்சியில் இருக்கிறதே தவிர , அது வெளியேறாமல் இருக்கும் வழி அவனுக்கும் தோன்றவில்லை ; அடுத்த தலைமுறைக்கும் தோன்றவில்லை.
மானிட சக்திக்கு மேற்ற்பட்ட மூலத்தை புகழ் பெற்ற விஞ்ஞானிகளே மறுத்ததில்லை .
சந்திர மண்டலத்து பயணிகள் சர்ச்சுக்கு போய்வந்து தான் பயணமானார்கள் .
ஞானம் என்ற மூலத்திலிருந்துதான் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே தோன்றின .
இரண்டுமே ஒரு மூலத்தை நம்புகின்றன.
'சுடு 'என்று சொன்னவுடனே யாரை சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு
வெற்றி தேடி தந்திருக்கின்றன.
அதே நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால், பகுத்தறிவு மிஞ்சும் . நாடு மிஞ்சாது.
'போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் அதை தான் சொன்னான்.
'போர் என்று வந்தபின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது ' என்றான்.
கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தை தூக்கினான் ; முடிவு வெற்றியாக கனிந்தது .
கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுதுகின்றது .
பக்தி யோகம் தியானத்தை வலியுறுத்துகிறது .
கடமையும் நம்பிக்கையுடன்தான் நடை பெறுகிறது ; தியானமும் நம்பிக்கையுடன்தான் நடைபெறுகிறது .
'மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு .
அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும் .
ஆகவே தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி நான் வருந்தவில்லை.
''இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப் போகிறார்கள் '' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே , யார் என்ன செய்ய முடியும் !.
7 comments:
//''இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப் போகிறார்கள் '' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே , யார் என்ன செய்ய முடியும் !//
அட!! :-)
தங்கள் கட்டுரைகள் அனைத்தும் படித்து முடித்தப்பின் ஒரு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. //ஞானம் என்ற மூலத்திலிருந்துதான் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே தோன்றின . //
மிக அருமையாக இரண்டே வரியில் தெளிவாக விளக்கியிருக்கார்..! பகிர்வுக்கு நன்றி..!!
நீங்கள் ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை..??? இது போன்ற நல்ல பகுத்தறிவு சிந்தனைகள் மக்களை சென்றடைய அவசியம் அனைத்து தமிழ் திரட்டியிலும் இணையுங்கள்..!! தமிழ்மணம் இன்டிலி ஓட்டுப்பட்டையும் நிறுவுங்கள். நீங்கள் பெற்ற பகுத்தறிவும் தெளிவும் அனைவரும் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்..!!
//ஆனால், நமது ஊர் பகுத்தறிவோ, அது இல்லை, இது இல்லை; அது பொய்' என்று சொல்ல முனைந்ததே தவிர, எதிலே எது அடக்கம் என்று கண்டு கொள்ளக்கூடியதாக இல்லை.//
mikavum arumaiyaaka eluthi ulleerkal. vaalththukkal.
//தங்கள் கட்டுரைகள் அனைத்தும் படித்து முடித்தப்பின் ஒரு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்துகிறது.//
@பிரவின்குமார்
:))))))
உங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது .
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி
என்றும் நட்புடன்
தமிழன்
நல்லதொரு பகிர்வு.
Post a Comment