Tuesday, October 26, 2010

இழந்த அடையாளங்கள்

'ஒன்றா, இரண்டா இழந்தவை.. எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா?' என காக்க காக்க பட பாடல் பாணியில் இழந்தவைகள் அனைத்தையும் பட்டியல் இட்டால் எழுத எனக்கும், படிக்க உங்களுக்கும் நேரம் போதாது.

மாதர்களின் கை வண்ணமாய் திகழும் கலை வண்ண வாசல் கோலங்கள்.. அடுக்குமாடி கட்டிடங்களின் வரவு, நகரமயமாதல் போன்றவற்றால் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. சாணம் கலந்த தண்ணீரால் சாப்பிட அமர்ந்த இடத்தை சுத்தம் செய்யும் பழக்கத்தை இழந்து விட்டோம். சொந்த பந்தங்கள் ஒன்றாய் கூடி ஒரு மாத காலம் களை கட்டும் கல்யாண வீடுகள், கூட்டு குடும்ப கலாச்சாரம், எளிமையான அரசியல் போன்ற நாம் இழந்த இழந்து வரும் புற அடையாளங்கள் எண்ணற்றவை.



கூட்டுக் குடும்பம்- நாம் இழந்ததிலேயே அதி முக்கியமானது. ஏன் அதி முக்கியம்? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு அன்றோ!! ம்ம்.. ஆனால் இன்று அதெல்லாம் அங்கே? தனி குடித்தனம் என்ற பெயரில்.. வந்ததை தின்று, இயந்திரமாய் கூடி மகிழும் இரண்டு தனி தனி தீவுகள் அன்றோ ஓர் அறையில் அடைப்பட்டுள்ளது. அதுவும் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால்.. முடிந்தது கதை. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ள கூட நேரமில்லாமல்.. பறந்து பறந்து சம்பாதிப்பது. அப்படி சம்பாதிப்பது எதற்கு அல்லது யாருக்கு?

முதலில் எதற்கு என்பதை பார்ப்போம். வேறு எதற்கு.. செலவு செய்ய தான். ஆனால் வேலை பளு மற்றும் மேலதிகாரிகளின் நெருக்கடி தாளாமல்.. அந்த நேர தப்பித்தலுக்காக கை நிறைய சம்பாதிக்கும் பணத்தினை செலவு செய்யும் வழி தெரியாமல் ஓட்டையில் கசியும் நீர் போல் இழப்பவர் தான் ஏராளம் இங்கு. பணத்தினை செலவு செய்தல் அல்லது உபரி பணத்தை முதலீடு செய்தல் என்பதெல்லாம் அனுபவத்தால் கைக் கூடும் திறமை. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை இன்றைய இளம் தனிக் குடித்தனக்காரகளுக்கு கிடைப்பதில்லை.

அடுத்து சம்பாதிப்பது யாருக்கு என்ற கேள்விக்கு அடுத்த தலைமுறையினர் என்பதே நம் அனைவரின் ஏகோபித்த பதிலாக இருக்கும். தனியாக பிரிந்து சென்ற இளம் பெற்றோர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் வீட்டு குழந்தை படுத்தும் பாடு. அவ்வொற்றை குழந்தையை சமாளிக்கும் வழி தெரியாமல் செல்லம், செல்வம் என பாசத்தினை வாரி வழங்குகிறார்கள். விளைவு? வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ துளி மரியாதையும், மதிப்பையும் கொடுப்பதில்லை. இன்று முரட்டு பிடிவாதம் மட்டுமே இன்றைய குழந்தைகளின் பொது குணமாக உள்ளது. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தையை பிடிப்பதில்லை. தொலைகாட்சி பிரமாதப்படுத்தும் நாயகன் வழி்பாட்டினை பார்த்து பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மூர்க்க குணம் தோன்றுவது இயற்கை தானே!! குழந்தைகள் நம்மை பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். அன்று கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்களிடம் இளையவர்கள் காட்டும் மரியாதையை பார்த்து குழந்தைகள் தானாகவே கற்றுக் கொண்டனர்.

ம்ம்.. அதெல்லாம் ஒரு கனா காலம்!!



கோலங்கள்- விடியற்காலையில் எழுந்து வளி மண்டல ஓசோனின் தூய காற்றை நுரையீரல் முழுவதும் நிரப்பி.. பெண்கள் கற்பனை குதிரையை ஓட விட்டு கோலம் போடும் வழக்கம் எத்தகைய மகத்தானது. நுண்ணுயிர்களான எறும்பிற்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற ஈகை சிந்தனையை பிரதிபலிக்கும் கோலம் போடுதல் வழக்கொழிந்து வருகிறது. அது கூட பரவாயில்லை.. பெற்றவர்களுக்கே உணவளிக்க யோசிக்கும் அவல நிலை இன்று நிலவுகிறது. நாம் எதை இழந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பதற்கே அருவருப்பாக உள்ளது.



பானை- இது ஓர் அடையாளமா என்று சிரிப்பது கேட்கிறது. கண்டிப்பாக அதுவும் நமது அடையாளம் தான். வெயில் காலத்தில் தொண்டை வறண்ட நேரத்தில் ஒரு சொம்பு பானையின் குளிர்ந்த நீரின் சுவையை அனுபவித்தது உண்டா? அதுவும் அந்த பானையில் வெள்ளை துணியில் கட்டப்பட்ட வெட்டிவேர், அதி மதுரம் போன்ற மூலிகைகள் மிதந்ததால்.. நீரின் வாசமும், மருத்தவ தன்மையும் மிகுந்த புத்துணர்ச்சியை அளிக்கும். பானையின் மாற்றாக வந்திருக்கும் குளிர்சாதனப் பெட்டி ஒரு சபிக்கப்பட்ட கண்டுபிடிப்பாகவே எனக்கு படுகிறது. உணவுகளை பதப்படுத்தும் தற்காலிக வசதியை அது தருவதால்.. வாரத்திற்கு ஒருமுறை சமைத்து அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் பொழுது அந்த உணவின் தரம் எப்படிப் பட்டதாக இருக்கும். அப்படியே தினமும் சமைக்க வேண்டுமா என்ற கேள்வினையும், சோம்பேறித் தனத்தையும் அல்லவா நம் மனதில் சேர்த்து விளைக்கிறது. அது கூட போகட்டும்.. குளிர்சாதனப் பெட்டி வெளியிடும் 'க்ளோரோ ஃப்ளூரோ கார்பன்: CFC- ChloroFluoroCarbon) என்னும் நச்சுக் காற்று ஓசோனில் துளைகள் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. புவி வெப்பமயமாதல் என்னும் பூதாகர பிரச்சனையை உருவாக்கும் குளிர் சாதனப் பெட்டியை விட இயற்கையோடு இணைந்த பானை எத்தகைய அருமையான ஒன்று.




இப்படி ஒன்றொன்றாக நாம் இழக்கும் பல அருமையான அடையாளங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

அகமும், புறமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. நாம் உண்மையில் இழந்தது நமது அக அடையாளங்களையே!! இப்படி ஒவ்வொன்றாக நாம் இழக்க காரணம் நாம் நமது சுயத்தினை தொலைத்ததால் தான்.

ஒருவரின் சுயம் அவர் பெறும் கல்வி, அனுபவம், கேள்வி ஞானம், சான்றோர்களுடனான பழக்கம் முதலியவற்றால் கட்டமைக்கப் படுகிறது. ஆனால் இன்றைய கல்வி ஒருவனின் சுயத்தை கட்டமைக்கிறதா? 'ஆம் கட்டமைக்கிறது' என எவரேனும் நினைத்தால்.. உங்களுக்கான கட்டுரை இது இல்லை.


ந்திய திருநாட்டினை அடிமைப்படுத்த அந்நாட்டின் முதுகெலும்பான செவ்வியல் பண்பாட்டினையும், பழைமை சிறப்புடைய கல்வி முறையினையும் சீர் குலைத்தல் அவசியம் என்று நம்பினார் மெக்காலே துரை அவர்கள். அதை தனது 'மெக்காலே கல்வித் திட்டம்' மூலம் அவர் அன்று நடைமுறைப்படுத்தியும் காட்டி விட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு விலகினாலும், அவர்கள் நம் மீது திணித்து விட்டு சென்ற நச்சு கல்விமுறை வேரூன்றி இன்று விருட்சமாகி நம்மை பலவீனர்களாக்கி வருகிறது. அதே போல் அவர்களின் குள்ளநரி யுக்தியான பிரிவினையும் அது தொடர்பான சங்கடங்களும் இன்னும் விலகியபாடில்லை. பாரதியார் அன்றே இக்கல்விமுறையை ஒதுக்கி புறந்தள்ளி 'பேடிக்கல்வி' என இகழ்ந்தார். அத்தீர்க்கதரிசியின் வாயில் சக்கரையை தான் போட வேண்டும்.



நமது கல்விமுறை நம்மை விஞ்ஞானத்தை நோக்கி தள்ளும் பகுத்தறிவாதிகளாக மாற்றுவதாக ஒரு வாதம் எழுப்பப் படலாம். சுயமற்றவர்கள் ஆன நாம் வள்ளுவர் விரும்புவது போல் கேள்விகள் எழுப்புவதில் மட்டும் வல்லவர்களாகி வருகிறோம். கேள்விகள் எழுப்புவது ஒரு தவறா என நீங்கள் சிரிக்கக் கூடும். தவறே இல்லை. செல்வத்துள் எல்லாம் தலையாக செவிச்செல்வத்தையே வள்ளுவரும் வழிமொழிகிறார்.

ஆனால் கேள்வி கேட்கிறவன் அறிவாளி என்ற மாய மயக்கங்களில் மூழ்கி, விதண்டவாத கேள்விகளையே எழுப்புகின்றோம். உதாரணத்திற்கு நாம் இதே போல் நாம் பெரியவர்களை கேள்வி கேட்போம்.

"ஏன் சாப்ட்ட அப்புறம் சாணி தண்ணி தெளிச்சு மொழுவுறீங்கம்மா?"

"தெர்லப்பா.. எங்கம்மா எனக்கு சொன்னாங்க. எங்கம்மாவுக்கு அவங்கம்மா சொன்னாங்க. நாங்க எல்லாம் உங்கள் மாதிரி படிச்சோமா என்ன?"

"சும்மா லூசுத்தனமாக அந்தக் காலத்தில் சொல்லி வச்சுட்டு போனதை எல்லாம் இனிமே செய்யாதீங்க. சரியா?"

படிப்பு நமக்கு மேதைமையை தந்துள்ளது என பெற்றவர்களுக்கு நம்மைப் பற்றி பூரிப்பு. விடையற்ற கேள்விகளை எழுப்பி விட்டோம் என நாமே நம்மை அறிவாளி என மெச்சிக் கொள்கிறோம். தளும்பினால் அது குறை குடம் அன்றோ!!

பகுத்தறிவு என்பது கேள்விகள் கேட்பது மட்டும் அல்ல. பகுத்து ஆய்ந்து அறிவது. கேள்வி கேட்டு மற்றவர் வாயை மூடிவிட்டால் போதுமென்று நினைக்கும் நம் பொன்மனத்தை தான் நான் சுயமற்ற தன்மை என்று சொல்கிறேன். சுயமற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்பதாக கேள்வி. நமது கேள்விகள் "மாட்டு சாணம்" சிறந்த கிருமி நாசினி என்ற பதிலினை நோக்கி நம்மை தள்ளவில்லை. தேடல்கள் மற்றும் உள்ளார்ந்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு எழுப்ப படாத கேள்விகளால் என்ன பயன்? பாழும் பயன் என்பதே நிதர்சனம்.

சாப்பிடும் உணவையே அப்படியே வாந்தி எடுப்பதால் உடலிற்கு ஏதேனும் நன்மை விளைகிறதா என்ன? அப்படி தான் உள்ளது நமது கல்வி. புத்தகத்தில் இருப்பதை மாங்கு மாங்கு என முடிந்த அளவு மனனம் செய்து, தேர்வில் வாந்தி எடுத்து விட்டால் பெரும் சுமை நீங்கியதாக நமது மாணவர்கள் குதூகலிக்கின்றனர். என்னத்த சொல்ல!!

அசோகர் சாலையின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டார்.

சுமார் 2200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அசோகர் செய்தவை எல்லாம் நாம் இப்ப தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமென்ன? அதை நம் ஞாபகத்தில் நிறுத்தி நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த வரலாறு நமக்கு சோறு போடுமா? என்று நமக்கு கேள்விகள் சரளமாக எழும்.

இந்த வரலாற்றினை புத்தகத்தில் மனனம் செய்யும் மாணக்கரை சித்திரை அல்லது வைகாசி மாத நண்பகல் வேளை ஒன்றினுள் அழைத்து.. மரமற்ற சாலையில் நடக்க வைத்தால், மரங்களின் அவசியமும் வெயிலும் அவர்களுக்கு உச்சி மண்டையில் 'சுர்ர்ர்ர்ர்' என ஏறும். பிறகு 'இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க தான் அசோகர் சாலைகளில் மரங்கள் நட்டார்' என்று ஒரு தடவை சொன்னால் போதாதா?

நம்முள் செல்வது வெறும் எழுத்துக்களாகவே இருக்கின்றன.



பல் உள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுவார்கள். அதே போல் சுயம் உள்ளவர்கள் சிந்திக்கிறார்கள். சிந்திக்க தெரியாதவர்கள் தங்களது அக, புற அடையாளங்களை தாமாகவே தொலைத்து இழக்கின்றனர். உயிர்ப்புள்ள சிந்தனையை தட்டி எழுப்பாத கல்வி தான் மெக்காலேவின் வெற்றி.

சிந்திக்க தெரியாத நம் மூளைகளை ஏதேனும் ஒன்று பலமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏன்? 'Faith heals fear' என்பார்கள் ஆங்கிலத்தில். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகை பயம் அல்லது தேவைகளினால் அல்லலுறுகிறோம். அதிலிருந்து தப்பிக்கவே கெட்டியாக எதையாவது பற்றிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு மதம், சினிமா, அரசியல் என்று அச்சங்களை மறக்கவே நமக்கு விருப்பானவற்றை தேர்ந்தெடுக்கிறோம்.

அது தவறில்லை. எனினும்.. தேர்ந்தெடுத்த துறையில் நம் சிந்தனையை முழுவதுமாக ஈடுபடுத்துகிறோமா?

'காந்தீஜி பெரியவர். தூய வாழ்வு வாழ்பவர். அதனால் அவர் சொல்வதை எல்லாம் சரியானதாக இருக்கும் என்று சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்று பகவத்சிங் 'நான் ஏன் நாத்திகன் ஏன்?' என்ற புத்தகத்தில் தனது கருத்தினை பதிந்துள்ளார். அவர் சுயம்பு. சிந்திக்க தெரிந்த வீர இளைஞர். அப்படி தான் நாம் அனைவரும் சிந்திக்கிறோமா?

சிந்திக்க தெரிந்த சமூகமே தனது அடையாளங்களை இழக்காமல்.. புதியன தோன்றுவதில் நன்மை செய்பவைகளை ஆராய்ந்து தனக்குள் இழுத்துக் கொண்டு, பழைமையானவற்றில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றி மேன்மையுறும். தேவை நல்லதையும், கெட்டதையும் பகுத்தாயும் சிந்தனை மட்டுமே!!

8 comments:

தினேஷ் ராம் said...

அருமையான கட்டுரை :-)

eraeravi said...

nalaa sinthanai
era.eravi
www.eraeravi.com
www.kavimalar.com

Hariharan said...

great article !

Udayakumar Sree said...

Dear Yalini,

Have you got the answer for the cleaning with cow dung?

bandhu said...

//நமது கேள்விகள் "மாட்டு சாணம்" சிறந்த கிருமி நாசினி என்ற பதிலினை நோக்கி நம்மை தள்ளவில்லை. //
Udayakumar.. the answer is there in the article itself!

GSV said...

யாழினி, இந்த இழந்த அடையாளங்கள்(1,2...) la label la மாத்திட்டு இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்
1. ஆயுர்வேத மருத்துவம் அல்லது நாட்டு வைத்தியம்.
2. விளையாட்டுகள் (கில்லி,கபடி,கோலி,பம்பரம்,தாயம்,பல்லாங்குழி,சில்லு கொடு?,வீர விளையாட்டுகளையும் சேர்த்துக்கலாம்??? )
3. தோட்டம் அமைதல் (எத்தின பேரு வீட்டுல இருக்கும்ன்னு தெரியல)
இன்னும் நிறைய இருக்கு

//இது ஓர் அடையாளமா என்று சிரிப்பது கேட்கிறது//
எங்க வீட்டுல இன்னும் இருக்குப்பா ....எஸ்கேப்.
Second half super...

Udayakumar Sree said...

@bandhu

Please explain why we should use the cowdung after meals? Do we litter the eating place with food(?).!.!.!

தினேஷ் ராம் said...

@Udayakumar Sree:

//நமது கேள்விகள் "மாட்டு சாணம்" சிறந்த கிருமி நாசினி என்ற பதிலினை நோக்கி நம்மை தள்ளவில்லை.//

Meaning: Cowdung has 'insect repellent' properties. Cowdung helps to keep kitchen and eating place germ-free.

Check third para of Cowdung uses.

(If you are not satisfactory with the contents of Wikipedia. You better google and see as many links favouring cowdung ;))