Tuesday, October 5, 2010

எந்திரன் -- பரபரப்பு செய்திகள்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலாப்பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர் தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன் பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பீய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம் பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.






இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்.

9 comments:

Thamarai Selvan said...

Endhiran = 2 x Imayamalai?????

அகல்விளக்கு said...

சரியா சொன்னீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

neengalumaa?

GSV said...

ஹா ஹா ஹா !!! அதுக்குள்ளவே இப்படியா இன்னும் என்ன என்னவோ இருக்கு ....அடுத்து அவார்ட் "function"(1,2,3,4,5...) எல்லாம் இருக்குல !!! அப்பாட நான் தப்பிச்சுட்டேன் !

Anonymous said...

இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது.

---------------------

:)) சிரிச்சு முடியல...

RAVI said...

விளம்பர தொல்லல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கிவிட்ட உங்களுக்கு நன்றி.
நெசம்மாவே சிரிச்சு முடியல...
:))

RAVI said...

To GSV
வெற்றிவிழாவா..... i..i..o..

Hariharan said...

முதலில் நம்மவர்களின் முயற்சியை பாராட்டுங்கள் , படத்தில் எல்லா விளக்கத்தையும் சொன்னால் படம் மணி நேரம் ஆகும் .