Monday, March 28, 2011

அடிமையாக்கும் 'சினி' நாயகம்

'சுழன்றும் ஏர் பின்னது உலகம் ' என்றார் வள்ளுவர். இன்று எல்லோரும் திரைபடத்துறையின் பின்னே என்பது நிதர்சனம்.வியாபாரம் செய்ய வந்த அயல்நாட்டுக்காரன் நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாக தோன்றிய திரைப்படம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்

திரைப்படத்துறையில் ராமன்,கிருஷ்ணன் வேடமிட்டு வந்தவரை தெய்வமாகவும்,அட்டைக்கத்தி பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும் ஏழை,விவசாயி,உழைப்பாளி என நடித்தவர்களை தங்களில் ஒருவராக ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ அன்றைக்கே நாடு சீரழியத் துவங்கிவிட்டது.

தங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும்,தங்கள் செல்வாக்கையும் புகழையும் பயன்படுத்தி மெல்ல மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்து ஆட்சி பீடத்தை பிடிக்க துவங்கினர்.

விபத்தாக நிகழ்ந்தது விதியாக மாற்றப்பட்டு விட்டது.நாளடைவில் அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை.

அதற்கு பின் நடந்து வருவதெல்லாம்,திரைப்படத்துரையினருக்காக , திரைப்படத்துரையினரைக் கொண்டு திரைப்படத்துறையினரால் நடத்தப்படும் 'சினி நாயகம்'

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல, ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு வகைகளில் திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர்.அவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சிகளிடம் தஞ்சம் அடைகின்றனர்.ஆட்சி மாறினால் இவர்களுக்கு ஆதாயம்.மாறாவிட்டால் வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம்.ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இருப்பது அந்தோ...பொதுமக்கள் தான்.

தமிழ் சமூகம் சினிமாவிற்கு பின்னால் அலைகிறது.நாலு காட்சிகளில் தலையை கலைத்துகொள்பவனுக்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.சினிமாக்காரர்களுக்கும் அந்த உரிமை உண்டு.ஆனால் தராதாரமில்லாமல் அனைவருக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.ஒருகட்டத்தில் அறிஞர்களுக்கே அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறான்.(நன்றி : நாஞ்சில் நாடன்)

யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாக்காரர்கள் வளமுடன் நலமுடன் வாழ ஆவன செய்வர்.அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்.அது போதாதா?விலைவாசி ஏறினால் என்ன?மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் அல்லல் பட்டால் தான் என்ன? திரைப்பத்துரையினருக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே நாடு சுபிட்சம் அடையதோ!

5 comments:

பா.சண்முகம் said...

சினிமா மோகம் நாட்டில் குறைய இன்னும் சில காலம் ஆகும்

MANO நாஞ்சில் மனோ said...

சாட்டையடி......

rajamelaiyur said...

ரொம்ப சரி

பனித்துளி சங்கர் said...

எப்பொழுதுதான் விழித்துக் கொள்ளப்போகிறோமோ !? விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறந்தப் பதிவு . பகிர்வுக்கு நன்றி !

Hariharan said...

இங்கு தேவைகள் அதிகம் இருப்பதால் , யாராவது வர மாட்டார்களா , நல்லது செய்ய மாட்டார்களா, என ஏங்கும் மக்கள் நாம் , இந்த அப்பாவி மக்களின் நம்பிகையை இவர்கள் தங்கள் லாபத்திற்காக பயன் படுத்துகிறார்கள் , என்று இந்த நாட்டில் அடிப்படை தேவைகளுக்காக யாரைரும் சாராமல் இருக்கும் நிலை வரும்போது , எல்லாமே மாறும் , அந்நிலை கல்வியினால் மட்டுமே கொண்டு வர முடியும் , அனால் இங்க கல்வியும் வியாபாரம் தான் .