Sunday, February 20, 2011

தேர் திருவிழாவும் குடுமி ஐயரும்


எங்கள் ஊரில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.நடந்த விழாவை பதிவாக போடும்படி ஏராளமான நண்பர்கள் கேட்டுக்கொண்ட படியால் (உண்மையில் என்னை அப்படி கேட்டுக்கொண்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே.ஏராளமானவர்கள் என்று சொல்வது கலிங்கத்துப் பிராணி காலத்திலிருந்தே தமிழர்களின் தொன்று தொட்ட வழக்கம்.வரலாறு காணாத கூட்டம் என்றால் மைக்காரரையும் சேர்த்து ஆறு பேர் என்று அர்த்தம்.இந்த மிகை கலாச்சாரம் ஒரு தனி,மினி மோசடி (சுஜாதா சொன்னது போல) )
இதோ பதிவாக..

தினம் தினம் கலைநிகழ்ச்சிகளாக, பாட்டுக் கச்சேரிகளாக கலை கட்டியது திருவிழா.சத்திய சீலன்,மங்கையர்க்கரசி,அறிவொழி அய்யா என பிரபலமான சொற்பொழிவாளர்களின் வருகைகள் தான் ஹைலைட்.திருவிழா என்றாலே அழகோவியங்களும், அழியா 'ஓவியங்களும்' தானே முதன்மை.ஆனால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்பதில் எனக்கு சிறு வருத்தம்.இளைஞர்களின் கூட்டங்கள் அவ்வளவாக இல்லை.வருத்தம் மறுநாள் கொஞ்சம் தீர்ந்தது.

மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரில் முருகன் பவனி.இருபதடி உயரத்தில் மிகப் பெரிய மரத்திலான தேர்.படிகளில் ஏறி உள்ளே சென்று தரிசிக்கும் வகையில் தேரின் வடிவம்.நான் ஒரு முக்கிய வேண்டுதலுக்காக கால் கடுக்க வரிசை நின்று தேரில் ஏறி பயந்து பயந்து சுற்றி வந்து முன்னால் நின்றால் முருகனை விட அழகான ஒரு இளம் அர்ச்சகர் தட்டுடன் 'தரிசனம்' கொடுத்துக் கொண்டிருந்தார்.எனக்கு ஆச்சர்யம்,தயக்கம்,கோவில்,முருகன் என்று கலவையான எண்ணங்கள்..அழகான முகத்தில் அருமையான குங்கும நாமம்.கீழே சந்தன கீற்று.கொண்டு போன வேண்டுதல் காணாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.

இது அடியேனின் தவறு அல்ல.என் போன்ற பக்தைகளுக்கு (?) இப்படிப்பட்ட சங்கடங்களை முருகன் தவிர்த்திருக்க வேண்டும்.முருகன் மன்னிப்பாராக!இதில் பெரிய எரிச்சலாக அமைந்தது..என் பின்னால் வந்த பிராமண பெண்மணி "சீக்கிரமா போங்கோ..நாங்கள்லாம் தரிசிக்க வேண்டாமா .."என தள்ளிக் கொண்டே வந்தார்.நான் கோபமாகி "தரிசியுங்கோ .. யாரு வேண்டாம்னா..ரெண்டு பேர் இருக்கா,யாரா வென 'தரிசிங்கோ.."என நான் சத்தமாக கூறியதை கேட்டு புரியாமல் விழித்தார்.பின்னர் எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.இப்படியாக அரைகுறை 'தரிசனத் தோடு ' வேண்டுதலை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு திரும்பினேன்.

அர்ச்சகர்களில் சிலரிடம் மட்டுமே தெய்வீக அழகு இருக்கும்.ஆனால் அவர்களை போல சிடுமூஞ்சிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. பிராமின்ஸ் சுத்த சைவம் என்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு கோபம் வருவதை போல,வசை வார்த்தைகளை எங்கும் கேட்க முடியாது.சிலர் 'வள் வள்' என்று விழுவதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறார்களோ என தோன்றும் படி இருப்பார்கள்.

அன்று மாலை சத்தியசீலன் அவர்களின் அருமையான பட்டிமன்றம்.அறிவொழி அய்யா,இன்னும் பிரபல பேச்சாளர் என.அதில் சத்திய சீலன் அவர்களுக்கு இந்த வருடம் கலைமாமணி விருது கிடைத்திருப்பதாக அவரும் ,பலரும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு கொஞ்சம் வருத்தம்.அது அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது.நேற்று வந்த நடிகர்கள்லாம் விருது..? அரைகுறை நடிகைகளுக்கும் கலைமாமணி..காலங்கலாமாக தமிழ்,இலக்கியம் என தொண்டாற்றுவோருக்கும் கலைமாமணி.என்னய்யா விருது லட்சணம்?அவர் அதனை நிராகரித்திருக்க வேண்டும் என விரும்பினேன்.

விழாவின் ஒரு பகுதி முழுவதும் கடைகள்,சர்க்கஸ்.ராட்டினம்,ஸ்கேட்டிங்,போட்டிங் என கலை கட்டியது.எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு கையில் இரண்டு பலூனோடு வெளியே வந்தேன்.வேறு என்னத்தை வாங்குவது?எல்லாம் எங்கும் கிடைக்க கூடிய பொருட்கள் தான்.பலூன்கள் மீது சிறுவயது முதலே அலாதி பிரியம்.வாங்கி வந்து வீட்டின் மூலையில் நாள் கணக்காக கிடக்கும். கடைசியில் டென்னிஸ் பால் சைசுக்கு சுருங்கி பின் காணாமல் போய்விடும்.ஆனாலும் ஆசை தீராது.

ஆனால் ஒரு பலூனின் விலை பத்து ரூபாய். கடைக்காரன் புலம்பினான்."எங்கம்மா..இப்பல்லாம் யாரு இதை வந்குராவ..பிளாஸ்டிக் பலூன் தான் உடையாது,காத்து போனாலும் ஊதிக்கலாம்னு இதை யாரும் கண்டுக்கிறது இல்லை.ஏதோ உங்களமாதிரி ரெண்டு பேர் வாங்கினாதான் எங்களுக்கு பொழப்பு.."அவனின் சோக கீதம் என்னை தியாகியாக்கியது.கூட பத்து ரூபாய் கொடுத்து இன்னொன்றையும் வாங்கிக் கொண்டேன்.

பக்கத்து வீட்டு எல்.கே.ஜி.பொடியன் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "ஐய்யே..என்னக்கா இது..சின்ன புள்ளை மாதிரி பலூனோட வரீங்க" அவன் என்னவோ பெரிய மனுஷன் மாதிரி.

நான் சிரித்தேன்.பேசாமல் பளிப்பு காட்டிக்கொண்டே பலூனை தட்டியதை பார்த்து சிறுவனுக்கும் ஆசை வந்துவிட்டது."அக்கா..எனக்கும் ஒன்னு..எனக்கும் ஒன்னு"என்று பின்னாலேயே வந்துவிட்டான்.

"ஏன்டா..உங்கம்மாவை வாங்கி தர சொல்லேன்" என்றேன் அவனிடம் ஒன்றை நீட்டிக் கொண்டே.."போங்கக்கா..அது வெடிச்சிடும்..யூஸ்புல்லா ஏதாவது வாங்கி தரேன்னு சொல்லுது.."சிறுவன் ரப்பரை பிடித்துக் கொண்டு தட்டிய பொது அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பலூன் என்றாலே வேண்டிக்க தானே! அதனோடு ஓடியாடி ,தட்டி தட்டி ஏதோவொரு எதிர்பாராத சமயத்தில் பட்டென்று வெடிக்கத்தானே பலூன்..இதில் என்ன யூஸ்ஃபுல் வேண்டிக்கிடக்கிறது?படிப்பு படிப்பு என மனித்தன்மை தொலைத்த இயந்திரங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த காலத்து சிறுவர்கள்.

சரி..விழாவிற்கு வருவோம்.திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்பு மங்கையர்கரசியின் அருமையான சொற்பொழிவு.தொடர்ந்து ஐந்து நாட்கள்.அருமையான பேச்சு.அதைவிட அருமையான உச்சரிப்பு நடை.காதில் இன்பத் தேன் வந்து பாய வேண்டும் என்றால் இவரின் பேச்சை கேட்டுப் பாருங்கள்.அவ்வளவு அருமை.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர்கள் தங்களால் இயன்ற தொகையை கவரில் வைத்து கொடுக்கலாம்.எல்லோரும் பத்து,நூறு என வைக்க, யாரோ ஒரு தருமப் பிரபு மட்டும் கிரானைட் கல்லை கவரில் வைத்து அதை அழகாக ஒட்டி அனுப்பியிருக்கிறார்.மங்கையர் கரசி அதை மேடையிலேயே சொல்லி அந்த முகம் தெரியாத ஆசாமிக்கு சிறப்பு வாழ்த்துக்களோடு சொற்பொழிவை நிறைவு செய்தார்.

சரி,வேண்டுதலுக்கு வருவோம்..என் நண்பர் வேலை வேலை என்று அநியாயத்திற்கு பிஸியாக இருக்கிறார்.அவரின் பணிச்சுமையை குறைத்து கொடு முருகனே .."என்று வேண்டிக்கொண்டு முருகனிடம் விடைபெற்றேன்.முக்கியமான செய்தி..அன்று அந்த பழைய அர்ச்சகர் அன்று இல்லை !

திருவிழா இனிதே நிறைவடைந்தது..!

இவ்வளவு நேரம் இப்பதிவை படித்து தங்கள் பொன்னான நேரத்தை தியாகம் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றி..! வணக்கம்..!வந்தே மாதரம் ...!

4 comments:

GSV said...

:D

hari said...

காஞ்சி தேவனதனை சொல்லி குற்றம் இல்லை !!!!

hari said...

காஞ்சி தேவனதனை சொல்லி குற்றம் இல்லை !!!!

harikaran00@gmail.com

yohannayalini said...

hahahaha......அடப்பாவமே!..நான் சொன்னது வேறு..! ஐயையோ... என்ன கொடுமை இது ஆண்டவா? @hari....