Tuesday, February 8, 2011

சாந்தி தெரு - 2 காமன் சென்ஸ்

துங்கும் நேரத்தை தவிர மற்றநேரங்கள் எல்லாம் எப்போதும் இரைச்சல் தான் சாந்தி தெருவில் .அங்கே வசிக்கும் ஜனங்களுக்குள்ளே சண்டையும் சச்சரவும் நாள் தவறாமல் நடக்கும்.பெண்களே ரிப்பன் வெட்டி சண்டையை துவக்கி வைப்பார்கள்.குழாயடியில் தண்ணீர் சண்டை,வாசல் பெருக்குவதில் எல்லைச் சண்டை,குப்பை கொட்டிவதில் சண்டை,பிள்ளைகள் தெருவில் புரண்டு கொண்டால் பெரியவர்களும் வயது பார்க்காமல் புழுதியோடு புரண்டு சண்டை,பெண்களில் ஒருத்தி மற்றவள் புருசனிடம் சரசம் செய்வது பற்றிய சண்டைகளால் தொண்டை கிழிய மூர்க்கமான குரல்கள் எழும்.

முன்பொருமுறை எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பார்த்தோம்.அதன் பிறகு 'காமன் சென்ஸ்' விவகாரத்தால் அடுத்ததாக பரபரப்படைதிருந்தது சாந்தி தெரு.

அதே நான்கு வீடுகளில் 2 நம்பர் வீட்டில் புதிதாக குடிவந்திருந்தாள் வனிதா என்ற நடுத்தர பெண்.கணவனும்,4 ஆம் வகுப்பு பையனுமாக குட்டி குடும்பம்.வனிதாயின் முகச்சாடைஎப்படி என்றால் சாந்தமாக பார்த்தாலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.கோபமாக பார்த்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. கொஞ்சம் கர்வியும் கூட.டிகிரி ஏதோ படித்திருந்ததால் தன்னை சுற்றி உள்ளே அனைவரும் தன்னை வணங்க வேண்டியவர்கள் என்று ஒரு நினைப்பு.தன் 4ஆம் வகுப்பு மகனுக்கு தானே டியுசன் எடுப்பாள்.6 யும் 4 யும் பெருக்கினால் 22 என்று டியுசன் எடுக்கும் அளவுக்கு அறிவு ஜீவி.தப்பு தப்ப சொல்லி கொடுக்காதம்மா..என தினமும் பையன் அம்மாவிற்கு டியுசன் எடுப்பான்.ஆனாலும் அவளின் மிடுக்கு மட்டும் குறையாது.

வனிதாவின் பக்கத்துக்கு வீட்டில் காமாட்சியின் குடும்பம்.பையன் காலேஜிற்கும் பெண் 10 வகுப்பும் படிக்கிறார்கள்.காமாட்சிக்கு எப்போதும் நியாயம் தான்.வெட்டு ஒன்று துண்டு ரெண்டு பேச்சுக்கள் தான்.சண்டைகளில் காமாட்சி சேலையை தூக்கி சொருகினால் எதிரில் ஒருவரும் நிற்கமாட்டார்கள்.விடு ஜூட்..!

இப்படியான ஒரு நாளில் வழக்கம் போல் சூரியன் உதிக்க பொழுது புலர்ந்தது.வீட்டு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.காமாட்சி மோட்டாரை போட வெளியே வந்தாள்.ஒயரை எடுத்து வனிதாவின் வீட்டின் குறுக்காக கொண்டு சென்று பிளக்கில் சொருகி சுவிட்சை போட்டாள்.வனிதா வீட்டருகில் தான் சுவிட்ச் இருந்தது.காமாட்சி போய்விட்டாள்.

ஒரு பத்து நிமிடம் சென்றிருக்குமோ என்னமோ,வனிதா வெளியே வந்தாள்.தனக்கு குறுக்காக ஒயர் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தாள்.ஒயரைதாண்டிகொண்டு வெளியே போக முடியாது.பையனோடு கத்திக் கொண்டு வெளியே வந்த அவள் கோபத்தை ஒயரின் மேல் காட்டி அதை வெடுக்கென்று கழற்றி வீசினாள்.பதிலுக்கு ஒயரும் தன் கோபத்தை காட்டவேண்டுமல்லவா...அது அறுத்துக் கொண்டு தொங்கியது.ஒயர் அறுந்துவிட்டதை பார்த்து திடுக்குற்றாள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு அறுந்த ஒயரை பாங்காக சுற்றி வைத்து விட்டு தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பாந்தமாக உள்ளே சென்று விட்டாள்.

பத்துநிமிடம் ஓடியும் தண்ணீர் வரவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த காமாட்சி என்ன என்று எட்டிப் பார்க்க வந்தாள்.ஒயர் அந்துபோய் கிடந்தது.அந்த காட்சியை பார்த்ததும் அம்மாளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.ஆனால் என்ன இயற்கை அதிசயமோ ரொம்ப அமைதியாக "இது யாரு இப்படி அத்துப் போட்டது?" என்று கேட்டுக் கொண்டே வனிதாவின் வீட்டை நோக்கினாள்.

அந்த பெண்மணியோ"யாராவது வேணும்னு அத்து போடுவாங்களா?"என்று திருப்பி கேட்டாள் கடுகடுவென்று.

"இது என்னடியம்மா..வேணும்னு புடுங்கி போட்டீங்களானா கேட்டேன்.யாரு இப்டி பண்ணதுன்னு தானே கேட்டேன்.அதுக்கேன் சண்டைக்கு வர"

"ஆமாமா...காலங்காத்தாலே உங்கள மாதிரி எங்களுக்கு வேளை வெட்டி கிடையாது பாருங்க..சண்டைக்கு அலையிறாங்க..நீதாமா சண்டைக்கு வந்த..உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட காமன் சென்சே கிடையாதா..?"அவள் கத்திக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

"ஆ..."

காமாட்சியம்மாள் வாயடைத்து நின்றுவிட்டாள். அந்த ஒயர் கூட திறந்த வாய் மூடவில்லை.

காமாட்சி தலைகுனிந்த படியே வீட்டிற்குள் வந்தாள்.அவள் ஒன்றும் பேசவில்லை.காமன் சென்சுக்கு அர்த்தம் புரியவில்லை.அவள் ஏதோ தனக்கு புரியாத ஒன்றை சொல்லி வாயடைத்து விட்டாள் என்று சோகமாக உள்ளே வந்தாள்.தன் பையனை அழைத்தாள்.

"அவ ஏதோ இங்கிலீசுல சொன்னாலே,அதுக்கு என்னா அர்த்தம்..? அவள் அப்பாவியாக கேட்டதை பார்த்து பையன் சிரித்தான்."என்னா வார்த்த?"

"அவ ஏதோ கம்னோ..காம்மன்னோ...தெரிலடா..ஏதோ சொன்னா"

"அது காமனுமில்லா..சோமனுமில்லா.. காமன் சென்ஸ்"

காமாட்சி உற்சாகமாக "அதான்..அது தாண்டா..அப்டினா.."

"பொது அறிவுன்னு அர்த்தம்"

"அப்டின்ன..பொது அறிவில்லனா சொன்னா"அவளுக்கு ஆத்திரம் வந்தது.

"இல்லை. இல்லை.அதுக்கு சரியான அர்த்தம் அறிவு கெட்டவள்னு அர்த்தம்.பையன் தன் பங்கினை சிறப்பாக முடித்து கொண்டு பையை தூக்கி கொண்டு ஓடியே விட்டான்.

காமாட்சிக்கு உடம்பு நடுக்கியது.ஆத்திரம் பொங்கியது. படபடவென்று சேலையை தூக்கி சொருகினாள்
நேராக வனிதாவின் வாசலுக்கு வந்தாள்.

"ஏண்டி..எவ்ளோ திமிர் இருந்தா என்ன அறிவு கெட்டவன்னு சொல்லுவ..நீதாண்டி அறிவு கெட்டவ..உங்கப்பே,,ஆத்தா பெத்த மானங்கெட்ட ஜன்மம்..(டேஷ்..டேஷ்...)காமாட்சி ஜிங்கு ஜிங்கென்று சாமியாடினாள்.வனிதாவின் குடும்ப மானத்தை கப்பலேற்றும் கடமையில் பிஸியாக இருந்தாள்.

வனிதாவும் பதிலுக்கு கத்தினாள்.

அந்த தெருவில் இருந்த சோம்பேறி கூட்டமொன்று இந்த கலாட்டாவை கண்டுகளிக்க..ஒருவரும் வந்து தடுக்கவில்லை.அதுவுமில்லாமல் இவ்வளவு பெரிய தமாஷை நிறுத்த யாருக்கு தான் மனம் வரும்.
சண்டை தொடர்ந்தது.ஒருவரை ஒருவர் மாறி மாறி சபித்து கொண்டனர்.

திடீரென்று கோபத்தின் உச்சிக்கு சென்ற வனிதா பக்கத்திலிருந்த சீவக்கட்டையை எடுக்கு போக,அதுவரை வேடிக்கையில் சிரத்தையாக இருந்த அவள் கணவனுக்கு எங்கிருந்தோ வீரம் பொத்துக்கொண்டு வர அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.வனிதா மிரண்டு போய் ஸ்தம்பித்து நின்றாள்.அவமானத்தால் வெடுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.

அவன் திரும்பி காமாட்சியம்மாவை பார்த்து "அவ செஞ்சதுக்கு நாம் மன்னிப்புகேட்டுக்கறேன்..."அவனும் உள்ளே சென்றுவிட்டான்.அவள் ஒன்றும் சொல்லாமல் மனதிற்குள் தான் செய்ய நினைத்ததை அவன் செயலாக்கியத்தை உள்ளுர மகிழ்ந்தாள்.

இத்தோடு சண்டை இனிதே முடிவடைந்தது.இறுதி வெற்றி காமாட்சிக்கே!

அவன் மன்னிப்பு கேட்டது அவளுக்கு கூச்சமாக போய்விட்டது.ஒரு ஆம்பிளை..மன்னிப்பு கேக்கறான்..இந்த பஜாரிக்கு இப்டி ஒரு புருஷன் என்று முணுமுணுத்து கொண்டே தன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒயர் என்ன நினைத்திருக்கும்?


--
yalini

5 comments:

இரகுராமன் said...

அடுத்த சண்ட நடக்கும்போது சொல்லி அனுப்புங்கோ:P

ηίαפּάʞиίнτ ™ said...

:)) அடிச்ச அடி-ல காமாட்சிக்கும் ஒருகணம் உயிர் பொய் வந்திருக்கும்.

பகலவன் said...

ஹ ஹ ஹ,,,,இந்நேரத்தில் நான் அலுவலகத்தில் உள்ளேன்.ஆனால் அதையும் மறந்து சிரிக்க வேண்டியதாகி விட்டது.அருமை,சிறப்பு,சண்டையை விட அதை நகைச்சுவையாக வெளிபடுத்திய விதம அருமை.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் !\

அந்த தெருவில் இருந்த சோம்பேறி கூட்டமொன்று இந்த கலாட்டாவை கண்டுகளித்ததாக கூறினிர்கள் அல்லவா !அதில் நீங்களும் ஒருவரோ!

ஆனால் இந்த நிமிடம் உண்மையில் என்னை சிரித்த வைத்த பெருமை உங்களுக்கு மட்டுமே உண்டு.

நன்றி
பகலவன்

Mohamed Faaique said...

உங்க எழுத்து நடை சூப்பர்ரா இருக்கு நன்பா...

Unknown said...

nandri Frnd!