Friday, February 18, 2011

அரசியல் வாதிகள்

இந்தியாவில் மட்டுமல்ல;உலகம் முழுவதிலுமே அரசியல்வாதிகள் இறைவனின் அபூர்வ ஸ்ருடியாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஒன்று--

சுயநலத்தை அடிப்படையாக வைத்து தங்கள் அரசியலை வைத்து கொள்கிறார்கள்.

இல்லை;அரசியலை அடிப்படையாக வைத்து சுயநலத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்

சுயநலமே இல்லாத அரசியல்வாதிகள் அபூர்வமாக தோன்றி கொஞ்ச நாளிலேயே அஞ்ஞாத வாசம் புரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த சமுதாயம் எந்த கணக்கு போட்டு அரசியல் வாதிகளை ஏற்று கொல்கிறது?

அவனவன் பேச்சையும்,எழுத்தையும் பார்த்து !

காரியம் செய்பவனை விட வேஷம் போடுகிறவனுக்கு தான் நினைப்பது கிடைக்கிறது.

நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல் சர்வாதிகாரத்தில் ஒரே ஒரு அயோக்கியனை தான் மக்கள் தாங்க வேண்டியிருக்கிறது.

சொந்தமாக தொழில் நடத்தி வருமானம் பெற்று குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு அரசியலை இலவச கடமையாக செய்வோர் இந்த நாட்டில் மிக குறைவு!

அரசியலையே தொழிலாக நடத்துவோர் தான் மிக அதிகம்.

ஓர் அரசியல் வாதிக்கு திடீரென்று சொத்து வந்தது.வீடு வந்தது என்றால் அது எப்படி வந்ததென்று கேட்க வேண்டியவர்கள் மக்கள்.

சிலர் அதுமாதிரி கேட்கிறார்கள்.சிலர் இப்படி நமக்கு வராதா என்று ஆயாசப் படுகிறார்கள்.

அரசியல்வாதி மக்களுக்கு அரசியலில் மட்டும் தவறான வழியை காட்டவில்லை.நாணயத்திலும் நடத்தையிலும் அதே வழியை காட்டுகிறான்

பணம் எதையும் நிர்ணயித்துவிடுகிறது.

ஓர் அயோக்கியனை யோக்கியன் என்று காட்டுவதற்கும் அது பயன்படுகிறது

பல நேரங்களில் அரசியல் தொண்டர்கள் மீது நான் பரிதாப்படுவதுண்டு.

அவர்களில் பலர் கள்ளங்கபடமே அறியாதவர்கள்.

அதனால் தான் அவர்கள் தலைவர்களாக வரமுடியவில்லை

அரசியலில் கார் வாங்கியவனும் வீடு வாங்கியவனும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறான்.

கால் போனவனும் கண் போனவனும் என் கண்ணுக்கு தெரிகிறான்

யாரை நோவது?

மக்களை தவிர யாரை நோவது?

ஒவ்வொரு தடவையும் எரியாத விளக்குக்கே எண்ணெய் ஊற்றி பழக்கப் பட்டுப்போன மக்கள் இப்போது மட்டும் எப்படி மாறிவிடுவார்கள்?

அழகான பேச்செல்லாம் அவர்களுக்கு உண்மையாகவே தோன்றுகிறது.

ஏன்?

படித்தவனுக்கே அப்படிதான் தோன்றுகிறது.படிக்காதவன் நிலை என்ன?

உணர்ச்சி பூர்வமாக தோன்றுகிற உண்மைகளை இதுவரை எந்த அரசியல்வாதி வெளியிட்டிருக்கிறான்?

ஒரு பொய் சொல்ல ஆரம்பித்து கூட்டம் முழுக்க நம்பி தன் பக்கம் வந்தவுடன் மெதுவாக அந்த பொய்யிலிருந்து அவனும் வாபசாகி தன்னுடைய கூட்டத்தையும் வாபசாக செய்து அந்த வெறுங் கூட்டத்துக்கு தலைவனாகி விடுகிறான்

என் அனுபவத்தை சொல்லுகிறேன்.

திராவிட நாடு என்பது வெறும் கற்பனை.அது கிடைக்காது என்று தெரிந்தே திராவிட நாடு கேட்டோம்.

ஆனால் திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மிக அழுத்தமாக ஓட்டினோம்

ஒரு கட்டத்தில் அது பற்றி விவாதித்து விட்டு நானும் சம்பத்தும் வெளியேறினோம்.

உடனே திமுக தலைவர்கள் "திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு கேட்போம்.சம்பத் ,கண்ணதாசனைப் போல கோழைகளல்ல நாங்கள் " என்று முழங்கினார்கள்.

அந்தோ! என்ன சொல்வேன்..

பதவிக்கு போகவேண்டும் என்று ஆசை வந்து ஆறாவது மாதமே அவர்களும் வாபசானார்கள்.

வாபசான அழகையும் நியாயப் படுத்தி தங்கள் கூட்டத்தை நம்ப வைத்தார்கள்.அவர்களும் நம்பினார்கள்.

நாத்திக துவேஷம்,சுயமரியாதை,பார்ப்பன துவேஷம் எல்லாம் வாபசான கதையும் இதுதான்..

காலங்களாலே கருத்துகள் மாறலாம்

ஆனால் இதை மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தே ஒரு கருத்தை சொல்வது கிரிமினல் குற்றம்.

நியாயங்கள் தெளிவாக தெரியும் போதே அநியாயங்களுக்கு துணை போகிற மக்கள் உருப்படாத பிள்ளைகளைதான் தலைவர்களாக பெறுவார்கள்.

ஓர் அரசியல் தலைவரிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு பிறகு அவர் போடும் கோடெல்லாம் ஓவியம்,அவர் கத்தும் வார்த்தைகள் எல்லாம் காவியம் என்று விஞ்ஞான விளக்கம் கூறும் மக்கள் அந்த தலைவர் தவறு செய்வதாக சொன்னால் என்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் என்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த தலைவரும் தவறு செய்வதையே தேசியமயமாக்கி விடுகிறார்.

ஜனநாயகம் வருஷா வருஷம் பாடம் போதிக்கிறது.ஒரே பாடத்தை திரும்ப திரும்ப போதிக்கிறது.

மக்கள் எனும் மக்குகள் இதுவரை ஒரு பரிட்சையில் கூட பாஸ் பண்ணவில்லை !

-- கண்ணதாசன்

No comments: