Thursday, December 2, 2010

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் - சுஜாதா

Things you would never know without the movie industry.. என்று என் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவிற்கு வந்த மின்னஞ்சல் ஒன்று. ஹாலிவுட் சினிமாக்களில் தான் இவை எல்லாம் பார்க்கலாம் என்று ஒரு பட்டியலே இருக்கிறது.


1 . என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வசிக்கும் வீடு பளபளவென்று விசாலமாக தான் இருக்கும்.

2 . இரட்டையர்களில் ஒருவர் எப்போதும் கெட்டவர்

3 . பாம் வெடிப்பதை தடுக்க வேண்டும் எனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம். பரவாயில்லை வெடிக்காது.

4 . எவ்வளவு பேர் கதாநாயகனை தாக்க வந்தாலும் ஒவ்வொருவராகத்தான் வந்து உதைபடுவார்கள்.

5 . அதுவரை மற்றவர் உதைபட தங்கள் முறை வரும் வரை சுற்றிலும் நடனமாடிக் கொண்டிருப்பார்கள்.

6 . ராத்திரி படுத்துக் கொள்ளும் போது பெட்ரூம் விளக்கை அனைத்தாலும் அறையில் எல்லாம் நன்றாக தெரியும். என்ன, கொஞ்சம் நீலமாக தெரியும்....அவ்வளவுதான்

7 அழகான இருபத்திரண்டு வயது கதாநாயகி அணுஆயுத நியூக்ளியர் ரகசியங்களிலும் கம்ப்யூட்டரிலும் எக்ஸ்பெர்டாக இருக்க முடியும்

8 விசுவாசமுள்ள , கடுமையாக உழைக்கும் போலீஸ் அதிகாரி ரிட்டையர் ஆவதற்கு பத்து நாள் முன்பு சுட்டுகொள்ளப்படுவார்

9 வில்லன் கதாநாயகனை நேரடியாக சுட்டு கொள்வதற்கு பதில் சிக்கலான இயந்திரங்கள், பியூஸ்கள் , விஷவாயுக்கள், சக்கரங்கள், லேசர் அல்லது சுறாமீன்களிடம் விட்டு விட்டு சுற்றி வளைத்து தான் கொல்வான். நாயகன் தப்பிக்க முப்பது நிமிஷமாவது கிடைக்கும்

10 போலீஸ் விசாரணையின் போது கட்டாயமாக ஒரு நைட் க்ளப்பில் போய் விசாரித்தாக வேண்டும். பின்னால் மழுப்பலாக ஒரு ஸ்ட்ரிப் டீஸ் தெரிய வேண்டும்

11 எல்லா படுக்கைகளிலும் ஸ்பெஷலாக போர்வைகள் உண்டு. பெண்களுக்கு மார்பு வரை மறைக்கவும், ஆண்களுக்கு இடுப்பு வரை மறைக்கவும் (ஆண்கள் அப்போது சிகரெட் குடுத்தே ஆக வேண்டும்)

12 . யாராயிருந்தாலும் ஒரு விமானத்தை தரையிறக்க முடியும். கண்ட்ரோல் டவரிலிருந்து எப்போதும் சிகரெட் குடிக்கும் ஆசாமி பேசியபடியே இறங்க வைப்பான்.

13 . தண்ணீருக்கடியில் போனாலும் லிப்ஸ்டிக் அழியாது.

14 . எந்த யுத்தமாக இருந்தாலும் காதலியின் போட்டோவை காட்டாதவரை நாயகன் இறக்க மாட்டான். எடுத்து காட்டி விட்டால் அடுத்த காட்சியில் அவன் க்ளோஸ்

15 . பாரிஸ் நகரில் எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் ஈபில் டவர் தெரியும்

16 . கதாநாயகன் வில்லனிடம் செமையாக அடி வாங்கும் போது வலி தெரியவே தெரியாது. ஆனால் நாயகி பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் 'ஸ்ஸ்... ஆ...' என்பான்

17 . ஒரு பெரிய கண்ணாடி காட்டப்பட்டால் அதன் மீது யாராவது தூக்கி வீசி எறியப்படுவார்

18 . காரில் நேரான ரோட்டில் நேராக போனாலும் நாயகி அடிக்கடி ஸ்டியரிங்கை திருப்புவாள்.

19 . எல்லா 'டைம் பாம் 'களிலும் வெடிக்க எத்தனை செகண்ட் பாக்கி இருக்கிறது என தெரிந்தே ஆக வேண்டும்

20 . போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் பண்ணதும் தான் கேசை துப்பு துலக்க தேவைபடுவார்.

21 . தெருவில் நீங்கள் நடனமாட தொடங்கினால் தெருவில் வரும் போகும் எல்லோரும் அதே தாளத்தில் ஆடுவார்கள்.

22 .பாழடைந்த பங்களாவில் தங்கும் பெண்கள் எதாவது வினோத சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்க சிக்கனமான உடையில் தான் நடந்து செல்வார்கள்.

23 .போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் எப்போதும் நேர்மாறான குணமுள்ளவர்களாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

24 .ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவில் தங்களுக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வார்கள்



இவை பெரும்பாலும் நம் பாலிவூட், கோலிவூட் சினிமாக்களிலும் பொருந்துவதை நீங்கள் இது நேரம் உணர்ந்திருப்பீர்கள். கோடம்பாக்கத்துக்கு 24 க்கு மேல் அனுபந்தமாக சில விஷயங்கள் உண்டு.

25. உணர்ச்சி வசப்படும் காட்சியில் திடீர் என்று மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும். நாயகி வீட்டை விட்டு துரத்தப்படும் போது , டூயட்டின் போது, காதலின் போது எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். மழையின் போது மட்டும் எப்போது அவள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் புடவை அணிய வேண்டும்

26 .பாடல் காட்சியில் ஒரு வரி மயிலாப்பூரிலும் அடுத்த வரி மியாமியிலும் பாடப்படலாம்

27 .ஒரே பாட்டில் பாடிக்கொண்டிருக்கும் போது உடை மாறலாம். நிறம் மாறலாம்.

28 .சட்டென்று எல்லா பிஜிஎம்மும் நின்று விட்டால் யாரோ செத்து போய்விட்டார்கள் என்பது உறுதி.

29 .கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்த கட்டத்திலும் நுழைந்து உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றவாறும் சாட்சி சொல்லலாம்.

30 .'முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ணை வரசொல்லுங்கோ' என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போக போகிறாள் என்று அர்த்தம்.

31 இறுதியாக பாடலின் எந்த காட்சியிலும் எந்த வேளையிலும் எந்த லோகேஷனிலும் நாற்பது பெண்கள் வரலாம்.எல்லாரும் குட்டை பாவாடை அணிய வேண்டும்



இந்த வரிசையில் இன்னும் எதாவது விட்டு போயிருக்கிறதா?

7 comments:

Praveenkumar said...

அடடா..!! பட்டியல் நீள்கிறதே..! ழுழுவதும் படித்துவிட்டு வருகிறேன். விடுபட்டு இருந்தால் நிச்சயம் கூறுகிறேன்.

Jawahar said...

ஹாலிவுட்டுக்கு அடியில் சொல்லப்பட்டவையிலேயே பல விஷயங்கள் நம்ம ஊரில் உண்டு. உதாரணம் : ஒத்தடம்

http://kgjawarlal.wordpress.com

Praveenkumar said...

ஹ...ஹா...ஹா...!!!
அருமையாகவும்,
தெளிவாகவும்,
சுவாரஸ்யமாகவும்
சொல்லியிருக்கீங்க.!!
பகிர்வுக்கு நன்றி..!

விடுபட்டவைகள்.-
1.சண்டைகாட்சிகளில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பறந்து பறந்து அடிப்பது.
2.கதாயகனை அடித்தாலும் கல்லு மாதிரி நிற்பது. ஆனால் அவர் அடித்தால் 100 அடி தூரம் பறந்து போய் விழுவது.
3. முதல் 2 அடிகள் வாங்கி கொண்டு 3வது அடியிலிருந்து தடுத்து மீண்டும் அடிப்பது.

Praveenkumar said...

கோலிவுட் படங்களில் திரைப்படத்தின் பெயர் போடும் முன்பு... ஏதாவது சாமி படம் காட்டி ஆரத்தி எடுப்பது., பாடல்கள் ஒலிக்க செய்வது கௌசல்யா.. சுப்ரஜா.. ஸ்லோகம்ஒலிப்பது. கதாநாயகன் கை தனியாக கால் தனியாக பிறகு மொத்தமாக காண்பிப்பது. இப்படி சில காட்சிகள் இன்றும் மாறாமல் இருந்து கொண்டுதான் உள்ளது.

Praveenkumar said...

கோலிவுட் படம் முடியும் போது சுபம் (அ) வணக்கம் (அ) யாராவது இயக்குநர் கூறும் தத்துவம் அல்லது நன்றி..!

ஹாலிவுட் என்றால்... 10 நிமிட நேர அளவுக்கு படத்தில் பணியாற்றியவர்கள் உட்பட.. பெரிய்ய்யயயய..... பட்டியல் போய் கொண்டு இருந்த.. பிறகு END போடுவது.

bandhu said...

60 கிலோ இருக்கும் கதா நாயகன் 200 கிலோ இருக்கும் ரௌடிகளை உதைத்தவுடன் அவர்கள் பறந்து போய் விழுவது

Philosophy Prabhakaran said...

அட... ஹாலிவுட் படங்களிலும் இதே நிலைதானா...