Wednesday, November 24, 2010

மைனா - ஓர் உலக காவியம் !

திருப்பூரில் முதல் முறையாக டைமன்ட் தியேட்டரில் என் காலடி பட்டது மைனா படம் பார்பதற்காக.. (டைமன்ட் புனிதமடையட்டும்!). A Journey Of LoveStory நன்றாகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சலிப்பே இல்லை. மலைக்காட்டு பிரதேசத்தில் ஒரு பயண அனுபவம். கிளைமாக்சில் அந்த பெண் ஆட்டோவில் போகும் போதே நமது மனம் அலாரம் அடிக்க தொடங்கி விடுகிறது. சரி தான் ஏதோ நடக்கபோகிறது என்று. அதே போலவே 'சுபமாகவே' முடித்தார் இயக்குனர். இது ஒன்று தான் இடிக்கிறது?!

ஒரு உண்மை காதல் கதை என்றாலே காதலர்கள் சாக வேண்டும். அதுவும் ரத்த களரியோடு கொடூரமாக முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சினிமாவில் என்றில்லை.. உலக இலக்கியங்களிலிருந்து பார்த்தாலே இப்படி தான் இருக்கிறது. ரோமியோ-ஜூலியட் , லைலா-மஜ்னு.. இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஏன் இப்படி என தெரியவில்லை.

காதலர்கள் இறந்தால் அங்கே காதல் வாழ்கிறது
அந்த காதல் எங்கே சாகும் என்றால், அவர்கள் கலியாணம் முடிக்கும் போது.

ஒன்று இருவரும் சாக வேண்டும். இல்லை, நாயகனுக்கு பைத்தியம் பிடிக்கவேண்டும் அல்லது அவன் மட்டும் சாகவேண்டும். அப்போது தான் நாம் கண்ணீரோடு வெளியே வருவோம் அல்லது கனத்த மனதோடு புத்தகத்தை மூடி வைப்போம்.

சரி. நம் எல்லோர் வாழ்விலும் இந்த மாதிரி மைனா கதைகள் வந்திருக்கும்.

என்ன, சினிமாவில் ஒருத்தனுக்கு ஒரு மைனா என கதையளப்பார்கள். யதார்த்த வாழ்வில் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எத்தனையோ 'மைனாக்கள்' வந்து போகும்.

இந்த படத்தை பார்த்த போது எனக்கும் என் சிறுவயது 'மைனா' நினைவு வந்தது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு 3 வயது. என் 'மைனா'விற்கும் அதே வயது. (மைனாவிற்கு ஆண்பால் என்ன?)

நகர அங்கீகாரதிற்காக போராடிகொண்டிருந்த எங்கள் கிராமத்தில் எங்கள் நட்பு. பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. எங்கும் ஒன்றாகவே சுற்றி திரிந்தோம். 3 வயதில் புழுதியோடு புரள்வதை தவிர வேறு என்ன தெரியும். அதையே செய்தோம். எப்போதும் ஒன்றாக கைகோர்த்து ஊரெல்லாம் சுற்றினோம்.பண்ணாங்கல் , தாயம், வயல் வெளி புல்வெளி என மைனா படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் என்னென செய்தார்களோ அதேபோல இருந்தோம். எங்களோடு யாரையும் செட்டு சேர்த்து கொள்வது கிடையாது . 5 வயது வரை இப்படியே ஓடியது. இப்படி சந்தோசமாக போய்கொண்டிருந்த எங்கள் நட்பில் ஒருநாள் இடி விழுந்தது.

என்னையும் என் 'மைனாவையும்' பள்ளியில் சேர்த்து விட்டார்கள். எப்போதும் பிரிந்திருக்காத நாங்கள் அழுது தீர்த்தோம். வேறு என்ன செய்ய? கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த உடன் கட் அடித்துவிட்டு வயல்வெளியில் எலிபிடித்து விளையாடி கொண்டிருந்தோம்.

உஷாரான எங்கள் பெற்றோர்கள் என்னை டவுனிற்கு கூடி போய்விட்டார்கள்.

சதிகாரர்கள் !

சின்னப்பெண் யாழினியால் என்ன செய்ய முடியும். அழுது அழுது ஓய்ந்து தூங்கிவிட்டேன் .

பிறகு பல வருடங்கள் கழித்து எனது பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு வந்தேன். அதுவரை இடையிடையே வந்தும் மைனாவை பார்க்க முடியவில்லை. அப்போது எனக்கு ஓரளவே மைனா நினைவு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் எங்கள் பாட்டியோடு பேசிகொண்டிருந்தான். என் பாட்டி உற்சாகமாக ''இவன யாருன்னு தெரியுதா?'' என கேட்டார்.

''தெரியலையே'' என்றேன்.

''உன் சின்ன வயசு பிரெண்டு .. சுரேஷு... மறந்துட்டியா .. எப்போ பாரு ஒன்னாவே சுத்திட்டு இருப்பீங்களே... அவன் தான் ''

நான் ஆர்வமாக பார்த்தேன்.. ஆனால் அவனை பார்த்த போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உள்ளத்தில் எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை. தேமே என நின்றுகொண்டிருந்தேன். அவனும் என்னை சட்டை செய்துகொள்ளவில்லை.

எங்கள் பிரிவு எங்கள் நட்பை அழித்து விட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது.

ஒரு உன்னத காவியம் இதோடு முடிந்துவிட்டது .

இவ்வாறாக எனது வாழ்வில் மைனா காவியம் இதோடு முடிந்து விட்டது. ஒரு உலக காவியம் உருவாகும் நேரத்தில் அதை கிள்ளியெறிந்து விட்டார்கள்.

3 comments:

ponsiva said...

படம் பார்பதற்கு நன்றாக உள்ளது அவளோதனனே தவிர இப்படத்தை எதார்த்த சினிமா என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது யாழினி ...

பகலவன் said...

ஒ இப்படியும் ஒரு மைனா கதையா ?இயக்குனர்கள் எங்கே வாங்க பா வாங்க

panchammal said...

சரி அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்... இயக்குநர்களே கொஞ்சம் மாறுங்க...