Saturday, December 18, 2010

அந்த கடவுளுக்கு இது தெரியுமா?

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது கடவுள் கேட்டுக்கொண்டிருப்பார்...நம் மீது அக்கறை கொள்வார் என மனத்துயர்களை பகிர்ந்து கொள்வது.அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயிலுக்கு போகின்றனர். வழிபடுகின்றனர்.

கோயில் என்றதும் மனதில் பல சித்திரங்கள் தோன்றுகின்றன. வானுயர்ந்த கோபுரத்தின் கம்பீரம்,அகன்ற வாசல் கதவுகள்,வெண்கல குமிழ் பதித்த படிகள், கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூசிய யானை, உள்ளே நுழைந்தால் செவியை நிறைக்கும் மங்கள இசை, அபூர்வமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தூண்கள்,சுவர் ஓவியங்கள்.அந்த ஓவியங்களை கூட உயிர் பெறச்செய்யும் ஓதுவாரின் தெய்விக குரல். கல் விளக்குகள்,அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

நீண்ட அமைதியான பிரகாரம், அங்கே அமர்ந்து ருசி மிக்க பிரசாதம் உண்டு பிரச்சனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம்.இனி நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம் கொள்ளும் முகங்கள்.

கோயிலை விட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும்.

ஆனால் நடைமுறையில் தமிழகத்தில் உள்ளே புகழ் பெற்ற கோவில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசற்படியில் ஆரம்பித்து வெளியேறும் வழி வரை நடைபெறும் வசூல் வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்கு செல்லும் குற்றவாளி கூட மனத்தூய்மை பெறுவான் என்று சொல்வார்கள். இன்றோ கோயிலுக்கு சென்று நிம்மதியை தொலைத்து வந்த கதைதான் தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது.கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள்,கையூட்டுகள்,அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றிருந்தோம்.ஒரு நபருக்கு மொட்டை போடுவதற்கு 50 கட்டண சீட்டு பெற்று அங்கிருந்த நாவிதரிடம் சென்றோம்.அவர் தனியாக தனக்கு 50 ரூபாய் தரவேண்டும் என சொல்லிவிட்டார். நாங்கள் சீட்டை காட்டினாலும் அதெல்லாம் முடியாது என வாக்குவாதிட ஆரம்பித்து விட்டார். சுகாதாரமற்ற பிளேடு.குளிப்பதற்கு சுகாதாரமில்லாத அழுக்கான தண்ணீர் குழாய்.குளியல் அறையில் குளிக்க வேண்டுமானால் தனியாக 50 ரூபாய்,சந்தனத்திற்கு தனியே 40 ரூபாய்,வெறும் பூ மாலையும் ,தேங்காயும் இருந்த பூஜை பொருட்கள் 200 ரூபாய்.

உள்ளே செல்ல பொது தரிசனம், சிறப்பு தரிசனம் வி.ஐ.பி.தரிசனம் என மூன்று வகை.ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம். ஆளுக்கு 250 ரூபாய்சிறப்பு தரிசன சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தால் நீண்ட வரிசை.எப்படியாவது முண்டியடித்து உள்ளே சாமியை பார்க்கலாம் என்றால் எதாவது ஒரு பிரமுகர் சாமியை மறைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் செய்வது போல சிறப்பு பூஜை செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் போடும் சில 500 ரூபாய்களை பார்க்கும் அர்ச்சகர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே. காணிக்கைகளை உண்டியலில் போடாதிர்கள்...தட்டில் போடுங்கள் என்ற ஓயாத குரல்கள்.

சாமியை தரிசித்து வெளியே வந்தால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. பிரசாதம் வாங்கலாம் என்றால் கொள்ளை விலை.ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த சிலைகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார்.கோயில் ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுக்ககூடாது என மிரட்டியது அந்த வெள்ளைக்காரர் ஒரு 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.வாங்கி கொண்டு சிரித்தபடியே வெளியேறினார் அந்த ஊழியர்.

சில வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை சென்றுருந்தேன்.'நினைத்தாலே முக்தி'.. பேசமால் நினைத்துகொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாம்.ஏன்டா போனேன் என்றாகிவிட்டது.

படுமோசமான சாலைகள்,ஒரு அடிக்கு ஒரு பள்ளம்,பஸ்ஸில் போனால்,அதன் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸும் குலுங்குகிறது.அந்த லட்சணத்தில் சாலைகள். சாக்கடையில் இருந்து குப்பைகளை மலை மலையாக சாலையில் குவித்து வைத்திருக்கிறார்கள். சுத்தப்படுத்த ஆட்கள் இல்லை. அது மீண்டும் மழை வந்து சாக்கடையிலேயே கலக்கிறது. சாலையில் எங்கே பார்த்தாலும் குப்பை கூளங்கள் தான்.

இந்த பிரசித்தி பெற்ற கோவிலை சுற்றி இந்த அலங்கோலங்கள். ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஸ்டிரைக் செய்து பார்கலாமே. அப்போதாவது சரி செய்வார்கள் அல்லவா இந்த சாலைகளை'என்றேன். அதை எல்லாம் செய்து பார்த்துட்டோம்மா... உள்ளூர் மக்கள் சேறும் சகதியுமாய் இருந்த சாலைகளில் நாற்று நாட்டு விவசாயமே பண்ணி போராட்டம் நடத்திட்டோம்.ஒருத்தரும் கண்டுக்கிறதில்லை..' என்று வருத்தப்பட்டார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பாதை முழுக்க குப்பைகள் தான். அசுத்தம் தான். கோயில் நிர்வாகமோ, அரசோ எதுவும் கண்டுகொள்வதில்லை.

எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரர்கள். அவர்களை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. நமது மோசமான சாலைகளையும்,நாற்றமெடுத்து கிடக்கும் சாக்கடைகளையும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள், டன் கணக்கான எடை கொண்ட கற்களை எப்படி சாரமேற்றி மேலே கொண்டு சென்றிருப்பார்கள்,உள்ளே நந்தியின் சிலை மிகப்பெரியது.அதை தாங்கிகொண்டிருக்கும் கல் எவ்வளவு டன் எடையிருக்குமோ?..அவர்களின் உழைப்பிற்காவது,கற்பனை திறனுக்காவது மரியாதை தருகிறார்களா?

மிதியடிகள் பாதுகாப்பு இலவசம் என்று வெறும் போர்டு மட்டும் தான். அதற்கு தனியாக 5 ரூபாய். பூஜை பொருட்களுக்கும் கொள்ளை விலை. உள்ளே சென்றால் அர்ச்சகர்களின் கொள்ளை.தட்டில் காசு போடுங்கள் என மிரட்டி பிடுங்குகிறார்கள். தானாக ஒருவர் வந்து சந்தனத்தை நெற்றியில் வைத்துவிட்டு 5 ரூபாய் கொடுங்க என வாங்கிக்கொண்டார். அங்கே இருக்கும் சிவனுக்கு மரியாதையோ, பயமோ இல்லை.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படி கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது.காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தியில்' குணசேகரன். ஆனால் இன்று தமிழக கோயில்களைபோல பக்தர்களை துச்சமாக அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் ஹரித்துவார் கும்ப மேளாவில் கூட ஓர் இடம் அசுத்தமாக இல்லை. குப்பைகள் ,கழிவுகளை காண முடியாது.அவ்வளவு தூய்மை.தரிசனம் துவங்கி சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம் . ஆனால் தொடரும் தமிழக கோயில்களின் அவலத்தை போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிட வேண்டும் என்றால் கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

4 comments:

"தாரிஸன் " said...

//ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த சிலைகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார்.கோயில் ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுக்ககூடாது என மிரட்டியது அந்த வெள்ளைக்காரர் ஒரு 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.வாங்கி கொண்டு சிரித்தபடியே வெளியேறினார் அந்த ஊழியர்.//

இதுதான் நிதர்சனம்.... இந்த கேவலமான் ஈனப் பிறவிகள் மத்தியில்தான் நாமும் வாழ வேண்டியிருகிறது....

தேவன் மாயம் said...

கோவில்களிலும் லஞ்சம்! கொடுமைதான்!

philosophy prabhakaran said...

அதான் தூனுளையும் இருக்கார் துரும்பிலையும் இருக்காரே... பேசாம வீட்ல உக்காந்தே கும்பிட்டுக்க வேண்டியது தானே...

kiruba said...

கோவில்களிலும் லஞ்சம்! கொடுமைதான்..!!

இறைவனுக்கா தான் இதை அனைத்தையும்

சகித்துகொள்ள வேண்டிதாக உள்ளது ..!!