Friday, November 12, 2010

நம்பிக்கை என்பது யாதெனின்..

யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ, அதே போல் மனிதனுக்கு நம்பிக்கை அவ்வளவு அவசியம் என்று எவரேனும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அப்படி சொன்னவரை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில்.. யானையின் அங்கமும், ஆறறிவுக் கொண்ட மனிதனின் ஊக்க உணர்வும் ஒன்றா என்று உதட்டோரம் ஓர் ஏளன புன்னகையை அழகாக சிந்தி விட்டு பெருமிதத்துடன் பெருமூச்சு விட்டவாறே அவ்விடத்தை விட்டு அகன்றிருப்பீர்கள். இல்லையெனில் ஓர் அசட்டுத் தனமான புன்னகையால் சொன்னவரின் கூற்றை ஆமோதித்தும் இருக்கலாம். எப்படியோ நம் அனைவருக்கும் நம்பிக்கை என்ற மந்திரச் சொல்லின் அவசியத்தை சிறு வயது முதலே சொல்லி சொல்லி நம்பிக்கையின் மீதான நம்பிக்கையை ஆழ நம்முள் பதித்து விடுகின்றனர். ஆனால் பெரும்பாலும் நமது நம்பிக்கைகளில் குருட்டுத்தனமும், ஓர் அவசரமுமே அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு உடல் குறைய வேண்டுமென நம்பிக்கையுடன் உடற்பயிற்சி நிலையம் சென்று ஒரு வாரத்தில் உடல் இளைக்கவில்லை என முயற்சியை கை விடுவது.

'எங்கப்பா உடம்பு குறையுது? நானும் என்னன்னமோ செய்து பார்த்து விட்டேன். பணம் போனது தான் மிச்சம். அதெல்லாம் சிலர் உடல் வாட்டு' என்று சொல்லிக் கொண்டே உருளைக் கிழங்கு வறுவலினை ரசித்து நொறுக்குவோர் தான் அதிகம். முயற்சியற்ற நம்பிக்கை வீணான ஒன்று. முயற்சியற்ற நம்பிக்கை வீணான ஒன்று. அவைகளால் யாதொரு பயனும் இல்லை.



நம்பிக்கையைப் பற்றி பல கதைகள் உள்ளன. அதில் ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

ஓர் ஊரில்.. ஒருவருக்கு சரும வியாதி வந்து விடுகிறது. அவர் வைத்தியரிடம் செல்கிறார். அவர் என்பதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாமா? ச்சே.. சட்டென்று ஒரு பெயர் நினைவில் வந்து தொலைய மாட்டேங்கிறது. கதை சொல்லும் ஆர்வமே போய் விடும் போல!! ம்ம்.. அவசரத்திற்கு செங்கிஸ்கான் என வைத்துக் கொள்ளலாம். வைத்தியர் செங்கிஸ்கானின் சருமத்தை சிறிது நேரம் ஆரய்ந்து விட்டு, செங்கிஸ்கானை ஏற இறங்க பார்த்தார்.

"செங்கிஸ்கான்.. நீங்க தீவிரமான சைவராச்சே!!" (ஷ்ஷ்ஷ்.. மத ஒருமைப்பாடு மலரட்டும். கண்டுக் கொள்ளாதீர்கள்.)

"அதனால் என்ன? சிவனின் பக்தருக்கெல்லாம் சரும நோய் வராதா என்ன?"

"அதில்லை?"

"எதில்லை!!" என்றார் செங்கிஸ்கான் கோபமாக.

"உங்களுக்கு அசைவம் என்றால் ஆகாது. ஆனால் இந்த வியாதிக்கு மலைப் பாம்பின் கொழுப்பை எடுத்து ஒரு மாதம் தடவினால் தான் குணமாகும்."

"வேறு வழியே இல்லையா?"

"வைத்திய சாஸ்திரத்தில் இல்லை."

செங்கிஸ்கான் சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி வர்றேன். ஈசன் பார்த்துக் கொள்வான்" என்று சென்று விட்டார்.

ஈசனாவது பார்ப்பாதாவது என வைத்தியர் இறுமாந்திருந்தாலும் செங்கிஸ்கானுக்கு சரும வியாதி முற்றிலுமாக முப்பதே நாளில் நீங்கி விட்டது. வைத்தியர் தலையில் இடி. தான் கற்ற சாஸ்திரம் பொய்த்து விட்டதா இல்லை மந்திரத்தால் மாங்காய் என்பதெல்லாம் உண்மை தானா அல்லது நமக்கு தெரியாமல் வேறு எவரிடமாவது வைத்தியம் செய்துக் கொண்டாரா என்று பெருஞ்சந்தேகம். வைத்தியர் நேரில் செங்கிஸ்கானிடமே சென்று கேட்டு விட்டார்.

"நான் என்ன செய்தேன்? குளத்தில் தொடர்ந்து முப்பது நாள் முழுக்கு போட்டு விட்டு பிரகாரத்தை ரெண்டு சுத்து அதிகமா சுத்தி வந்தேன். எல்லாம் ஈசன் அருள்" என்றார் செங்கிஸ்கான் கம்பீரமாக.

வைத்தியர் நேராக குளத்திற்கு சென்றார். குளம் பளிங்கு போல் இருந்தது. பிரகாரத்தை சுற்றிப் பார்த்தார். மீண்டும் குளத்திற்கு சென்று அதற்கு நீர் வரும் கால்வாயைத் தொடர்ந்து நதி இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கே ஆளரவமற்ற ஓரிடத்தில் உடல் பிளவுப்பட்ட மலைப் பாம்பு ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. 'ஆக மலைப் பாம்பின் கொழுப்பு தான் செங்கிஸ்கான் குணம் ஆனதற்கு காரணம்' என்று தெரிந்து அகமகிழ்ந்தார். வைத்தியருக்கு தன் தொழில் மேல், செங்கிஸ்கானுக்கு தன் பக்தி மேல் உள்ள உள்ளார்ந்த நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளே இக்கதை சொல்லும் நீதி.

இதை ஆங்கிலத்தில் Placebo Effect என்பார்கள். மருந்துகள் மனிதனை குணமாக்குவது இல்லை. மருந்துகள் குணமாக்கி விடும் என்ற நம்பிக்கையே மருந்துகளை நம்முள் வேலை செய்ய வைக்கிறது.

நம்பிக்கை என்னும் அகச் செயல் மனதினுள் தொடர்ந்து நிகழ வேண்டிய ஒன்றாகும். அவை நம் ஆழ் மனதில் ஊறி நமது புறச் செயல்களில் பிரதிபலிக்கும். அகமும், புறமும் ஒத்திசைக்கும் இயக்கத்திலேயே நம்பிக்கை முழுமை அடைகிறது. நம்பிக்கை என்பது சோம்பிக் கிடக்கும் மனதில் தோன்றும் தப்பிக்கும் மனநிலை அல்ல. அவை வாழ்வின் தொடர் தூண்டுதல்களுக்கான அற்புத சக்தி. நம்பிக்கைகள் இலக்குகளால் உருவாவது இல்லை. நமது சின்னஞ்சிறு செயல்களிலும் அவை பிரதிபலிக்கும்.

நம்பினார் கெடுவதில்லை- இது
நான்மறை தீர்ப்பு.

1 comment:

சுரேகா.. said...

கதை மிக அருமை! பணி தொடரட்டும்..! வாழ்த்துக்கள்!