Tuesday, April 19, 2011

தெய்வ தரிசனம்

வஞ்சகம் , பொய், கொலை, களவு ஆகிய பஞ்சமா பாதகங்களுக்கு நடுவே நம்முடைய ஜீவன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

எதன் மூலம் இந்த ஜீவனுக்கு அமைதியை ஊட்டுவது..?

மனைவியை சரணடைந்தால் ஒரு நல்ல புடவை கூட இல்லை என்று ஒப்பாரி வைக்கிறாள்.

நண்பனை சரணடைந்தால் அவன் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறான்

சமதளமும், வேலியும், முட்காடாக இருக்குமானால் எதிலே காலை வைப்பது?

ஆத்மாவுக்கு சாந்தி வேண்டும்.அமைதி வேண்டும்.நிம்மதி வேண்டும்

அது எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.முன் பின் அறிமுகமில்லாத ஒரு அந்நிய ஸ்திரீ வழங்க முடியுமானாலும் நமக்கு ஆட்சேபனை இல்லை.

ஒரு வகையான சுகத்தை, நிம்மதியை எதிர்பார்க்கிறோம்.

சிற்றின்பத்தில் சிறிது நேரமே அதை பெறமுடிகிறது.

ஆகவே வில்லங்கங்களை கடந்த ஒரு சூன்ய நிலையில் தன்னை மறந்து லயித்தாழோழிய நிரந்தரமான சுகமும் நிம்மதியும் நமக்கு கிடைக்க மாட்டா..

'தன்னை மறந்த லயம் என்பது என்ன?'

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவோடு ஐக்கியமடைவது.

அந்த ஐக்கியம் என்பது என்ன?

'நான்'என்ற ஒன்று இல்லாத மாதிரி அவனோடு கலந்து விடுவது.

இரண்டற கலந்து விடும் இந்த நிலைக்கு பெயரே சமாதி நிலை.

பிறர் அடித்தால் வலிக்காது

முள்ளால் குத்தினால் வலி தெரியாது.

கண் திறந்திருக்கும்.ஆனால் எதிரே இருக்கும் சடப்பொருள் பிடிபடமாட்டா..

காதுக்கு கேட்கிற சக்தி இருக்கும்.ஆனால் உலகத்தின் எந்த ஒலியையும் அது ஏற்றுக்கொள்ளாது.

பிறப்பு,வளர்ப்பு,சூழ்நிலை மறந்துபோகும்.

இந்த சமாதி நிலைக்கு போக ஏட்டு படிக்கட்டுகளில் ஏற வேண்டும்.

பகவானோடு லயிக்கிற சாதகத்தை செய்து ஒருவன் சமாதி நிலையையோ, சொருப ஞானத்தையோ எட்டிவதற்கு எட்டு படிக்கட்டுகள் உண்டு.

ஈசுவர லயத்தில் ஒரு மனிதன் இறங்கிய உடனேயே..

1 பேச்சு அடங்கி விடும்.

2 வியர்வை பெருகும்

3 மயிர்க்கூச்சு உண்டாகும்

4 குரல் தடுமாறும்

5 உடலில் நடுக்கம் ஏற்படும்

6 உடல் என்ற ஒன்று இருப்பது மறந்து போகும்

7 மெய் மறந்த நிலையில் கூச்சல் போடுவார்

8 சமாதி நிலையில் பகவானோடு லயித்து விடுவார்

'ஹரே கிருஷ்ணா,ஹரே கிருஷ்ணா,'என்று உச்சரிக்க ஆரம்பித்தால் ஒரு பக்தனுடைய கடைசி சாதக நிலையாக இது ஆகிவிடும்

உச்சரிக்க ஆரம்பித்த கொஞ்ச காலங்களிலேயே பலர் பரவசப்பட்டு கூத்தாடுவதுண்டு.

பலர் குழந்தைகளை போல மாறிவிடுவதுண்டு.

உலக வாழ்க்கையில் மூழ்கி இருப்பவனுக்கு குடும்பம்,பேரன்,பேத்தி என்று ஆகிவிட்டவனுக்கு இந்த 'கிருஷ்ணா பரவசம் 'வர தாமதமாகலாம்.

மெய் மறந்து கூத்தாடுவதில் ஆனந்தம் அதிகம்

சங்கீதம் நமக்கு பிடித்தமானதாக இருந்தால் தலையை தலையை ஆட்டுகிறோம்

குழந்தை நமக்கு பிரியமுள்ளதாக இருந்தால்,உச்சி முகர்ந்து தோளோடு அரவணைத்துக் கொள்கிறோம்

ஓவியம் நமக்கு பிடித்தமானதாக இருந்தால் கண் கொட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அழகான பெண்களை கூடவும் அப்படியே பார்க்கிறோம்

இந்த லயங்கள் அந்தந்த இடங்களை விட்டு விலகியதும் மறைந்துபோகும்.

ஆனால்,கிருஷ்ணா லயம் என்பது பிரமானந்த லயம்.வேறு எந்த தெய்வத்தோடும் அப்படி நாம் ஒட்ட முடியாது.

சிறிது கூட சிக்கலில்லாத சுகத்தை நமக்கு வழங்ககூடியவன் கிருஷ்ணனே.

'சுகம் ,சுகம்' என்கிறோமே அது என்ன?

உடம்பில் ஏற்படும் கிளர்ச்சியா?ஆத்மாவில் ஏற்படும் ஆனந்தமா?

ஒரு எருமை மாட்டை பார்த்து 'நீ சுகமாக இருக்கிறாயா ?'என்று கேட்டால் அதுவும் ஆமாம் என்று தான் பதில் சொல்லும்.

அதனுடைய சுகம் சேறு.

பசுமாட்டிற்கு சுகம் வைக்கோல்.

ஆனால் மனிதன் என்பவன் வெறும் வாய் மட்டும் படைத்தவனன்று.அவனது அங்கங்களின் கிளர்ச்சி மட்டுமே சுகமன்று.இவையெல்லாம் தற்காலிகம்

நிரந்தரமான சுகம் என்பது எந்த துன்பங்களையும் லட்சியம் செய்யாதது.

உண்மையான சுகம் எது என்பதை பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு போதிக்கிறான்...

"சுகம் என்பது உடலால் அறிவது அல்ல.அறிவால் அறிவது என்று கண்டு,அதில் லயித்து அசையாமல் இருக்கும் நிலையம்....."

மிருகங்கள் சுகம் அனுபவிக்கின்றன.ஒரு ஆட்டை நீங்கள் வெட்டிக்கொண்டிருக்கும் போதே,பக்கத்தில் இன்னொரு ஆடு புல் மேய்ந்துகொண்டிருக்கும்.அவற்றிற்கு உடல் உணர்வு உண்டே தவிர ஆன்மா உணர்வு இல்லை.

ஸ்ரீ கிருஷ்ணா லயத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சமமாக பாவிக்கப்படுகின்றன.

அதன் பெயரே சமாதி நிலை.

அதுவே ஒரு வகை சுகம்

நுங்கும் நுரையுமாக கங்கு கரையின்றி பொங்கி வரும் ஆனந்த வெள்ளம் அது.

உடம்பு அழகாக இருக்கிறது.அது எப்படி எப்படியோ இயங்கிகிறது.ஆனால் உடம்புக்குள் இருக்கும் உயிரை மட்டும் எடுத்துவிட்டால் சகல இயக்கங்களும் அடங்கி விடுகின்றன.

ஆகவே உயிர் என்பது எல்லாவற்றிற்கும் மூலமாகிறது.

உடம்பு இன்னொரு உடம்போடு கலப்பதை மனிதன் அறிகிறான்.அது இன்னொரு உயிரோடு கலப்பதை அவன் அறிவதில்லை.

ஆணும் பெண்ணும் கலக்கும் போது ஒரு நிமிஷ நேரம் லயம் உண்டாகிறது.பிறகு விலகி படுப்பதே சுகமாகிறது.

உடம்பு கலக்கும் சுகத்துக்கு அவ்வளவு தான் மரியாதை.உயிர்கள் கலக்கும் சுகத்துக்கு பிரிவே இல்லை.

அதிலும் பரமாத்மாவோடு ஜீவாத்மா இணைந்துவிட்டால் அதுவே பேரின்ப நிலை.

அந்த நிலையை எட்டும் முயற்சியில் இன்றைய இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

நாட்டில் நிறைய ஜனத்தொகை இருக்கிறது.ஒரு பகுதியினர் கலியாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவதால் நஷ்டம் ஒன்றும் இல்லை.

எப்படியும் வாழலாம் என்ற 'ஹிப்பிஸ' மல்ல நான் சொல்வது.இது தெய்வ இயக்கத்தில் இன்பம் காணுவது.

வில்லங்கங்கள் நிறைந்த மனிதனுக்கு இது சாத்தியமல்ல.

மரத்தை பிடித்துக் கொண்டு 'போகிறேன்..போகிறேன்' என்றால் போக முடியாது.மரத்தை விட்டால் தான் போகலாம்.

--கண்ணதாசன்

6 comments:

Praveenkumar said...

மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் ஆன்மீக கடடுரைப்பகிர்வு. எளிமையான எழுத்துநடையில் கட்டுரையினை படிக்கும்போதே... உற்சாகமாக உள்ளது.

Praveenkumar said...

//நாட்டில் நிறைய ஜனத்தொகை இருக்கிறது.ஒரு பகுதியினர் கலியாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவதால் நஷ்டம் ஒன்றும் இல்லை.// ஹி..ஹி..ஹி.. இப்படிலாம் சொன்னீங்கன்னா சீனாவை எப்படி பின்னுக்கு தள்ளுவது..??!! இந்தியா எல்லாத்துலயம் முதல் இடம் பிடிக்கனும்னு போராடுறவங்க.. நாங்க..!!!! ஹி..ஹி..ஹி...

Anonymous said...

ஆழமான கருத்து தங்கை..
எனக்கு நீங்கள் கிடைத்த பாக்கிய நட்பு.
வாழ்க தமிழ்
வாழிய வாழிய
என் தமிழச்சி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||எங்கும் தேடும்
தமிழ் ப்ரியை.||

ப்ரியை என்ற வார்த்தைக்குப் பதில் வேறு வார்த்தையை முயற்சிக்கலாமே..

அன்பி,நேசி...

Unknown said...

தமிழ் அன்பி..
தமிழ் நேசி..


நல்லாருக்கே..நன்றிங்க..

தக்குடு said...

ஆழமான சிந்தனையில் எழுந்த கருத்துக்கள். ஆனால் மனத்தை நல்ல விஷயங்களில் ஈடுபடுத்துவது கடினமான பணி!! வாழ்த்துக்கள்!