Wednesday, January 19, 2011

மூட நம்பிக்கை

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கிற நம்பிக்கையே 'மூட நம்பிக்கை' என்று சொல்கிற பகுத்தறிவாளர்கள் உண்டு.

அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம்முடைய நம்பிக்கை மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

நான் சொல்கிறேன் நம்பிக்கையில் மூட நம்பிக்கை,குருட்டு நம்பிக்கை,கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.

சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே மூடத்தனம்.அதில் தனியாக ஏது மூடத்தனம்?

நாட்டு மக்கள் எல்லோரையும் நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார்.அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?

திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அந்த காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.அதன் கதி என்ன?

தனுஷ்கோடி எக்ஸ்ப்ரஸில் போனவர்கள் ஊர் போய் சேரலாம் என்ற நம்பிக்கையில் தான் போனார்கள்.

அந்த நம்பிக்கை மூடத்தனம் என்பதை அரியலூர் நிரூபித்தது

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது.அப்படி நடக்காமலும் போய் விடலாம்.அப்போது அது மூடதனமாகி விடுகிறது

மகன் கல்லூரிக்கு போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான்.அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.

இவர் நமது ஒழுங்கான பிரதிநிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு வோட்டளிக்கிறார்கள்.அவர் எப்படிஎப்படியோ மாறிவிடுகிறார்.

ஆண்டவனை நம்புவதிலும் இதே நிலைதான்

அது தோல்வியுற்றால் மூடத்தனம்.வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்

ஆகவே நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி!

இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது?

ஆனால் நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே பயன்படுத்துகின்றனர் ?

அதிலே மனதுக்கு ஒரு சாந்தி!

தெய்வ நம்பிக்கை நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது.

விஞ்ஞான நம்பிக்கை போல ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவது தான் தெய்வ நம்பிக்கை

ஒரு சூத்திர தாரியின் கை பொம்மைகள் நாம் என்பது மறக்க முடியாதது

மரணம் என்ற ஒன்று அதை தினசரி வலியுறுத்துகிறது.

இவ்வளவுக்கும் பிறகும் தெய்வ நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால் நான் ஒரு மூடன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை படுகிறேன்.

முட்டாள் தனத்திலே இருக்கிற நிம்மதி,கெட்டிக்காரதனதிலே இல்லை,

உடம்பில் எல்லா நோயும் இருந்தும் ஒன்றுமே இல்லை என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான்.

ஒரு நோயும் இல்லாமல் ஒவ்வொரு மயிர்காலையும் பார்த்து இது அதுவாக இருக்குமோ?இதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி நித்திய நோயாளியாகவே சாகிறான்.

பாம்பு நஞ்சு நிறைந்தது.வேங்கை பயரமானது.யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?

ஆனால் அவற்றை ஆட்டி வைக்கிற திறமை சில மனிதகளிடம் இருக்கிறது.

உங்களாலும் எந்நாளும் முடியுமா? அந்த வாய்ப்பு சிலருக்கே அமைகிறது.

அதனால் தான் வாய்ப்பு இறைவன் அளிப்பது என்றேன்.அதை முறையாக பிடித்துகொண்டு முன்னேறுவதை அதிர்ஷ்டம் என்கிறேன்.

ஹிட்லருக்கு கிடைத்த வாய்ப்பு ஆணவத்தால் அழிந்தது.

சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு திறமையினால் வளர்ந்தது .

வாய்ப்பை தவறவிடுபவனே துரதிர்ஷ்டசாலி.

அந்த வாய்ப்பு எல்லோருக்கும் எப்போது வரும்?

அது முன்கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்!


--கண்ணதாசன்.

4 comments:

பொன் மாலை பொழுது said...

// சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே மூடத்தனம்.அதில் தனியாக ஏது மூடத்தனம்? //
சரிதான்.

மகிழ்நன் said...

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் பல மைல் தொலைவு இருக்கிறது தோழி...

கல் தனக்கு உதவி செய்யும், செய்தது என்று நம்புவது ஒருவனுக்கு மகிழ்ச்சியை தரலாம்...

ஆனால், கல் உதவி செய்யுமா? அந்த கல் எதற்கு பயன்படும் என்ற கேள்விகளை எழுப்புவது பகுத்தறிவு....

நம்பிக்கையை பகுத்தறிவு என்னும் உரைகல் கொண்டு உரசி பார்த்தால்...கண்ணதாசன் இந்தளவு உளறியிருக்க மாட்டார்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை......

jayakumar said...

superb thozhi...but you are deviating your intelligence...k...pls visit my blog also n leave your comments there....www.kmr-wellwishers.blogspot.com