Sunday, January 9, 2011

திருடன்

அவனின் முகம் வீங்கி ரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது. அவனின் ஒற்றைக் கண் ரத்த காயத்தால் மறைந்திருந்தது. மீதமிருந்த மற்றொரு கண்ணின் வழியாக சாளரத்தின் வெளியே பார்வையை நிறுத்தியிருந்தான். அவனின் சட்டை எப்படி நார் நாரைக் கிழிக்கப்பட்டு தொங்குகிறதோஅதே போலவே அவனின் தோலும் அங்கங்கே உறிந்துத் தொங்கியது. கிட்டத்தட்ட குத்துயிரும் குலையுயிருமாக கிடந்தான்.

உயிரோடிருக்கும் ஒற்றைக் கண்ணின் வழியாக அசையாமல் சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சாலையில் நடமாடும் மக்களோடு தானும் சேர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டான். துன்பத்திலேதான் மறந்து போன நாட்களின் மறந்து போன சம்பவங்கள் மனதில் வந்து வட்டமிட ஆரம்பிக்கின்றன.வீணாக பிடிபட்டு விட்டோமே என்று வருந்தினான்.

அப்போது அந்த அறையினுள் காலடி சத்தம்..

இரண்டு பேர் நடந்து வருவதை அவன் உணர்ந்தான். பேச்சு சத்தம் கூட கேட்டது.

"என்னய்யா.. ஏதாவது சொல்றானா?"

"சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கான் சார்.. திருட தான் போனானாம். அது அமைச்சர் வீடுன்னு தெரியவே தெரியதுன்றான்… இதையே தான் பொலம்பிட்டு கிடக்கறான். காம்பவுன்ட் தான் ஏறினானாம். அதுக்குள்ள நம்ம ஆளுங்க புடிச்சுட்டாங்க.”

அவர்களில் ஒருவன் குனிந்து அடிப்பட்டுக் கிடந்தவனை நோக்கினான்.

“ஏன்டா.. உனக்கு திருடுறதுக்கு அமைச்சர் வீடுதான் கிடைச்சுதா?”

மீண்டும் ஒரு உதை கிடைத்தது. வலியால் துடித்தன்.

“இவன் மேல திருட்டு கேசு ஏதாவது இருக்கா?”

“இல்லை சார்.. இது தான் முதல் தடவையாம்.. கிராமத்துல விவசாயம் பாத்துட்டு இருந்தானாம். அம்மா அப்பால்லாம் இருக்காங்களாம். ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்சுருப்பான்னு நினைக்கிறேன்” என்றான் அவன்களில் ஒருவன்.

“இந்தப் பதில அந்தாள் கிட்ட சொல்ல முடியாது. இப்பவே கண்டப்படி கத்திக்கிட்டு கிடக்கான்…”

சிறிது நேரம் அமைதி.

“சரி இங்க வா.”

இருவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். குத்துயிராய்க் கிடந்தவன் சாளரத்தை விட்டு பார்வையை அகற்றவேயில்லை.

சில மணி நேரங்கள் கடந்திருக்கலாம். மீண்டும் காலடி சத்தம். அவன் அதே நிலைத்த பார்வையில்.

“உன் கடைசி ஆசை என்னவென்று சொல்.”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

'ஆ.. ’கடைசி ஆசை’ அப்படியெனில் நான் சாகப் போகிறேன். அவன் கண்களை மூடினான். முகத்தைத் திருப்பவும் இல்லை.

அவன் மீண்டும் கேட்டான்.

”கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா? அம்மா, அப்பா யாரையாவது பார்க்கணும்னா ஏற்பாடு பண்றேன்.”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

'இவனுக்கு உண்மையிலேயே நம் மீது பரிதாபம் இருக்குமா? நான் சாகப் போகிறேன் என்பதை எவ்வளவு தடவை சொல்கிறான். அதைத் திரும்ப திரும்ப சொல்லி என்னை பயப்பேதியில் ஆழ்த்துவதில் என்னவொரு குரூர சந்தோஷம் இவனுக்கு. என் கடைசி ஆசை உங்கள் முகத்தில் காரி உமிழ வேண்டும் என்பது தான். ச்சே..வாயில் வேறு துணியை வைது அடைத்து விட்டார்கள். என் ஆசை அதுதான்.'

அவனது பார்வை மீண்டும் சாளரத்தில் நிலைத்தது.

“எதுக்காக அமைச்சர் வீட்டு சுவர் ஏறி குதிச்ச?” என்று அவனது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டனர்.

"நீங்கள் எவ்வளவு முறைக் கேட்டாலும் உண்மை நான் எற்கனவே சொல்லிவிட்டேன். உண்மையை விரும்பாதவர்களை நம்ப வைப்பது கஷ்டமான வேலை."

உருவமே இல்லாத ஆண்டவனை போல,உண்மையும் உருவமற்று போய்விட்டதா?..எல்லாமே பைத்தியக்காரத்தனம்..சீ..!

தங்கம் சொக்கத் தங்கமாக வேண்டுமானால் அதை நெருப்பில் புடம் போட்டாக வேண்டும்.. ஆனால் மனிதனை..?

“உங்கம்மாவை வரச் சொல்லியிருக்கே” என்று சொல்லி விட்டு அவன் அறையை விட்டு வெளியில் போய்விட்டான்.

அறையில் மீண்டும் நிசப்தம்.

காலத்திற்கு யாரை பற்றியும் கவலை இல்லை...

மறுநாள் செய்திதாள்களில், 'ஆளுங்கட்சி அமைச்சரைக் கொலைச் செய்ய முயன்ற இளைஞன் சிறையில் இருந்த தப்பிக்க முயன்ற போது, கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டான்’ என்று செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது.

3 comments:

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கதை எதிர்பார்ப்பையும் தாண்டி வியக்க வைக்கிறது அருமை

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கதை எதிர்பார்ப்பையும் தாண்டி வியக்க வைக்கிறது அருமை

yohannayalini said...

nandri shangar sir..!