Tuesday, January 18, 2011

குருட்டு வெளிச்சம்

அந்த ரயில்நிலையம் தான் அந்த கிழவிக்கு இருப்பிடம்.அங்கிருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் பெட்டிக்கடைக்காரர்களுக்கும் மொண்டிக் கிழவி.காது கேட்காது.கண்ணும் மங்கல் தான். கைகளை ஊன்றி ஊர்ந்து ஊர்ந்து தான் செல்வாள்.நடக்க முடியாத கால்களை வைத்துகொண்டு வேறு என்ன செய்யமுடியும்..

ஒரு சிறு துணி மூட்டை மாதிரி ஏதோ ஒன்றை வைத்திருப்பாள்.அது தான் அவள் சொத்து.வயது ஒரு தொண்ணூறு போல இருக்கும்.தோல்கள் சுருங்கி..அங்கங்கே தொங்கிக் கொண்டு இருக்கும்.ஒரு நூல்துணியை புடவை போல சுற்றியிருப்பாள்.வேறு மேலாடை ஏதும் கிடையாது. கிழவியின் கைகள் எப்போதும் கிடு..கிடுவென நடுங்கிக்கொண்டே தான் இருக்கும். அந்த பொக்கைவாய் தாடையும் கூடத்தான். அவள் அந்த ரயில்நிலைய பிளாட்பாரத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு போகவே அன்றைய நாள் முடிந்துவிடும்.

தினமும் ரயிலை விட்டு இறங்கி போவோரிடமும்,வருவோரிடமும் தன் நடுங்கும் கைகளை தூக்கி கொண்டு , ஆடும் போக்கை வாயை திறந்து ஏதோ கேட்பாள். புரிந்து கொள்ள முடியாத உளறலாகத் தான் இருக்கும். அதற்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி ஒரு வழியாகிவிடும் அந்த கிழவிக்கு . பிச்சை கேட்பாள். இரக்கமுள்ள மகராசன்கள் போடும் சில சில்லறை காசுதான் கிழவிக்கு தின வரும்படி.அதை கொண்டு ஒரு வேளை ஏதாவதொன்றை உண்டு..இரண்டு வேளை பட்டினி கிடப்பாள். ஒரு சில நாட்களுக்கு வரும்படி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.ஆனாலும் கிழவி அதே ஒரு வேளை விரதம் தான்.மீதி சில்லறையை முடிந்து வைத்துகொள்வாள். இப்படியே பழகிப்போய்விட்டது கிழவிக்கு. என்றாவது ஒரு நாள் ஒன்றும் விழாமல் கூட போய்விடும்.அதற்கு முந்தைய சேமிப்பு உதவும்.

ஆனாலும் இப்போதெல்லாம் கிழவிக்கு அதிக வரும்படி வருவதில்லை. ரொம்ப ரொம்ப கிழமாக இருப்பதால் பார்ப்பவர்கள் முகத்தில் மிக அதிகமான இருக்க சுபாவத்தை காட்டி கொண்டு வெறும் 'உச்சு' கொட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.சிலரோ,''சீ..சீ.. என்ன இது கன்றாவி '' என திட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். காசு ஏதும் போடுவதில்லை. அப்படிப்பட்ட நாட்கள் இந்த சேமிப்பை செலவளிப்பதற்காகவே நடக்கும்.

கிழவிக்கு அப்படியொன்றும் பிரமாதமான நியாபக சக்தி இல்லை. எத்தனை நாளாக இங்கே இருக்கிறோம் என்று ஒன்றும் தெரியாது. இரவானால் பிளாட்பாரத்தின் ஒரு மூலையிலோ மூட்டைகளுக்கு இடையிலோ சென்று புகுந்து கொள்வாள். சிலநேரங்களில் யாருக்கும் கேட்காத அழுகை சத்தம் கேட்கும். திடீரென்று பழைய நினைவுகள் ஏதும் தோன்றினால் இப்படிதான்.ஒன்று மட்டும் கிழவிக்கு நன்றாக நினைவிருந்தது.

என்றோ ஒரு நாள் தன் மூத்த மகன் இந்த ரயில்நிலையத்திற்கு அழைத்து வந்து,"இங்கேயே இரு..நான் போய் டீ வாங்கியாறேன்.." என்று சொல்லிவிட்டு போனவன்தான். வரவே இல்லை.வந்த வேலை முடிந்த பின் அவன் ஏன் வரப் போகிறான்.அதை நினைத்து கிழவி அழுவாள்.தரை தாரையாக கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்.மூன்று ஆண் பிள்ளைகளை பெற்றும் கஞ்சி ஊற்ற ஆளில்லையே..

அவள் கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளை சேலை உடுத்தி,பிச்சைக்காரியுமாக்கி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. தனியாளாக நின்று எத்தனையோ துன்பங்களை அனுபவித்து பிள்ளைகளை வளர்த்ததற்கு நல்ல பலனை இறைவன் தனக்கு அளித்துவிட்டதாக குமுறி கொண்டிருப்பாள்.திடீரென்று அவளின் சிந்தனை மாறும் . யார்யாரையோ திட்டிக் கொண்டே அவர்களின் ஏழேழு தலைமுறைகளும் என்னென்ன வியாதி வந்து சாக வேண்டும் என்று லிஸ்ட் தயாரித்து கொண்டு தூங்கி கிடப்பாள்.

காலம் எதைப் பற்றியும் கவலை இல்லை .எல்லா நாளும் ஒரே நாளாக இருப்பதில்லை.ஒரு நாள் என்ன நேர்ந்ததோ அந்த ரயில்நிலையத்தில் மருந்துக்கும் ஆட்களை காணவில்லை.யாரும் பிச்சையும் போடவில்லை.என்னவோ ஏதோவென்று கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று சேமிப்பை செலவழித்தாள்.

மறுநாளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து பேர்தான்.ரயில்களும் ஓடவில்லை.ஏதும் போராட்டமாக கூட இருந்திருக்கும்.ஆனால் கிழவியின் பாடு யாருக்கு தெரியும்.சேமிப்பு காசு தீர்ந்துவிட்டது.இன்று என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருந்தாள்.

காசு இருக்கும் போது இருந்த அதே வயிறுதானே இல்லாத போதும் இருக்கிறது.

கிழவிக்கு பசிக்க ஆரம்பித்து விட்டது.மூச்சு விட வெகு சிரமப்பட்டாள். காலை போய் மதியம் வந்தது.பசி அகோரப் பசியானது. வயிற்றில் கையை வைத்து முனகிக் கொண்டே கிடந்தாள். தாங்க முடியாத பசி கண்களில் தாரை தாரையாக கண்ணீராக வந்தது. கண்டுகொள்வார் யாருமில்லை.அல்லது அவர்கள் கண்களில் கிழவி படாமல் போயிருக்கலாம். ஆனால் வயிற்றிற்கு சோறு வேண்டும் இப்போது.அதற்கு வழியேது?அவளால் கத்த முடியவும் இல்லை.தலைகிறுகிறுத்தது. கண்களை மூடினாள்.அப்படி தரையில் கிடந்தாள்.பேச்சு மூச்சில்லை.

மாலை வந்தது.இருந்த நாலைந்து பேரும் மறைய ஆரம்பித்தனர். பெட்டிக்கடை மூடப்பட்டன.கிழவிக்கு லேசாக உணர்வு வந்தது. கண்களை திறந்தாள் .பசி கொஞ்சம் அடங்கியது போல தெரிந்தது.ஆனால் கைகால்களை அசைக்க முடியவில்லை.கிழவிக்கு கொஞ்ச தூரத்தில் கேண்டீன் தெரிய அதை நோக்கி மெல்ல ஊர்ந்தாள்.நகர்ந்துகொண்டே இருந்தாள். அவளின் பிரம்ம பிரையதனம் கேன்ட்டினை அடைய உதவவில்லை.பத்தடி கூட போயிருப்பாளோ மீண்டும் பசி.மயக்கம் வர சரிந்தாள்.இனிய இரவு அந்த ரயில்நிலையத்தை ஆரத்தழுவியது.

மறுநாள் காலை ஆள்நடமாட்டம்.சூரியன் சுட்டெரிக்க கண்திறந்தாள் கிழவி.கைகள் லேசாக அசைய நடக்கும் பயணிகளுக்கு தொந்தரவாக நாடு பிளாட்பாரத்தில் கிடந்தாள்.பசிவிட்டபாடில்லை.சன நடமாட்டத்தை உணர்ந்ததும் மிகவும் பிரையதனப் பட்டு கைகளை நீட்டினாள். விதவிதமான செப்பல்களும்,சேலைகளும்,வெள்ளை வேட்டிகளும் கிழவியின் முகத்தை தடவி போயின.கிழவிக்கு ஒரு நினைவும் இல்லை.பசியற வேண்டும்.ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்தாள்.கதறினாள்.வாயில் காற்று மட்டுமே வர கண்களில் கண்ணீர்.இன்று தன் பசி ஆறும் என்று கிழவி நம்பினாள்.

ஆனால் சனங்கள் எல்லோரும் பரபரப்பாகவே இருந்தனர்.அவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு தலை போகிற வேலை இருந்தது.அவரவர் தங்கள் மனதிற்குள் செய்ய வேண்டிய காரியங்களையோ,செய்த நினைவுகளையோ சுமந்துகொண்டோ,அலைபேசிகளில் கதைத்துக் கொண்டோ இப்படி பலவித பணிகளில் மூழ்கி இருந்தனர்.தவிர அவரவர்க்கு அவரவர் பாடு. அவரவர்க்கு வேறு வேலை கிடையாதா என்ன? என்பது கேவலம் இந்த கிழவிக்கு புரியவில்லை. ஒவ்வொரு முகமும் கிழவியை கண்டும் காணாமலும்,முறைத்துக் கொண்டுமே சென்றனர்.கேவலம் ஒரு சோற்று பொட்டலத்தையோ தண்ணீர் பாட்டிலையோ வீசிவிட்டு போக கூட அந்த தனவான்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கும் போல.

மீண்டும் பசி.கோரப் பசி.எதை தின்று இந்த பிசாசை விரட்டுவது.உள்ளிருக்கும் ஒவ்வொரு உறுப்பும் கரைவது போல உணர்ந்தாள். கிழவியால் முடியவில்லை.ஆளே அடையாளம் தெரியாத படி செத்துப் போனாள்.பிறகு செய்தி கேள்விப்பட்டு அங்கிருக்கும் சிலர் வந்து பார்த்தனர்.

"மூணு நாளா அன்னந்தண்ணி ஆகாரமில்லாம கேள்வி பெனாத்திகிட்டு கெடந்திருக்கா.ஒரு பிடி சோறு குடுக்க நாதியில்ல.பட்டினிதான் கெழவிய கொன்னுபுடிச்சி.சொந்தக் காரன்,அண்ணன்தம்பியோ யாருமில்ல.நாமதான் பொணத்த எடுத்து பொதைக்கணும்." அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

அடுத்த சிலமணிகளில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்தன.அதில் ஒருவன் என்ன நினைத்தானோ.."போகிற உசுரு ஆசா பாசத்தோடு போகக் கூடாது.மூணு நாளா கெழவி சோறு மேலயே ஏக்கம் புடிச்சி செத்திருக்கா." என்று சொல்ல எல்லோரும் ஆமோதித்தனர்.

சிறிது நேரத்தில் பிணத்தின் இரண்டு கைகளிலும் சோற்றையும் கொஞ்சம் கறியையும் வைத்து புதைத்தனர்.


3 comments:

guru said...
This comment has been removed by the author.
guru said...

பெற்றவளை கவனிக்க பிள்ளைக்கு நேரம் இல்லை இந்த கலி யுகத்தில்
மகனுக்கு துன்பம் தர தாய்க்கா மனம் வரும்
இந்தத் தாய் பிளாட்பாரத்தில்
பல தாய்மார்கள் முதியோர் இல்லத்தில்

Prakash govind said...

arumai.. avalam.. asingam.. avamaanam.. aruvaruppu.. adanga kobam..