Sunday, January 2, 2011

நெறிஞ்சிமுள்


ஸ்டெல்லா... அவள் கண்களைப் போல உலகில் எந்தப் பெண்ணிற்கும் வாய்த்திருக்காது. நான் இதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன். அவளின் கண்களின் ஜீவ ஒளி அற்புதமானது ..
நான் அவளை சந்தித்த நாள்.. அது ஒரு ஏப்ரல் மாதமாகவோ அல்லது மே மாதமாகவோ இருக்கலாம். ஸ்டெல்லா எங்கள் அலுவலகத்திற்கு வந்த நாள் இன்னும் அப்படியே நினைவில் உள்ளது. ஆரஞ்சு நிற சுடிதாரில்.. கூந்தலைக் காற்றில் பறக்க விடாமல், அழுந்த வாரிய தலையுடனும் ஒருவித வெட்கத்துடனும் அவள் காலடி எடுத்து வைத்த அந்தக் காட்சி.
நான் இதுவரை அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசியிருப்பேனா என்பது சந்தேகம் தான். அப்படியே பேசி இருந்தாலும் அவை அதிகமிருக்காது.
நான் முதன்முதலாக அவளிடம் பேசிய வார்த்தை, 'உங்க பெயர் என்ன?' என்பதே. அவள் சிறு வெட்கத்துடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.

'ஸ்டெல்லா மேரி.'

என்னால் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. மின்சாரத்தால் தாக்குண்டதுப் போல் தலைக் குனிந்துக் கொண்டேன். என்ன அழகான கண்கள்.. அகன்ற கருமையான விழிகள். ஜீவ காந்தம் வீசும் மெல்லியப் பார்வை. வேனிற்கால நட்சத்திரங்கள் என்று கேள்விப்பட்டது உண்டா? அதைப் போல.

அன்றிலிருந்து என் வேலையில் புது சிரத்தை வந்தது. மனதில் கலக்கமும், வருத்தமும் தோன்றும் போதெல்லாம் அவள் கண்களை பார்த்துக் கொள்வேன். ஒரு புது உற்சாகம் தோன்றி குதூகலத்தோடு வேலையை ஆரம்பிப்பேன். சமயங்களில் அவளும் என்னைப் பாத்துக் கொண்டிருப்பாள். சமயங்களில் அந்தக் கண்களில் அமைதிக் கலந்த ஒரு வித வேதனைத் தாண்டவமாடும்.
நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. இப்படியே அவளைப் பார்த்துக் கொண்டே, எங்கேயாவது முட்டிக் கொள்வது என் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது .
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கண்ணீர் ததும்ப என் முன் வந்து நின்றாள். நான் பதறிப் போய், 'என்னமா.. என்னாச்சு?' என்று கேட்டேன்.
அவள் பதிலேதும் சொல்லாமல் விசும்பிக் கொண்டே, 'எங்கப்பா வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்லிட்டார்' என்றாள்.
'என்னவாம்?'
'கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றார்.'
'பண்ணிக்க வேண்டியது தானே!!
அவள் என்ன நினைத்தாளோ ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய் விட்டாள். எனக்கு வருத்தமாக போய்விட்டது .
மறுநாள் அவள் வீட்டுக் கதவைத் தட்டினேன். ஸ்டெல்லா தான் திறந்தாள். என் எதிர்பாராத வருகை அவளை ஆச்சர்யப்படுத்தியிருக்க வேண்டும்.
'அப்பா இருக்காரா?'
'ம்ம்.. உள்ள வாங்க.'
நான் உள்ளே சென்றேன். ஒரு முரட்டு ஆசாமி, 'யாருப்பா நீ.. என்ன வேணும்?'
'நானும் ஸ்டெல்லாவும் ஒரே ஆபீஸ்-ல தான் வேலைப் பார்க்கிறோம்.'

எனக்கு பதற்றமும், பயமும் வயிற்றைக் கலக்கியது .
'ஓ.. சரி. உக்காருங்க.'
என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தேன். ஒரே நிசப்தம்.
'வேலைல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?'
'பரவல்லைங்க.'
மீண்டும் அமைதி.
'ஸ்டெல்லாவுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்.'
'ஆமாமா.'
'எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம். உங்க சம்மதத்தோட..' என்று விழுங்கினேன்.
அந்த மனிதர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
'உன் பெயர் என்ன?'
சொன்னேன்.
'நாளைக்கே "எங்க ஆளா" மாறிட்டு வந்து நில்லு. அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீ போலாம்.'
நான் எதுவும் பேச முடியாமல் தயங்கி நின்றேன்.

'கெளம்பறயா?? இல்ல கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளட்டுமா?'

அவமானம் தாங்க முடியாமல் நான் வேகமாக வெளியேறினேன். ஸ்டெல்லாவை ஏறிட்டும் பார்க்கவில்லை. இதயம் கனத்தது. பொங்கி வரும் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடந்தேன்.
அதன் பிறகு ஸ்டெல்லா வேலைக்கு வரவில்லை. நானும் அவளைப் பார்க்கவில்லை. ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாள் எங்கள் அலுவலக வாசலில் ஸ்டெல்லா காத்திருப்பதாக கிளார்க் அழைத்தான் .
என் எதிரில் நின்றுக் கொண்டிருந்தாள். அழுது அழுது வாடிப் போயிருந்தது அந்த ஜீவ களையுள்ள முகம். பார்க்க பரிதாபமாய் இருந்தாள்.
'என்ன சொல்றார் உங்கப்பா?'
'அன்னிக்கு உங்ககிட்ட சொன்னத தான் இப்பவும் சொல்றார்.'
'இப்பவே நீ எங்க சாதி பொண்ணாயிடு. இங்க வந்துடு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சரியா?'
'எங்கப்பா என்னையும் கொல்லுவார். உங்களையும் வெட்டுவார்' என்று பரிதாபமாய் சிரித்தாள். பரிகாசமாகவும் சிரித்திருக்கலாம்.

அப்போது எங்கள் கிளார்க் லபோதிபோவென்று உள்ளே வந்தான். 'எம்மா.. உங்கப்பா வந்துட்டாரு. வாசல்ல நின்னு கத்திட்டு இருக்காரு.. போம்மா சீக்கிரம்.'
அதற்குள் அந்த மனிதர் உள்ளே வந்து அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். எனக்கு கோபம் வந்து நிறுத்துமாறு கத்தினேன்.
அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டார்.
நாட்கள் கடந்தது. ஸ்டெல்லா மறந்தே போய் விட்டாள். நான் அவளின் நினைவை மறக்க விரும்பினேன்.
கிளார்க் என்னிடம் தயங்கி தயங்கி ஒரு விஷயத்தைச் சொன்னான்.

'ஸ்டெல்லாவிற்கு கல்யாணம் ஆகிட்டது. ரொம்ப மோசமான குரூபி.'
அந்த வார்த்தை ஈட்டியாய் குத்தியது.
வருடங்கள் சென்றது. சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து அதிலேயே முழ்கிக் கிடந்தேன். எந்நேரமும் வேலை வேலை என அலைந்தேன். என் தங்கைக்கு கல்யாணத்தை முடித்தேன். சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டினேன். ஸ்டெல்லா மறந்தே போய்விட்டாள். அப்பொழுது என் நண்பனின் மூலமாக ஒரு செய்தி கேள்விப் பட்டேன். ஸ்டெல்லா அந்தக் குரூபியோடு வாழ முடியாமல், தகப்பனார் வீட்டுக்கே வந்தாள் என்றும், ஆனால் அவளை வலுக்கட்டாயமாக அவனிடமே கொண்டு விட்டுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் வெளியூர் பயணத்திற்காக, ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், நான் திரும்பினேன் .

ஸ்டெல்லா. வயதான ஸ்டெல்லா. தோல் சுருங்கி, கன்னங்கள் ஒடுங்கி மெலிந்துப் போயிருந்தாள். அந்தக் கண்களின் பிரகாசம் மட்டும் மாறவே இல்லை. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பேச நா எழவில்லை.
'எப்படியிருக்கீங்க சமீர்?'
'ம்ம்.. நல்லாருக்கேன். நீ எப்படி இருக்கே?'
'ம்ம்.. எங்க இந்தப் பக்கம்?'
சொன்னேன். ஆனால் அவள் கவனித்ததாக தெரியவில்லை.
'கல்யாணமாயிடுச்சா?'
'ம்ம்..'
'நான் அவங்களைப் பாக்கலாமா?'
என் மனைவியை அழைத்தேன். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ரயிலின் சத்தம் கேட்டதும் கிளம்பி விட்டாள். அதன் பிறகு நான் ஸ்டெல்லாவை பார்க்கவேயில்லை.

5 comments:

ηίαפּάʞиίнτ ™ said...

Nalla irukku

Praveenkumar said...

கதை அருமையாக உள்ளது. மிகவும் இயல்பான எழுத்துநடையில் பேனாமுனையில் நெறிஞ்சி முள் கொண்டு யதார்த்தம் எனும் மையினால் அருமையாக தீட்டி இருக்கீங்க..!!! கதையின் இறுதியில் சோகம் நெஞ்சை கனக்கிறது.

தமிழன் said...

என்ன செய்வது
மனிதன் மதம் பிடித்த யானை ஆகி விடுகிறானே

இயல்பான நடை யில் முள்ளாக குத்துகிறது
பொலிவுடன் தொடங்கி வேதனையில் முடிகிறது

Philosophy Prabhakaran said...

உங்களுடைய எழுத்து நடை நன்றாக இருக்கிறது... படிக்க தூண்டுகிறது...

Unknown said...

Excellent story.
You have condensed 25 years just in five minutes.
Great work.Good on you.