Wednesday, November 24, 2010

மைனா - ஓர் உலக காவியம் !

திருப்பூரில் முதல் முறையாக டைமன்ட் தியேட்டரில் என் காலடி பட்டது மைனா படம் பார்பதற்காக.. (டைமன்ட் புனிதமடையட்டும்!). A Journey Of LoveStory நன்றாகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சலிப்பே இல்லை. மலைக்காட்டு பிரதேசத்தில் ஒரு பயண அனுபவம். கிளைமாக்சில் அந்த பெண் ஆட்டோவில் போகும் போதே நமது மனம் அலாரம் அடிக்க தொடங்கி விடுகிறது. சரி தான் ஏதோ நடக்கபோகிறது என்று. அதே போலவே 'சுபமாகவே' முடித்தார் இயக்குனர். இது ஒன்று தான் இடிக்கிறது?!

ஒரு உண்மை காதல் கதை என்றாலே காதலர்கள் சாக வேண்டும். அதுவும் ரத்த களரியோடு கொடூரமாக முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சினிமாவில் என்றில்லை.. உலக இலக்கியங்களிலிருந்து பார்த்தாலே இப்படி தான் இருக்கிறது. ரோமியோ-ஜூலியட் , லைலா-மஜ்னு.. இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஏன் இப்படி என தெரியவில்லை.

காதலர்கள் இறந்தால் அங்கே காதல் வாழ்கிறது
அந்த காதல் எங்கே சாகும் என்றால், அவர்கள் கலியாணம் முடிக்கும் போது.

ஒன்று இருவரும் சாக வேண்டும். இல்லை, நாயகனுக்கு பைத்தியம் பிடிக்கவேண்டும் அல்லது அவன் மட்டும் சாகவேண்டும். அப்போது தான் நாம் கண்ணீரோடு வெளியே வருவோம் அல்லது கனத்த மனதோடு புத்தகத்தை மூடி வைப்போம்.

சரி. நம் எல்லோர் வாழ்விலும் இந்த மாதிரி மைனா கதைகள் வந்திருக்கும்.

என்ன, சினிமாவில் ஒருத்தனுக்கு ஒரு மைனா என கதையளப்பார்கள். யதார்த்த வாழ்வில் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எத்தனையோ 'மைனாக்கள்' வந்து போகும்.

இந்த படத்தை பார்த்த போது எனக்கும் என் சிறுவயது 'மைனா' நினைவு வந்தது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு 3 வயது. என் 'மைனா'விற்கும் அதே வயது. (மைனாவிற்கு ஆண்பால் என்ன?)

நகர அங்கீகாரதிற்காக போராடிகொண்டிருந்த எங்கள் கிராமத்தில் எங்கள் நட்பு. பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. எங்கும் ஒன்றாகவே சுற்றி திரிந்தோம். 3 வயதில் புழுதியோடு புரள்வதை தவிர வேறு என்ன தெரியும். அதையே செய்தோம். எப்போதும் ஒன்றாக கைகோர்த்து ஊரெல்லாம் சுற்றினோம்.பண்ணாங்கல் , தாயம், வயல் வெளி புல்வெளி என மைனா படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் என்னென செய்தார்களோ அதேபோல இருந்தோம். எங்களோடு யாரையும் செட்டு சேர்த்து கொள்வது கிடையாது . 5 வயது வரை இப்படியே ஓடியது. இப்படி சந்தோசமாக போய்கொண்டிருந்த எங்கள் நட்பில் ஒருநாள் இடி விழுந்தது.

என்னையும் என் 'மைனாவையும்' பள்ளியில் சேர்த்து விட்டார்கள். எப்போதும் பிரிந்திருக்காத நாங்கள் அழுது தீர்த்தோம். வேறு என்ன செய்ய? கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த உடன் கட் அடித்துவிட்டு வயல்வெளியில் எலிபிடித்து விளையாடி கொண்டிருந்தோம்.

உஷாரான எங்கள் பெற்றோர்கள் என்னை டவுனிற்கு கூடி போய்விட்டார்கள்.

சதிகாரர்கள் !

சின்னப்பெண் யாழினியால் என்ன செய்ய முடியும். அழுது அழுது ஓய்ந்து தூங்கிவிட்டேன் .

பிறகு பல வருடங்கள் கழித்து எனது பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு வந்தேன். அதுவரை இடையிடையே வந்தும் மைனாவை பார்க்க முடியவில்லை. அப்போது எனக்கு ஓரளவே மைனா நினைவு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் எங்கள் பாட்டியோடு பேசிகொண்டிருந்தான். என் பாட்டி உற்சாகமாக ''இவன யாருன்னு தெரியுதா?'' என கேட்டார்.

''தெரியலையே'' என்றேன்.

''உன் சின்ன வயசு பிரெண்டு .. சுரேஷு... மறந்துட்டியா .. எப்போ பாரு ஒன்னாவே சுத்திட்டு இருப்பீங்களே... அவன் தான் ''

நான் ஆர்வமாக பார்த்தேன்.. ஆனால் அவனை பார்த்த போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உள்ளத்தில் எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை. தேமே என நின்றுகொண்டிருந்தேன். அவனும் என்னை சட்டை செய்துகொள்ளவில்லை.

எங்கள் பிரிவு எங்கள் நட்பை அழித்து விட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது.

ஒரு உன்னத காவியம் இதோடு முடிந்துவிட்டது .

இவ்வாறாக எனது வாழ்வில் மைனா காவியம் இதோடு முடிந்து விட்டது. ஒரு உலக காவியம் உருவாகும் நேரத்தில் அதை கிள்ளியெறிந்து விட்டார்கள்.

Wednesday, November 17, 2010

கவிதை கவிதை

மறைந்திருக்கும் உண்மைகள் வாழ்வின் பல துறைகளில் உள்ளன. கவிதையிலும் உண்டு. பிருந்தாவின் இந்த ஹைகூவில் என்ன என்று யோசித்து பாருங்கள் !


''காலடிப் பதிவை
கவிதையாக்கிப் போகும்
கொலுசு சிணுங்கல்."

Friday, November 12, 2010

நம்பிக்கை என்பது யாதெனின்..

யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ, அதே போல் மனிதனுக்கு நம்பிக்கை அவ்வளவு அவசியம் என்று எவரேனும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அப்படி சொன்னவரை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில்.. யானையின் அங்கமும், ஆறறிவுக் கொண்ட மனிதனின் ஊக்க உணர்வும் ஒன்றா என்று உதட்டோரம் ஓர் ஏளன புன்னகையை அழகாக சிந்தி விட்டு பெருமிதத்துடன் பெருமூச்சு விட்டவாறே அவ்விடத்தை விட்டு அகன்றிருப்பீர்கள். இல்லையெனில் ஓர் அசட்டுத் தனமான புன்னகையால் சொன்னவரின் கூற்றை ஆமோதித்தும் இருக்கலாம். எப்படியோ நம் அனைவருக்கும் நம்பிக்கை என்ற மந்திரச் சொல்லின் அவசியத்தை சிறு வயது முதலே சொல்லி சொல்லி நம்பிக்கையின் மீதான நம்பிக்கையை ஆழ நம்முள் பதித்து விடுகின்றனர். ஆனால் பெரும்பாலும் நமது நம்பிக்கைகளில் குருட்டுத்தனமும், ஓர் அவசரமுமே அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு உடல் குறைய வேண்டுமென நம்பிக்கையுடன் உடற்பயிற்சி நிலையம் சென்று ஒரு வாரத்தில் உடல் இளைக்கவில்லை என முயற்சியை கை விடுவது.

'எங்கப்பா உடம்பு குறையுது? நானும் என்னன்னமோ செய்து பார்த்து விட்டேன். பணம் போனது தான் மிச்சம். அதெல்லாம் சிலர் உடல் வாட்டு' என்று சொல்லிக் கொண்டே உருளைக் கிழங்கு வறுவலினை ரசித்து நொறுக்குவோர் தான் அதிகம். முயற்சியற்ற நம்பிக்கை வீணான ஒன்று. முயற்சியற்ற நம்பிக்கை வீணான ஒன்று. அவைகளால் யாதொரு பயனும் இல்லை.



நம்பிக்கையைப் பற்றி பல கதைகள் உள்ளன. அதில் ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

ஓர் ஊரில்.. ஒருவருக்கு சரும வியாதி வந்து விடுகிறது. அவர் வைத்தியரிடம் செல்கிறார். அவர் என்பதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாமா? ச்சே.. சட்டென்று ஒரு பெயர் நினைவில் வந்து தொலைய மாட்டேங்கிறது. கதை சொல்லும் ஆர்வமே போய் விடும் போல!! ம்ம்.. அவசரத்திற்கு செங்கிஸ்கான் என வைத்துக் கொள்ளலாம். வைத்தியர் செங்கிஸ்கானின் சருமத்தை சிறிது நேரம் ஆரய்ந்து விட்டு, செங்கிஸ்கானை ஏற இறங்க பார்த்தார்.

"செங்கிஸ்கான்.. நீங்க தீவிரமான சைவராச்சே!!" (ஷ்ஷ்ஷ்.. மத ஒருமைப்பாடு மலரட்டும். கண்டுக் கொள்ளாதீர்கள்.)

"அதனால் என்ன? சிவனின் பக்தருக்கெல்லாம் சரும நோய் வராதா என்ன?"

"அதில்லை?"

"எதில்லை!!" என்றார் செங்கிஸ்கான் கோபமாக.

"உங்களுக்கு அசைவம் என்றால் ஆகாது. ஆனால் இந்த வியாதிக்கு மலைப் பாம்பின் கொழுப்பை எடுத்து ஒரு மாதம் தடவினால் தான் குணமாகும்."

"வேறு வழியே இல்லையா?"

"வைத்திய சாஸ்திரத்தில் இல்லை."

செங்கிஸ்கான் சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி வர்றேன். ஈசன் பார்த்துக் கொள்வான்" என்று சென்று விட்டார்.

ஈசனாவது பார்ப்பாதாவது என வைத்தியர் இறுமாந்திருந்தாலும் செங்கிஸ்கானுக்கு சரும வியாதி முற்றிலுமாக முப்பதே நாளில் நீங்கி விட்டது. வைத்தியர் தலையில் இடி. தான் கற்ற சாஸ்திரம் பொய்த்து விட்டதா இல்லை மந்திரத்தால் மாங்காய் என்பதெல்லாம் உண்மை தானா அல்லது நமக்கு தெரியாமல் வேறு எவரிடமாவது வைத்தியம் செய்துக் கொண்டாரா என்று பெருஞ்சந்தேகம். வைத்தியர் நேரில் செங்கிஸ்கானிடமே சென்று கேட்டு விட்டார்.

"நான் என்ன செய்தேன்? குளத்தில் தொடர்ந்து முப்பது நாள் முழுக்கு போட்டு விட்டு பிரகாரத்தை ரெண்டு சுத்து அதிகமா சுத்தி வந்தேன். எல்லாம் ஈசன் அருள்" என்றார் செங்கிஸ்கான் கம்பீரமாக.

வைத்தியர் நேராக குளத்திற்கு சென்றார். குளம் பளிங்கு போல் இருந்தது. பிரகாரத்தை சுற்றிப் பார்த்தார். மீண்டும் குளத்திற்கு சென்று அதற்கு நீர் வரும் கால்வாயைத் தொடர்ந்து நதி இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கே ஆளரவமற்ற ஓரிடத்தில் உடல் பிளவுப்பட்ட மலைப் பாம்பு ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. 'ஆக மலைப் பாம்பின் கொழுப்பு தான் செங்கிஸ்கான் குணம் ஆனதற்கு காரணம்' என்று தெரிந்து அகமகிழ்ந்தார். வைத்தியருக்கு தன் தொழில் மேல், செங்கிஸ்கானுக்கு தன் பக்தி மேல் உள்ள உள்ளார்ந்த நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளே இக்கதை சொல்லும் நீதி.

இதை ஆங்கிலத்தில் Placebo Effect என்பார்கள். மருந்துகள் மனிதனை குணமாக்குவது இல்லை. மருந்துகள் குணமாக்கி விடும் என்ற நம்பிக்கையே மருந்துகளை நம்முள் வேலை செய்ய வைக்கிறது.

நம்பிக்கை என்னும் அகச் செயல் மனதினுள் தொடர்ந்து நிகழ வேண்டிய ஒன்றாகும். அவை நம் ஆழ் மனதில் ஊறி நமது புறச் செயல்களில் பிரதிபலிக்கும். அகமும், புறமும் ஒத்திசைக்கும் இயக்கத்திலேயே நம்பிக்கை முழுமை அடைகிறது. நம்பிக்கை என்பது சோம்பிக் கிடக்கும் மனதில் தோன்றும் தப்பிக்கும் மனநிலை அல்ல. அவை வாழ்வின் தொடர் தூண்டுதல்களுக்கான அற்புத சக்தி. நம்பிக்கைகள் இலக்குகளால் உருவாவது இல்லை. நமது சின்னஞ்சிறு செயல்களிலும் அவை பிரதிபலிக்கும்.

நம்பினார் கெடுவதில்லை- இது
நான்மறை தீர்ப்பு.

Monday, November 8, 2010

வெறுப்பதில் உள்ள சந்தோசம்

வில்லியம் ஹாஸ்டலி என்னும் ஆங்கில இலக்கிய கர்த்தா வெறுப்பதில் உள்ள சந்தோசத்தை பற்றி 'On the pleasure of hating' என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ''நாம் வெளிப்படையாக செய்யும் காரியங்களில் மனிதாபிமானம் கலந்து விட்டோம். ஆனால் மனதில் உள்ள இச்சைகளையும் கற்பனைகளையும் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்ச நாளாகும்'' என்றார். இது 1828 இல் எழுதிய கட்டுரையில். இன்று 2010 இல் கூட வெளிசெயல்களுக்கும் உள்மன விருப்பத்திற்கும் உள்ள வேற்றுமை அப்படியே இருக்கிறது.


அண்மையில் பரபரத்த நித்யானந்தரின் டிவி காட்சிகள். ஒருவர் விடாமல் எல்லாரும் பேசி பேசி தீர்த்தார்கள். பிரபல சாமியார், நடிகை, செக்ஸ் வக்கிரங்கள், வெளியில் தெரியாத நடவடிக்கைகள் மேல் ஓர் ஆர்வம் எல்லாம்தான் காரணம். (நித்யா கொஞ்சம் இருந்ததும் ஒரு காரணம் )

இதில் ஆழமாக பொதிந்துள்ளசமூக அடையாளங்களை தான் ஹாஸ்டலி அப்போதே சொல்லி இருக்கிறார். ''We give up the external demonstration, the brute violence but cannot part with the essence or principle of hostility.''

மூர்க்கதனமான வன்முறையின் வெளி வடிவங்களை நாம் கைவிடுகிறோம். ஆனால் விரோதத்தின் சாரத்தை நம்மால் கைவிட முடியாது.

நம் ஊடகங்கள் (பத்திரிக்கை , டிவி செய்தி சேன்னல்கள்) எப்போதும் கெட்ட செய்திகளையே தருவதற்கு இதுதான் காரணம். குடிசை எறிந்தால் தான் வியாசர்பாடி பற்றி நியூஸ் வரும். எங்காவது குண்டு வெடித்து ரத்த கெளரியா? , கட்டிடங்கள் பற்றி கொண்டு எரிகிறாதா உடனே கேமராவை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அதை நாடு முழுவதும் சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள்.

அசாமில் உள்ள சிறிய ரயில் நிலையமான கைஸ்வல் சரித்திரத்தில் இடம்பெற 500 பேர் சாக வேண்டி இருக்கிறது. இரட்டை கோபுரமும், ஒசாமாவும் எல்லாரும் அறிய 2000 பேர் சாக வேண்டி இருக்கிறது. ரயில்கள் ஓடுவது செய்தி அல்ல. அவை மோதிக்கொள்வது தான் செய்தி. பி.பி.சி., சி.என்.என் போன்ற உலக செய்திகளும் அவ்வண்ணமே. ஒரு வாரம் அந்த சேன்னல்களை கவனித்தால் இந்தோனேசியாவில் கிறிஸ்தவ - முஸ்லிம் இனக்கலவரம்...கொசோவாவில் அல்பேனிய - செர்பியா மோதல்கள், ஆப்ரிக்க இனச்சண்டையில் கைகால் வெட்டினது, ஸ்ரீ லங்காவில் மனித வெடி குண்டு .... இப்படி செய்தி என்பதற்கே கெட்ட செய்தி மட்டும் என்றாகி விட்டது.

எத்தனையோ நகரங்களில் எத்தனையோ அழகான மனைவிகளுடன், மச்சினர்கள் கேலியும் அன்பும் பாராட்டுமாக சரளமாக வாழ்கிறார்கள். ரயில்களும் ஏரோபிலேன்களும் நேரத்தில் பத்திரமாக செல்கின்றன. இவையெல்லாம் செய்தி இல்லை. மதனியின் முன் மச்சினன் அண்டர்வேரில் நடை பழக வேண்டும். ரயில் மொத்த வேண்டும். ப்ளேன் நொறுங்க வேண்டும். நதி வெள்ளம் ஊருக்குள் புகுந்து நூறு பேருக்காவது காலரா வார வேண்டும். அப்போதுதான் செய்தி. எத்தனையோ ஊர்களில் சின்ன சின்ன பாட்டு போட்டியும் பேச்சு போட்டியும் நடனங்களும், உரியடிகளும், கரகங்களும் கொடிதிருவிழாக்களும் நடக்கின்றன. அவையெல்லாம் செய்தி இல்லை. யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டால் தான் 'ஊடக' தகுதி பெறுகிறார்கள். . பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ உருப்படியாட ஏதாவது நடந்தால் செய்தி இல்லை. வேட்டியை உருவிக்கொண்டால், நாற்காலிகள் பறந்தால் அது தான் முக்கிய செய்தி.

சுஜாதா அவரின் நண்பரிடம் இது பற்றி கெட்ட போது..''நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்து விடும்'' என்று சொல்லி இருக்கிறார். ஒரு சைக்காலஜிஷ்டை கேட்டால், ''நம் மனதில் சமூக தேவைகளாலும் நாகரீகத்தினாலும் கட்டுப்பாடுகளினாலும் அடக்கிவைக்கப்பட்ட வன்முறை உணர்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்கள் இவை'' என்கிறார்.

வெறுப்பதில் சந்தோசம் இருக்கிறது. ஒரு கரப்பான் பூசியையாவது சிலந்தியையாவது வெறுக்க வேண்டும்.
நம் எண்ணங்களின் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் வெறுப்புதான் என்கிறார் ஹாஸ்டலி. ...''without something to hate, we should lose the veru spring of thought and action...''

மத சார்பு , தேசபக்தி எல்லாமே நம் உள்ளே உள்ள வெறுப்பின் கௌரவமான வடிகால்கள் நொண்டி சாக்குகள் என்கிறார். தொலைகாட்சியில் இந்த அவலங்கள் எல்லாம் உண்மையாக நம் நடுக்கூடங்களில் தெரிந்தாலும் எல்லாமே பிக்ஸெல் வடிவங்கள். எவ்வித பொறுப்பும் அபாயமும் இன்றி வெறுக்க முடிகிறது. கறிகாய் நறுக்கி கொண்டே ரத்த தரிசனம் செய்ய முடிகிறது. நம்மிடம் மிச்சமுள்ள ஆதி மனித இச்சையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. தெருவில் யாராவது சண்டை போட்டால் கொஞ்சம் போடட்டும் என்று விட்டுவிட்டு தான் அடக்க முயற்சி செய்கிறோமே.. அதுபோல !

WWF காட்சிகளை ஐந்திலிருந்து பதினெட்டு வரை நாற்பதுக்கும் மேல் உள்ள தாத்தாக்கள் வரை ரசிப்பதற்கும் இதுதான் காரணம். நல்ல விஷயத்தை யாரும் பார்பதில்லை என்கிற ஆதாரமான அதிர்சிகரமான சித்தாந்தம் தான் காரணம்.

Wednesday, November 3, 2010

அரசு ஊழியர்கள் அகால மரணம் - ஐயோ பாவம்

சென்ற வார செய்தி

பணி மிகுதியின் காரணமாக அரசு ஊழியர்கள் அகால மரணம் அடைகிறார்கள். மக்கள் நினைப்பது போல அவர்கள் வேலை வெட்டி செய்யாமல் சும்மா எல்லாம் இல்லை.

அரசு ஊழியர் சங்கம் கோவை..

அப்படியா? உங்களின் பணிமிகுதின்னா என்ன? இதுவா?

எந்த கடையில் எந்த வடை டேஸ்டா இருக்கும்

அலுவலகத்தில் மானாவாரி அரட்டை அடிக்கறது

இரட்டை அர்த்தத்தில் அலுவலகத்தில் கும்மாளமடிப்பது

போனா போகுதுன்னு ஒப்பிற்கு சில கையெழுத்து

அப்பாவி மக்களை இஸ்டத்திற்கு அலைக்கழிப்பது

இளிச்சவாயன் யாராவது மாட்டினா தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் வசைமொழிகிறது (கெட்ட வார்த்தை கத்துக்கணும்ன அவங்க கிட்ட போகலாம் )

உள்ளூர் பெண் ஊழியர்கள்னா, நைட்டியோட அலுவலகம் வந்து குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட சொல்றது, (முக்கியமா விஜய் பாட்டுக்கள்)

உன் புருஷன் இவன்தான்றதுக்கு என்ன சாட்சி? குடும்ப அட்டையில் இருப்பது உன் புருஷன் தான்னு எப்படி எங்களுக்கு தெரியும்? என்பது போன்ற கொச்சை கேள்விகள் கேட்பது.

'கமிஷன்' எவன் குடுக்கரானோ அவனுக்கு முதலில் கையெழுத்து போட்டு தங்கள் கடமையில் கண்ணா இருப்பது

தங்கள் குடும்பம் , உறவு, தூரத்து உறவுக்கெல்லாம் வேலை வாங்கி வாங்கி கொடுக்கிறது

இந்த கடமைகளுக்காகவா அகால மரணம் அடையறாங்க..
எங்களுக்கெல்லாம் காது குத்தியாசுப்பா எப்பவோ..

(இக்கட்டுரை மேற்கண்ட 'பணிகளை' செய்பவர்களை மட்டுமே ..! அவர்களை நேரிலேயே பார்த்தால்... நேர்மையான உழியர்கள் இருந்தால், அவர்களை அல்ல.. )