Tuesday, December 14, 2010

தேர்தலில் யாருக்கு வோட்டு போடுகிறீர்கள்?-சில டிப்ஸ்

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவதாக தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. உங்கள் குழப்பத்தோடு என் குழப்பத்தையும் சேர்க்க விருப்பம் இல்லை. ஆனால் ஓட்டு போடுவது முக்கியம். காரணம் ஏதோ ஒருவிதத்தில் இந்த அதிசய ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை (அல்லது கோபத்தை ,வெறுப்பை) தெரிவிக்க முடிகிறது. தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள். அதன் நிதர்சனங்கள் இவை.

சட்டப்பேரவையில் எதாவது ஒரு திராவிட கட்சிதான் ஆட்சிசெய்ய முடிகிறது.
ஊழலிலோ, அசாதனைகளிலோ, இருவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

வேட்டிக்கரையை உற்றுப்பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது

அதனால் தான் தமிழ் நாடு எப்போதும் ஜராசந்த வதம் மாதிரி புரட்டிப் புரட்டி போட்டு இவர் போதும் அடுத்து நீ வாய்யா..நீ வந்து சுரண்டு.முதல் வருஷமாவது மக்களுக்கு எதாவது செய். என்று மாற்றுகிறார்கள். இடையே சினிமா நடிகர்கள் குட்டையை குழப்பினாலும் நெகடிவ் ஓட்டு என்பது தமிழ்நாட்டின் தேர்தல் பழக்கமாகிவிட்டது.

மத்திய அரசை பொறுத்தவரை அதன் தலைவிதியை நிர்ணயிப்பது உ.பி.முதலான இந்தி வளையமும், பசுமாடும் தான். அ.தி,மு.க., தி.மு.க. இருவரும் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த பழைய புராணங்களை புரட்டினால் தலை சுற்றி உடனடியாக ஒரு லிம்கா அடிக்க வேண்டும். சேராமல் சேர்ந்து , விலகி, மீண்டும் சேர்ந்து ,விலகிய இந்த விளையாட்டில் யாருக்கு போட்டாலும் ஏமாறப்போவது மக்கள்தான்.

இதனால் தேர்தலை படித்தவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நடுத்தர மேல்தட்டு வர்க்க மக்கள். ஏழைகளை குஞ்சாலாடு, மூக்குத்தி, வேட்டி-சேலை, பக்கெட் பிரியாணி என்று எதாவது கொடுத்து போட வைத்து விடுவார்கள். நடுவாந்திரம் தான் ஓட்டு போடுவதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து நகம் வெட்டிக்கொண்டே எஃப் டிவி பார்த்துகொண்டிருப்பர்கள் . அதனால் வோட்டுசாவடிக்கு போக கஷ்டப்பட மாட்டார்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்.

ஐ.டி.கார்டு இல்லையென்றாலும் வோட்டு போடலாம்..போட வேண்டும். யாருக்கு என்றால் கீழ்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

1 . இருப்பதற்குள் இளைஞர்,அல்லது அதிகம் படித்தவர்க்கு வோட்டு போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதி என்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்து பாருங்கள். டிவியில் பார்த்தால் போதாது. உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியில் இருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

2 . உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக ஓட்டு போடுகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி,மக்கள்,டிரைவர் ,வேலைக்காரி ,அல்சேஷன் எல்லாருக்கும் சொல்லலாம்.

3 . யாருக்கு என்று தீர்மானிக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன்முறையாக வந்து வோட்டு கேட்டவருக்கு போடுங்கள். தலையையாவது காட்டினாரே !

4 . உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு போடுங்கள். முப்பது விழுக்காடு என்று ஜல்லியடித்துகொண்டிருக்கிறார்கள்.ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்த பட்சமாவது ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். அலங்காரத்துக்கு நிற்கும் நடிகைகளை தவிர்க்கவும்

5 . இதற்கு முன் இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால் அவர் ஆட்சிகாலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையை கட்டியிருக்கிறார் என்றால் அவருக்கு போடலாம். எனவே போடுவதற்கு முன் முகம், அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி பிரதி வைத்து கொள்ளவும். அதை காட்டி ''இதில் நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்? '' என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள்.யாராவது நிலையான ஆட்சி என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி என்பது இனி சாத்தியம் இல்லை.

6 .சுயேச்சைகளுக்கு போடாதீர்கள்.வேஸ்ட்.

7 .கொஞ்ச நாள் தையா தக்கா,ஆட்டம் பாட்டம், சிக்கு-புக்கு ,முக்காபுலா, போன்ற அறிவு சார்ந்த ப்ரோகிராம்களை புறக்கணித்து பிரணாய் ராய்,ரபி பெர்னாட் நடத்தும் தேர்தல் நிகழ்சிகளை பாருங்கள். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும், அல்லது தலைவரும் டிவியிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் திருட்டு முழி முழிக்காதவராக , யாரை பார்த்தால், இவர் எதாவது செய்வார்,முதல் நாளே உள்ளங்கை அரிக்காது என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்கு போடலாம். (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது )அல்லது கோர்வையாக பத்து வார்த்தைகள் பேச தெரிந்திருந்தால் போடலாம்.

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால் சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும்.ஆனால் கட்டாயம் வோட்டு போடுங்கள். அது அவசியம்.

பார்லிமென்ட் தொங்கினாலும் நொண்டினாலும் பரவாயில்லை. சண்டை வந்தால் விட்டுகொடுப்பது இல்லை. மேலும் முதன்முதலாக இந்த கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்து கொண்டு ,மரமேஜைகளை தட்டி வெளியென்ற விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருக்கிறது.அது முன்னேற்றத்துக்கான அறிகுறி.அது இப்போது மனிதர்களை சாராமல் பருவ மழையை மட்டும் சார்ந்துள்ளது. பருவ மழையும் இத்தனை பாவாத்மாக்கள் இருந்தும் தவறாம பெய்கிறது.

தயவு செய்து வோட்டு போடுங்கள். 'டாமினோ எஃபெக்ட்' என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை ஓட்டை வைத்துகொண்டு இந்த தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும். jokes apart.please vote.its your sacred duty.

--சுஜாதா


4 comments:

பொன் மாலை பொழுது said...

/ .யாராவது நிலையான ஆட்சி என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி என்பது இனி சாத்தியம் இல்லை.//

ஹஹஅஹா ....

kiruba said...

//'டாமினோ எஃபெக்ட்' என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை ஓட்டை வைத்துகொண்டு இந்த தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும்//

இந்த கருத்து எது வரை பொருந்தும், வாக்கு சாவிடிக்கு போகும் வரை தான்,

நான் கடைசிமுறைய ஓட்டு போடபோகும் பொது இதை தான் செய்ய வேண்டும் நினைதேன்

அங்க போன வாக்கு சாவிடில் இருப்பவர் நமக்கு வேண்டியவங்க இல்ல மிக வேண்டியவன்களாக இருக்காங்க என்னபனுவது

நானும் மத்தவங்களை போல அப்போ தேர்தல நிக்கரவங்களா யாரு குறைவா ஊழல் செய்து இருக்காங்களோ அவங்களுக்கு தான் ஓட்டு போடவேண்டி உள்ளது..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

intha pathivukku vote potten. election layum poduren

Unknown said...

அள்ளி கொட்டிடீங்க. நல்லாதான் இருக்கு. ஆனா நான் மாலை 4.30 மணிக்கு ஓட்டு போட போனா இத்தனை அடையாள அட்டைகள் இருந்தும் என் வாக்கை யாராவது பதிந்து விடுகிறார்களே? அது எப்படி ஜன நாயகம் ஆகும்? அப்புறம் மின் வாக்கு பதிவில் 49 ஓ முறையில் வாக்களிக்க வசதி இல்லையே? இது என்ன ஜன நாயகம்? எல்லா விதத்திலும் தேர்த்தல் கமிஷனும் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் பண்ணுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.