Tuesday, December 7, 2010

ஏக தத்துவ அப்பியாசம் - யோகம்


''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

இது கண்ணதாசனின் வரிகள்.

நமது வாழ்கையில் இரண்டு கரைகள்.
வெற்றிகரை பசுமையாக இருக்கிறது. தோல்விக்கரை சுடுகாடாக காட்சியளிக்கிறது.

பசுமையான நிலப்பரப்பை விட சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பி வழிவதை பார்த்த பிறகும் அடுத்து வருகின்றவன் தன்னுடைய பசுமை நிரந்தரமானதென்றே கருதுகிறான்.

அந்த சுடுகாட்டில் அலெக்ஸாண்டரை பார்த்த பிறகும் அகில ஐரோப்பாவுக்கும் முடி சூட்டிக்கொள்ள முயன்று அங்கேயே போய் சேர்ந்தான் நெப்போலியன்.

அந்த நெப்போலியனின் எலும்புக்கூடு சாட்சி சொல்லியும் கூட உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்கு பக்கத்திலேயே படுக்கை விரித்துகொண்டான் ஹிட்லர்.

அந்த ஹிட்லரை எப்போதும் தனியே விடாத முசோலினி அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டு போய் அவனுக்கு இடம் தேடி வைத்தான்.

அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜாம்பவான்கள் , ஜார்ஜ் பரம்பரைகள் , லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிகொண்டிருக்கிறார்கள்

வாழ்கை நிலையில்லாதது !

''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

அந்த ஒரு வெற்றி, இனிமேல் நாம் செய்வதெல்லாம் சரி என நம்மை நம்ப வைக்கிறது.ஆணவம் கொள்ளசெய்கிறது.

ஆனால் தோல்வியடையும் போது நேரெதிராக புதைகுழியில் புதைந்து விடுகிறது.நம்மை போல பாவப்பட்ட ஜென்மம் உலகிலேயே இல்லை என குமுறுகிறது.

இந்த நிலைகளுக்கெல்லாம் என்ன காரணம்?

நமது மனம் தான்!

ஒழுங்கில்லாமல் சுற்றும் மனதோடு நாமும் அலைவதால் ஏற்படும் விளைவுகள்.

நாம் மனதினால்தான் எண்ணுகிறோம். அதன் வழியாகவே செயல்கள் புரிகிறோம்.அதன் பலன்கள் எல்லாம் மனதை தான் பாதிக்கும்.அலைகழிக்கும்.

நல்லதை நினைத்தால் நல்லபடியாக இருக்கும்
தீயதை என்றால் பலனும் மோசமாகத்தான் இருக்கும்

''மனம் எனும் மாயை''
''மனமே ஆன்மா'' என்பார்கள்.

அதை வளப்படுத்தும் பயிற்சிகள் பல உள்ளன. அதில் ஒன்று 'குண்டலினி யோகம்' .

ஜெயா டிவியில் காலைமலரில் யோகேஸ்வர் கார்த்திக்ராஜா அவர்கள் சொன்ன பயிற்சி முறை தான் 'ஏக தத்துவ அப்பியாசம்'. வாழ்க்கைக்கு அவசியமான அனைவரும் பின்பற்ற வேண்டிய தத்துவம்.

அதாவது நாம் தினந்தோறும் செய்யும் செயல்களின் ஒவ்வொரு நிலையிலும் 'அனித்யத்தை' உணர்வது. கடைபிடிப்பது.

அனித்யம் என்றால் இது நிலையில்லாதது. இதுவும் முடிந்து விடக்கூடியது என அர்த்தம்.

நீங்கள் காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறீர்கள். ஒவ்வொரு துளி காபியும் தொண்டையில் இறங்குகிறது. அதன் சுவையை உணர்கிறோம். ரசித்து குடிக்கிறோம்.இந்த நிலையில் அநித்தியத்தை உணர்வது. .... மீண்டும் அந்த காபியை குடிக்கிறோம். தொண்டையில் இறங்குகிறது. சுவையை உணர்கிறோம். ரசித்து குடிக்கிறோம். இந்த ஒவ்வொரு நிலையிலும் இது அனித்யமானது என்ற எண்ணத்தை நம் மனதில் செலுத்துவது 'ஏக தத்துவ அப்பியாசம்'.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதை ஒரு பயிற்சியாக ஒவ்வொரு செயலிலும் செய்ய செய்ய மனம் சமநிலையில் இருக்கும். இதில் ஆழ்ந்து விட்டால் இன்பம் , துன்பம் போன்ற எந்த மாதிரி நிலையிலும் நமது மனம் பாதிக்கப்படாமலும் சமநிலை இழக்காமலும் இருக்கும்.

நமது மனமானது பாசிடிவ் சம்பவங்களையே விரும்புகிறது.அதுவே மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கும். ஆனால் அவற்றை விரைவில் மறந்துவிடும்

ஆனால் நெகடிவ் சம்பவங்களை மனம் விரும்புவது இல்லை. அப்படி நடக்கும் சம்பவங்கள் நமது மனதை விட்டு நீங்குவதும் இல்லை

எந்த மாதிரி மகிழ்ச்சியான மனநிலையிலும் கவலையான நிலையிலும் நாம் இருக்கும் போது இது அனித்யம் அனித்யம் என்று உணரும் போது உணர்ச்சி வேகத்தில் இருக்கும் மனநிலை சமநிலைக்கு வந்துவிடும்.

அதாவது இது நிலையில்லாதது. இந்த நிலை மாறும்

இதை பலமுறை செய்தால் தான் உணர முடியும். காலையில் இருந்து ஒவ்வொரு சின்ன விசயங்களிலும் எண்ணங்களிலும் அநித்தியத்தை உணரும் போது தான் அதன் பலனை நாம் உணர முடியும்.

வெற்றி, தோல்வி, ஏமாற்றம், துரோகம் என எல்லாவற்றினாலும் பதிக்கப்படும் மனதை சீர்படுத்த வேண்டியது நமது கடமையே. ஒரே ஒரு நாள் உங்கள் மனதை நினைத்து பாருங்கள் .அதில் என்ன என்ன விதமான எண்ணங்கள் வந்து அலைகிறது, எவற்றினால் குழம்பிபோகிறது, என பார்த்தால் பல உண்மைகள் உங்களுக்கே புரியும்.

இதற்கு இந்த ஏகதத்துவம் ஒரு நல்ல யோகம்.


2 comments:

kiruba said...

''ஒரு வெற்றி பல வெற்றிகளை கனவு காண்கிறது''

அருமையான் வரிகள்..!!

Praveenkumar said...

அடடா..!!! வடை போச்சே..!!
சரி படிச்சுட்டு வரேன்.