Thursday, May 13, 2010

நாங்கள் அரசியல் வாதிகள்

நல்ல உள்ளமும் ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!

நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது போல நீங்கள் எங்களுக்கு பதவி கொடுப்பதால் .

நாங்கள் என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம்.

''அறத்தை மற
பொருளை கொடு
இன்பத்தை அனுபவி''

இதுதான் எங்கள் கொள்கை

எங்கள் தலையாய கடமைகளில் முக்கியமானது.. எங்களுக்கு நாங்களே பட்டமும் பாராட்டு விழாவும் நடத்திக்கொள்வது.

அன்று அப்படி இருந்தவன இன்று இப்படி என்று நீங்கள் ஆராய கூடாது.

எதிர் கட்சிகளை கண்ட மேனிக்கு தூற்றுவோம். ஆனால் அடுத்த தேர்தலில் அவர்களை கட்டியணைத்து வாக்கு கேட்போம்.

இதையும் நீங்கள் ஆராய கூடாது.

எல்லாம் உங்கள் நன்மைக்கே. நாங்கள் வெறும் தியாகிகள்.

நாங்கள் வரும் வரும் என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோ ஒரு நுற்றாண்டில் ஏதோ ஒரு தலைமுறையில் வரும். அப்போது நீங்கள் எங்களாலதான் வந்தது என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

ஊழல் ஊழல் என்று கூச்சல் போடுகிறார்களே. எந்த நாட்டில் இல்லை ஊழல். சீனாவில் இல்லையா? ஜப்பானில் இல்லையா? ஊழல் என்பது பாரம்பரியமாக இருந்து வருகின்ற மரபு. நாங்கள் அந்த மரபைகட்டி காக்கிறோம்.

நாங்கள் ஆஸ்திரேலியா அமெரிக்க டூர் போவதையும் தனி விமானங்களில் பயணம் செய்வதையும் நீங்கள் கணக்கு கேட்க கூடாது.

குடும்ப கணக்கு ரகசியங்களை ஆராய்வது அரசியலுக்கு அழகல்ல.

அதே போல் எங்களுக்கு பிடிக்காத ஒன்று திராவிடம் பற்றி கேள்வி கேட்பது.

ஏனெனில் எங்களுக்கே அது என்னவென்று தெரியாது. எங்கள் முன்னோர்கள் சொன்னதை நாங்கள் வழிமொழிகிறோம். அவர்களுக்கே அதுபற்றி தெரியாது என்பது வேறு விஷயம்.

பகுத்தறிவு பேசுவோம். திராவிடம் பேசுவோம். பார்பனியம் எதிர்ப்போம். ஆனால் காலம் மாறும் போது இவற்றுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நடந்துகொள்வோம்.

நமது அரசியல் சட்டம் மிகவும் பரவலானது. ஒரு அரசியல் வாதிக்கோ அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை.

அந்த வகையில் நாங்கள் பாக்கிய சாலிகள்.

இவனுக்கு ஏது இவ்வளவு பணம் என்று நீங்கள் ஆச்சர்யப்படக்கூடாது.

எல்லாம் உங்கள் தயவு.

நதி மூலம் , ரிஷிமூலம், அரசியல்வாதி மூலம் இம்மொன்றும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.

நாங்கள் சேர்க்கும் பணம் பொது மக்களாகிய உங்களுக்கே அல்லாமல் எங்களுக்காக அல்ல.

நிலக்கரியில் இருந்து மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ எங்களுக்கு தினமும் அறிக்கைகள் கிடைத்து விடும்.

குடும்ப அரசியல் நடத்துகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் தியாகிகள். மக்களுக்காக குடும்பத்தோடு உழைக்கிறோம். உழைத்துக்கொண்டே இருப்போம். இதில் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.

சொந்த மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது அதை சகிக்க முடியாமல் A.C., பேன் போட்டு அரைநாள் உண்ணாவிரதம் இருந்த தியாகிகள் நாங்கள்.

நாடாளுமன்றத்தில் எங்கள் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்பதில்லை என்கிறார்கள்.

இங்குதான் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல.

நாங்கள் தமிழை நேசிக்கிறோம். தமிழ் தவிர வேறு மொழிப்பற்று இல்லை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வரைமுறை கிடையாது. அவர்கள் தமிழ் தவிர எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம்

நாங்கள் எங்களையும் நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்கு உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் என்ன விளக்கம் சொன்னாலும் என்றுக் கொள்ளாதீர்கள் . எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.

நீங்கள் மக்குகளாக இருக்கிற வரையில் தான் நாங்கள் பிழைப்பு நடத்த முடியும்.

ஏழை மக்களே! இதயத்தில் கைவைத்து சொல்கிறோம். நாங்கள் உங்கள் தொண்டர்கள்.

நீங்கள் தலையால் இடும் வேலைகளை நாங்கள் காலால் உதைத்து; மன்னிக்கவும். நாக்கு குழறி விட்டது.
நீங்கள் காலால் இடும் வேலைகளை தலையால் உழைக்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

மன்னிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. பாராட்டு விழாவுக்கு போகவேண்டிய முக்கிய காரியத்தினால் இதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆகவே எந்த நேரத்திலும் எங்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அதற்க்கு முன் பார்சல்கள் நாங்கள் ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் அனுப்பி விடுவோம்.

மறவாதீர்கள் நரிக்குட்டி சின்னத்தை!

நரிக்குட்டி ஏழைகளின் பணப்பெட்டி !

வாழ்க நாங்கள் ! வாழ்க நாங்கள் !

இப்படிக்கு

ஜனநாயகம் மறவாத அரசியல்வாதிகள்.

6 comments:

Unknown said...

உங்கள் கட்சியில் சேர்ந்தால் எனக்கு என்ன பதவி தருவீர்கள்,
பொருளாளர் பதவி ?????/

word verification -ஐ எடுத்து விடுங்கள்

KUTTI said...

மிக சிறப்பான வஞ்ச புகழ்ச்சியணி.

வாழ்த்துக்கள்.

மனோ

Sanjai Gandhi said...

அம்ணி கோயம்த்தூர்ங்களா? வணக்கமுங்க.. நம்மூர்க்காரங்கள இங்க பாருங்க..
covaibloggers.blogspot.com

தினேஷ் ராம் said...

அருமைங்க :D

இதை ஏதாவது ஒரு அரசியல்வியாதி படிக்க முடிந்தால் இன்னும் நல்லாயிருக்குமுங்க.

(மன்னிக்கனும் அது வாதி*.. ச்சே, எழுத்துப் பிழை போல!!)

prince said...

நாற்காலியாய் இருந்தவன்
இருகாலி ஆனான்
இருகாலி ஆனதனால்
நாற்காலி செய்தான்
நாற்காலிக்காக
நாற்காலி ஆனான்!
இதுதான்
நாற்காலியின் கதை.

(அப்துல் ரகுமான் கவிதை)

பதவி நாற்காலியை பிடிக்கிற வெறியில் மீண்டும் நான்கு காலுடய மிருகமாய் மாறிப்போனான்!

பருப்பு (a) Phantom Mohan said...

"ஜனநாயகம்" இது எந்த மொழி? இதுக்கு அர்த்தம் என்னன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்?

ரொம்ப நல்லா தமிழ்ல பேசுறீங்க, அடுத்த தேர்தல்ல எங்க தொகுதில நில்லுங்க..உங்களுக்கே ஒட்டு போடுறோம்!

இவண்
அடுக்கு மொழி தமிழ் பேசினால் வோட்டு போடும் வெக்கம் கெட்ட கூட்டம்