கோபத்தை குறைப்பது எப்படி, கோபத்தைக் கட்டுபடுத்தும் வழிகள் என்னவென்று காலம் காலமாக ஞானிகளும் அறிஞர்களும் அறிவுரை சொல்லி வருகிறார்கள். எனக்கு இதற்கு எதிர்மாறாக தோன்றுகிறது.
உண்மையில் நாம் சரியான விஷயங்களுக்காக ஒரு போதும் கோபப்படுவது இல்லை . ஆகவே கோபப்பட கற்பிக்க வேண்டும். கோபம் பயில வேண்டும் என்ற எண்ணம் தான் உருவாகிறது. தனது கோபத்துக்கு தான் பொறுப்பாளி இல்லை என்று யார் பக்கமோ கைகாட்டுவதே இன்றைய வழக்கமாக இருக்கிறது. கோபத்தின் தன்மைகளை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை.
ஆயிரமாயிரம் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். அது நம்மிடையே கோபத்தை உருவாக்கவில்லை.
10 ,000 கோடி ஊழல் , 15000 கோடி மோசடி என்று நாளிதழ்களில் செய்திகள் நிரம்பி வருகின்றன. அதை பார்த்து கோபம் வரவில்லை. பள்ளிச் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். பதின் வயது வேலைக்காரப் பெண் எரித்து கொல்லப் படுகிறாள் . சாதி திமிரில் ஒரு மனிதன் வாயில் மலம் திணிக்கப் படுகிறது. கல்லால் அடித்துக் காதலர்கள் கொள்ளப் படுகிறார்கள். கடவுளின் தோழர்கள் போல் இருந்த துறவிகள் காமக் களியாட்டம் நடத்துகிறார்கள். மக்கள் எதற்கும் கோபம் கொள்வதே இல்லை.
ஒரு வேலை மென் உணர்சிகள் அதிகமாகி விட்டனவா? அதுவும் நிஜம் இல்லை என்று இயல் , இசை, நாடகம் மற்றும் கிராமியக் கலைகள் பார்வையாளர்கள் இன்றி மெள்ள அழிந்து வருகிறது. நல்ல இசை . இலக்கியம் , எதையும் விரும்பி போகிறவர்கள் குறைந்து போனார்கள். கோபமும் இல்லை.. மென் உணர்சிகள் இல்லை. என்றால் மக்கள் என்னவகதான் ஆகி இருக்கிறார்கள்.
யோசித்தால் கிடைக்கும் ஒரே உண்மை.. மக்கள் மண்ணாக இருக்கிறார்கள் என்பதே.. மண்ணை பழிக்கக் கூடாது என்பார்கள். மக்கள் மனது கசடேறிய மண்ணாக மாறி இருக்கிறது. எதையும் கண்டு கொள்ளாமல் , எதற்கும் சலனம் கொள்ளாமல் பட்ட மரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நமது வாழ்கை அர்த்தமற்றுபோய் கொண்டிருக்கிறது . எதற்குமே ஏன் கோபம் வருவது இல்லை.
அகிம்சையை கற்றுக்கொடுத்த அதே காந்திதான் பிடிவாதத்தையும் கற்றுதந்தார். யார் தடுத்தாலும் எதிர்த்தாலும் பிடிவாதமாக நியாயத்தை மக்கள் உணர செய்திருக்கிறார். எங்கிருந்து வந்தது அந்த பிடிவாதம். கோபம் தான் பிடிவாதமாக மாறி இருக்கிறது,. காந்தியின் வழிகாட்டல்கள் இன்று ஏன் கைக்கொள்ளப்படுவது இல்லை.
கோபத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குள்ளாகவே அமுக்கிவைதுக் கொள்வதை விட சிறு தீக்குச்சி போல தன்னை எரித்துக்கொண்டு வெளிச்சம் தரும் கோபம் வெளிப்பட வேண்டும். அதன் விளைவு மெள்ள விரிவு கொள்ளும். நாம் கோபம் கொள்ளவேண்டிய அதனை அநியாயங்களும் மனித அவமதிப்புகளும் கண் முன்னே நடக்கின்றன. ஆனால் அடங்கியே போகிறோம். இதற்கு மாறாக எளிய மனிதர்களிடம் அடங்கி போக வேண்டிய இடங்களில் ஆத்திரப்படுகிறோம்.
மனசாட்சியின் குரல் என்ற சொல்லையே மறந்து விட்டோம் இன்று. முன்பு மனசாட்சி நமது சரி தவறுகளை கண்காணித்த படியே இருக்கும் என்ற பயம் இருந்தது. மனசாட்சி விழித்தபடியே இருக்கிறது என்பதன் அடையாளமே சமூக கோபங்கள். அது மறையும் போது மனசாட்சியும் கூடவே மறைந்து போகிறது.
கடவுளின் இருப்பிடம் கள்வர்களின் குகையாக மாறிவிட்டதே என்று ஏசு கோபம்கொண்டு இருக்கிறார். ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் மக்கள் சண்டையிடுகிறார்களே என்று புத்தர் கோபம் கொண்டு இருக்கிறார். தன்னை அவமதித்ததைக்கூட தாங்கிக் கொள்ளும் கிருஷ்ணர் தனது தேசத்து பெண்களை அவமதித்தவனை கொல்ல கோபத்துடன் ஸ்ரீ சக்கரத்தை ஏவிவிட்ட நமது இதிகாசங்கள் சொல்கின்றன. அநியாயத்துக்கு எதிராக கண்ணகியின் கோபம் மதுரையை எரித்தது. தென்னாப்ரிக்காவில் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கோபம் தான் காந்தியின் முதல் அறப்போராட்டம். ஆக, கோபம் எப்போதும் மாற்றதின் ஆதார விதை போன்று இருந்திருக்கிறது. அந்த கோபத்தை தான் நாம் தொலைத்து விட்டோம்.
கோபம் எளிதானது இல்லை. அதை முறையாக பிரயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தின் கடிவாளம் நம் கையில் இருக்க வேண்டும். அதன் பிடிக்குள் நாம் போய்விடக் கூடாது. அது சாத்தியமானால் நமது கோபம் ஒளிரும் வெளிச்சமாகும்.
ராமகிருஷ்ணன்
ஆனந்த விகடன்
5 comments:
முறையான பக்குவமுற்ற கோபம் சாத்தியம் தானா?
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது..
"தன்னாத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்."
இன்றைய காலக் கட்டத்தில்.. சுயநலங்கள் இன்ன பிற அவலங்களால் சூழப்பட்ட சாமான்ய மனிதர்களுக்கு "கோபம் கொல்லாதே" என்பது பொருந்துமா?
நல்ல பகிர்வு தொடர்க.
வாழ்த்துகள் .
well said...
Rowthiram pazhagave ipozhudhu anaivarum marandhu vitom....
நல்ல பகிர்வு
நன்றி :))
Post a Comment