Sunday, June 6, 2010

இறைவனுடன் கேள்வி பதில் ..

இறைவனுடன் கேள்வி பதில் ..


இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை ஒன்று.
ஹைத்தி நாட்டின் கொடுமை பற்றி வெளியாகி இருந்தது. கறுப்பின மக்கள் வாழும் அந்த நாட்டில் தொழில் வளம் ஏதும் இல்லை. விவசாயத்திற்கும் சாதகமான நிலங்களும் இல்லை. எங்கும் பசி பட்டினி. இதனால் திருட்டு, கொலை, கொள்ளை அழையா விருந்தாளிகள் அந்நாட்டில்.
ஹைதியின் ஓரிடத்தில் சிறு மக்கள் கூட்டம். அங்கே ஒரு பெண் வெள்ளை களிமண்ணை சிறு உருண்டைகளாக்கி தட்டு போல செய்து வெயிலில் காய வைக்கிறாள். அங்கே வரும் மக்கள் அதை காசு கொடுத்து வாங்கி செல்கிறார்கள். சிலர் கடனாக கொடுக்கும் படியும் கெஞ்சுகிறார்கள். ஆனால் அவள் காசில்லாமல் அருகே வராதீர்கள் என்று அவர்களை விரட்டி விடுகிறாள். இந்த களிமண் தட்டுக்களை வாங்க அங்கே ஒரே போட்ட போட்டி. சில நிமிடங்களில் அவள் கொண்டு வந்த தட்டுக்கள் அனைத்தும் விற்றுதீர்ந்து விடுகின்றன.

அதை வாங்கி சென்ற ஒரு பெண் அதை தன் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறாள். மிகுந்த பசியால் இருந்த அந்த குழந்தை வேகவேகமாக அதை சாப்பிடுகிறது. அவள் தன் இன்னொரு குழந்தைக்கும் அந்த களிமண்ணை கொடுக்கிறாள். அதுவும் சாதாரணமாக அதை சாப்பிடுகிறது. அதற்க்கு ஒரு 4 அல்லது 5 வயது இருக்கலாம்.எலும்பும் தோலுமாக அந்த குழந்தைகள் பார்க்கவே பரிதாபமாக இருகின்றன. இப்படி அந்த குடும்பம் உட்பட அந்த நாட்டில் நிறைய மக்கள் உணவின்றி இப்படி இந்த களிமண்ணை உணவாக சாப்பிடுகின்றனர்.

அந்த பெண் சொல்கிறாள். எங்களுக்கு இங்கு உணவு ஏதும் கிடைப்பதில்லை. பசியால் நாங்கள் தினம் தினம் செத்துக்கொண்டு தான் இருக்கிறோம். இக்குழந்தைகள் பசியால் துடிப்பதை பார்க்க சகிப்பதில்லை. ஆரம்பத்தில் இதை சாப்பிடுவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. பழக்கிகொண்டோம். இதனால் பசியை கொஞ்சமாவது தணிக்க முடிகிறதல்லவா. ஆனால் இதை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மலச்சிக்கல் , தொண்டை மற்றும் வயிற்றுக் கோளாறால் இறந்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதை உணவாகவே கொண்டுதான் வாழ்கிறார்கள்.

இந்த கட்டுரையை படித்து பிறகு சாப்பிடுவதே கஷ்டமாகியது. என்ன கொடுமை. மனிதர்களாகிய நாம் அனைவரும் பூமி எனும் ஒரே கிரகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

ஒரு பகுதியில் மிகுதியான பண வசதிகளால் பணத்தை வாரி இறைக்கிறார்கள். 5 ஸ்டார் 7 ஸ்டார் என கும்மாளமிடும் மக்கள். ஒரு லட்சத்திற்கு கூட காலணிகள் வாங்கும் மனிதர்கள் இருகிறார்கள்.
அதே மனிதர்களோடு களிமண்ணை தின்று செத்துக் கொண்டும் மனிதர்கள் இருகிறார்கள். ஒரே இனத்தில் எத்தனை வேற்றுமை.

நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள். சர்சுகள். மசூதிகள். பணத்தில் குளிப்பவனும் செல்கிறான். அப்பாவி ஏழையும் செல்கின்றான். அவனும் மனமார வேண்டுகிறான். ஆனால் அகிரமக்காரர்களே இப்பூமியில் சுவீகாரமாக வாழ்கின்றனர். அப்பாவி ஏழை மக்கள் மேலும் மேலும் பிச்சைக்காரர்கள் ஆகிக் கொண்டுதான் இருகின்றனர்.

யாரை குற்றம் சொல்வது. கண்டும் காணாமல் இருப்பதே மனித வர்கத்தின் குணம். மனித இனத்தை படைத்த இறைவனின் குற்றமா?.

ஆம். வாழ்கை என்றால் என்ன என்று சொல்லித்தராமலேயே மனித இனத்தை படைத்தது விட்டான்.

வாழ்கை என்பது தர்மம். எல்லோருக்கும் சமதர்மம். பேதங்களற்ற அனுபவம். இதுதான் இறைவன் படைத்த வாழ்கை. எல்லா மதங்களின் கூற்று.

ஆனால் இந்த தர்மம் இப்போது உலகத்தில் எங்கேயும் இல்லை. நம் முன்னோர்களும் பார்த்ததாக தெரியவில்லை. சமம் , தர்மம் இவை இந்த உலகத்தில் இல்லாத கற்பனை.

உண்மை சொல்வதே தர்மம் என்றால் அந்த உண்மை சொல்கிற மனிதனை இனிதான் இறைவன் படைக்க வேண்டும்.

வாழ்கை இன்பங்களை தனது எல்லைக்குள் அடக்கி வைத்துக்கொள்வதே மனித தர்மமாக நடந்து கொண்டிருக்கிறது.

கண்ணதாசன் இறைவனிடம் கேட்கிறார்.
''நீ படைத்த உலகத்தில் மனிதர்கள் இவ்வளவு அல்லல்படுகிறார்களே. நீ ஏன் அவர்களை காத்து இரட்சிக்காமல் வேடிக்கை பார்க்கிறாய்?''

இறைவன் சொல்கிறான்
''உலகத்திற்கு நான் தர வேண்டியது ஏதும் பாக்கி இல்லை.''
நூலை கொடுத்து விட்டேன். ஆடையை பின்னிகொள்ள வேண்டியது அவன் பொறுப்பு.
பாலை கொடுத்து விட்டேன். தயிராக்கிகொள்ள வேண்டியது அவர்கள் கடமை.
மழையை கொடுத்து விட்டேன்.
நிலத்தை கொடுத்து விட்டேன்
விதையை கொடுத்து விட்டேன்.
அதை பயிராக்கிகொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பு.
பெண்ணையும் ஆணையும் நான் படித்தேனே தவிர பிள்ளைகளை நானா படைத்தேன் .
மூலம் ஒன்றை கொண்டு விளைவுகளை தேடிக்கொள்ள வேண்டியவர்கள் அவர்களே.!
எந்த ரகசியம் எந்த இடத்தில தோன்றி எந்த இடத்தில முடிகிறதென்பதை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் அவர்களே
படைப்பின் நோக்கங்கள் படைப்பின் போதே தெளிவாக்கப்பட்டு விட்டன. தினமும் பாடஞ்சொல்லிக் கொண்டிருப்பது ஏன் வேலையல்ல''

கண்ணதாசன் கேட்கிறார்.
''பிறகு பூமியில் உனக்கெதற்கு ஆலயம்?''

இறைவன் சொல்கிறான்
''நான் படைத்த பொருகளில் ஆலயம் என்று ஒன்றில்லை. உனக்கு தெரியுமா?
தங்கள் பயத்தையும் நடுக்கத்தையும் தங்கள் வீட்டிற்குள்ளேயே குவித்துக்கொள்ள முடியாமல் அவற்றை ஒப்படைப்பதற்காக ஓரிடத்தை மனிதர்கள் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
அச்சங்களும் ஐயங்களும் இன்றியே உலகத்தின் முதல் படைப்பை நான் படைத்தேன்.
மனிதர்கள் தாங்களே படைத்துக்கொண்ட பொருட்களில் அவையும் சேர்த்து விட்டன. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?''.


கண்ணதாசன்..
''சர்வ வல்லமையுள்ளவன் நீ என்கிறார்களே
அந்த வல்லமை உனக்கில்லைய?''

இறைவன்
''இல்லை. நிச்சயமாக இல்லை.
என்னை சர்வ வல்லமையுள்ளவன் என்று சொன்னவன் மூடன்.
ஒருவனே சர்வ சக்திகளும் படைத்தவனாக இருந்தால் உங்களுக்கெல்லாம் உணர்சிகள் எதற்கு?.

உணவை கையிலெடுத்து நான் ஊட்டியதில்லை.
கை எடுப்பதற்கும் வாய் உண்பதற்கும் என்று நீங்களே அறிந்து வைத்திருக்கும் போது மற்ற உணர்ச்சிகளும் உங்களுக்கு இருக்கும் போது விளைவுகளை கண்டுகொள்வது மட்டும் என் கடமையா? விளைவுகளை கண்டுகொள்வது உங்கள் கடமையா? ''

எனக்கு தோன்றியது. இறைவன் சொல்வது உண்மை தான்.

அவன் படைத்த உலகில் ஐந்தறிவு விலங்கினங்கள் ஏதும் பசியால் இறப்பதில்லை.

பகுத்தறிவு படைத்த மனிதன் தான் பசி பட்டினியால் சாகிறான்.

நிலம், நீர், காற்று வானம் என எல்லாவற்றையும் இறைவன் பொதுவாகவே படைத்திருக்கிறான். விலங்கினங்கள் இந்த இயற்கை வளங்களை ஒற்றுமையாக அனுபவிக்கின்றன.
ஆறறிவு மனிதன் பசிக்கொடுமையால் மாள்கிறான்.
இதற்கு காரணம் என்ன?

மனிதர்களின் பேராசையே காரணம்.
எல்லா வளங்களையும் தான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்கிற பேராசை. இந்த பேராசையே மனிதர்களை படுகுழியில் தள்ளுகிறது. பிறகு அதன் விளைவை நாம் தான் அனுபவித்தாக வேண்டும்.

எந்த விலங்கினங்களும் பூமியை கூறு போட்டு எல்லைகளை வைத்துக்கொள்ளவில்லை.

எந்த விலங்கினங்களும் தன் 27 அல்லது அதற்கு மேலான தலைமுறைகளுக்கும் சேமித்து வைத்துகொள்வதில்லை. சுவிஸ் வங்கியில் கணக்கும் இருப்பதில்லை.

அவைகளின் குடில்களில் 1500 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கமும் வைத்திருப்பதில்லை.

இப்படி செல்வமும் வளமும் சில மனிதர்களின் வங்கிகளிலும் வீடுகளிலும் பூட்டி வைத்துக்கொண்டால் எங்கே இருக்கும் சம தர்மம்?
பிறகு ஒரு பக்கத்தில் பட்டினி சாவும், மற்றொரு பக்கத்தில் கும்மாளமும் நடைபெறத்தான் செய்யும்.

சுகமாக வாழும் மனிதனுக்கு பசி பட்டினி பற்றி என்ன தெரியப்போகிறது.

ஆனால் கோடீஸ்வரன் மரணத்திற்கு லஞ்சம் கொடுக்கமுடியாது. அதை நினைத்தாவது இல்லாதவர்களுக்கு உறங்கிக்கொண்டிரும் செல்வதை செலவழிக்கலாம். எந்த செல்வமும் கொடுக்காத மன நிறைவு இதன் மூலம் பலனாகப் பெறலாம்.

7 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

சுவரஸ்யமான விளக்கங்கள் உரையாடல்கள்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை,,,,,

ஜெயந்தி said...

நல்லா சிந்திச்சிருக்கீங்க.

Unknown said...

பயனுள்ள பதிவு.
நன்று

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//எந்த விலங்கினங்களும் தன் 27 அல்லது அதற்கு மேலான தலைமுறைகளுக்கும் சேமித்து வைத்துகொள்வதில்லை. சுவிஸ் வங்கியில் கணக்கும் இருப்பதில்லை.//


நன்றாக சிந்தித்து அழகாக எழுதி உள்ளீர்கள்.ஆண்டவன் என ஒருவன் இருந்து நியாமானவனாக உலகை படைத்திருந்தால் ஏன் இத்தனை ஏற்ற தாழ்வுகள்..மனிதன் ஒருவனை ஒருவன் ஏமாற்றி பிழைக்க முயற்சிப்பதன் விளைவே இது...!

Katz said...

கடவுளை என்னுடனும் பேச சொல்லுங்கள்

GSV said...

Very good POST !!! see this too...http://marudhang.blogspot.com/2010/09/blog-post_17.html ... ithu than unmainilamai indiayala.