Monday, June 28, 2010

இன்றைய இந்தியாவின் தேவை...நேற்று மாதவனின் எவனோ ஒருவன் படம் பார்த்தேன். நம் ஒவ்வொரு குடிமகனின் உள்ளக்கொதிப்புகளே அந்த படம். நம்மை போல ஒரு சாதாரண மனிதன் தன்னை சுற்றி உள்ள மக்களின் லஞ்சம், பேராசை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதையும் பார்த்து கொதிப்படைகிறான்.நம் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தால் மனதிற்குள் கோபம் வரும். ஆனால் ஏதும் சொல்லாமல் அமைதியாக தலைகுனிந்து சென்றுவிடுவோம். மனதிற்குள் ஓங்கி அடிக்கவேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாது.


நான் வேலை செய்த அரசு அலுவலகத்தில் எங்கள் மேலதிகாரி ஒரு பெண். மாதம் 46000 /- சம்பளம் பெறுகிறார். 90 எடை கொண்டிருப்பார். ஒரு நாளைக்கு 10 நிமிடம் தான் வேலை. கையெழுத்திடுவது மட்டும். வாரக்கடைசி இரண்டு நாட்கள் 'ரௌண்ட்ஸ்' கிளம்பி விடுவார் . ஒரு நாளைக்கு ஒரு தெருவிற்கு சென்று வந்தால் 25000/- மிகாமல் பணத்துடன் வருவார் .
அது போக அலுவலகத்திற்கு வருபவர்களிடம் 2000 என்று கறந்து விடுவார் . அங்கு வரும் ஒவ்வொரு தனி நபர்களும் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அந்த அம்மையாரிடம் குழைந்து பேசி கெஞ்சுவார்கள். பார்பதற்கே அருவருப்பாக இருக்கும். காசில்லாத, படிப்பறிவில்லாத ஏழை மக்கள் இவர்கள் கண்களில் பட்டு விட்டால் போதும். அவர்கள் கோபத்தையும் எரிச்சலையும் அந்த அப்பாவிகள் மேல் காட்டுவார்கள். பேச தெரியாமல் அவர்கள் கெஞ்சுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால் ஒருவரும் மறந்தும் கூட அந்த அம்மையாரிடம் சண்டையிடவோ, நியாயம் கேட்கவோ மாட்டார்கள். அந்த அதிகாரிகளுக்கு என்னவோ தேவலோகத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் போல நினைப்பு. அந்த மேலதிகாரியை பார்க்கும் போதெல்லாம் கட்டி வைத்து 100 என்ன 1000 கசையடிகள் கொடுக்க வேண்டும் போல இருக்கும்.அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும்.

லஞ்சம் கொடுப்பது தவறு. வாங்குவது தவறு என்று அனைவருக்குமே தெரியும். தெரிந்தே தான் வாங்குகிறார்கள். தெரிந்தே தான் தவறுக்கு துணை போகின்றனர். அவன் செய்கிறான். நாம் செய்தால் என்ன தவறு என்று நியாயம் பேசுகிறார்கள். ஊரில் உலகத்தில் பண்ணாத தவறா நான் செய்கிறேன் என்று வாய் கூசாமல் பேசுகின்றனர்.

எங்கும் தவறுகள் தெரியாமல் நடப்பதில்லை. தெரிந்து தான் அத்தனை அக்கிரமங்களும் அரங்கேறுகின்றன.

வசூல் வியாபாரமாகிவிட்ட பள்ளி நிறுவனங்கள், தங்களிடம் டியுசன் படித்தால்தான் தேர்ச்சி செய்கின்ற ஆசிரியப்பெருமக்கள், கையூட்டு கொடுத்தால் கதை திரைக்கதை எழுதி குற்றாவளிகளுக்கு வக்காலத்து வாங்கும் காவல் துறை , நவீன கொள்ளை கூட்டங்களாக கிளம்பி இருக்கும் திருமண அமைப்பகங்கள், காலை நேர நிகழ்ச்சிகளாகி விட்ட ஜோதிட தனவான்கள், ஓட்டுக்கு 1000 /- என கணக்கிடும் அரசியல் கட்சிகள், மருத்துவ துறை பற்றி கேட்கவே தேவை இல்லை. இன்னும் எத்தனையோ.....

எல்லாவற்றிற்கும் பணமே மூலதனம். தொட்டாதர்கெல்லாம் பணம், பணத்திற்காக வெட்கம் இல்லாமல் ஏமாற்றும் மக்கள் கூட்டம். பணம் கொடுத்தால் கொலை குற்றத்திலிருந்தும் பாதுகாப்பு, பணம் கொடுத்தால் நல்ல மருத்துவம், இப்படி பணமே இவ்வுலகத்தின் ஆதார சக்தி ஆகிவிட்டது. பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம்.

யாரேனும் நியாயம் தர்மம் பேசினால் அவரை வினோத ஜந்துக்கள் போல பார்கிறார்கள். இல்லாத ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுத்தால் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்கிறார்கள். பேசுவதோடு நிறுத்திக்கொள்வது தான் தர்மம் போல. செயலில் காட்டினால் பிழைக்க தெரியாதவன் என்ற பட்டம். இதோ வந்துட்டார் பா காமராஜர் என்று நையாண்டி செய்கின்றனர்.

ஒரு சம்பவம். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் என்னும் ஊரில் கந்து வட்டி கும்பலின் அட்டகாசங்கள் ஏராளம். அப்படி ஒரு குடும்பம் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் பெற்று வட்டி குடுக்க சிரமப்பட்டு உள்ளனர். அந்த வட்டிக்கும்பல் அந்த குடும்பத்தில் இருந்த இளம் பெண்ணை கடத்திக்கொண்டு போய் 4 , 5 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து விட்டார்கள். அதை தட்டி கேட்ட அந்த ஊரின் சி.பி.எம். கட்சி செயலாளர் ஒருவர் போலீசில் சென்று கந்து வட்டி கும்பலை பற்றி புகார் அளித்தார். புகார் செய்த அன்று இரவே அந்த செயலாளரை வெட்டி கொலை செய்துவிட்டார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதி பாடினதை விட கொடுமையான சம்பவம் இது.

110 கோடி இந்தியர்கள் அனைவருமே தலை குனிந்தே செல்கிறோம். அதில் யாரேனும் ஒருவர் தலை நிமிந்தாலும் தலையோடு சேர்த்து அடிக்கிறார்கள். அதையும் மீறி அவன் தலை நிமிர்ந்தால் தலையையே எடுத்து விடுகிறார்கள்.

100 இளைஞர்களை தாருங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். ஆனால் இன்றைய இந்தியாவின் தேவை இளைஞர்கள் அல்ல. ஒரு ஹிட்லர். அதுவும் ப்ரூஸ் லீ யின் உடல்திறனுடன்.

3 comments:

நாடோடி said...

அந்த‌ 110 கோடி பேரில் நானும் ஒருவ‌ன் என்று சொல்லி கொள்கிறேன்....க‌ட்டுரையின் சார‌ம் ந‌ல்லா இருக்குங்க‌..

அகல்விளக்கு said...

ஆழமாக சிந்திக்கத் தூண்டிய கட்டுரை....

ப்ரின்ஸ் said...

//வசூல் வியாபாரமாகிவிட்ட பள்ளி நிறுவனங்கள், தங்களிடம் டியுசன் படித்தால்தான் தேர்ச்சி செய்கின்ற ஆசிரியப்பெருமக்கள், கையூட்டு கொடுத்தால் கதை திரைக்கதை எழுதி குற்றாவளிகளுக்கு வக்காலத்து வாங்கும் காவல் துறை , நவீன கொள்ளை கூட்டங்களாக கிளம்பி இருக்கும் திருமண அமைப்பகங்கள், காலை நேர நிகழ்ச்சிகளாகி விட்ட ஜோதிட தனவான்கள், ஓட்டுக்கு 1000 /- என கணக்கிடும் அரசியல் கட்சிகள், மருத்துவ துறை பற்றி கேட்கவே தேவை இல்லை. இன்னும் எத்தனையோ.....//

//ஒரு ஹிட்லர். அதுவும் ப்ரூஸ் லீ யின் உடல்திறனுடன்.//

கண்டிப்பாக தேவை தான்.