Showing posts with label பார்த்தது. Show all posts
Showing posts with label பார்த்தது. Show all posts

Tuesday, September 14, 2010

சன் டிவி-நமக்கு நாமே

சென்ற சனிக்கிழமை இரவு சன் செய்தி பார்க்க வேண்டியதாகி விட்டது.

முக்கியச் செய்தியில் முதல் செய்தியாக அதிமுக்கிய செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது.

என்ன செய்தி?

கங்கையின் வெள்ளமா?
கலைஞரின் அறிக்கையா?
நாடாளுமன்ற சண்டை காட்சியா ?
தெலுங்கானாவின் தெருப்போராட்டங்களா?

இதெல்லாம் ஒரு செய்தியா? இதையெல்லாம் ஒளிபரப்ப சன் டிவிக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

அந்த முக்கியச் செய்தியாகப்பட்டது என்னவெனில்,
தியேட்டர்களில் எந்திரனின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு காவடி எடுத்து , பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்து 'புண்ணியத்தை' தேடிக்கொண்ட ரசிகர்கள்.

இதை மிகவும் பெருமையுடன் ஒளிபரப்பிகொண்டிருந்தார்கள்.

கங்கையில் வெள்ளம் வந்தால் என்ன?
எங்கே குண்டு வெடித்தால் என்ன?

அவரவர்க்கு அவரவர் செய்திதானே முக்கிய செய்தி.

தங்களின் விளம்பரயுக்தியின் மீது சன் டிவிக்கு அபார நம்பிக்கை.

தங்களின் பல படங்கள் தியேட்டர்களில் காற்றுவாங்குவதையும் சூப்பர் ஹிட் என்று சொல்லி அங்கே ஆட்களை திரட்டி ஆட வைத்து அதை செய்தியில் காட்டுவதை 'கொள்கையாக' கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு என்ன, திரண்டு ஆடுவதற்கு 'கூலிக்கு' ஆட்களைப் பிடித்தால் போயிற்று.

தங்களை தாங்களே புகழ்ந்து கொள்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி பிரியம் போல.

இதற்கு பெயர்தான் 'நமக்கு நாமே' திட்டம் என்பதா?

திடீரென்று மனதில் ஒரு பயம்,பீதி.

ஓடாத மிக மோசமான படத்தையே 'மெகா ஹிட், சூப்பர் ஹிட்' என்று சொல்லி 6 மாதத்திற்கு தன் அனைத்து கிளைகளிலும் ஒளிபரப்பி நம்மை படுத்திஎடுப்பார்கள்.

இப்போது ஷங்கரும், ரஜினியும் கிடைத்து விட்டால் கேட்கவா வேண்டும்.என்ன செய்ய போகிறார்களோ.

ஒவ்வொரு முறையும் ஆளாளுக்கு புகழ்ந்து பேசி நம் காதில் ஈயத்தை பாய்ச்சுவார்கள்.

'..' வென வேடிக்கை பார்க்கும் மக்களை கண்டால் தான் அவர்களுக்கு என்ன ஒரு குஷி.

இப்படித்தான் படத்தின் ட்ரைலர் வெளியிடுவதையே 'ட்ரைலராக' ஒரு வாரம் காட்டிகொண்டிருந்தார்கள் .
அதை முக்கிய செய்தியாகவேறு காட்டி திருப்திப் பட்டுகொண்டார்கள்.

ட்ரைலருக்கே பட்டாசு என்பதெல்லாம் சன் டிவியின் வழக்கமான பப்ளிசிட்டி' செட் அப் 'ஆகத்தான் தோன்றுகிறது. ஆளில்லாத அவர்களின் மற்ற படத்திற்கே ஆடும் ரசிகர்கள் ட்ரைலருக்கும் ஆடிவிட்டு போகிறார்கள்.

சன் டிவியின் விளம்பர யுக்தி சந்தையில் விற்கப்படும் காய்கறி விற்பனையை சார்ந்தது.

அடுத்தவர்களின் அந்தரங்கம் எனில் அந்த சந்தையில் கூறு போட்டு கூவி விற்பார்கள். இலவசமாக கூட கிடைக்கலாம். அவர்களை பொறுத்த வரை பார்க்க கூட்டம் சேர்ந்தால் போதும். உதாரணம்: நித்யா.

அதுவே தங்களின் சொந்த சரக்கு எனில் ஓடி ஓடி திருட்டு வி சி டி க்களை பிடிப்பார்கள்.

மக்கள் அனைவருக்கும் அறிவிப்பது என்னவெனில் எந்திரன் வரும் வரை யாரும் சாப்பிடாதிருங்கள் . தூங்காதிருங்கள். வெளிவரும் எந்திரன் சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும்.


எனவே விளம்பரம் என்ற பெயரில்,

ஒரு சுறாவளி புயல் வீசப்போகிறது.தயாராயிருங்கள்!
ஒரு கொலை வெறித்தாக்குதல் நடக்கப்போகிறது. தயாராயிருங்கள்!






--
yalini

Sunday, August 29, 2010

கர்பத்திலேயே இனி கல்வி


ஜீ தமிழில் மட்டும் வரும் விளம்பரம் இது.

அந்த விளம்பரத்தில் காட்டப்படும் குழந்தைகள் 1 முதல் 2 வயதுக்குட்பட்டவை. அக்குழந்தைகளிடம் அட்டைகளில் ஏதேதோ எழுதிக்காட்டுகிறார்கள்.

அவைகளும் அதை பார்த்து ''cat .., elephant .., wave என சொல்கின்றன.

அதில் வேடிக்கை ஒரு குழந்தைக்கு இன்னும் பேசவே வரவில்லை. அதனிடமும் அட்டையில் 'hands என்று எழுதி கட்டுகிறார்கள். அது உடனே இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டி ஆட்டி காட்டுகிறது.

'' ....இச்சிறு குழந்தைகளும் தங்கள் வயதுக்கு மேலான நிலையில் கற்கின்றன. பேசுகின்றன. உங்கள் குழந்தைகளுக்கும் ''early leaning system'' ஐ அறிமுகப்படுத்தி அவர்களை வாழ்கையில் 'மேம்படுத்தி' உயர்வடையச் செய்யுங்கள் .. ''என்று வருகிறது.

அந்த குழந்தைகளை பார்க்க பாவமாக இருக்கிறது. முன்பெல்லாம் 5 வயது வரையாவது சுதந்திரம் இருந்தது குழந்தைகளுக்கு.

இப்போது அதுவும் போய் 3 வயதிலேயே பள்ளிகளில் தங்கள் குழந்தை பருவத்தை தொலைத்து விடுகிறார்கள். இந்த 3 வயது கூட பொறுக்க வில்லை போல. அப்போதிருந்தே கற்க ஆரம்பித்து வாழ்கையில் 'மேன்மை' அடைய செய்யவேண்டுமாம்.


இன்னும் கொஞ்ச நாள் போனால் இப்படியும் விளம்பரங்கள் வரலாம்..

''பெற்றோர்களே..

உங்கள் குழந்தைகள் பிறக்கும் போதே A.., B.., C.., D.., சொல்லிக்கொண்டே பிறக்க வேண்டுமா..?

''mummy .. daddy '' சொல்லி கொண்டே பிறக்க வேண்டுமா..,

''mummy இதோ வந்துட்டேன் .. ''

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே பிறக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்.

கர்ப்பத்தில் இருக்கும் போதே அக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து அறிவுள்ள பிள்ளைகளாக பிறக்க வைக்கிறோம்.

பிறக்கும் போதே ''வீல்..'' என அழுது கொண்டே பிறக்கும் மற்ற சாதாரண குழந்தைகளை போல அல்லாமல் mummy , daddy ,cat .., elephant .., wave என பலவாறு சொல்ல வைக்கிறோம். (கண்டிப்பா அம்மா, அப்பா என்று சொல்ல வைக்க மாட்டோம்).

இதற்கும் பெற்றோர் படையெடுத்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

....கர்ப்பத்திலேயே சொல்லிக்கொடுத்துட்டா அது ஜீன்ல போய் பதிஞ்சிடும். அப்புறம் மறக்கவே மறக்காது, நம்ம பிள்ளைங்க தான் இனி ஸ்கூல் பர்ஸ்ட். பின்னாடி IAS , MBBS , ENG கெல்லாம் கஷ்டப்பட தேவை இருக்காது பாரு .... , ''

என பெற்றோர்கள் ஆச்சர்யத்தோடு முன்பதிவு செய்தாலும் செய்வார்கள்.


ஏன் எனில் கர்ப்பத்திலேயே சொல்லிக்கொடுத்து விட்டால் நமக்கு இன்னும் சௌகரியம் தானே

Tuesday, June 29, 2010

புத்தரை கேவலப்படுத்தும் புத்த துறவிகள்.

நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தி..
.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கியகுழுவைவை அமைத்துள்ளனர். இதற்கு இலங்கையில் எதிர்ப்பு. இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் எதிர்ப்பது புத்த மத துறவிகள்.

என்ன கொடுமை பாருங்கள். இலங்கையில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது குற்றச் சாட்டு. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்பது இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கை.

ஏதேனும் ஒரு வகையில் நீதி கிடைக்காத என நம் மக்கள் கண்ணீர் விட்டுகொண்டிருக்க இந்த புத்த துறவிகள் .நா.வின் விசாரணைக்குழுவை எதிர்க்கின்றனர். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் .நா. தலையிடக் கூடாதாம். .நா. தீவிர வாதத்துக்கு துணை போகிறதாம். பான்.கீ .மூனுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். ஒரு துறவி மைக்கை பிடித்து கத்திக்கொண்டிருந்தார். இலங்கை என்ன அஹிம்சாவாதமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .

ஆமாம். இவர்கள் எல்லாம் புத்த துறவிகள் தானா. புத்தரின் கொள்கைகள் தான் என்ன என்று தெரியுமா. புத்தருக்கு 'ஸ்பெல்லிங்' தான் தெரியுமா. புத்தரின் பேரை உச்சரிக்க கூட இவர்களுக்கு அருகதை இல்லை.

பிற உயிரை கொள்ளவோ அவமதிக்கவோ கூடாது என்பதே புத்தரின் கொள்கை. ரத்த பூமியில் உள்ள புத்தர் கூட ரத்த வெறி கொண்டவராகதான் இருப்பாரோ.

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் போர் என்ற போர்வையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் இழிசெயலை விசாரிக்க கூடாது என்றால், அத்தனை மக்களையும் கொன்றோளித்ததை நியாயம் என்கின்றனரா. புத்த துறவிகள் என்று சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லை.

நீதி கிடைக்கிறதோ இல்லையோ, இந்த கொடூர அக்கிரமத்தை விசாரிக்க கூடாது என்று சொல்லும் புத்த துறவிகளை பெற்ற புத்தர் தான் வெட்கி தலை குனிய வேண்டும்.

Monday, June 28, 2010

இன்றைய இந்தியாவின் தேவை...



நேற்று மாதவனின் எவனோ ஒருவன் படம் பார்த்தேன். நம் ஒவ்வொரு குடிமகனின் உள்ளக்கொதிப்புகளே அந்த படம். நம்மை போல ஒரு சாதாரண மனிதன் தன்னை சுற்றி உள்ள மக்களின் லஞ்சம், பேராசை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதையும் பார்த்து கொதிப்படைகிறான்.நம் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தால் மனதிற்குள் கோபம் வரும். ஆனால் ஏதும் சொல்லாமல் அமைதியாக தலைகுனிந்து சென்றுவிடுவோம். மனதிற்குள் ஓங்கி அடிக்கவேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாது.


நான் வேலை செய்த அரசு அலுவலகத்தில் எங்கள் மேலதிகாரி ஒரு பெண். மாதம் 46000 /- சம்பளம் பெறுகிறார். 90 எடை கொண்டிருப்பார். ஒரு நாளைக்கு 10 நிமிடம் தான் வேலை. கையெழுத்திடுவது மட்டும். வாரக்கடைசி இரண்டு நாட்கள் 'ரௌண்ட்ஸ்' கிளம்பி விடுவார் . ஒரு நாளைக்கு ஒரு தெருவிற்கு சென்று வந்தால் 25000/- மிகாமல் பணத்துடன் வருவார் .
அது போக அலுவலகத்திற்கு வருபவர்களிடம் 2000 என்று கறந்து விடுவார் . அங்கு வரும் ஒவ்வொரு தனி நபர்களும் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அந்த அம்மையாரிடம் குழைந்து பேசி கெஞ்சுவார்கள். பார்பதற்கே அருவருப்பாக இருக்கும். காசில்லாத, படிப்பறிவில்லாத ஏழை மக்கள் இவர்கள் கண்களில் பட்டு விட்டால் போதும். அவர்கள் கோபத்தையும் எரிச்சலையும் அந்த அப்பாவிகள் மேல் காட்டுவார்கள். பேச தெரியாமல் அவர்கள் கெஞ்சுவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால் ஒருவரும் மறந்தும் கூட அந்த அம்மையாரிடம் சண்டையிடவோ, நியாயம் கேட்கவோ மாட்டார்கள். அந்த அதிகாரிகளுக்கு என்னவோ தேவலோகத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் போல நினைப்பு. அந்த மேலதிகாரியை பார்க்கும் போதெல்லாம் கட்டி வைத்து 100 என்ன 1000 கசையடிகள் கொடுக்க வேண்டும் போல இருக்கும்.அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும்.

லஞ்சம் கொடுப்பது தவறு. வாங்குவது தவறு என்று அனைவருக்குமே தெரியும். தெரிந்தே தான் வாங்குகிறார்கள். தெரிந்தே தான் தவறுக்கு துணை போகின்றனர். அவன் செய்கிறான். நாம் செய்தால் என்ன தவறு என்று நியாயம் பேசுகிறார்கள். ஊரில் உலகத்தில் பண்ணாத தவறா நான் செய்கிறேன் என்று வாய் கூசாமல் பேசுகின்றனர்.

எங்கும் தவறுகள் தெரியாமல் நடப்பதில்லை. தெரிந்து தான் அத்தனை அக்கிரமங்களும் அரங்கேறுகின்றன.

வசூல் வியாபாரமாகிவிட்ட பள்ளி நிறுவனங்கள், தங்களிடம் டியுசன் படித்தால்தான் தேர்ச்சி செய்கின்ற ஆசிரியப்பெருமக்கள், கையூட்டு கொடுத்தால் கதை திரைக்கதை எழுதி குற்றாவளிகளுக்கு வக்காலத்து வாங்கும் காவல் துறை , நவீன கொள்ளை கூட்டங்களாக கிளம்பி இருக்கும் திருமண அமைப்பகங்கள், காலை நேர நிகழ்ச்சிகளாகி விட்ட ஜோதிட தனவான்கள், ஓட்டுக்கு 1000 /- என கணக்கிடும் அரசியல் கட்சிகள், மருத்துவ துறை பற்றி கேட்கவே தேவை இல்லை. இன்னும் எத்தனையோ.....

எல்லாவற்றிற்கும் பணமே மூலதனம். தொட்டாதர்கெல்லாம் பணம், பணத்திற்காக வெட்கம் இல்லாமல் ஏமாற்றும் மக்கள் கூட்டம். பணம் கொடுத்தால் கொலை குற்றத்திலிருந்தும் பாதுகாப்பு, பணம் கொடுத்தால் நல்ல மருத்துவம், இப்படி பணமே இவ்வுலகத்தின் ஆதார சக்தி ஆகிவிட்டது. பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம்.

யாரேனும் நியாயம் தர்மம் பேசினால் அவரை வினோத ஜந்துக்கள் போல பார்கிறார்கள். இல்லாத ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுத்தால் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்கிறார்கள். பேசுவதோடு நிறுத்திக்கொள்வது தான் தர்மம் போல. செயலில் காட்டினால் பிழைக்க தெரியாதவன் என்ற பட்டம். இதோ வந்துட்டார் பா காமராஜர் என்று நையாண்டி செய்கின்றனர்.

ஒரு சம்பவம். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் என்னும் ஊரில் கந்து வட்டி கும்பலின் அட்டகாசங்கள் ஏராளம். அப்படி ஒரு குடும்பம் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் பெற்று வட்டி குடுக்க சிரமப்பட்டு உள்ளனர். அந்த வட்டிக்கும்பல் அந்த குடும்பத்தில் இருந்த இளம் பெண்ணை கடத்திக்கொண்டு போய் 4 , 5 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து விட்டார்கள். அதை தட்டி கேட்ட அந்த ஊரின் சி.பி.எம். கட்சி செயலாளர் ஒருவர் போலீசில் சென்று கந்து வட்டி கும்பலை பற்றி புகார் அளித்தார். புகார் செய்த அன்று இரவே அந்த செயலாளரை வெட்டி கொலை செய்துவிட்டார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதி பாடினதை விட கொடுமையான சம்பவம் இது.

110 கோடி இந்தியர்கள் அனைவருமே தலை குனிந்தே செல்கிறோம். அதில் யாரேனும் ஒருவர் தலை நிமிந்தாலும் தலையோடு சேர்த்து அடிக்கிறார்கள். அதையும் மீறி அவன் தலை நிமிர்ந்தால் தலையையே எடுத்து விடுகிறார்கள்.

100 இளைஞர்களை தாருங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். ஆனால் இன்றைய இந்தியாவின் தேவை இளைஞர்கள் அல்ல. ஒரு ஹிட்லர். அதுவும் ப்ரூஸ் லீ யின் உடல்திறனுடன்.