Showing posts with label என்ன கொடுமை சார் இது?. Show all posts
Showing posts with label என்ன கொடுமை சார் இது?. Show all posts

Sunday, February 20, 2011

விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக

* மாற்றுக் காட்சி என கூறிக்கொண்டாலும் திராவிட கட்சிகளின் சுய விளம்பரங்களை,கட்-அவுட் கலாச்சாரங்களில் அவர்களையே விஞ்சப் பார்கிறது தேமுதிக.

*திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.

*கூட்டணி குறித்து மாறி மாறி பேசினார்.மக்களோடு மட்டும் கூட்டணி..,அதன் பின் மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி..(எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டா?) இப்போது தனக்கு முதலமைச்சர்
பதவி தருவோரோடு கூட்டணி.

* ஊழலை திட்டி விட்டு ஊழல் கரை படிந்த அதிமுக வுடன் கூட்டு சேர அண்டர் கிரவுண்டில் பிஸி..

*இலவசம் குறித்து திமுகவை சாடும் விஜயகாந்தின் கூட்டத்தில் இலவச விநியோகங்களுக்கு பஞ்சமில்லை.

*தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன?அது பற்றி அவர் இன்னும் சொல்லவே இல்லை.என் எனில் அது அவருக்கே தெரியாத ஒன்று.

* மேடையிலேயே வைத்து ஒருமையில் திட்டுவது,கை நீட்டி அடிப்பது,வசவு வார்த்தைகளை பயன்படுத்துவது இதுதான் விஜயகாந்தின் முகம்.

விஜயகாந்தின் சேலம் மாநாட்டு ஒளிபரப்பை தெரியாமல் கேப்டன் டிவியில் பார்த்துவிட்டேன்.மனிதர் என்னா நிதானம்...என்னா பேச்சு..அப்பப்பா...எத்தனை பெக் உள்ளே போனதோ...தள்ளாடி தள்ளாடி உளறிக் கொட்டி டாஸ்மாக் பெஞ்சு போல இருந்தது அந்த கூட்டம்.இலவசமாக கறிக்குழம்பு..,நம்மாளுங்க தான் இலவசம் னா அதுவும் சோறுன்னா விடுவாங்களா..?

நின்று ஒரு நிதானமாக பேச தெரியாத இந்த மனிதனும் நாளைக்கு முதல்வராக ஆசைபடுகிறார்.கொள்ளையடித்து செல்ல புது கும்பல்.இளைஞர்கள் இவர்கள் பின்னால் செல்வது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.மாற்றுக் கட்சி என்றால் பொறுப்பற்ற கட்சிகளுக்கு மாற்று ஒரு பொறுப்பான கட்சியாக இருக்க வேண்டுமே தவிர ,பொறுப்பற்ற தன்மையில் போட்டி போடுகிற தன்மை அல்ல.விஜயகாந்தின் கனவு வெறும் கனவாகவே மூடிய வேண்டும் என்பதே அடியேனின் விருப்பமும் வேண்டுதலும்.

Friday, February 4, 2011

அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால்?

ஜெயா டிவியில் இலையாட பூவாட நிகழ்ச்சிக்கு கெமிஸ்ட்ரி புகழ் கலா மாஸ்டரும் நமீதாவும் நடுவராக கலக்கலாம்.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடத்தி நாங்கள்லாம் கலை குடும்பம் என ரஜினியும் கமலும் சோப்பு போடலாம்.கவிப் பேரரசு வைரமுத்து தைரிய லட்சுமி ,தானிய லட்சுமி என கவி பாடலாம்.

அம்மாவின் கதை வசனத்தில் சினேகன் நாயகனாக நடிக்கும் கொடுமைகள் அரங்கேறலாம்.(இலைஞன்?)

ஜெயா பிக்சர்ஸ் ,ஜெ ஜெ மூவீஸ் என்ற பெயர்களில் திரைத்துறைக்குள் கொள்ளை கும்பல்கள் படையெடுக்கலாம்..

ஏதும் விட்டுப் போச்சோ..எவ்வளவோ பாத்துட்டோம்...

Sunday, December 12, 2010

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

நேற்று பாரதியாரின் பிறந்த நாள். தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனை பேருக்கு தெரியும்?.

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள். அதற்கு டிவி , பத்திரிக்கையில் பண்ணுகின்ற அக்கிரமங்கள் தாங்க முடியலை.காலையில் இருந்து டிவி யில் ரஜினி ரஜினி தான். ஆனால் அதற்கு முன்தினம் பாரதியின் பிறந்த தினத்திற்கு ஒரு செய்தியையும் காணவில்லை. அப்படி ஒருவர் இருந்தாரா என கூட கேட்டுவிடுவார்கள் போல .

நடிகர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என மீடியாக்கள் அவர்கள் பின்னாலேயே ஓடுகிறார்கள் என தெரியவில்லை. எல்லாருக்கும் இருக்கும் ரத்தமும் சதையும் தான் அவர்களுக்கும் உள்ளது. அவங்களும் சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கும் உடல்நலமில்லாமல் போகும். மரணம் வரும். என்னத்தை தான் காண்கிறார்கள் அந்த 'சுதந்திர தியாகிகளிடம் '?

நடிகர், நடிகைகளுக்கு இந்த மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

சன் டிவி செய்தி ஒன்று.. தமிழகத்தில் மழை வந்து வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. அவர்களுக்கோ நடிகை பாக்கியலட்சுமி 'காதல் செய்' படத்தின் வில்லன் என்னை கலியாணம் செய் என மிரட்டுகிறார் என்ற புகாரையே திரும்ப திரும்ப முக்கிய செய்தியாக காட்டிகொண்டிருந்தார்கள். நடிகை சரண்யா காணாமல் போய் விட்டார் . இது ஒரு நாள்.

விஜய் டிவி எல்லாதிற்கும் மேல். மன்மத அம்பு இசை வெளியீட்டிற்காக கமலை வரவேற்கிறார்கள். வரவேற்கிறார்கள்... அப்பாப்பா...ஒரே எரிச்சலாக இருந்தது

கன்னியாகுமரியில் வெள்ளத்தை பற்றி சிறப்பு செய்திகளோ, நிகழ்ச்சிகளோ ஒன்றும் இல்லை.

நண்பர் சொன்னார்.. '' எல்லாம் வியாபார நோக்கத்தோடு தான். நாளை ரஜினி இறந்துவிட்டால் அவரையும் மறந்து விடுவார்கள். பாரதியார் வியாபாரம் ஆகமாட்டார். ரஜினி இன்னும் கொஞ்ச நாளைக்கு' என்றார்.

ஆனால் உணர்வு என்பது யாருக்குமே இல்லையா? எல்லாமே இங்கு பணம் தான் !

Wednesday, November 3, 2010

அரசு ஊழியர்கள் அகால மரணம் - ஐயோ பாவம்

சென்ற வார செய்தி

பணி மிகுதியின் காரணமாக அரசு ஊழியர்கள் அகால மரணம் அடைகிறார்கள். மக்கள் நினைப்பது போல அவர்கள் வேலை வெட்டி செய்யாமல் சும்மா எல்லாம் இல்லை.

அரசு ஊழியர் சங்கம் கோவை..

அப்படியா? உங்களின் பணிமிகுதின்னா என்ன? இதுவா?

எந்த கடையில் எந்த வடை டேஸ்டா இருக்கும்

அலுவலகத்தில் மானாவாரி அரட்டை அடிக்கறது

இரட்டை அர்த்தத்தில் அலுவலகத்தில் கும்மாளமடிப்பது

போனா போகுதுன்னு ஒப்பிற்கு சில கையெழுத்து

அப்பாவி மக்களை இஸ்டத்திற்கு அலைக்கழிப்பது

இளிச்சவாயன் யாராவது மாட்டினா தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் வசைமொழிகிறது (கெட்ட வார்த்தை கத்துக்கணும்ன அவங்க கிட்ட போகலாம் )

உள்ளூர் பெண் ஊழியர்கள்னா, நைட்டியோட அலுவலகம் வந்து குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட சொல்றது, (முக்கியமா விஜய் பாட்டுக்கள்)

உன் புருஷன் இவன்தான்றதுக்கு என்ன சாட்சி? குடும்ப அட்டையில் இருப்பது உன் புருஷன் தான்னு எப்படி எங்களுக்கு தெரியும்? என்பது போன்ற கொச்சை கேள்விகள் கேட்பது.

'கமிஷன்' எவன் குடுக்கரானோ அவனுக்கு முதலில் கையெழுத்து போட்டு தங்கள் கடமையில் கண்ணா இருப்பது

தங்கள் குடும்பம் , உறவு, தூரத்து உறவுக்கெல்லாம் வேலை வாங்கி வாங்கி கொடுக்கிறது

இந்த கடமைகளுக்காகவா அகால மரணம் அடையறாங்க..
எங்களுக்கெல்லாம் காது குத்தியாசுப்பா எப்பவோ..

(இக்கட்டுரை மேற்கண்ட 'பணிகளை' செய்பவர்களை மட்டுமே ..! அவர்களை நேரிலேயே பார்த்தால்... நேர்மையான உழியர்கள் இருந்தால், அவர்களை அல்ல.. )

Tuesday, October 5, 2010

எந்திரன் -- பரபரப்பு செய்திகள்


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார், டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலாப்பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, லிபியா, ருமேனியா, உகண்டா, மடகார்ஸ்கர் தீவுகள், ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன் பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன், சந்திரன், யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பீய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம் பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும், உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.






இப்படிக்கு

சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்.

Sunday, May 16, 2010

என்ன கொடுமை சார் இது?

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு தி.மு.கவில் இணைந்தார்.

கருணாநிதி: பெரியார் என்ற படத்தில் குஷ்பு மணியம்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை நன்கு உணர்ந்து வைத்திருப்பதினால் தான் அவரால் அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க முடிந்தது. அந்த வகையில் குஷ்பு பாராட்டுக்கு உரியவர். இதன்மூலம் பெரியாரின் மீதும் திராவிடத்தின் மீதும் (?) அவருக்கு உள்ள பற்று நன்கு தெளிவாகிறது. குஷ்பு தி.மு.கவில் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

குஷ்பு : எனது கொள்கைகளும் (?) தி.மு.கவின் கொள்கைகளும் ஒத்திருக்கின்றன. அதனால் தி.மு.கவில் இணைகிறேன்.

--

குஷ்பு தி.மு.கவில் இணைவது இருக்கட்டும். அவருக்கு அரசியலுக்கு வருவதற்கான தகுதிகள் இருக்கின்றதா.?
அவருடன் ஒரு மினி பேட்டி

கேள்வி 1 : நீங்கள் தமிழ் பெண்ணா?
குஷ்பு: இல்லை. மும்பை.

(ஆஹா , இதுதான் முக்கிய தகுதியே. வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வந்தார் வாழலாம். வாழ்ந்தபின் பொழுது போகலன்னா அரசியலுக்கும் வரலாம். யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. சொந்த மாநில மக்கள் வந்தாதான் இங்கு கேள்விகள் ஆயிரம். வேறு மாநிலத்தவருக்கு அந்த பிரச்சனையே இல்லை. தமிழர் அல்லாதோருக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரஜினியை எவ்வளவோ முயற்சித்தார்கள். அவருக்கு கொடுப்பினை இல்லை. நீங்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டீர்கள்)

கேள்வி 2 : திராவிடம்னா என்னனு தெரியுமா?..
குஷ்பு: திராவிடம்.. whats that ? அது எந்த கடையில விக்கிது

(கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கு பல வருடங்கள் குப்பை கொட்டுபவர்களுக்கே தெரியாத விஷயம். இவருக்கு மட்டும் எப்படி தெரியும். புரியாத ஒன்னை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு விட்டுவிடுங்கள். அரசியலுக்கு வர இது முக்கியமா தெரியாம இருக்கணும். ஆனால் வரும் காலங்களில் திராவிடம் என்ற வார்த்தையை குஷ்பு அதிகம் பயன் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.)

கேள்வி 3 : உங்களுக்கு தமிழ் தெரியுமா?
குஷ்பு: தமிள் ?

(வேண்டாம் வேண்டாம் இதுக்குமேல எந்த தகுதியும் தேவையே இல்லை. ஏற்கனவே நீங்க ஒரு பாராட்டு விழால பேசின தமிழை கேட்டு இதயம் வெடிக்காம இருக்கும் கூட்டம் நாங்க. அந்த கொஞ்சும் தமிழ கேட்டுத்தான் கருணாநிதி உங்கள கட்சியில சேர்த்துட்டார் போல. கோவில் கட்டின கூட்டம், இட்லிக்கு பேர் வச்ச கூட்டம் உங்களுக்கு சி.எம்.சீட் தர மாட்டமா? 2021 இல் நீங்க தான் சி.எம்.)

கேள்வி 4 : பெரியார்ன யாருன்னு தெரியுமா?
குஷ்பு: சத்யராஜ். என்னா பெரியார் படத்தில் அந்த கேரக்டரை அவர் தான் பண்ணார்.

(நோ கமெண்ட்ஸ்)

தமிழர்களே, இதிலிருந்து குஷ்புவுக்கு அரசியலுக்கு வர அனைத்து தகுதிகளும் இருப்பது நன்கு தெளிவாகிறது. தமிழனின் தலையெழுத்து அதுவென்றால் யார் என்ன செய்ய முடியும்.

மற்றொரு காட்சி..
ஈழத்தமிழன்: அய்யா, எங்களுக்கு உதவி பண்ணுங்கயா. ஈழத்துல நாங்க தெனம் தெனம் செத்துட்டு இருக்கம். பெண்டு பிள்ளைகள் சோத்துக்கு வழி இல்லாம கிடக்காங்க. வாழ வழி இல்லாம நிக்கறம்யா. ஏதாவது வழிசெயுங்கய்யா .

கருணாநிதி: யார் நீ?

ஈழத்தமிழன்:ஈழத்தமிழன்யா.. தொப்புள்கொடி உறவுய்யா நாம..

கருணாநிதி: அதான் யாருன்னு கேட்டேன்.
ஏய்யா, குஷ்பூ வந்துட்டு போய் இருக்காங்க. அத பத்தி பேசாம, ஈழம், பட்டினின்னுட்டு. போய்யா.. போய் வேலயப்பாரு. உன்ன யார் உள்ள விட்டது. ஹலோ செக்யூரிட்டி..

தமிழர்களே இன்றைய ஈழத்தமிழனின் நிலை இதுதான்..

ச்சே.ச்சே.. நாம் ஏன் இதை பத்தி எல்லாம் சிந்திக்கிறோம். கூடாது கூடாது.
குஷ்பூ வந்துட்டாங்க. இனி அடுத்த பாராட்டு விழாவுக்கு ரெடி ஆகணும். ராவணன் வேற ரிலீஸ் ஆகுது. செம்மொழி மாநாடு இருக்கு. நமிதாவுக்கு கோவில் கட்ட அடிக்கல் நடக்குது . அதை கவனிக்கணும். ஈழனாவது தமிழனாவது.. போய் வேலைய பாருங்கய்யா..

Thursday, May 13, 2010

நாங்கள் அரசியல் வாதிகள்

நல்ல உள்ளமும் ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!

நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது போல நீங்கள் எங்களுக்கு பதவி கொடுப்பதால் .

நாங்கள் என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம்.

''அறத்தை மற
பொருளை கொடு
இன்பத்தை அனுபவி''

இதுதான் எங்கள் கொள்கை

எங்கள் தலையாய கடமைகளில் முக்கியமானது.. எங்களுக்கு நாங்களே பட்டமும் பாராட்டு விழாவும் நடத்திக்கொள்வது.

அன்று அப்படி இருந்தவன இன்று இப்படி என்று நீங்கள் ஆராய கூடாது.

எதிர் கட்சிகளை கண்ட மேனிக்கு தூற்றுவோம். ஆனால் அடுத்த தேர்தலில் அவர்களை கட்டியணைத்து வாக்கு கேட்போம்.

இதையும் நீங்கள் ஆராய கூடாது.

எல்லாம் உங்கள் நன்மைக்கே. நாங்கள் வெறும் தியாகிகள்.

நாங்கள் வரும் வரும் என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோ ஒரு நுற்றாண்டில் ஏதோ ஒரு தலைமுறையில் வரும். அப்போது நீங்கள் எங்களாலதான் வந்தது என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

ஊழல் ஊழல் என்று கூச்சல் போடுகிறார்களே. எந்த நாட்டில் இல்லை ஊழல். சீனாவில் இல்லையா? ஜப்பானில் இல்லையா? ஊழல் என்பது பாரம்பரியமாக இருந்து வருகின்ற மரபு. நாங்கள் அந்த மரபைகட்டி காக்கிறோம்.

நாங்கள் ஆஸ்திரேலியா அமெரிக்க டூர் போவதையும் தனி விமானங்களில் பயணம் செய்வதையும் நீங்கள் கணக்கு கேட்க கூடாது.

குடும்ப கணக்கு ரகசியங்களை ஆராய்வது அரசியலுக்கு அழகல்ல.

அதே போல் எங்களுக்கு பிடிக்காத ஒன்று திராவிடம் பற்றி கேள்வி கேட்பது.

ஏனெனில் எங்களுக்கே அது என்னவென்று தெரியாது. எங்கள் முன்னோர்கள் சொன்னதை நாங்கள் வழிமொழிகிறோம். அவர்களுக்கே அதுபற்றி தெரியாது என்பது வேறு விஷயம்.

பகுத்தறிவு பேசுவோம். திராவிடம் பேசுவோம். பார்பனியம் எதிர்ப்போம். ஆனால் காலம் மாறும் போது இவற்றுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நடந்துகொள்வோம்.

நமது அரசியல் சட்டம் மிகவும் பரவலானது. ஒரு அரசியல் வாதிக்கோ அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை.

அந்த வகையில் நாங்கள் பாக்கிய சாலிகள்.

இவனுக்கு ஏது இவ்வளவு பணம் என்று நீங்கள் ஆச்சர்யப்படக்கூடாது.

எல்லாம் உங்கள் தயவு.

நதி மூலம் , ரிஷிமூலம், அரசியல்வாதி மூலம் இம்மொன்றும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.

நாங்கள் சேர்க்கும் பணம் பொது மக்களாகிய உங்களுக்கே அல்லாமல் எங்களுக்காக அல்ல.

நிலக்கரியில் இருந்து மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ எங்களுக்கு தினமும் அறிக்கைகள் கிடைத்து விடும்.

குடும்ப அரசியல் நடத்துகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் தியாகிகள். மக்களுக்காக குடும்பத்தோடு உழைக்கிறோம். உழைத்துக்கொண்டே இருப்போம். இதில் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.

சொந்த மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது அதை சகிக்க முடியாமல் A.C., பேன் போட்டு அரைநாள் உண்ணாவிரதம் இருந்த தியாகிகள் நாங்கள்.

நாடாளுமன்றத்தில் எங்கள் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்பதில்லை என்கிறார்கள்.

இங்குதான் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல.

நாங்கள் தமிழை நேசிக்கிறோம். தமிழ் தவிர வேறு மொழிப்பற்று இல்லை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வரைமுறை கிடையாது. அவர்கள் தமிழ் தவிர எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம்

நாங்கள் எங்களையும் நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்கு உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் என்ன விளக்கம் சொன்னாலும் என்றுக் கொள்ளாதீர்கள் . எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.

நீங்கள் மக்குகளாக இருக்கிற வரையில் தான் நாங்கள் பிழைப்பு நடத்த முடியும்.

ஏழை மக்களே! இதயத்தில் கைவைத்து சொல்கிறோம். நாங்கள் உங்கள் தொண்டர்கள்.

நீங்கள் தலையால் இடும் வேலைகளை நாங்கள் காலால் உதைத்து; மன்னிக்கவும். நாக்கு குழறி விட்டது.
நீங்கள் காலால் இடும் வேலைகளை தலையால் உழைக்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

மன்னிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. பாராட்டு விழாவுக்கு போகவேண்டிய முக்கிய காரியத்தினால் இதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆகவே எந்த நேரத்திலும் எங்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அதற்க்கு முன் பார்சல்கள் நாங்கள் ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் அனுப்பி விடுவோம்.

மறவாதீர்கள் நரிக்குட்டி சின்னத்தை!

நரிக்குட்டி ஏழைகளின் பணப்பெட்டி !

வாழ்க நாங்கள் ! வாழ்க நாங்கள் !

இப்படிக்கு

ஜனநாயகம் மறவாத அரசியல்வாதிகள்.