Showing posts with label செம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும். Show all posts
Showing posts with label செம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும். Show all posts

Monday, May 23, 2011

கலைஞரின் கபடநாடகமும் - நீலிக்கண்ணீரும்..!


ஸ்பெக்ட்ரம் வெளிவந்து அதற்கு காரணமாக இருந்த தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்ட போது 'இது திராவிடர்கள் மீது ஆரியர்கள் தொடுத்த போர்' என்றார் கருணாநிதி. பின்பு 'அவர் ஒரு தலித் என்பதால் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

மீண்டும் '1 .76 லட்சம் கோடி ரூபாயை ஊழலை ஒருவராலேயே செய்திருக்க முடியாது. ஒருவரை கைது செய்ததாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.பல நல்ல திட்டங்களை அவர் கொண்டு வந்த காரணத்தால் பொறாமை பிடித்த சிலர் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

சி.பி..கோர்ட் மூலம் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டு சிறையிலும் அடைத்தாகிவிட்டது.அவருக்காக வாதாடின வக்கீல் ராம்ஜெத் மலானி.பிஜேபி யை சேர்ந்தவர்.

ஒரு காலத்தில் பா..வை பற்றி, 'பண்டார பரதேசிகள் எல்லாம் இந்த நாட்டை ஆளத் துடிக்கின்றனர்'என்று கூறியவர் தான் இன்று அதே பண்டார பரதேசிகளில் ஒருவராகிய மூத்த கிரிமினல் வக்கீல் ஒருவரை கனிமொழிக்காக வாதாட வைத்துள்ளனர்.

கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு 'உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் அவள் செய்யாத தவறுக்காக சிறை சென்றால் உங்கள் மனம் எந்த அளவிற்கு வேதனை படுமோ அந்த நிலையில் இருக்கிறேன்' என்கிறார்.

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது ஒரு இருக்கின்றதா? தான் செய்த தவறை காலம் தாழ்த்தி கூட இன்னும் உணராத போது என்னவென்று சொல்வது.

ஒரு சம்பவத்தை மட்டும் நினைத்து பாருங்கள்.ஒரு வயதான முதியவள் , சிகிச்சைக்காக தானே தமிழ்நாட்டிற்கு வந்திறங்கினார்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தன் பதவி,மகன்களின் பதவிக்காகவே அந்த அம்மையாரை மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பியதை நினைத்து பாருங்கள்.நீங்களும் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.அந்த முதியவள் எத்தகைய மன உளைச்சலில் திரும்பி போயிருப்பாள்.அந்த பாவமே உங்களுக்கு சரியான தண்டனைகளை கொடுக்கும்.

இத்தனை ஊழல்கள் என்று கேட்டால் 'முந்தய ஆட்சியில் நடக்காததா?' என்றும்,
மின்சாரம் பற்றி கேட்டால் 'வட மாநிலங்கள் எல்லாம் இருளில் தான் மூழ்கி இருக்கிறது' என்று என்ன சர்வாதிகாரமான பதில்கள்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்த,கொலைகார ராஜபக்ஷேவை கம்பளம் விரித்து வரவேற்ற ஒரு சர்வாதிகார கொடுங்கோலனுக்கு சமம் நீங்கள்.

தன் மகள் சிறை சென்றதற்கு இந்த குதி குதிக்கிறார்.

தேர்தல் முடிவு வந்ததும் ஸ்டாலினிடம் சொன்னாராம் 'கனிமொழிய மட்டும் விட்டுடாதப்பா...' என்று.

அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு என்பார்கள்.

Monday, May 2, 2011

தங்கபாலு காமெடி

‘நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்’ என, சினிமா டயலாக் சொல்வது போல் பேட்டியளித்துள்ளார் தங்கபாலு.தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுவின் காமெடி பேச்சை கேட்ட தமிழக மக்கள் தற்போது தேர்தல் முடிந்தபின் இவருடைய காமெடியை ரசிக்கின்றனர்.

கொல்லைப்புறமாக வந்து எம்.எல்.ஏ.சீட்டை பெற்ற தங்கபாலு , இவ்வளவு வீராவேசமாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.இவ்வளவு செல்வாக்குள்ள இந்த நாயன்மார்கள் ,அறிவாலயத்தை ஏன் வலம்வந்தனர்?அந்தளவு செல்வாக்குள்ளோர் என்ன செய்திருக்க வேண்டும்?

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் சீமான் போன்றோரது தமிழ் அமைப்புகள் ,இவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்த போது இவர் அறிக்கை விட்டிருந்தால் , தமிழகம் எரிந்ததா இல்லையா என தெரிந்திருக்கும்.

மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் போதெல்லாம் அமைதியாக அறிவாலயத்தை வலம் வந்தவர் இப்போது திடீர் ஞானோதயமாக மீனவர்கள் பிரச்சனைக்காக இலங்கை தூதரகத்தை இவர் முற்றுகையிடுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை.பதவியை காப்பாற்ற அவர் போடும் நாடகம் என்பதை அரசியல் அறியாதவர்களும் அறிவர்.

கருணாநிதியுடன் சேர்ந்த தோஷத்தால்,போராட்டம் நடத்துவது,ராஜினாமா நாடகம் அரேங்கேற்றுவது போல்,இவரும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட அதே நேரத்தில் வாசன்,இப்பிரச்சனை குறித்து டில்லியில் சோனியாவை சந்தித்ததே இதற்கு காரணம் .

மீனவர்கள் ஏற்கனவே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தன் சுயநலத்திற்காகவும்,பதவி சுகத்துக்காகவும் மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல் இவர் நீலிக்கண்ணீர் வடிப்பதை மீனவர்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.

மத்தியில் இவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தான் ஆள்கிறது.அவர்கள் நினைத்தால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கலாம் என்றிருக்கும் போது இவர் டில்லி சென்று சோனியா இல்லத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டுமே ஒழிய, இலங்கை தூதரகத்தை அல்ல.

Monday, March 28, 2011

அடிமையாக்கும் 'சினி' நாயகம்

'சுழன்றும் ஏர் பின்னது உலகம் ' என்றார் வள்ளுவர். இன்று எல்லோரும் திரைபடத்துறையின் பின்னே என்பது நிதர்சனம்.வியாபாரம் செய்ய வந்த அயல்நாட்டுக்காரன் நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாக தோன்றிய திரைப்படம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்

திரைப்படத்துறையில் ராமன்,கிருஷ்ணன் வேடமிட்டு வந்தவரை தெய்வமாகவும்,அட்டைக்கத்தி பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும் ஏழை,விவசாயி,உழைப்பாளி என நடித்தவர்களை தங்களில் ஒருவராக ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ அன்றைக்கே நாடு சீரழியத் துவங்கிவிட்டது.

தங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும்,தங்கள் செல்வாக்கையும் புகழையும் பயன்படுத்தி மெல்ல மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்து ஆட்சி பீடத்தை பிடிக்க துவங்கினர்.

விபத்தாக நிகழ்ந்தது விதியாக மாற்றப்பட்டு விட்டது.நாளடைவில் அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை.

அதற்கு பின் நடந்து வருவதெல்லாம்,திரைப்படத்துரையினருக்காக , திரைப்படத்துரையினரைக் கொண்டு திரைப்படத்துறையினரால் நடத்தப்படும் 'சினி நாயகம்'

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல, ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு வகைகளில் திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர்.அவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சிகளிடம் தஞ்சம் அடைகின்றனர்.ஆட்சி மாறினால் இவர்களுக்கு ஆதாயம்.மாறாவிட்டால் வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம்.ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இருப்பது அந்தோ...பொதுமக்கள் தான்.

தமிழ் சமூகம் சினிமாவிற்கு பின்னால் அலைகிறது.நாலு காட்சிகளில் தலையை கலைத்துகொள்பவனுக்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.சினிமாக்காரர்களுக்கும் அந்த உரிமை உண்டு.ஆனால் தராதாரமில்லாமல் அனைவருக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.ஒருகட்டத்தில் அறிஞர்களுக்கே அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறான்.(நன்றி : நாஞ்சில் நாடன்)

யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாக்காரர்கள் வளமுடன் நலமுடன் வாழ ஆவன செய்வர்.அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்.அது போதாதா?விலைவாசி ஏறினால் என்ன?மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் அல்லல் பட்டால் தான் என்ன? திரைப்பத்துரையினருக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே நாடு சுபிட்சம் அடையதோ!

Monday, March 21, 2011

இதுவா ராஜ தந்திரம்..?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு.கொள்கை ,சுய மரியாதை என்பது இடுப்பில் கட்டியுள்ள வேட்டி.மத்தியில் அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்ததன் மூலம்,தன் சுய மரியாதையை நிரூபித்துள்ளார் கருணாநிதி என பெருமிதம் கொப்பளிக்க தி.க தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையின் ஈரம் காயும் முன் முடிவு ஏற்பட்டுள்ளது.

சுய மரியாதையை விட பதவி தான் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கறாராக கேட்ட 63 தொகுதிகளை கொடுத்து மத்திய அமைச்சர் பதவிகளை தக்க வைத்து கீ.வீரமணி முகத்தில் கறியை பூசி...மகிழ்ந்துள்ளார் முதல்வர் ..,தன்மானத் தலைவர்.

'ஸ்பெக்ட்ரம்' எனும் கூர் வாள்,தலைக்கு மேலே தொங்கும் போது, மீசை துடிப்பது போல் நடிக்கலாமே தவிர, உண்மையில் துடிக்கவும் முடியாது..மனம் வெதும்பி வெடிக்கவும் முடியாது.

சர்க்காரியாவில் சிக்கி இந்திராவிடம் தண்டனிட்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சோனியாவிடம் தண்டனிவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால் தூசு அலர்ஜியில் கருணாநிதி தும்மினால் கூட 'அடடா...தலைவர் ராஜ தந்திரத்துடன் தும்முகிறார் ;இந்த தும்மலில் எத்தனை அர்த்தங்கள் உள்ளதோ ..! என வியந்து பாராட்டும் ஒரு கூட்டம் அவர் குட்டி கரணங்கள் ராஜ தந்திரம் என்றே புளங்காகிதமடையும்.

63 தொகுதிகள் கேட்டதும் இது நியாயமா..தர்மமா..? என வெகுண்டெழுந்து ஆனது ஆகட்டும் என்ற முடிவுக்கு வந்து ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றினார்..'கட்சியின் மானத்தை கருணாநிதி காப்பாற்றி விட்டார் என்று தொண்டர்கள் குதூகலித்தனர்.ஆனால் காங்கிரசை கழற்றிவிட்டதால் உலக தமிழர் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விட்டது என்று வீரமணி சொல்வது அப்பட்டமான பொய்..

2009 ம் ஆண்டு பிப்ரவரியில் ஈழத் தமிழர்களை நான்கு திசைகளிலும் சூழ்ந்து எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் ராஜபக்சே தாக்குதல் நடத்திய போது கருணாநிதி இந்த காரியத்தை செய்திருந்தால் உலக தமிழர்கள் உச்சி முகர்ந்திருப்பார்கள்.இப்போது கருணாநிதி 'கா' விட்டிருப்பது கேவலம் 3 எம்.எல்.ஏ.தொகுதிகளுக்காக. மூன்று லட்சம் தமிழர்களுக்காக ஆடாத சதை மூன்று தொகுதிகளுக்காக ஆடுவது இன நலன் கருதி அல்ல என்பதை வீரமணி தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

Wednesday, March 2, 2011

மீனவனே..உனக்கு எப்போது கோபம் வரும்?

நமது தமிழ் எழுத்தாளர் ஒருவர் கேரளா போயிருந்தபோது அங்கிருந்த கேரளக்காரர் நம்மவரை கிண்டல் அடித்திருக்கிறார்.."தமிழ் தமிழ்னு வாய் கிழிய நல்லா பேசத்தான் செய்யறிங்க..ஒண்ணும் செயலில் காணவில்லை.எப்போ பார்த்தாலும் மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்..சுடப்பட்டார்கள்னு செய்திகள் வந்துட்டே இருக்கே ..உங்களுக்கெல்லாம் கோபமே வராதா..?பாக்கற எங்களுக்குதான் எரிச்சலா இருக்கு.."என்று சொல்லியிருக்கிறார்.நம்மவர் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்திருகிறார்.

உண்மை ..

மக்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் மக்களுக்கு தான் வர வேண்டும்.நம் மக்கள் எதைத்தான் கண்டுகொள்கிறார்கள்.நீ கேளு..நான் கேளு என்று தினமும் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை பார்த்து வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அன்றாட செய்திகளில் அதுவும் ஒரு செய்தி.

மீனவனுக்கு ஆபத்து என்றால் மீனவனுக்கு முதலில் கோபம் வரவேண்டும்.ஒரு உருப்படியான ஆர்ப்பட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?சொல்லிக் கொள்ளும்படியான ஆர்ப்பாட்டங்கள் ஏதும் உண்டா?யார் போனால் என்ன அரசுதான் பணம் கொடுக்கிறதே..என தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே போகின்றனர்.ஆயிரத்தெட்டு சங்கங்கள் வைத்துக்கொண்டு மீனவர்களுக்குள் ஒன்றுமை இல்லை.ஆந்திராவில் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் நடந்த கலவரம் போர் காட்சிகளை போல இருந்தது..ஆனால் இங்கே?

இன்று மீனவனை தாக்கும் குண்டுகள் நாளை ஒவ்வொருவர் வீட்டையும் தாக்கினால் தான் விழித்தெழுவோமா?

காஷ்மீரியை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால் இந்தியனை சுட்டுவிட்டான் என்கிறார்கள்.குஜராத்தி மீனவனை கைதுசெய்தால் இந்திய மீனவன் என்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டு மீனவனை மட்டும் சுட்டுக் கொன்றால் தமிழ்நாட்டு மீனவன் என்கிறார்கள்.

எதிரி நாடுபோல் இருக்கிற பாகிஸ்தான் கூட நாம் மீனவர்கள் எல்லை தாண்டினால் சட்டரீதியாகவே நடத்துகிறார்கள்.யாரையும் சுடுவது இல்லை.கொல்வது இல்லை.நம்முடைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் விட்டுவிடுகிறார்கள்.ஆனால் இதுவரை 400 க்கும் மேற்ப்பட்ட மீனவர்களை சுட்டு கொன்றிருக்கிறார்கள்.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாசமாக்கியுள்ளார்கள்.நம் மீனவர்களை படுக்கவைத்து ஐஸ் காட்டி வைப்பது,நிர்வாணமாக நிற்கவைப்பது,கெளுரு மீன் முள்ளால் காதில் ஓட்டை போடுவது என சொல்லவொண்ணாத சித்ரவதைகள் தொடர்கின்றன.இதில் எழுதமுடியாத சில சம்பவங்களும் உள்ளன.

எங்களை ஏன் அடிக்கிறீர்கள் ? நாங்கள் என்ன புலிகளா ? என்றால் தமிழன் எங்கே இருந்தாலும் எங்களுக்கு எதிரி தான் என்று சொல்லி சொல்லியே அடித்திருக்கிறார்கள்

பிரான்ஸ் தேசத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்றபோது இதனால் சீக்கியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் பூட்டாசிங்கை அனுப்பி சொல்லவைக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு கொண்ட மன்மோகன்சிங் தமிழக மீனவர்கள் விஷயத்தில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

என்னால் கடிதம் அனுப்பத்தான் முடியும்.படை எடுத்தா போக முடியும் என்கிறார் முதல்வர்.தன் பிள்ளைகளுக்கு பதவி பெறவும், செம்மொழி மாநாட்டிற்கும் எடுத்த முயற்சிகளை பார்த்த போது இது அவருக்கு பெரிதா என்றே தோன்றுகிறது .

யாராவது கோபமாக பேசிவிட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டதாக சட்டம் பாய்கிறது.உண்மையான உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்தினால் குற்றம்.இந்தியாவின் இறையாண்மை தான் என்ன? சிங்களவர்களையும்,இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பதா? இந்தியர்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Sunday, December 12, 2010

திராவிடமும் ஊழலும்

Pls..அவசியம் படிங்க...

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. . இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ) . இனிமேல் தானும் ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும் இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார். பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம் சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.


15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும் செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.


படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படியாவது காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க தெருத்தெருவாக இனி வருவார்கள் ?
பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில்
ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

---- ஞாநி ----

Tuesday, July 13, 2010

செம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும்



செம்மொழி மாநாட்டில் அரங்கேறிய பல நகைச்சுவைக் கட்சிகளில் சில...


கிளம்பிற்று காண் ஜால்ரா கூட்டம்.

''செம்மொழி தங்கமே!
எங்கள் செல்ல சிங்கமே!
உன்னை கும்பிட்டால்
ஊரையே கும்பிட்ட மாதிரி ''
என ஆரம்பித்து வைத்தார் வைரமுத்து.


"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட ஈரப்பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால் கோபால புர வீட்டை கொடையாக தர முடியுமா? அந்த ஔவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான் '' என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்.

பாடலாசிரியர் விவேகா '' தலைவா, நீ சாக விளக்கு, விதி விலக்கு, அகல் விளக்கு, அகலா விளக்கு. சென்னைக்கு தெற்கே உள்ள திருக்குவளையில் தான் தமிழுக்கு கிழக்கு பிறந்தது'' என கண்டுபிடித்து சொன்னார்.

இதையெல்லாம் பார்த்த வாலி சும்மா விடுவாரா..
''காற்றே கலைஞர் புகழ் பாடி திரி'' என ஆணையிட்டார்.


'' கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்த தமிழ். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை கலைஞர் '' என புகழ் படி பொழிந்தார் பழனி பாரதி.

''82 வயது மறைத்த இளைஞனே,
கலைஞரில் இருக்கிறார் கடவுள்.
108 வடிவில் காப்பது கலைஞர் தானே!''
என தன் பணியை செவ்வனே முடித்தார் பா.விஜய் .


இன்னொரு பாடலாசிரியர் கவிதை
''உலகத்துக்கு ஒரு ஐ.நா.; உலகத் தமிழர்க்கு நீ நைனா''


மற்றொரு பாடலாசிரியர்..
''பெண்கள் என்றால் என் நினைவுக்கு வந்தது பிராந்தி பாட்டில்.
இப்போது நினைவுக்கு வருவது பிரதீபா பாட்டீல்''
(என்ன கொடுமை இது)

கவிஞரே உமது கவிதையின் அர்த்தம் மட்டும் பிரதீபா பாட்டீலுக்கு புரிந்திருந்தால் உம்மை பாட்டிலாலேயே ஒரு போடு போட்டிருப்பார். இதை எல்லாம் கேட்பது நமது தலையெழுத்து.


எல்லாவற்றிற்கும் மேலாக வைரமுத்து சொல்லியிருப்பது தான் மனதை மிகவும் தைக்ககூடியது.

''கலைஞர் காப்பீட்டு
திட்டத்தில்
உழவன் சேர்ந்தான்,
உழைப்பாளி சேர்ந்தான்.
அன்னதாய் சேர்ந்தாள்,
பொன்னுத்தாய் சேர்ந்தாள்.
சேராத ஒரே தாய் தமிழ் தாய் '' என.

தமிழை நலிவடைந்தோர் பட்டியலில் சேர்த்து கலைஞரை சரண்புக சொல்கிறார்.
தமிழ் தாயே உன் தரம் இவ்வளவு தாழ்ந்து விட்டதா. என்ன கொடுமையான வரிகள். இவருடைய கவிதைகளை நானும் ரசித்தேன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் தலைப்புகள் வைத்தால் வரிச் சலுகை என்றும், தமிழ்நாட்டு கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை அறிவிப்பால் தமிழ் வளரும் என்றும் நினைப்பது கேலிக்கூத்து. இத்தனை கண்காணிக்க காவல்துறை தடி எடுத்துக்கொண்டு (தொலைக்காட்சி கேமராக்கள் பின் தொடர) கிளம்புவது அதைவிட பெரிய கேலிக்கூத்து. கவிஞர்களே உங்கள் கவிதைகளை ரசிக்கிறோம். கொண்டாடுகிறோம். இந்த மாதிரி கன்றாவிகளை அல்ல. கலைஞரால் எப்படி இவற்றை காது கொடுத்து கேட்கமுடிகிறது என்று தெரியவில்லை.