Showing posts with label எழுதாத கவிதைகள். Show all posts
Showing posts with label எழுதாத கவிதைகள். Show all posts

Monday, March 28, 2011

அகதியின் மொழி

என் நாக்கு பிளந்து அவை

இருவேறு மொழிகளை பேசுகின்றன

தஞ்சம் புகுந்த ஒரு அகதியின் மொழிகளவை

அதிலொன்று இரந்து கேட்கிறது

ஏழைகளின் உணவு விண்ணப்பத்தைப்

பிழையாகப் படிக்கிறது

அந்நியர்களுடன் சமரசம் செய்ய

வார்த்தைகளை தேடுகிறது

வெட்கித்துப் போகிறது

மறுபக்கம் திரும்பி என்னிடம்

'நீயொரு அகதி' என்கிறது

மற்றொரு நாவு

பொதுவெளியில் ஒளிந்துகொள்கிறது

உயர்த்தமுடியாத குரலுக்காக

மௌனிக்கிறது

வீடும் வெளியும் வேடங்கள்

புனையச் சொல்ல

அது சாத்திய கதவின் பின்னிருந்து

என் அழுகையை விம்முகின்றது.



--ஈழப் பெண் கவிஞர் தர்மினி

Sunday, March 27, 2011

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே.

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்க கூடாதா?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ.

நீங்கள் தாளமுடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா?

விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்

நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வாகள்
நீ வாழ வேண்டும்

நான் வாழ்வதை பார்த்தார்களானால்
யாருக்கு தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்து தொலை.

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

தஸ்லிமாவின் சொந்த வாழ்கையை இந்த கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே !

Wednesday, November 17, 2010

கவிதை கவிதை

மறைந்திருக்கும் உண்மைகள் வாழ்வின் பல துறைகளில் உள்ளன. கவிதையிலும் உண்டு. பிருந்தாவின் இந்த ஹைகூவில் என்ன என்று யோசித்து பாருங்கள் !


''காலடிப் பதிவை
கவிதையாக்கிப் போகும்
கொலுசு சிணுங்கல்."

Sunday, October 3, 2010

தேர்தல் தேசமிது

ஓட்டுப் போட்டு
தேசம் ஆக்கினான்
அந்நியன்..

ஓட்டுப் போட்டு
சேதம் ஆக்கினான்
இந்தியன்..

தேர்தலை சந்தித்தே
தேய்ந்து போன
தேசமிது..

ஒருமுறை ஓட்டுப்போட்டு
ஒரு பக்கம் படுத்தால்

அடுத்த தேர்தல்
வரும் வரை
அசையவே மாட்டான்

திரும்பி படுக்கிறான்
என்றால்
அடுத்த தேர்தல் !

மதம் + மதம் = சம்மதமில்லை

மதத்திற்கு
மதம் பிடித்திருக்கிறது..

மனிதனுக்கு
மதம் பிடித்திருக்கிறது..

மானுடம்
இருவருக்கும்
பிடிக்கவில்லை..!

Monday, September 27, 2010

குங்குமம் வழியில்....

நூலகத்தில் கேட்பாரற்று கிடந்த அருமையான கவிதைகள் படிக்கக்கிடைத்தது..

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..



'' என்
ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும்
இலவச இணைப்பாக
லட்டு ஒன்று தரலாமென
நினைக்கிறேன்
லட்டு ஒன்றுக்கு
புத்தகம் இலவசமெனச்
சொல்லிவிட்டால்
என்ன செய்வது?''

முற்போக்கு

ஒரு முற்போக்கு
இயக்கத்தவர்
மிகுந்த கோபத்துடன்
'விதவை மறுமணம்' பற்றி
அவசரம் அவசரமாகக்
குறும்படம் எடுத்தனர்.

நட்பிருந்தாலும்
தகுதியான விதவைக்கு
தாலிகட்டாத
'சபைப்பேச்சு' மனிதர்கள்.

பொய் கேள்வியும் பொய் பதிலும்

தமிழன் ஒருவன்
ஆர்வமாய் என்
சாதியை கேட்டான்.

'தமிழன்' என்றேன்
நான்.

தமிழன் என்பது
சகலர்க்கும் தெரிந்த மெய்
சாதியை சொல்
என்றான் அவன்

'முதலியார்' என்றதும்
முழு சம்மதமாய் -
ஓராண்டு கழித்து
ஓடிவந்து கேட்டான்
'நீங்கள் வன்னியராமே!'

மனிதர்கள்

இந்து வெறியன்
மசூதியை இடிக்க,

இஸ்லாம் வெறியன்
எதிரி என்று தாக்க,

இடையில் மடிந்தனர்
இவை எதுவும்
தெரியாத
'மனிதர்கள்!'

விலகல்

சாதாரணமானவளாய்
நான் நினைத்துவிடாமல்
இருக்க

நீ
ஒவ்வொரு முறையும்
கால்மணி நேரமாவது
காக்க வைக்கிறாய்!

நீ 'கர்வக்காரியோ'
என்றெண்ணி

நான்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி போகிறேன்!

செவி வழியில்

நானும் கருப்பு
அவனும் கருப்பு

நானும் சைவம்தான்
அவனும் சைவம்தான்

அவனை போலவே
எனக்கும் உறுப்புக்கள்

நான் படித்த பள்ளியில் தான்
அவனும் படித்தான்

தேநீரைக்கூட
அண்ணாந்து குடிக்கும்
அர்த்தமுள்ளவர்கள் நாங்கள்
என்றாலும்

நாங்கள் கேட்டுக் கொண்டால்தான்
தெரிகிறது
எங்கள் சாதி.

உண்மைதான்

''மரணம் விரைவில் வருகிறது
மனம் திரும்புங்கள்''என்றார்
பாதிரியார்

மனம் திரும்பினோம்;

அலையடித்துச் சர்ச்சில்
அழிந்து போனார்கள்
அறுபது பேர்!

கவிதை

புரியக்கூடாது எனச்
சபதமெடுத்து
என் நண்பர்
புதுக்கவிதை எழுதினார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மகிழ்ச்சியோடு சொன்னார்

'எது புரியவில்லையோ
அதுதான் நல்ல கவிதை' என்று.

திருமணதிற்கு முன்..

விரும்புகிறாள் என
உறுதியாகத் தெரிந்தும்

யாருமில்லையென
என் இருவிழிகள்
அறிந்தும்

''தொட்டுத் தொலையகூடாதா'' என
அவள்
உதடுகள் சைகையில் உலறியும்

காவல் காத்து நிற்கிறது
பாழாய்ப் போன
என் 'பண்பாட்டுக் கூச்சம்'

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும்


அன்று
கொலையும் செய்தாள்
பத்தினி

அந்நியன் தொட்டானென்று!

இன்று
கொலைகள் செய்தாள்
பெண்மணி

கணவன் தொடுகிறானென்று !

தீத்துண்டுகள்

மதுக்கடை அதிபர்
திருமண மண்டபம் கட்டினார்

மது அருந்த வேண்டாம் என்ற
அறிவிப்புடன்..

--
நான்கு பூனைகள்
குறுக்கே ஓடியும்

விழிப்புணர்வுடன் நடந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை.

--
ஒரே அனுபவத்தை
ஆயிரம் முறை பட்டும்
திருந்தி
நிமிர்ந்த போது
எனக்கு
வயது முப்பது.

பசி நல்லிணக்கம்


பல கடவுளை
நம்பி
பயனில்லை என
வெம்பி

ஒரே ஏசுவை
நம்பி

தன் பெயரை
மாற்றிக்கொண்டாள் சரஸ்வதி

நேற்று
அப்துல் காதர் தந்த
ஆயிரம் கடனை
அடைப்பதற்காக

முன்னூறு ரூபாய்
அதிகமாய் உள்ள
முனுசாமி கம்பெனியில்
சேர்ந்து

வெள்ளிக்கிழமை தோறும்
திருப்பதி ஆண்டவருக்குத்
தீபம் காட்டும் அவளிடம்

''மத நல்லிணக்கம்
தெரியுமா'' என்றேன்

அது
''பசியை விடவும்
பெரியதா'' என்றாள்.

--ரவிதாசன்.

Monday, August 2, 2010

எழுத்து எப்போது மனதை தைக்கும்..

என்னுடைய மரணம்

என்னிடமே உள்ளது

அதை நான்

உணராவிட்டாலும்

என்னிடம்தான் இருக்கிறது

அதை கண்டு

நான் பயப்படவும்

வேண்டியது இல்லை

ஏற்கனவே வந்து விட்டதை

இனி மேல் வரப்போவதாக எண்ணி

பயப்படுவது முட்டாள் தனம்

அல்லவா?

நான் படித்துகொண்டு இருக்கிற


ஆனால் இன்னமும்

முடிக்காத புத்தகத்தின்

கடைசி பக்கத்தை

போன்றது அது !