Thursday, July 7, 2011

தீராத காதல்



மேகம் சூழ்ந்த ஒரு அதிகாலைப்பொழுது. ரயில் நிலையத்தில் எதேச்சையாக நான் கடந்து சென்ற அவளை திரும்பி பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து நின்றேன். எனது முன்னால் காதல் தேவதை . நம்பமுடியாமல் நான் அவளையே பார்க்க அவளிடத்திலும் அதே பாவனை.

தழைய தழைய சேலை கட்டி, தலை நிறைய பூவுடன் தேவதையாக நின்றிருந்தாள் . “நான் கல்யாணம் ஆனா சேலையே காட்ட மாட்டேன் ..பூ வைக்கிறதெல்லாம் சுத்த பட்டிக்காட்டுதனம் ” என்று என்னிடம் அவள் கட்டளையிட்ட காலங்கள் நினைவில் வந்தன .

பேச வராமல் தடுமாறிய அவளின் அருகில் சென்றேன் .. சரியாக நான்கு வருடங்கள் கழித்து அவளின் கண்களை ஊடுருவி பார்த்தேன் .அதில் தடுமாறி நின்றவளிடம் “எப்படி இருக்கிறாய் என் அருமை காதலி ?” என்றேன் .

அவள் அப்படியே பெரிதாக சிரித்துவிட்டாள். “நீ இன்னும் அப்படியே இருக்க. ” என்றாள் .

“நான் இருக்கேன் அப்படியே தான். நீதான் மாறிவிட்டாய் போல ” என்றேன் அவள் கழுத்தை பார்த்தபடி .

“நாலு வருஷம் ஆயிடுச்சுல்ல ” என்றாள். நான் அந்த கயிற்றை பார்த்ததை அவள் விரும்பவில்லை. நான் அதை சட்டை செய்யவில்லை .

“இப்போதும் நீ என் காதலிதான் ” என்றேன் .

நான் அவள் காது மடல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன் .அதில் இருந்த ஜிமிக்கித் தோடு குறுக்கும் மறுக்கும் ஆட ஆட பேசினாள் . அவளின் பெற்றோரை பற்றியும் தன் கணவன் வீட்டை பற்றியும் கடந்து போன 4 வருடங்களை நான்கு வரிகளில்
அடக்கினாள் .

“என்னை பொண்ணு பார்க்க யாராவது வந்த அடிச்சே துரத்திடுவேன் …” “என்னை ஏமாத்த நினைச்சே … கொன்னுபுடுவேன் ..” என்றெல்லாம் பேசியவளை நினைத்து பார்த்தேன் . இதைல்லாம் சொன்னபோதும் கூட இப்படி தான் தலையை வேகமாக ஆட்டுவாள் . கம்மலும் சேர்ந்து ஆடும் .

“டேய் … என்னாச்சு ” நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை தட்டினாள் . “சொல்லடி என் காதலி ?” என்றேன் . “ஐயோ எருமை மாடு …ஒழுங்கா பேசு .. எனக்கு கல்யாணம் ஆயுடுச்சு ..”

காதலிகள் ஏன் எப்போதும் எருமை மாடு என்றே அழைக்கிறார்கள் . “அது செல்லமாக ” என்றாள் முன்மொருமுறை . எருமை மாடுகள் புண்ணியம் செய்தவை .தேவதைகள் உச்சரிப்பாதலேயே ..

நாங்கள் பரஸ்பரம் பேச்சை முடித்துக்கொண்டு கிளம்ப தயாரானோம் .அலைபேசி எண்களை பெற்றுக்கொண்டோம் .மறக்காமல் அழைக்குமாறு பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம் .
விடைபெற்றேன் .

அடுத்த இரண்டு நாட்களும் நாங்கள் காதலித்த காலங்களே நினைவை ஆக்கிரமித்தன .என்னால் பணி செய்ய முடியாமல் அவளையே நினைதுக்கொண்டிருந்தேன் .என் மனைவி வேறு இடையில் ‘கால் ’ செய்து மனசாட்சியை உலுக்கினாள் . ஒருவேளை அவளுக்கும் ஒரு காதலன் இருந்து இப்படி நினைத்துக்கொண்டுருப்பாளோ ..ச்சே ..ச்சே .. அவள் நல்லவள் .
ஒருமுறை என் தேவதையோடு பூங்காவில் உலாவிக்கொண்டிருந்தேன்.அப்போது என்னை விட அழகான ஒரு இளைஞன் என்னவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"அங்கே பாரேன்.."என்றேன்.

ஆச்சர்யத்தோடு அகலக்கண் விரித்தபடி திரும்பி பார்த்தாள்.

"அவனிடம் கொஞ்சம் போய் பேசிவிட்டு வாயேன்..பாவம் நீண்ட நேரமாக உனக்காக தவம் கிடக்கிறான்"

"ஐயோ.. பேசாம வா.."

"ஹேய்.. போய் டைம் என்னவென்று கேட்டுப் பாரேன்..அவன் அப்படியே இந்திர லோகம் சென்று வந்திடுவான்.."

அவள் சிரித்தாள்.

என் நினைவுகள் தூக்கத்திற்கு உலைவைத்தன. என் அலைபேசியை எடுத்து என் தேவதைக்கு குறுஞ்செய்தி தட்டினேன் . “தேவதையே ..உன் ஜிமிக்கியை எனக்கு பரிசளிப்பாயா ?”

“லூசு .. எதற்காக ”

ஏன் மனைவிகள் கணவனை லூசு என்று திட்டுவதில்லை .இவை காதலிகளுக்காகவே படைக்கப்பட்ட வார்த்தைகள் போலும் .

“உன் நினைவாக வைத்துக்கொள்ள ”

“உன் கவிதை பேச்சை விடவே மாட்டியா ?”

“உடன் பிறந்ததாயிற்றே....”

அதற்கு மேல் அவளிடமிருந்து பதில் வரவில்லை .நானும் தூங்கிப்போனேன் . பயணம் முடித்து ,என் மனம் முழுவதும் என் தேவைதையின் நினைவாக வீட்டிற்கு வந்தேன் .என் மனைவியை பார்த்ததும் என் முகம் இருண்டு போனது .என்னை துளைத்தெடுத்த மனசாட்சியை தூக்கி போட்டுவிட்டு என் தேவதைக்கு சாட் ' request ' அனுப்பினேன் .

காலங்கள் கடந்தது . என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது . தேவதையின் நினைவில் பைத்தியமானேன் . இரவும் பகலும் நாளும் கிழமையும் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தோம் .கல்லூரி காலங்களும் சுற்றியை இடங்களும் ,பேசிய பேச்சுக்களும் மீண்டும் உயிர்த்தெழுந்தன .

“நான் உன்னை சந்திக்கவேண்டும் ” சாட்டில் தட்டினேன்

“எதற்காக ”

எனக்கு பதில் சொல்ல தெரியாமல் அமைதியாக இருந்தேன் .அவளும் பேசாமல் இருந்தாள்.திடீரென்று 'sigout ' செய்து விட்டாள் . நான் தவித்து போனேன் . அலைபேசியில் முயற்சித்தேன் . பதில் இல்லை .

ஒருவாரம் என்னை பழிதீர்த்தாள் . திசை தெரியாத காட்டில் தன்னந்தனியாக சுற்றிகொண்டிருந்தேன் .யாரிடமும் பேசாமல் தனிமையில் அவள் பதிலுக்காக காத்திருந்தேன் . ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது என் அலைபேசி அதிர்ந்தது .விழுந்தடித்துகொண்டு போனேன் .

“சாரி ” என்றாள்

நான் அவளிடம் கத்தினேன் .சண்டையிட்டேன் .ஏதேதோ பேசினேன் . அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள் .

"பேசித்தொலையேன்.." நான் கத்தினேன்..

"இனிமேல் என்னோடு பேசவேண்டாம்.." என்றாள்.கணவனையே காதலிப்பதாக சொன்னாள்.தொந்தரவு தரவேண்டாம் என்று சொல்ல சொல்ல வார்த்தைகள் நடுங்கின அவளுக்கு.அழுதிருப்பாளோ என்னமோ.நான் பதிலேதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தேன்.

என் கனவு உலகம் இருண்டு போனது போல உணர்ந்தேன்.சுக்கு நூறாக உடைந்த இதயத்தை சுமந்து கொண்டிருப்பது வேதனையாக இருந்தது.கடைக்கண்களில் கண்ணீரோடு வீட்டிற்குள் நுழைந்தேன்.
மன அழுத்தம் கொடுமையாக என்னை படுத்தியது .முகம் கழுவி,படுக்க போனேன்.
"யாரு கண்ணு பட்டுதோ.. ஒரு மாசமா ஒரு மாதிரியாவே இருக்கீங்க..சூடம் சுத்தி போடணும்..எந்திரிச்சு வாங்க.."மனைவி அழைத்தாள்

என்னையும் அறியாமல் சிரித்தேன். அவள் அருகில் சென்று.."சொல்லடி சிவசக்தி.."

"என்னது இது?இப்படி பேசறீங்க..?" பாவம் என் கவிமொழியை இவள் அனுபவித்ததே இல்லை.

"என்னை இனிமே எருமை மாடுன்னு கூப்பிடு.என்னை பிடிச்ச பேயெல்லாம் ஓடிடும்.." என்றேன்.

அவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.என்ன இது லூசு என்று நினைத்திருப்பாள் கண்டிப்பாக.