Tuesday, June 21, 2011

இவன் தான் பாலா



விமர்சன வட்டத்தை கடந்து நிற்கும் பாலா இப்போது விமர்சன வட்டத்திற்குள் வந்திருக்கிறார் தனது நிலையை இழக்காமல் தனது தரத்தையும் குறைக்காமல்.

சராசரி இயக்குனர்களிடமிருந்து விலகி நிற்கும் பாலா, சராசரி இயக்குனரை போல தன்னாலும் இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இன்றைய ஒரு சில தமிழ் இயக்குனர்களை தவிர மற்ற அனைத்து இயக்குனர்களும் உலக சினிமாக்களின் DVD களை எடுத்து அதை மிகவும் கேவலமான முறையில் தரும் இயக்குனர்களாக இங்கிருக்க தனது முந்தைய படங்களின் சம்பந்தமே இல்லாமல் எந்த ஒரு கதை கருவையும் திருடாமல் தமிழக மண்ணின் மைந்தனாக இருந்து கொண்டு நமது தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் இந்த பாலாவை இங்கே விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை.


அவன்-இவன் படத்தின் கதையோ கதாபாத்திரங்களோ பெரிய ஆராய்சிக்குட்பட்டவை அல்ல.இது ஒரு பாலாவின் பொழுது போக்கு சித்திரம். உயர்ரக இயக்குனர் பாலாவை விமர்சிப்பதன் மூலம் தன் அதிமேதாவி தனத்தை தானே மெச்சி கொள்ளும் அதிமேதாவிகளே, உங்கள் ரசனையை கொஞ்சம் வளர்த்துக்கொள்ளுங்கள்.


விமர்சனங்கள் என்றுமே வரவேற்கப்பட வேண்டியவை. அந்த விமர்சனத்தை விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்.அப்படிப்பட்ட விமர்சகர்கள் நான் கடவுளை ஏன்
புறக்கணித்தீர்கள்? அப்படி எடுத்தாலும் குறைசொல்லவேண்டும்.கமர்ஷியலாக எடுத்தாலும் கதை இல்லை என்று தங்கள் 'அறிவை' வெளிப்படுத்துபவர்கள் உண்டு.

எந்த கமர்ஷியல் படத்தில் கதை என்று ஒன்றை கண்டுபிடிதிருக்கிறீர்கள்? (இதையே மணிரத்தினம், பாலச்சந்தர், ஷங்கர் எடுத்தால் ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருப்பார்கள்)

பாலா எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களையே படமெடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.இங்கே மேட்டுக்குடி மக்கள் அதிகமில்லை.விளிம்பு நிலை மக்களே அதிகம். சத்ய ஜித்ரே எடுத்த அனைத்து படங்களின் முழு வடிவமும் இந்தியா ஒரு வறுமை நாடு என்பதையே வெளிக்காட்டியிருப்பார்.


கமரிஷியல் படத்தில் என்ன இருக்குமோ அது தானே இந்த படத்திலும் இருக்கிறது.பிறகு ஏன் அவர் படத்தை மட்டும் பிரித்து மேய்கிறார்கள்.இவர் படத்தின் காட்சி ஒவ்வொன்றையும் குறைசொல்லிக்கொண்டிருப்பவர்களை கண்டால் எரிச்சல் தான் வருகிறது.


தமிழ் இலக்கிய உலகம் ஏன் இப்படி அடித்துக்கொண்டு திரிகிறார்கள் என்று இப்போது தெரிகிறது.யாருடைய கருத்தையும் அறிவையும் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..தங்களுக்கு தாங்களே அறிவு ஜீவிகள் என்று மார்தட்டி கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டிருப்பதே வேலையாக கொண்டிருப்பதால்.
பிறகு எப்படி ஒற்றுமை இருக்கும்?


நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள், கௌதம் மேனன் படங்களின் நாயகர்கலையோ அவர் பட வசனங்களை போல தமிழே தெரியாத ஆங்கிலத்தையே உரையாடலாக கொண்டிருக்கும் மக்களையோ அல்ல. ஏன் வெட்டியான்களும், பிச்சைக்காரர்களும், திருடர்களும் மனிதர்கள் கிடையாதா? அவர்களை பற்றி ஆங்கிலத்திலோ,கொரிய மொழியிலோ,இரானிய படங்களோ வந்திருந்தால், ஏன் ஹிந்தி, தெலுங்கில் படமேடுதிருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள் சில அறிவு ஜீவி விமர்சகர்கள்.தமிழில் இப்படி ஒரு படம் உண்டா..?இங்கிருப்பவர்கள் இயக்குநர்களா? என்று தங்கள் மேதாவி தனத்தை வலைப்பூக்களில் பரப்பியிருப்பார்கள்.


ஒரு இயக்குனர் இந்த மாதிரித்தான் படமெடுக்க வேண்டும் என்று கருத்து சொல்ல என்ன இருக்கிறது.எல்லா இயக்குநர்களுமே ஒரே வட்டத்திற்குள் சுத்தி வரும் போது நாலே நாலு படமெடுத்த பாலாவை கண்ட மேனிக்கு விமர்சித்து தள்ளுவது நியாயமல்ல.