Tuesday, August 23, 2011

அமெரிக்காவின் அஅஅ...அஅ+... (USAAA To USAA+)


- BHARATHIRAJA


AAA to AA+? அதென்ன பொருளியலில் ABCD? அதற்குப் பெயர் நாணய நிலைத் தரவரிசை (CREDIT RATING). அப்டின்னா? ஒரு நாடு அல்லது நிறுவனத்தின் நாணயத் தன்மை. அப்டின்னா? வேறொன்றுமில்லை - ஒருவரின் கடனைத் திருப்பிக் கட்டும் ஆற்றல். தனி மனிதர்களுக்கு வித விதமாகக் கடன் அட்டை (CREDIT CARD) கொடுக்கிறார்களே அது போல. டைட்டானியம் அட்டை, பிளாட்டினம் அட்டை, தங்க நிற அட்டை, வெள்ளி நிற அட்டை என்கிறார்களே அப்படி. ஆண்டுக்கு இருபது இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவருக்கு டைட்டானியம் அட்டை. பதினைந்து இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்போருக்கு பிளாட்டினம் அட்டை. பத்து இலட்சத்துக்கு மேல் என்றால் தங்க நிற அட்டை. அதற்கும் கீழ் உள்ளோருக்கு வெள்ளி நிற அட்டை. இதெல்லாம் நமக்கு வங்கிகள் வைத்திருக்கும் தரவரிசை. அது போலவே நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரவரிசை போடச் சில முகமையகங்கள் (AGENCIES) உள்ளன. மூடி'ஸ் (MOODY'S), ஸ்டேண்டர்ட் & பூவர் (S&P), மற்றும் ஃபிட்ச் (FITCH) ஆகியவை அவற்றுள் சில முக்கியமான முகமையகங்கள். AAA, AA+, AA, AA-, A+, A, A- வில் ஆரம்பித்து D வரை நீள்கிறது இந்தத் தர வரிசை. இங்கே '-' என்பது எதிர்மறை என்றில்லை. அந்த எழுத்துக்குழு வரிசையில் அவற்றுக்குக் குறைவான தரம். அவ்வளவே. எனவே, AA- என்பது A+ வை விட மேல்தான். AAA எல்லோருக்கும் மேலானவர். D என்பவர் டிமிக்கிப் பார்ட்டி (DEFAULTER). B மற்றும் C வரிசை கூட அவ்வளவு நல்லவர்கள் இல்லை. இந்த எழுத்துக் குழுக்களின் சேர்ப்பு முறை மட்டும் ஒவ்வொரு முகமையகத்துக்கும் சிற்சிறிது மாறும்.

உலகப் பொருளாதாரம் கண்ட எல்லாச் சரிவுகளையும் மீறி, இந்தத் தர வரிசை போட ஆரம்பித்த நாளில் இருந்து அமெரிக்கா எப்போதுமே AAA வாகவே இருந்திருக்கிறது. மேலே சொன்ன மூவரில் S&P இப்போது அமெரிக்காவை AA+ க்குப் பிடித்துத் தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இப்படியே போனால் பிற்காலத்தில் AA ஆனாலும் ஆகலாம் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறது. மூடி'ஸ் மற்றும் ஃபிட்ச் இருவரும் அந்த வேலையை இன்னும் செய்ய வில்லை. மூடி'ஸ் இன்னமும் அமெரிக்காவைப் பெரிதாகவே பேசுகிறது. ஃபிட்ச் என்கிறவர்கள், "நாங்கள் முழுதாக எங்கள் ஆய்வை முடிக்கவில்லை!" என்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால் அவர்களும் கீழே பிடித்துத் தள்ளலாம் என்பதே. இந்தத் தர வரிசையைக் கொடுத்தபோது, S&P அமெரிக்காவைக் கொஞ்சம் திட்டவும் செய்திருக்கிறது. எப்படி? "உன்னிடம் நிலைப்புத் தன்மை இல்லை, செயலுறுதி இல்லை, உன்னைக் கணிக்கவும் முடியவில்லை!" என்று. நம்ம பேச்சில் சொன்னால், அதை எப்படிச் சொல்லலாம்? "நண்பர்களே... உறவினர்களே... சுற்றத்தாரே... இந்த ஆளை இது வரை நம்பியது போல் நம்பாதீர்கள். இவனிடம் அதிகமாகப் பணத்தைக் கொடுக்காதீர்கள். திரும்ப வாங்க முடியாது. அவர்களிடம் எதுவும் வாங்கினால் சொன்ன விலைக்கே வாங்கி விடாதீர்கள். அவர்களுடைய மதிப்பு அது அல்ல. பாதி விலைக்குக் கேட்டாலும் வழிக்கு வருவார்கள். விபரமாக இருந்து கொள்ளுங்கள்!". அத்தோடு நிறுத்தாமல், கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இதைச் சரி செய்யவும் இவர்களிடம் சரியான திட்டங்கள் இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.

சரி. இது ஏன் இப்படி ஆனது? ஏனென்றால், ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம்மைப் போன்றோருக்கு இது புதிதில்லை. ஆனால் அவர்களுக்கு? கூடவே கூடாது. அவர்கள் உலகப் பணக்காரர்கள். உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்கள்தாம் உலகின் தலைசிறந்த வல்லரசு. அப்புறம் ஏன் ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதி நிலை அறிக்கை? அவர்கள் சக்திக்கு மீறிச் செலவழித்து விட்டார்கள். செலவும் செய்து அழித்தும் விட்டார்கள். எங்கு போய்ச் செலவழித்தார்கள்? போர்களில், ஆயுதங்கள் தயாரிப்பதில், மேலும் பல வேண்டாத வேலைகளில்! அவர்களுடைய போர்கள் வேண்டாத வேலைகளா? தவிர்த்திருக்கவே முடியாதவையா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சரியாகத் தெரியவில்லை. ஆனால், என் இரண்டு செண்ட் அறிவு சொல்கிறது - இராக் போரைத் தவிர்த்திருக்க முடியும் என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்? உடனடியாக மனதுக்கு வருவது இன்னொரு பொருளியல்ச் சரிவு. பொருளியல்ப் பெருவளர்ச்சிகளும் சரிவுகளும் வளர்பிறை தேய்பிறை போல வர ஆரம்பித்து விட்டன இப்போது. ஆனாலும் நிறையப் பேருக்கு சேமிப்பின் மதிப்பு தெரியவில்லை. வளர்ச்சியில் கிளர்ச்சி செய்கிறார்கள். சரிவில் சங்கூதுகிறார்கள். இப்போதைய தேவை - சிந்தனையிலும் செயலிலும் பொருளியல்ப் பழமைவாதம். பொறுமை காக்க வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். ஒன்றுக்குமாகாத வெற்றுத் தாளைக் கூட வேண்டாததா என்று இரண்டு முறை கேட்டுவிட்டுப் போட வேண்டும். பீதி கூடக் கூட இங்கு முதலீடு செய்திருக்கும் மற்ற நாட்டுக் காரர்கள் எல்லோரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலை தப்பினால் போதும் என்று ஓடப் பார்ப்பார்கள். அவர்களிடம் உட்கார்ந்து சரிக்கட்டுவதிலும் சமாதானப் படுத்துவதிலும் ஏகப்பட்ட நேரம் செலவிட வேண்டும்.

அவர்களுடைய சொந்த மக்களுக்கு என்னவாகும்? எதற்காக இருந்தாலும் அவர்கள் கூடுதல் வட்டி கட்ட வேண்டி வரும். கூடுதல் வரி கூடக் கட்ட வேண்டி வரும். சொத்துகளின் விலை அனைத்தும் டொமீர் எனக் கீழே விழும். எப்படி? டொமீர் என! வாங்கிய விலைக்கு வீட்டை விற்க முடியாது. பல மடங்கு குறைவாகும். அதற்கும் வாங்க ஆள் வர மாட்டார்கள். மற்ற நாட்டுப் பண மதிப்போடு பார்த்தால் இவர்களின் டாலர் மதிப்பு குறையும். எனவே, அங்கே உட்கார்ந்து குளு குளு குளிர் பானம் அருந்திக் கொண்டிருக்கும் நம் ஒன்னு விட்ட அண்ணன், தம்பி, மச்சான்மார் சிலருக்கும் அடியில் கொஞ்சம் சுடும். ஆனால், எல்லாத்துக்கும் முடிவாக, அவர்கள் பொருளியலில் பல நல்ல திருத்தங்கள் ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள ஆன்றோர்கள். அந்த முடிவு எப்போது? அது எனக்குத் தெரியவில்லை. அந்த ஆன்றோருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். திவாலாகி விட்டோம் என்று எந்த வங்கியும் அரசாங்கத்திடம் உதவி கேட்டுப் போக முடியாது. ஏன்? அரசாங்கம் கடுப்பாகி விடும். "அடப் பரதேசிப் பயபிள்ள... நானே கால் ரெண்டையும் முதலை வாயில குடுத்துட்டு காப்பாத்த ஆளில்லாம கத்திக்கிட்டு - முக்கிக்கிட்டு இருக்கேன். இதுல நீ வேறயா?" என்று கையில் கிடைத்ததைக் கொண்டு மூஞ்சியில் வீசும்.

இதற்கு ஒபாமா எப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா? "எந்த ஏஜென்சி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள். நாம் எப்போதுமே AAA தான்!". ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சுருக்கம் என்னவென்று மறந்து விட்டது போல அவருக்கு. ஒபாமா சார், நீங்க எப்பவுமே USA, ஆனா AAA இல்ல. இது போன்ற எவ்வளவு பேச்சுகளைக் கேட்டு விட்டோம் நம்ம ஊரில்? இதற்கு மேலெல்லாம் பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே. இது அவர் இரண்டாம் முறை அதிபராகத் தடையாக இருக்குமா? பெரும்பாலும் அப்படித்தான்! அவர் வந்தபோது எவ்வளவு நம்பிக்கை. நோபல் பரிசு கூடக் கொடுத்தார்கள். எல்லாமே வண்ணமயமாக இருந்தது. இன்னைக்கு நிலைமை முழுக்க முழுக்க இருட்டாக ஆனது போல் இருக்கிறது. இப்படியொரு துயர முடிவு நிகழ்ந்திருக்கக் கூடாது பாவம். இது எல்லாமே அவருடைய பிரச்சினையா? இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்தான் பொறுப்பு. அவர்களுடைய மன்மோகன் சிங் ஒருவர் (அதாவது, நல்ல பொருளியலாளர் என்று சொல்ல வந்தேன்!) தலைமை ஏற்க வேண்டும். ஆனால், அவர்களுக்கும் நம்ம பிரச்சினைகள் வந்து சேர்ந்து விடக் கூடாது. :)

இதில் இருந்து மற்ற நாடுகளுக்கு என்ன பாடம் இருக்கிறது? நாடுகளுக்கு மட்டுமல்ல... தனி மனிதர்களுக்கும் ஒரு சூப்பர்ப் பாடம் இருக்கிறது. கட்ட முடியாத அளவு கடன் வாங்காதே. வாழப் புது வீடு, போய்வரப் புதுக் கார், பாதுகாப்புக்கு ஆயுதங்கள், வசதிக்கு வார இறுதி ஷாப்பிங், உல்லாசக் களியாட்டங்கள், பொழுதுபோக்குக்குக் கடன்களை வாங்கிக் குவித்தல்... இவை எல்லாமே கொஞ்ச காலம் பொறுக்கலாம். முடிந்ததை விடக் கூடுதலாகச் செலவு செய்து தொலைத்தால், நாணயமற்றவன் என்றொரு பெயர் - அதுவும் அவப்பெயர் வாங்கி மூலையில் உட்கார வேண்டி வரும். அப்புறம் ஒருத்தரும் உதவ வர மாட்டார்கள். வாழ்ந்து கெட்டவனைப் பார்த்து என்ன பேசுவார்கள்? பாவம் என்பதோடு பாவி என்றும் சொல்வார்கள். வேண்டியதெல்லாம் தேவை என்று சொல்லக் கூடாது. வேண்டியது வேறு. தேவை வேறு. பையிலும் கடன் அட்டையிலும் இருந்து ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் போட்டுச் செலவழிக்காவிட்டால், பையும் இராது; அட்டையும் இராது.

இவை எல்லாமே மிகைப் படுத்தப் பட்ட வரிகளா? இருக்கலாம். முறையான சட்டதிட்டங்களும் சிக்கன நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டால், திரும்பவும் பழைய இடத்தைப் பிடிக்கலாம். ஆனால், அவர்களுடைய அறிவாளர்களே சொல்கிறார்கள் - "முடியும், ஆனா முடியாது!" என்று. அதாவது, இப்போதைக்கு முடியாது. காலம் ஆகும். சிலர் சொல்கிறார்கள் - "AAA கிடைக்க வேண்டுமானால் காலம் ஆகலாம். ஆனால், பீதியையும் உடனடிப் பிரச்சினைகளையும் ஓரளவு பரவாயில்லாமல் சமாளிக்கலாம்!" என்று. எல்லாத்துக்கும் மேல் இது ஒரு மானப் பிரச்சினை என்பதுதான் முக்கியம். மற்றபடி, இன்னும் இவர்களுக்குக் கீழ் நூற்றுக்கும் மேலான நாடுகள் இருக்கின்றன. அதை விட முக்கியம் - அவர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மிடம் கூட சில டிப்ஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நாம் எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள இடுகையின் முடிவுக்குச் செல்லுங்கள். :)

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு? அவர்கள் மேல் நாம் ரெம்பவும் குதிரை ஏறிக் கொண்டிருப்பதால் நமக்கும் கொஞ்சம் பிரச்சினைதான் என்கிறார்கள் சிலர். அதுவும் உண்மைதான். சமீப காலங்களில் நாம் கொஞ்சம் ஓவராகவே அவர்களோடு கொஞ்சிக் குலாவுகின்றோம். மற்ற நாடுகளைப் போலல்லாமல், எவருடைய பொருளியல்ச் சரிவும் நம்மை எதுவும் செய்யாத அளவுக்கு நம் பொருளியல் பலமானது என்றும் சிலர் சொல்கிறார்கள். வழக்கம் போல், குழப்பத்தில்தான் மாட்டிக் கொள்கிறேன் இதிலும்! நமக்குப் புரிகிற மொழியில் விபரமான ஆள் யாராவது கருத்துரையில் இதை விளக்கினால் கோடி நன்றி கொடுப்பேன் - அரசியல்ப் பாரபட்சம் ஏதும் இல்லாமல் பேச வேண்டும். ஆக, இத்தோடு முடிகிறது கதை.

கூடுதல் விபரமாக, இன்னமும் AAA ஆக இருக்கிற ஆட்கள் யாரென்று பார்ப்போமா? யோக்கியர்கள்... மன்னிக்க... நாணயகாரர்கள் (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா?!)... அதில் 16 பேர் இருக்கிறார்கள். ஐஸ்ல் ஆஃப் மேன் (இதற்கு முன் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை!) எனும் சின்னப் பையன் உட்பட. மீதி 15? ஃபிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, UK, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஃபின்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாண்ட்ஸ், மற்றும் நியூசிலாந்து. வெவ்வேறு பட்டியல்கள் வெவ்வேறு பெயர்கள் கொண்டிருக்கின்றன. எனவே, உறுதியாகத் தெரியவில்லை! இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீனா AA-.

சரி, நம்ம எங்க இருக்கோம்? இந்தியா BBB-. நல்ல வேளப்பா! :)

Wednesday, August 17, 2011

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள்...



கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.



திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.



இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:



1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.



2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.



3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.



4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.



5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.



இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.