Monday, March 28, 2011

அகதியின் மொழி

என் நாக்கு பிளந்து அவை

இருவேறு மொழிகளை பேசுகின்றன

தஞ்சம் புகுந்த ஒரு அகதியின் மொழிகளவை

அதிலொன்று இரந்து கேட்கிறது

ஏழைகளின் உணவு விண்ணப்பத்தைப்

பிழையாகப் படிக்கிறது

அந்நியர்களுடன் சமரசம் செய்ய

வார்த்தைகளை தேடுகிறது

வெட்கித்துப் போகிறது

மறுபக்கம் திரும்பி என்னிடம்

'நீயொரு அகதி' என்கிறது

மற்றொரு நாவு

பொதுவெளியில் ஒளிந்துகொள்கிறது

உயர்த்தமுடியாத குரலுக்காக

மௌனிக்கிறது

வீடும் வெளியும் வேடங்கள்

புனையச் சொல்ல

அது சாத்திய கதவின் பின்னிருந்து

என் அழுகையை விம்முகின்றது.



--ஈழப் பெண் கவிஞர் தர்மினி

அடிமையாக்கும் 'சினி' நாயகம்

'சுழன்றும் ஏர் பின்னது உலகம் ' என்றார் வள்ளுவர். இன்று எல்லோரும் திரைபடத்துறையின் பின்னே என்பது நிதர்சனம்.வியாபாரம் செய்ய வந்த அயல்நாட்டுக்காரன் நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாக தோன்றிய திரைப்படம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்

திரைப்படத்துறையில் ராமன்,கிருஷ்ணன் வேடமிட்டு வந்தவரை தெய்வமாகவும்,அட்டைக்கத்தி பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும் ஏழை,விவசாயி,உழைப்பாளி என நடித்தவர்களை தங்களில் ஒருவராக ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ அன்றைக்கே நாடு சீரழியத் துவங்கிவிட்டது.

தங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும்,தங்கள் செல்வாக்கையும் புகழையும் பயன்படுத்தி மெல்ல மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்து ஆட்சி பீடத்தை பிடிக்க துவங்கினர்.

விபத்தாக நிகழ்ந்தது விதியாக மாற்றப்பட்டு விட்டது.நாளடைவில் அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை.

அதற்கு பின் நடந்து வருவதெல்லாம்,திரைப்படத்துரையினருக்காக , திரைப்படத்துரையினரைக் கொண்டு திரைப்படத்துறையினரால் நடத்தப்படும் 'சினி நாயகம்'

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல, ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு வகைகளில் திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர்.அவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சிகளிடம் தஞ்சம் அடைகின்றனர்.ஆட்சி மாறினால் இவர்களுக்கு ஆதாயம்.மாறாவிட்டால் வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம்.ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இருப்பது அந்தோ...பொதுமக்கள் தான்.

தமிழ் சமூகம் சினிமாவிற்கு பின்னால் அலைகிறது.நாலு காட்சிகளில் தலையை கலைத்துகொள்பவனுக்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.சினிமாக்காரர்களுக்கும் அந்த உரிமை உண்டு.ஆனால் தராதாரமில்லாமல் அனைவருக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.ஒருகட்டத்தில் அறிஞர்களுக்கே அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறான்.(நன்றி : நாஞ்சில் நாடன்)

யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாக்காரர்கள் வளமுடன் நலமுடன் வாழ ஆவன செய்வர்.அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்.அது போதாதா?விலைவாசி ஏறினால் என்ன?மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் அல்லல் பட்டால் தான் என்ன? திரைப்பத்துரையினருக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே நாடு சுபிட்சம் அடையதோ!

Sunday, March 27, 2011

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே.

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்க கூடாதா?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ.

நீங்கள் தாளமுடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா?

விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்

நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வாகள்
நீ வாழ வேண்டும்

நான் வாழ்வதை பார்த்தார்களானால்
யாருக்கு தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்து தொலை.

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

தஸ்லிமாவின் சொந்த வாழ்கையை இந்த கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே !

Monday, March 21, 2011

இதுவா ராஜ தந்திரம்..?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு.கொள்கை ,சுய மரியாதை என்பது இடுப்பில் கட்டியுள்ள வேட்டி.மத்தியில் அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்ததன் மூலம்,தன் சுய மரியாதையை நிரூபித்துள்ளார் கருணாநிதி என பெருமிதம் கொப்பளிக்க தி.க தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையின் ஈரம் காயும் முன் முடிவு ஏற்பட்டுள்ளது.

சுய மரியாதையை விட பதவி தான் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கறாராக கேட்ட 63 தொகுதிகளை கொடுத்து மத்திய அமைச்சர் பதவிகளை தக்க வைத்து கீ.வீரமணி முகத்தில் கறியை பூசி...மகிழ்ந்துள்ளார் முதல்வர் ..,தன்மானத் தலைவர்.

'ஸ்பெக்ட்ரம்' எனும் கூர் வாள்,தலைக்கு மேலே தொங்கும் போது, மீசை துடிப்பது போல் நடிக்கலாமே தவிர, உண்மையில் துடிக்கவும் முடியாது..மனம் வெதும்பி வெடிக்கவும் முடியாது.

சர்க்காரியாவில் சிக்கி இந்திராவிடம் தண்டனிட்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சோனியாவிடம் தண்டனிவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால் தூசு அலர்ஜியில் கருணாநிதி தும்மினால் கூட 'அடடா...தலைவர் ராஜ தந்திரத்துடன் தும்முகிறார் ;இந்த தும்மலில் எத்தனை அர்த்தங்கள் உள்ளதோ ..! என வியந்து பாராட்டும் ஒரு கூட்டம் அவர் குட்டி கரணங்கள் ராஜ தந்திரம் என்றே புளங்காகிதமடையும்.

63 தொகுதிகள் கேட்டதும் இது நியாயமா..தர்மமா..? என வெகுண்டெழுந்து ஆனது ஆகட்டும் என்ற முடிவுக்கு வந்து ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றினார்..'கட்சியின் மானத்தை கருணாநிதி காப்பாற்றி விட்டார் என்று தொண்டர்கள் குதூகலித்தனர்.ஆனால் காங்கிரசை கழற்றிவிட்டதால் உலக தமிழர் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விட்டது என்று வீரமணி சொல்வது அப்பட்டமான பொய்..

2009 ம் ஆண்டு பிப்ரவரியில் ஈழத் தமிழர்களை நான்கு திசைகளிலும் சூழ்ந்து எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் ராஜபக்சே தாக்குதல் நடத்திய போது கருணாநிதி இந்த காரியத்தை செய்திருந்தால் உலக தமிழர்கள் உச்சி முகர்ந்திருப்பார்கள்.இப்போது கருணாநிதி 'கா' விட்டிருப்பது கேவலம் 3 எம்.எல்.ஏ.தொகுதிகளுக்காக. மூன்று லட்சம் தமிழர்களுக்காக ஆடாத சதை மூன்று தொகுதிகளுக்காக ஆடுவது இன நலன் கருதி அல்ல என்பதை வீரமணி தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

Thursday, March 10, 2011

மறைந்திருக்கும் உண்மைகள்-சுஜாதா

ரிச்சர்ட் இயர்சன் என்பவர் எழுதிய "Management of Absurd" என்கிற ஆங்கில புத்தகத்தை ரசித்து படித்தேன்.உலகின் பல நிகழ்வுகள் முரண்பாடு உடையவை.அபத்தமானவை.வெளிப்படையாக தெரிவதும் உள்ளே இருப்பதும் வேறு வேறு என்கிறார். அதிகமாக ஒடுக்கப் பட்டவர்களுள்ள சமுகத்துக்கு ஆதரவான எழுச்சித் தலைமையும் எதிர்ப்பு குரல்களும் யாரிடமிருந்து வரவேண்டும்? அந்த சமுகத்தை சேர்ந்தவர்களிடமிருந்து தானே? அப்படியில்லை என்கிறார்.பல உதாரணங்கள் காட்டுகிறார்.அமெரிக்க இனத்துக்கு முதல் ஆதவுக்குரல் 'அபாலிஷனிஷ்டுகள் ' என்று சொல்லப் பட்ட வெள்ளியரிடமிருந்து தான் எழுந்ததாம். அதுபோல, அமெரிக்க பெண் விடுதலைக்கான முதல் குரல் கலோரியா ஸ்டைனம் என்கிற பெண்மணி,நல்ல வசதியும் சுதந்திரமும் உள்ளே ஒடுக்கப் படாத குடும்பத்தை சேர்ந்தவராம்.குழந்தைகள் உரிமைகளுக்காக வாதாடுபவர்கள் பெரியவர்களே! டைவர்ஸ் கேஸ்களில் பிரபலமாக விளங்கும் லாயர்கள் பலர் திருப்தியான மணவாழ்க்கை கொண்டவர்கள். நம் நாட்டிலும் பல உதாரணங்கள் உள்ளன.மூட நம்பிக்கைக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் ஆரம்பத்தில் தீவிரமாக சாமி கும்பிட்டவர்கள்.'தமிழுக்கு உயிரையே தருவேன்' அது மூச்சு,ரத்தம்..என்று சொல்பவர்களை நோண்டி பார்த்தால்,வீட்டில் தெலுங்கு பேசுபவர்களாக இருப்பார்கள்.கன்னடத்தில் மிகப்பெரிய சாகித்ய கர்த்தாக்களான டி.பி.கைலாசம்,மாஸ்தி போன்றவர்கள் தமிழர்கள். சுதந்திர போராட்டத்தை ஊக்குவித காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஒரு வெள்ளையர்--ஏ .ஒ.ஹ்யும்.ஆதரித்தவர் அன்னி பெசன்ட் என்ற மற்றொரு வெள்ளையர்.ரஷ்ய புரட்சிக்கு காரணமாக இருந்த மார்க்சியத்தை கொண்டுவந்த கார்ல் மார்க்ஸ் ஒரு ஜெர்மானியர்.இந்த முரண்பாடுகளை திட்டவட்டமாக ஆராய்ச்சி செய்கிறார்.இவற்றை பற்றி நாம் எப்போதும் பிரக்ஞையுடன் இருக்க வேண்டும்.எந்த திசையிலிருந்து எதிர்ப்போ,புதிய கருத்துக்களோ,எழுச்சியோ,மாறுதலோ,வரும் என்பதை எதிர்பார்க்க முடியாது.அதற்கு தயாராக இருக்க வேண்டும்.பெரும்பாலும் அபத்தமான திசைகளிலிருந்து தான் வரும்.அதை உணர்ந்து மேலாண்மைக்கான மேனேஜ்மென்ட் கருவியாக பயன்படுத்தலாம் என்கிற வசீகரத்தை சொல்கிறார். ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அடிக்கடி திருட்டு போயிற்றாம்.அதை கண்டு பிடிக்க என்னென்னவோ செக்யூரிட்டி வைத்து பார்த்தார்கள்.பிடிக்க முடியவில்லை.பெருத்த நஷ்டம் ஏற்படாவிட்டாலும் பணிபுரிபவர்கள் பயந்தனர்.அதை போக்க,அதன் அதிபர் அபத்தமாக சிந்தித்தார்.ஒரு முன்னால் திருடனையே வேலைக்கு அமர்த்தினார்.அவனுக்கு யார் யார் என்னென்ன எப்போது திருடுவார்கள் அன்பது அத்துப்படியாக இருந்தது.திருட்டு மிகவும் குறைந்தது. Invisible Obivious என்று மற்றொரு கருத்தையும் சொல்கிறார்.கண்ணுக்கு தெரியாத உண்மைகள், உலகின் பல கண்டுபிடிப்புகள் வெளிப்படையாக தெரிந்து வரவில்லை.தொழில் புரட்சியை துவக்கி வைத்த ஜேம்ஸ் வாட்டின் ஒரு உதாரணம்.தன் வீட்டு கெட்டிலில் கொதித்த நீராவி அதன் மூடியை மேலெழச் செய்வதை கவனித்தார்.நீராவி இஞ்சினுக்கான ஐடியா தோன்றியது.இதே நீராவி கெட்டிலை யுகம் யுகமாக பலர் பார்த்து வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு அதனுள் பொதிந்திருந்த சக்தி வெளிப்படையாக தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக பென்சிலினியம் என்கிற காளான், பாக்டீரியா நுண்கிருமிகளை வளர விடாமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சி சாலையின் கண்ணாடி தட்டுக்களில் பார்த்திருக்கிறார்கள்.அது மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை சாவடிக்கிறதா பார்க்கலாம் என்று யாருக்கு தோன்றவில்லை.அலெக்ஸாண்டர் ஃபிளமிங்க்கு மட்டும் தோன்றியிருக்கிறது.விளைவு--ஆண்டிபயாடிக்ஸ்...நோபல் பரிசு. நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனங்களை திறமை படைத்த தொழிலாளர்கள் செய்துவந்தார்கள்.முழுமோட்டாரையும் ஒரு ஆளே அல்லது ஒரு சிறிய குழுவினரே செய்து முடித்தார்கள்.ஹென்றி ஃபோர்டு அதில் இருந்த உண்மையை கண்டுகொண்டார்.அது -ஒரு தொழிலாளிக்கு ஒரு திறமை போதும்.அடுத்த தொழிலாளிக்கு மற்றொரு திறமை,..இப்படி படிப்படியாக வாகனத்தை தயாரிக்கும் 'அசெம்ப்ளி லைன்'முறையாக கொண்டு வந்து குறித்த செலவில் அதிக ஆற்றலுடைய சீரான தரமுள்ள மோட்டார் வாகனங்களை கட்ட முடியும் என்று கண்டுகொண்டார்.அதிலிருந்து நவீன தொழிற்சாலை உருவானது. ஃபோர்டை நூற்றாண்டின் சிறந்த தொழிலதிபர் என்கிறார்கள்.

Wednesday, March 2, 2011

மீனவனே..உனக்கு எப்போது கோபம் வரும்?

நமது தமிழ் எழுத்தாளர் ஒருவர் கேரளா போயிருந்தபோது அங்கிருந்த கேரளக்காரர் நம்மவரை கிண்டல் அடித்திருக்கிறார்.."தமிழ் தமிழ்னு வாய் கிழிய நல்லா பேசத்தான் செய்யறிங்க..ஒண்ணும் செயலில் காணவில்லை.எப்போ பார்த்தாலும் மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்..சுடப்பட்டார்கள்னு செய்திகள் வந்துட்டே இருக்கே ..உங்களுக்கெல்லாம் கோபமே வராதா..?பாக்கற எங்களுக்குதான் எரிச்சலா இருக்கு.."என்று சொல்லியிருக்கிறார்.நம்மவர் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்திருகிறார்.

உண்மை ..

மக்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் மக்களுக்கு தான் வர வேண்டும்.நம் மக்கள் எதைத்தான் கண்டுகொள்கிறார்கள்.நீ கேளு..நான் கேளு என்று தினமும் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை பார்த்து வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அன்றாட செய்திகளில் அதுவும் ஒரு செய்தி.

மீனவனுக்கு ஆபத்து என்றால் மீனவனுக்கு முதலில் கோபம் வரவேண்டும்.ஒரு உருப்படியான ஆர்ப்பட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?சொல்லிக் கொள்ளும்படியான ஆர்ப்பாட்டங்கள் ஏதும் உண்டா?யார் போனால் என்ன அரசுதான் பணம் கொடுக்கிறதே..என தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே போகின்றனர்.ஆயிரத்தெட்டு சங்கங்கள் வைத்துக்கொண்டு மீனவர்களுக்குள் ஒன்றுமை இல்லை.ஆந்திராவில் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் நடந்த கலவரம் போர் காட்சிகளை போல இருந்தது..ஆனால் இங்கே?

இன்று மீனவனை தாக்கும் குண்டுகள் நாளை ஒவ்வொருவர் வீட்டையும் தாக்கினால் தான் விழித்தெழுவோமா?

காஷ்மீரியை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால் இந்தியனை சுட்டுவிட்டான் என்கிறார்கள்.குஜராத்தி மீனவனை கைதுசெய்தால் இந்திய மீனவன் என்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டு மீனவனை மட்டும் சுட்டுக் கொன்றால் தமிழ்நாட்டு மீனவன் என்கிறார்கள்.

எதிரி நாடுபோல் இருக்கிற பாகிஸ்தான் கூட நாம் மீனவர்கள் எல்லை தாண்டினால் சட்டரீதியாகவே நடத்துகிறார்கள்.யாரையும் சுடுவது இல்லை.கொல்வது இல்லை.நம்முடைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் விட்டுவிடுகிறார்கள்.ஆனால் இதுவரை 400 க்கும் மேற்ப்பட்ட மீனவர்களை சுட்டு கொன்றிருக்கிறார்கள்.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாசமாக்கியுள்ளார்கள்.நம் மீனவர்களை படுக்கவைத்து ஐஸ் காட்டி வைப்பது,நிர்வாணமாக நிற்கவைப்பது,கெளுரு மீன் முள்ளால் காதில் ஓட்டை போடுவது என சொல்லவொண்ணாத சித்ரவதைகள் தொடர்கின்றன.இதில் எழுதமுடியாத சில சம்பவங்களும் உள்ளன.

எங்களை ஏன் அடிக்கிறீர்கள் ? நாங்கள் என்ன புலிகளா ? என்றால் தமிழன் எங்கே இருந்தாலும் எங்களுக்கு எதிரி தான் என்று சொல்லி சொல்லியே அடித்திருக்கிறார்கள்

பிரான்ஸ் தேசத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்றபோது இதனால் சீக்கியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் பூட்டாசிங்கை அனுப்பி சொல்லவைக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு கொண்ட மன்மோகன்சிங் தமிழக மீனவர்கள் விஷயத்தில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

என்னால் கடிதம் அனுப்பத்தான் முடியும்.படை எடுத்தா போக முடியும் என்கிறார் முதல்வர்.தன் பிள்ளைகளுக்கு பதவி பெறவும், செம்மொழி மாநாட்டிற்கும் எடுத்த முயற்சிகளை பார்த்த போது இது அவருக்கு பெரிதா என்றே தோன்றுகிறது .

யாராவது கோபமாக பேசிவிட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டதாக சட்டம் பாய்கிறது.உண்மையான உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்தினால் குற்றம்.இந்தியாவின் இறையாண்மை தான் என்ன? சிங்களவர்களையும்,இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பதா? இந்தியர்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.