Friday, January 21, 2011

நல்ல பிசாசு

நான் கணேஷை வழியனுப்ப ரயில்நிலையம் வரை சென்றேன்.மதுரைக்கு பெற்றோரை பார்க்க செல்கிறான்.டிக்கெட்டுகள் வாங்கும் படலம் எல்லாம் முடிந்த பின் இருக்கையில் அமர்ந்தோம்.ரயில் கிளம்ப இன்னும் 15 நிமிடம் இருந்தது.வளவளவென பேசிக்கொண்டே இருந்தான்.

நான் அவனிடம் வரும் போது ஒரு புத்தகத்தை சொல்லிவிட்டேன்.மறக்காமல் வாங்கிவருமாறு.எங்கு தேடியும் கிடைக்காமல் ஏமாற்றியது."மறக்காம கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.சரியா...ப்ராமிஸ்" சிரித்தான்.

"சரி...பாத்து பத்திரமா போ..கால் பண்ணு போனதும்...சரியா.. அப்புறம்...அப்பாவ கேட்டதா சொல்லு...அப்புறம்..". நான் சொல்வதை கேட்டு கடகடவென சிரித்தான்.நான் ஒரு சிறு குழந்தைக்கு புத்திமதி சொல்வது போல சிரத்தையுடன் கூறியது அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது போலும்.நானும் சிரித்தேன்.அவன் எப்போதுமே அப்படிதான்.அழகான முத்து போன்ற பற்கள் அவனுக்கு.அவன் சிரிக்கும் போது நான் அவன் முகத்தையே ஆவலாக பார்த்துக்கொண்டிருப்பேன்.

ரயில் கிளம்பியது.பரஸ்பரம் விடைபெற்றுக்கொண்டோம்.மின்னலைப்போல வேகமெடுத்து வண்டி கிளம்பியது.நானும் அலுவலகம் திரும்பினேன்.இனி இந்த பாழாய்ப்போன டிராப்பிக்கில் மாட்டிகொண்டு போய் சேர ஒருமணி நேரமாவது ஆகும்.எரிச்சலாக வண்டியை கிளம்பினேன்.

வழியெங்கும் எனக்கு கணேஷின் நினைவு.கல்லூரியில் அறிமுகமான என் அருமை நண்பன்.சரியான புத்தக பைத்தியம்.அவன் சக நண்பர்கள் எல்லோரும் கேர்ள் ப்ரெண்ட்ஸ் ,ஸ்பென்சர்,பீச் என்று சுற்றிக்கொண்டு இருக்க அவன் மட்டும் எங்கெங்கோ புக் ஃபேராக தேடி அலைவான்.ஹாஸ்டலில் எங்கள் அறையில் ஒரு மினி லைப்ரரியே வைத்திருப்பான்.இலக்கிய பைத்தியம்.தேடி தேடி வாசித்துவிட்டு அதை அவன் விமர்சிக்கும் முறையே அலாதியானது.அதற்காகவே நான் காத்துகொண்டிருப்பேன்.இவனோடு சேர்ந்து எனக்கு அந்த பைத்தியம் பிடித்ததில் ஆச்சர்யமில்லை.இருவருமாக சேர்ந்து சுற்ற ஆரம்பித்தோம் புத்தகங்களை தேடி..

தனக்கு என்று சில எழுத்தாளர்களை பூஜித்துக் கொண்டிருப்பான்.என் ஆஸ்தான எழுத்தாளர் என்றால் அவர் ஈ ஓட்டுவது கூட இலக்கியம் தான் என்பான்.அதுவுமில்லாமல் அவன் ஒரு குஷி பேர்வழி.எல்லாவற்றையும் மிக சகஜமாக எடுத்துக் கொள்வான்.நான் ஒருமுறை கோபத்தில் அறைந்துவிட்டேன்.பிறகு எனக்கே கஷ்டமாக போய்விட்டது.சாரி கேட்க போனால், 'இந்தாட..' மறுகன்னத்தை காட்டி கலகலவென சிரித்தான்..

நேற்று அவனின் வீட்டிலிருந்து 'குலதெய்வம் கும்பிடனும்..கண்டிப்பா வா..' என போன் வந்ததும் கிளம்பினான்.எப்படியும் ஒருவாரம் ஆகும் என நினைத்தேன்.அத்தன நாள் சந்தோசமா இருக்க விட்டுட மாட்டேன்பா..சீக்கிரமா வந்துடறேன்...

எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு நாட்களை ஓட்டிவிட்டேன்.ஆனால் அவனிடம் இருந்து போனே வரவில்லை.எனக்கு அடங்காத கோபம்.நான் அழைத்தால் அணைக்கப்பட்டிருந்தது.அவன் வந்தால் எப்படியெல்லாம் என் கோபத்தை காட்டலாம் என ஒத்திகைத்து கொண்டிருந்தேன்.

மூன்றாம் நாள் இரவு..இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினேன்.கணேஷின் அழைப்பு ஏதும் வரவில்லை.மனதில் ஏதோ ஒரு பெரிய கவலை அழுத்துவது போல இருக்க...கதவை பூட்டிவிட்டு தூங்க போனேன்.கனவுகள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் போது..

'தடக் தடக் ' என கதவு வேகமாக தட்டம் சத்தம் .சரியாக நடுநிசி.நான் பதற்றத்தில் திறக்காமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருக்க...கதவு உடைந்து விடுவதுபோல ஆடியது.நான் வேகமா சென்று திறக்க,

"டேய்..கணேஷ்"நான் கத்தியே விட்டேன்.என்னடா இந்நேரத்துல".அவன் பேசாமல் உம்மென்று உள்ளே வந்தான்.

நான் கதவை பூட்டிவிட்டு "லக்கேஜெல்லாம் எங்கடா..இது என்ன ..போட்டுபோன சட்டையோட அப்படியே வந்திருக்க..?"

அவன் ஏதேதோ சொன்னான்.வார்த்தைகள் கோர்வையாக இல்லை.ஒருமாதிரியான வாசம் வந்தது.அவன் தரையில் கால்களை மடித்து உட்கார்ந்துகொண்டான்.இந்த செய்கை எனக்கு ஒரே குழப்பமாக ஏதோ போல அவனை பார்த்தேன்.

'இந்தாட'..ஒரு புத்தகத்தை கொடுத்தான்.நான் சொல்லிவிட்ட புத்தகம்..எனக்கு ஒரே மகிழ்ச்சி.'இத வாங்கத்தான் ரொம்ப கஷ்டப் பட்டேன்.' சொல்லிவிட்டு என் முகத்தையே பார்த்தான்.அவன் முகத்தில் உற்சாகமோ..பயணக் களைப்போ...எதுவும் இன்றி நிர்ச்சலனமாக இருந்தது.ஆனால் அந்த வாசனை..வரவர அதிகமாக வந்தது.

நான் கட்டிலில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை பிரித்தேன்.''நீ படிச்சுட்டயா.."

"...இல்ல... "

"என்னடா இது ஒரு வாசம்..."

அவன் நான் சொல்வதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் எங்கோ பார்த்தான். முகம் வெறித்து..தலை தாறுமாறாக கலைந்திருந்தது.பேய்காற்றில் தடதடக்கும் ஜன்னல்களையே வெறித்துக் கொண்டிருந்தது அவன் கண்கள்.

நேரம் பனிரெண்டை தாண்டி கொண்டிருந்தது.அவன் பேசிக்கொண்டே போனான்.அதே சிரிப்பு..அதில் ஜீவனில்லை..கண்களில் ஒளியில்லை.ஒரே இரவில் பேசிமுடிக்கவேண்டும் போல மணிக்கணக்காக பேசினோம் அந்த புத்தகத்தை பற்றி. அவன் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டே கட்டிலில் என் அருகில் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டான்.'ச்சே .. அந்த பாழாய்ப்போன நாற்றம் தாங்கமுடியவில்லை.அது ஏதோ விசித்திரமான வெறுக்கும் வாசனையை இருந்தது.நான் இதனால் விலகி விலகி போனேன்.அவன் மீண்டும் அருகில் அருகில் வந்தான்.அந்த வாசனையை பற்றி கேட்க, பதிலே சொல்லாமல் ஏதேதோ பேசினான்.

இரவு நீண்ட இரவு ...ஜன்னல்கள் அப்படியே நின்றன.பூரண அமைதி.திடீரென்று பேச்சை நிறுத்தினான்.நான் எழுந்தேன்.சிகரெட்டை பற்றி வாயில் வைத்தவாறு அவனை பார்த்துக்கொண்டே கீழே பார்க்க...

அப்படியே உறைந்து போய் நின்றேன்.என் சிகரெட் வாயில் இருந்து அப்படியே நழுவியது.தலைசுற்றியது.இதயத்தை யாரோ பிடித்து கொடூரமாக இழுப்பது போல இருந்தது."கணேஷ்...உன் கா...ல்... கா...ல் ..." எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

கணேஷின் முகம் மாறியது.என்னை விழுங்கிவிடுவது போல பார்த்தான்.'ஐயோ..என்ன பார்வை இது'

என் அருகில் வந்தான்.

"மனோ...புத்தக ஆசை.... புத்தகம் வாங்கிக் கொண்டு ஓடி வந்து நகரும் ரயிலில் தாவி ஏறியதில் தவறி விழுந்து இறந்து போனேன்....வா... என் அருகில் வா..."

கணேஷ் என்னை இறுக்கி அணைத்தான்.நானும் பிசாசாக அவனுடன் இணைந்தேன்.

Wednesday, January 19, 2011

மூட நம்பிக்கை

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கிற நம்பிக்கையே 'மூட நம்பிக்கை' என்று சொல்கிற பகுத்தறிவாளர்கள் உண்டு.

அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம்முடைய நம்பிக்கை மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

நான் சொல்கிறேன் நம்பிக்கையில் மூட நம்பிக்கை,குருட்டு நம்பிக்கை,கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.

சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே மூடத்தனம்.அதில் தனியாக ஏது மூடத்தனம்?

நாட்டு மக்கள் எல்லோரையும் நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார்.அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?

திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அந்த காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.அதன் கதி என்ன?

தனுஷ்கோடி எக்ஸ்ப்ரஸில் போனவர்கள் ஊர் போய் சேரலாம் என்ற நம்பிக்கையில் தான் போனார்கள்.

அந்த நம்பிக்கை மூடத்தனம் என்பதை அரியலூர் நிரூபித்தது

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது.அப்படி நடக்காமலும் போய் விடலாம்.அப்போது அது மூடதனமாகி விடுகிறது

மகன் கல்லூரிக்கு போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான்.அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.

இவர் நமது ஒழுங்கான பிரதிநிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு வோட்டளிக்கிறார்கள்.அவர் எப்படிஎப்படியோ மாறிவிடுகிறார்.

ஆண்டவனை நம்புவதிலும் இதே நிலைதான்

அது தோல்வியுற்றால் மூடத்தனம்.வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்

ஆகவே நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி!

இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது?

ஆனால் நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே பயன்படுத்துகின்றனர் ?

அதிலே மனதுக்கு ஒரு சாந்தி!

தெய்வ நம்பிக்கை நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது.

விஞ்ஞான நம்பிக்கை போல ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவது தான் தெய்வ நம்பிக்கை

ஒரு சூத்திர தாரியின் கை பொம்மைகள் நாம் என்பது மறக்க முடியாதது

மரணம் என்ற ஒன்று அதை தினசரி வலியுறுத்துகிறது.

இவ்வளவுக்கும் பிறகும் தெய்வ நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால் நான் ஒரு மூடன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை படுகிறேன்.

முட்டாள் தனத்திலே இருக்கிற நிம்மதி,கெட்டிக்காரதனதிலே இல்லை,

உடம்பில் எல்லா நோயும் இருந்தும் ஒன்றுமே இல்லை என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான்.

ஒரு நோயும் இல்லாமல் ஒவ்வொரு மயிர்காலையும் பார்த்து இது அதுவாக இருக்குமோ?இதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி நித்திய நோயாளியாகவே சாகிறான்.

பாம்பு நஞ்சு நிறைந்தது.வேங்கை பயரமானது.யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?

ஆனால் அவற்றை ஆட்டி வைக்கிற திறமை சில மனிதகளிடம் இருக்கிறது.

உங்களாலும் எந்நாளும் முடியுமா? அந்த வாய்ப்பு சிலருக்கே அமைகிறது.

அதனால் தான் வாய்ப்பு இறைவன் அளிப்பது என்றேன்.அதை முறையாக பிடித்துகொண்டு முன்னேறுவதை அதிர்ஷ்டம் என்கிறேன்.

ஹிட்லருக்கு கிடைத்த வாய்ப்பு ஆணவத்தால் அழிந்தது.

சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு திறமையினால் வளர்ந்தது .

வாய்ப்பை தவறவிடுபவனே துரதிர்ஷ்டசாலி.

அந்த வாய்ப்பு எல்லோருக்கும் எப்போது வரும்?

அது முன்கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்!


--கண்ணதாசன்.

Tuesday, January 18, 2011

குருட்டு வெளிச்சம்

அந்த ரயில்நிலையம் தான் அந்த கிழவிக்கு இருப்பிடம்.அங்கிருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் பெட்டிக்கடைக்காரர்களுக்கும் மொண்டிக் கிழவி.காது கேட்காது.கண்ணும் மங்கல் தான். கைகளை ஊன்றி ஊர்ந்து ஊர்ந்து தான் செல்வாள்.நடக்க முடியாத கால்களை வைத்துகொண்டு வேறு என்ன செய்யமுடியும்..

ஒரு சிறு துணி மூட்டை மாதிரி ஏதோ ஒன்றை வைத்திருப்பாள்.அது தான் அவள் சொத்து.வயது ஒரு தொண்ணூறு போல இருக்கும்.தோல்கள் சுருங்கி..அங்கங்கே தொங்கிக் கொண்டு இருக்கும்.ஒரு நூல்துணியை புடவை போல சுற்றியிருப்பாள்.வேறு மேலாடை ஏதும் கிடையாது. கிழவியின் கைகள் எப்போதும் கிடு..கிடுவென நடுங்கிக்கொண்டே தான் இருக்கும். அந்த பொக்கைவாய் தாடையும் கூடத்தான். அவள் அந்த ரயில்நிலைய பிளாட்பாரத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு போகவே அன்றைய நாள் முடிந்துவிடும்.

தினமும் ரயிலை விட்டு இறங்கி போவோரிடமும்,வருவோரிடமும் தன் நடுங்கும் கைகளை தூக்கி கொண்டு , ஆடும் போக்கை வாயை திறந்து ஏதோ கேட்பாள். புரிந்து கொள்ள முடியாத உளறலாகத் தான் இருக்கும். அதற்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி ஒரு வழியாகிவிடும் அந்த கிழவிக்கு . பிச்சை கேட்பாள். இரக்கமுள்ள மகராசன்கள் போடும் சில சில்லறை காசுதான் கிழவிக்கு தின வரும்படி.அதை கொண்டு ஒரு வேளை ஏதாவதொன்றை உண்டு..இரண்டு வேளை பட்டினி கிடப்பாள். ஒரு சில நாட்களுக்கு வரும்படி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.ஆனாலும் கிழவி அதே ஒரு வேளை விரதம் தான்.மீதி சில்லறையை முடிந்து வைத்துகொள்வாள். இப்படியே பழகிப்போய்விட்டது கிழவிக்கு. என்றாவது ஒரு நாள் ஒன்றும் விழாமல் கூட போய்விடும்.அதற்கு முந்தைய சேமிப்பு உதவும்.

ஆனாலும் இப்போதெல்லாம் கிழவிக்கு அதிக வரும்படி வருவதில்லை. ரொம்ப ரொம்ப கிழமாக இருப்பதால் பார்ப்பவர்கள் முகத்தில் மிக அதிகமான இருக்க சுபாவத்தை காட்டி கொண்டு வெறும் 'உச்சு' கொட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.சிலரோ,''சீ..சீ.. என்ன இது கன்றாவி '' என திட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். காசு ஏதும் போடுவதில்லை. அப்படிப்பட்ட நாட்கள் இந்த சேமிப்பை செலவளிப்பதற்காகவே நடக்கும்.

கிழவிக்கு அப்படியொன்றும் பிரமாதமான நியாபக சக்தி இல்லை. எத்தனை நாளாக இங்கே இருக்கிறோம் என்று ஒன்றும் தெரியாது. இரவானால் பிளாட்பாரத்தின் ஒரு மூலையிலோ மூட்டைகளுக்கு இடையிலோ சென்று புகுந்து கொள்வாள். சிலநேரங்களில் யாருக்கும் கேட்காத அழுகை சத்தம் கேட்கும். திடீரென்று பழைய நினைவுகள் ஏதும் தோன்றினால் இப்படிதான்.ஒன்று மட்டும் கிழவிக்கு நன்றாக நினைவிருந்தது.

என்றோ ஒரு நாள் தன் மூத்த மகன் இந்த ரயில்நிலையத்திற்கு அழைத்து வந்து,"இங்கேயே இரு..நான் போய் டீ வாங்கியாறேன்.." என்று சொல்லிவிட்டு போனவன்தான். வரவே இல்லை.வந்த வேலை முடிந்த பின் அவன் ஏன் வரப் போகிறான்.அதை நினைத்து கிழவி அழுவாள்.தரை தாரையாக கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்.மூன்று ஆண் பிள்ளைகளை பெற்றும் கஞ்சி ஊற்ற ஆளில்லையே..

அவள் கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளை சேலை உடுத்தி,பிச்சைக்காரியுமாக்கி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. தனியாளாக நின்று எத்தனையோ துன்பங்களை அனுபவித்து பிள்ளைகளை வளர்த்ததற்கு நல்ல பலனை இறைவன் தனக்கு அளித்துவிட்டதாக குமுறி கொண்டிருப்பாள்.திடீரென்று அவளின் சிந்தனை மாறும் . யார்யாரையோ திட்டிக் கொண்டே அவர்களின் ஏழேழு தலைமுறைகளும் என்னென்ன வியாதி வந்து சாக வேண்டும் என்று லிஸ்ட் தயாரித்து கொண்டு தூங்கி கிடப்பாள்.

காலம் எதைப் பற்றியும் கவலை இல்லை .எல்லா நாளும் ஒரே நாளாக இருப்பதில்லை.ஒரு நாள் என்ன நேர்ந்ததோ அந்த ரயில்நிலையத்தில் மருந்துக்கும் ஆட்களை காணவில்லை.யாரும் பிச்சையும் போடவில்லை.என்னவோ ஏதோவென்று கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று சேமிப்பை செலவழித்தாள்.

மறுநாளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து பேர்தான்.ரயில்களும் ஓடவில்லை.ஏதும் போராட்டமாக கூட இருந்திருக்கும்.ஆனால் கிழவியின் பாடு யாருக்கு தெரியும்.சேமிப்பு காசு தீர்ந்துவிட்டது.இன்று என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருந்தாள்.

காசு இருக்கும் போது இருந்த அதே வயிறுதானே இல்லாத போதும் இருக்கிறது.

கிழவிக்கு பசிக்க ஆரம்பித்து விட்டது.மூச்சு விட வெகு சிரமப்பட்டாள். காலை போய் மதியம் வந்தது.பசி அகோரப் பசியானது. வயிற்றில் கையை வைத்து முனகிக் கொண்டே கிடந்தாள். தாங்க முடியாத பசி கண்களில் தாரை தாரையாக கண்ணீராக வந்தது. கண்டுகொள்வார் யாருமில்லை.அல்லது அவர்கள் கண்களில் கிழவி படாமல் போயிருக்கலாம். ஆனால் வயிற்றிற்கு சோறு வேண்டும் இப்போது.அதற்கு வழியேது?அவளால் கத்த முடியவும் இல்லை.தலைகிறுகிறுத்தது. கண்களை மூடினாள்.அப்படி தரையில் கிடந்தாள்.பேச்சு மூச்சில்லை.

மாலை வந்தது.இருந்த நாலைந்து பேரும் மறைய ஆரம்பித்தனர். பெட்டிக்கடை மூடப்பட்டன.கிழவிக்கு லேசாக உணர்வு வந்தது. கண்களை திறந்தாள் .பசி கொஞ்சம் அடங்கியது போல தெரிந்தது.ஆனால் கைகால்களை அசைக்க முடியவில்லை.கிழவிக்கு கொஞ்ச தூரத்தில் கேண்டீன் தெரிய அதை நோக்கி மெல்ல ஊர்ந்தாள்.நகர்ந்துகொண்டே இருந்தாள். அவளின் பிரம்ம பிரையதனம் கேன்ட்டினை அடைய உதவவில்லை.பத்தடி கூட போயிருப்பாளோ மீண்டும் பசி.மயக்கம் வர சரிந்தாள்.இனிய இரவு அந்த ரயில்நிலையத்தை ஆரத்தழுவியது.

மறுநாள் காலை ஆள்நடமாட்டம்.சூரியன் சுட்டெரிக்க கண்திறந்தாள் கிழவி.கைகள் லேசாக அசைய நடக்கும் பயணிகளுக்கு தொந்தரவாக நாடு பிளாட்பாரத்தில் கிடந்தாள்.பசிவிட்டபாடில்லை.சன நடமாட்டத்தை உணர்ந்ததும் மிகவும் பிரையதனப் பட்டு கைகளை நீட்டினாள். விதவிதமான செப்பல்களும்,சேலைகளும்,வெள்ளை வேட்டிகளும் கிழவியின் முகத்தை தடவி போயின.கிழவிக்கு ஒரு நினைவும் இல்லை.பசியற வேண்டும்.ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்தாள்.கதறினாள்.வாயில் காற்று மட்டுமே வர கண்களில் கண்ணீர்.இன்று தன் பசி ஆறும் என்று கிழவி நம்பினாள்.

ஆனால் சனங்கள் எல்லோரும் பரபரப்பாகவே இருந்தனர்.அவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு தலை போகிற வேலை இருந்தது.அவரவர் தங்கள் மனதிற்குள் செய்ய வேண்டிய காரியங்களையோ,செய்த நினைவுகளையோ சுமந்துகொண்டோ,அலைபேசிகளில் கதைத்துக் கொண்டோ இப்படி பலவித பணிகளில் மூழ்கி இருந்தனர்.தவிர அவரவர்க்கு அவரவர் பாடு. அவரவர்க்கு வேறு வேலை கிடையாதா என்ன? என்பது கேவலம் இந்த கிழவிக்கு புரியவில்லை. ஒவ்வொரு முகமும் கிழவியை கண்டும் காணாமலும்,முறைத்துக் கொண்டுமே சென்றனர்.கேவலம் ஒரு சோற்று பொட்டலத்தையோ தண்ணீர் பாட்டிலையோ வீசிவிட்டு போக கூட அந்த தனவான்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கும் போல.

மீண்டும் பசி.கோரப் பசி.எதை தின்று இந்த பிசாசை விரட்டுவது.உள்ளிருக்கும் ஒவ்வொரு உறுப்பும் கரைவது போல உணர்ந்தாள். கிழவியால் முடியவில்லை.ஆளே அடையாளம் தெரியாத படி செத்துப் போனாள்.பிறகு செய்தி கேள்விப்பட்டு அங்கிருக்கும் சிலர் வந்து பார்த்தனர்.

"மூணு நாளா அன்னந்தண்ணி ஆகாரமில்லாம கேள்வி பெனாத்திகிட்டு கெடந்திருக்கா.ஒரு பிடி சோறு குடுக்க நாதியில்ல.பட்டினிதான் கெழவிய கொன்னுபுடிச்சி.சொந்தக் காரன்,அண்ணன்தம்பியோ யாருமில்ல.நாமதான் பொணத்த எடுத்து பொதைக்கணும்." அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

அடுத்த சிலமணிகளில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்தன.அதில் ஒருவன் என்ன நினைத்தானோ.."போகிற உசுரு ஆசா பாசத்தோடு போகக் கூடாது.மூணு நாளா கெழவி சோறு மேலயே ஏக்கம் புடிச்சி செத்திருக்கா." என்று சொல்ல எல்லோரும் ஆமோதித்தனர்.

சிறிது நேரத்தில் பிணத்தின் இரண்டு கைகளிலும் சோற்றையும் கொஞ்சம் கறியையும் வைத்து புதைத்தனர்.


Sunday, January 9, 2011

ரஜினி ஒரு முதலீடில்லாத வியாபாரி !

Gbuzz இல் ரசித்த அருமையான விவாதம்... இது.

--
Dhinesh Kumar (முகிலன்) :
கமல் ரசிகர்களுக்கும் ஜெ.மோ வாசகர்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது.

இரண்டு பிரிவினருமே தாங்கள் பெரிய அறிவு ஜீவிகள் என்று (அவர்கள் ஆதர்ச ஹீரோ/எழுத்தாளரைப் போலவே) நினைத்துக் கொள்கிறார்கள். படத்தில்/எழுத்தில் ஒன்றும் புரியவில்லை என்றாலும் புரிகிற மாதிரியே நடிக்கிறார்கள்.

Delta Nathan(அது சரி) - ரஜினி ரசிகர்களுக்கும் டென்டுல்கர் ரசிகர்களுக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது. சப்பை மேட்டருக்கெல்லாம் ஆஹா ஓஹோ அய்யகோ என்பார்கள்.

Vasu Balaji - நினைச்சேன். சட்டத்த கூப்புடுவோமான்னு. :))


Sanjai Gandhi - அதுசரி, நீங்க வேற.. ரஜினி ரசிகர்கள் எப்போவும் ஒண்ணுமே இல்லாததை தான் பெரிசா பேசுவாங்க.. ரஜினி மாதிரி..6

குடுகுடுப்பை kudukuduppai - Rajni eppa பேசினார்?

Dhinesh Kumar (முகிலன்) - #உலக நாயகனே# - எல்லாமே இருக்குது பாருங்க?

aravind அரவிந்த் - பொறாமையில் பொங்கி யாருக்குமே புரியாம பதில் சொல்ற நேர்த்தி கமலுக்குத்தான் உண்டு :-))))

Sanjai Gandhi - குகு.. ரொம்ப அவசரப் படறிங்க.. பெரிசா பேசுவாங்க என்பதற்கு முன்னாடி இருக்கிறதைப் படிங்க.. ஒன்னுமே இருக்காது :)

Sanjai Gandhi - ரஜினி மாதிரி பதில் சொல்ல பயந்துட்டு இமய மலைக்கு எஸ் ஆகறத விட ரெண்டுல ஒன்னு பாக்கறது பெட்டர் இல்லையா?

Dhinesh Kumar (முகிலன்) - பதில் சொல்ல பயந்துட்டுனு எப்பிடி சொல்லலாம். சில விவாதங்கள்ல நீங்க கூட தான் இதுக்கு மேல இதைப் பத்தி பேச விரும்பலைன்னு விலகறீங்க. அப்போ நீங்களும் விவாதிக்கப் பயந்துட்டீங்கன்னு சொல்லலாமா?


Sanjai Gandhi - இதுக்கு மேலப் பேச விரும்பலைன்னு சொல்றதும் பேசவே விரும்பலைனு சொல்றதும் ஒன்னா? இதான் ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம்.. :)

Dhinesh Kumar (முகிலன்) - ரெண்டும் ஒன்னுதான். பேசறேங்கிற பேர்ல என்னத்தையோ உளர்றதுக்குப் பேசாமலே இருக்கிறது நலம்.

Delta Nathan(அது சரி) - அன்புமணி வீட்டுக்கு போயி கண்ணாலத்துக்கு மறக்காம வந்துடுங்கன்னு கெஞ்சின ரஜினி, ரசிகனை மட்டும் மற்ந்தும் இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு சொல்றாரு. இது தான் ரஜினி.

Sanjai Gandhi - அன்புமணி விஐபி.. ரசிகர்கள் அப்டியா?

Tharasu mullu - I am rajini Fan - Kamal is waste

Sanjai Gandhi - ஆனால் அன்புமணி அண்ட் கோ அடிக்க வரும் போதெல்லாம் காப்பாற்ற மட்டும் ரசிகன் வேணும்..

Dhinesh Kumar (முகிலன்) - நிரந்தரமா எதிரிகள்னு யாரையாவது வச்சிக்கிட்டே இருக்க வேண்டாம்ங்கிறது முதல் மேட்டர். பொதுமக்களுக்கு இடையூறு வரவேண்டாம்ங்கிற நல்ல எண்ணம் இரண்டாவது மேட்டர். இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியலை.

Sanjai Gandhi - அப்டிலாம் இல்ல.. ரசிகர்கள் வந்தா விஐபிக்கள் கோச்சிப்பாங்க.. தியேட்டர்ல விசிலடிக்கவும் டிக்கெட் வாங்கி தன்னைப் பணக்காரன் ஆக்கவும் தான் ரசிகர்கள் வேணும்.. அன்புமணி, திருமாவளவனை மதிக்கலைனா படம் ஓட விடமாட்டாங்க.. அந்த பயம்..


Dhinesh Kumar (முகிலன்) - இது நீங்களா கற்பனை செஞ்சிக்கிறது. இதுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

குடுகுடுப்பை kudukuduppai - ரஜினி என்ற மனிதர், முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிக்கத் தெரிந்த ஒரு வியாபாரி. பால்குடம் எடுப்பவன் பாசத்தில் செய்கிறான் என்று சொல்பவர் . அதே ரசிகனை மேலும் பால் குடம் அலகு குத்தச்சொல்லும் செயல்.

Sanjai Gandhi - இதான் ரஜினி ரசிகர்.. :)

குடுகுடுப்பை kudukuduppai - ஒரு கமல் ரசிகன் கமலை விமர்சிப்பான். எகா சுரேஷ் கண்ணன், ரஜினி ரசிகன் பால் குடம் எடுப்பான் படம் பார்க்காமலே.

Dhinesh Kumar (முகிலன்) - குடுகுடு - ரசிகன் எவனும் பாசத்தில் பால்குடம் எடுப்பதில்லை. விநியோகஸ்தர்கள் தங்கள் செலவில் செய்யும் ஸ்டண்ட்தான் அது.


குடுகுடுப்பை kudukuduppai - குடுகுடு - ரசிகன் எவனும் பாசத்தில் பால்குடம் எடுப்பதில்லை. விநியோகஸ்தர்கள் தங்கள் செலவில் செய்யும் ஸ்டண்ட்தான் அது.//

ரஜினி அதுல ஒருத்தரா? ரஜினி பாசத்துல செய்யுறாங்க சன் டிவில செப்புனதா ஞாபகம்.


Sanjai Gandhi - விநியோகஸ்தர் ஸ்டண்டாம்ல.. :))) என்ன இருந்தாலும் ரஜினி ரசிகர் ரஜினி ரசிகர் தான்.. :)

Dhinesh Kumar (முகிலன்) - //ஒரு கமல் ரசிகன் கமலை விமர்சிப்பான். எகா சுரேஷ் கண்ணன், ரஜினி ரசிகன் பால் குடம் எடுப்பான் படம் பார்க்காமலே//

கமல் ரசிகன் ரஜினி ரசிகனை விமர்சிப்பான். எடுத்துக்காட்டு சுரேஷ் கண்ணன்.


Dhinesh Kumar (முகிலன்) - ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை சஞ்சய்.\

Sanjai Gandhi - குகு, இதை எல்லாம் நான் நேர்லையே பார்த்திருக்கேன்.. குடம் குடமா பால் ஊத்துவாங்க..

சிவாஜி படம்(னு நினைக்கிறேன்) வந்தப்போ மதுரைல ஏராளமான ஆடு வெட்டி பிரியாணி போட்டாங்க ரசிகர்கள்..

குடுகுடுப்பை kudukuduppai - குடுகுடு - ரசிகன் எவனும் பாசத்தில் பால்குடம் எடுப்பதில்லை. விநியோகஸ்தர்கள் தங்கள் செலவில் செய்யும் ஸ்டண்ட்தான் அது//
அதிசயப்பிறவின்னு ஒரு படத்தை வெற்றிப்படமாக்க அம்பது வாட்டி சொந்தக்காசில பார்த்த பாசக்காரப்பயலுகளும் என் குடும்பத்திலே இருந்தாங்க.


Dhinesh Kumar (முகிலன்) - சன் டிவிதான் ஸ்டண்டை ஏற்பாடு செஞ்சதே. இதுல அவங்க சொல்லிக் குடுக்குற ஸ்க்ரிப்ட் படி பேசாம உண்மை விளம்பவா செய்வாங்க? சன் டிவியில செப்புனதை ஆதாரமா சொல்றாராம்ல.


Delta Nathan(அது சரி) - சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட எதுவும் செய்யாத ரஜினியும் அவரது ரசிகர் படையும்......

Sanjai Gandhi - தினேஷ்.. சவால்.. அடுத்து ரஜினி படம் ரிலிஸ் ஆகும் போது தமிழ்நாட்டுக்கு வாங்க.. பால் ஊத்தும் பாசக் காட்சியைக் காட்றேன்..\

Dhinesh Kumar (முகிலன்) - சஞ்சய், நான் பாலே ஊத்தலைன்னு சொல்லலை. ஆனா அதை ஏற்பாடு செய்யறதே ஒரு ஸ்டண்டாத்தானே ஒழிய எந்த ரசிகனும் பாசம் பீரிட்டு செய்வதில்லை.

குடுகுடுப்பை kudukuduppai - சரி தினேஷ் சன் டிவியின் ஸ்டண்டுக்கு துணை போய் ரசிகர்களை ஏமாத்தும் ரஜினி யார்? அவதாரமா?

Delta Nathan(அது சரி) - ரஜினிக்கு உண்மையிலேயே மனிதர்கள் மீது அன்பு இருந்தால் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்திருப்பார். ஆனால், துரும்பை கூட கிள்ளியதாக தெரியவில்லை. மனுசனை மதிக்காத ஆன்மீக வாதி, மயிரே போச்சு.

குடுகுடுப்பை kudukuduppai - சஞ்சய், நான் பாலே ஊத்தலைன்னு சொல்லலை. ஆனா அதை ஏற்பாடு செய்யறதே ஒரு ஸ்டண்டாத்தானே ஒழிய எந்த ரசிகனும் பாசம் பீரிட்டு செய்வதில்லை.//
உண்டு, சன் டிவி வருவதற்கு முன்னரே பால்குடம் எடுத்ததெல்லாம் பார்த்திருக்கிறேன்.


Dhinesh Kumar (முகிலன்) - நான் அவதாரம்னு சொன்னேனா? இல்லை வியாபாரி இல்லை உலகத்தைத் திருத்த வந்த உத்தமர்னு சொன்னேனா? இல்லை ரஜினி மட்டும்தான் வியாபாரியா? கலைஞர் டிவியில பேட்டிக்கு மேல பேட்டி குடுக்குற கமல் உத்தம நடிகரா? ஸ்டண்ட் அடிக்காத நடிகர்களே/அரசியல்வாதிகளே இல்லையா?

Sanjai Gandhi - http://ulavan.net/?p=4505

இத ஒருக்கா பாருங்க தினேஷ்.. இதெல்லாம் சன் டிவி ஸ்டண்டாக்கும்..

குடுகுடுப்பை kudukuduppai - சுனாமி, பாபா 1000 வருடம் அடக்கி வெச்சிருந்த மூச்சுனால வந்தது. அதனால அதுக்கு ஹெல்ப் பண்ணா பாபா கோச்சுக்குவாரு
குடுகுடுப்பை kudukuduppai - கமல் ஒரு வியாபாரிதான், ஆனா ரசிகனுக்கு பிடிக்கவில்லையென்றால் கண்டிக்கும் மனநிலையில்தான் இருக்கிறான். கமல்ஹாசன் விமர்சனத்து அப்பாற்பட்டவர் அல்ல.

குடுகுடுப்பை kudukuduppai - Dhinesh Kumar (முகிலன்) - நான் அவதாரம்னு சொன்னேனா? இல்லை வியாபாரி இல்லை உலகத்தைத் திருத்த வந்த உத்தமர்னு சொன்னேனா//

அப்படி ஒரு இமேஜ் (நல்லவர்) இமேஜ் கிரியேட் ரஜினிக்கு உருவாக்கி வெச்சிருக்காங்க, அரசியலுக்கு கூப்புடுறாங்க, அவரும் படம் வரும் முன்னாடி அறிக்கை விடுவாரு. கருப்பாயி கிழவிகளையும் உருவாக்குவார்.


Delta Nathan(அது சரி) - இனிமே ரஜினியை பத்தி பஸ் விட்டா வீட்டுக்கு கொற்கை பார்சல் பண்ணிடுவேன்.

குடுகுடுப்பை kudukuduppai - டெல்ட்டா ரஜினி ரசிகர்தான், ஆனால் அவர் விமர்சிக்கிறார், அந்தப்பக்குவம் பெரு வாரியான ரஜினி ரசிகனுக்கு வரும்போது பாபா டவுசர் வரை கிழியும்.

Delta Nathan(அது சரி) - பாபாவுக்கு இன்னுமா டவுசர் இருக்கு?
6 JanDeleteUndo deleteReport spamNot spam
குடுகுடுப்பை kudukuduppai - ஏன் சுனாமிக்கு காத்து விட்டதுல கிழிஞ்சி போச்சா?

Delta Nathan(அது சரி) - பாபா ரெண்டாயிரம் வருஷம் இருக்கலாம். டவுசர் பழசாகி கிழிஞ்சு போச்சு.

Dhinesh Kumar (முகிலன்) - //ரஜினிக்கு உண்மையிலேயே மனிதர்கள் மீது அன்பு இருந்தால் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்திருப்பார். ஆனால், துரும்பை கூட கிள்ளியதாக தெரியவில்லை. மனுசனை மதிக்காத ஆன்மீக வாதி, மயிரே போச்சு//

உதவி செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தது தெரியாதா?

Dhinesh Kumar (முகிலன்) - //கமல் ஒரு வியாபாரிதான், ஆனா ரசிகனுக்கு பிடிக்கவில்லையென்றால் கண்டிக்கும் மனநிலையில்தான் இருக்கிறான். கமல்ஹாசன் விமர்சனத்து அப்பாற்பட்டவர் அல்ல//

ரஜினி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொன்னேனா? ரஜினியின் படைப்பு வருகிறதென்றால் அந்தப் படைப்பை விமர்சிக்க வேண்டுமே தவிர ரஜினி என்ற தனி மனிதனை விமர்சிக்கக் கூடாது என்பதே நான் எடுத்து வைத்து வந்த, வைத்துக் கொண்டிருக்கும், இனியும் தொடர்ந்து வைக்கும் வாதம்.

Dhinesh Kumar (முகிலன்) - //இனிமே ரஜினியை பத்தி பஸ் விட்டா வீட்டுக்கு கொற்கை பார்சல் பண்ணிடுவேன்.//

நல்லாப் பாருமய்யா இது ரஜினி பஸ்ஸா?? கமலைப் பத்தி விட்டா உங்களுக்குத்தான் பத்திக்கிட்டு வந்து ரஜினி ரஜினின்னு காத்து வுட்டுட்டு இருக்கீங்க..

Dhinesh Kumar (முகிலன்) - //சுனாமி, பாபா 1000 வருடம் அடக்கி வெச்சிருந்த மூச்சுனால வந்தது. அதனால அதுக்கு ஹெல்ப் பண்ணா பாபா கோச்சுக்குவாரு//

கமல்தான் கடலுக்கு அடியில போன பெருமாளால சுனாமி வந்துச்சின்னு கதை வுட்டாரு. ரஜினி எப்ப இப்பிடிச் சொன்னாரு?

Dhinesh Kumar (முகிலன்) - //டெல்ட்டா ரஜினி ரசிகர்தான், ஆனால் அவர் விமர்சிக்கிறார், அந்தப்பக்குவம் பெரு வாரியான ரஜினி ரசிகனுக்கு வரும்போது பாபா டவுசர் வரை கிழியும்.//

டெல்டா ரஜினி ரசிகரா?? ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா...

ஜினியின் படைப்புகளை விமர்சிக்கும் பக்குவம் ரஜினி ரசிகனுக்கு எப்போதோ வந்துவிட்டது. அப்படி வரவில்லையென்றால் பாபாவும், குசேலனும் இருநூறு நாள் ஓடியிருக்கும்.

குடுகுடுப்பை kudukuduppai - http://kudukuduppai.blogspot.com/2008/12/blog-post_11.html
இந்த பதிவில அது சரி கமெண்ட் படிங்க

Dhinesh Kumar (முகிலன்) - அது வஞ்சப் புகழ்ச்சி ஐயா

திருடன்

அவனின் முகம் வீங்கி ரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது. அவனின் ஒற்றைக் கண் ரத்த காயத்தால் மறைந்திருந்தது. மீதமிருந்த மற்றொரு கண்ணின் வழியாக சாளரத்தின் வெளியே பார்வையை நிறுத்தியிருந்தான். அவனின் சட்டை எப்படி நார் நாரைக் கிழிக்கப்பட்டு தொங்குகிறதோஅதே போலவே அவனின் தோலும் அங்கங்கே உறிந்துத் தொங்கியது. கிட்டத்தட்ட குத்துயிரும் குலையுயிருமாக கிடந்தான்.

உயிரோடிருக்கும் ஒற்றைக் கண்ணின் வழியாக அசையாமல் சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சாலையில் நடமாடும் மக்களோடு தானும் சேர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டான். துன்பத்திலேதான் மறந்து போன நாட்களின் மறந்து போன சம்பவங்கள் மனதில் வந்து வட்டமிட ஆரம்பிக்கின்றன.வீணாக பிடிபட்டு விட்டோமே என்று வருந்தினான்.

அப்போது அந்த அறையினுள் காலடி சத்தம்..

இரண்டு பேர் நடந்து வருவதை அவன் உணர்ந்தான். பேச்சு சத்தம் கூட கேட்டது.

"என்னய்யா.. ஏதாவது சொல்றானா?"

"சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கான் சார்.. திருட தான் போனானாம். அது அமைச்சர் வீடுன்னு தெரியவே தெரியதுன்றான்… இதையே தான் பொலம்பிட்டு கிடக்கறான். காம்பவுன்ட் தான் ஏறினானாம். அதுக்குள்ள நம்ம ஆளுங்க புடிச்சுட்டாங்க.”

அவர்களில் ஒருவன் குனிந்து அடிப்பட்டுக் கிடந்தவனை நோக்கினான்.

“ஏன்டா.. உனக்கு திருடுறதுக்கு அமைச்சர் வீடுதான் கிடைச்சுதா?”

மீண்டும் ஒரு உதை கிடைத்தது. வலியால் துடித்தன்.

“இவன் மேல திருட்டு கேசு ஏதாவது இருக்கா?”

“இல்லை சார்.. இது தான் முதல் தடவையாம்.. கிராமத்துல விவசாயம் பாத்துட்டு இருந்தானாம். அம்மா அப்பால்லாம் இருக்காங்களாம். ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்சுருப்பான்னு நினைக்கிறேன்” என்றான் அவன்களில் ஒருவன்.

“இந்தப் பதில அந்தாள் கிட்ட சொல்ல முடியாது. இப்பவே கண்டப்படி கத்திக்கிட்டு கிடக்கான்…”

சிறிது நேரம் அமைதி.

“சரி இங்க வா.”

இருவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். குத்துயிராய்க் கிடந்தவன் சாளரத்தை விட்டு பார்வையை அகற்றவேயில்லை.

சில மணி நேரங்கள் கடந்திருக்கலாம். மீண்டும் காலடி சத்தம். அவன் அதே நிலைத்த பார்வையில்.

“உன் கடைசி ஆசை என்னவென்று சொல்.”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

'ஆ.. ’கடைசி ஆசை’ அப்படியெனில் நான் சாகப் போகிறேன். அவன் கண்களை மூடினான். முகத்தைத் திருப்பவும் இல்லை.

அவன் மீண்டும் கேட்டான்.

”கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா? அம்மா, அப்பா யாரையாவது பார்க்கணும்னா ஏற்பாடு பண்றேன்.”

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

'இவனுக்கு உண்மையிலேயே நம் மீது பரிதாபம் இருக்குமா? நான் சாகப் போகிறேன் என்பதை எவ்வளவு தடவை சொல்கிறான். அதைத் திரும்ப திரும்ப சொல்லி என்னை பயப்பேதியில் ஆழ்த்துவதில் என்னவொரு குரூர சந்தோஷம் இவனுக்கு. என் கடைசி ஆசை உங்கள் முகத்தில் காரி உமிழ வேண்டும் என்பது தான். ச்சே..வாயில் வேறு துணியை வைது அடைத்து விட்டார்கள். என் ஆசை அதுதான்.'

அவனது பார்வை மீண்டும் சாளரத்தில் நிலைத்தது.

“எதுக்காக அமைச்சர் வீட்டு சுவர் ஏறி குதிச்ச?” என்று அவனது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டனர்.

"நீங்கள் எவ்வளவு முறைக் கேட்டாலும் உண்மை நான் எற்கனவே சொல்லிவிட்டேன். உண்மையை விரும்பாதவர்களை நம்ப வைப்பது கஷ்டமான வேலை."

உருவமே இல்லாத ஆண்டவனை போல,உண்மையும் உருவமற்று போய்விட்டதா?..எல்லாமே பைத்தியக்காரத்தனம்..சீ..!

தங்கம் சொக்கத் தங்கமாக வேண்டுமானால் அதை நெருப்பில் புடம் போட்டாக வேண்டும்.. ஆனால் மனிதனை..?

“உங்கம்மாவை வரச் சொல்லியிருக்கே” என்று சொல்லி விட்டு அவன் அறையை விட்டு வெளியில் போய்விட்டான்.

அறையில் மீண்டும் நிசப்தம்.

காலத்திற்கு யாரை பற்றியும் கவலை இல்லை...

மறுநாள் செய்திதாள்களில், 'ஆளுங்கட்சி அமைச்சரைக் கொலைச் செய்ய முயன்ற இளைஞன் சிறையில் இருந்த தப்பிக்க முயன்ற போது, கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டான்’ என்று செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது.

Sunday, January 2, 2011

நெறிஞ்சிமுள்


ஸ்டெல்லா... அவள் கண்களைப் போல உலகில் எந்தப் பெண்ணிற்கும் வாய்த்திருக்காது. நான் இதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன். அவளின் கண்களின் ஜீவ ஒளி அற்புதமானது ..
நான் அவளை சந்தித்த நாள்.. அது ஒரு ஏப்ரல் மாதமாகவோ அல்லது மே மாதமாகவோ இருக்கலாம். ஸ்டெல்லா எங்கள் அலுவலகத்திற்கு வந்த நாள் இன்னும் அப்படியே நினைவில் உள்ளது. ஆரஞ்சு நிற சுடிதாரில்.. கூந்தலைக் காற்றில் பறக்க விடாமல், அழுந்த வாரிய தலையுடனும் ஒருவித வெட்கத்துடனும் அவள் காலடி எடுத்து வைத்த அந்தக் காட்சி.
நான் இதுவரை அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசியிருப்பேனா என்பது சந்தேகம் தான். அப்படியே பேசி இருந்தாலும் அவை அதிகமிருக்காது.
நான் முதன்முதலாக அவளிடம் பேசிய வார்த்தை, 'உங்க பெயர் என்ன?' என்பதே. அவள் சிறு வெட்கத்துடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.

'ஸ்டெல்லா மேரி.'

என்னால் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. மின்சாரத்தால் தாக்குண்டதுப் போல் தலைக் குனிந்துக் கொண்டேன். என்ன அழகான கண்கள்.. அகன்ற கருமையான விழிகள். ஜீவ காந்தம் வீசும் மெல்லியப் பார்வை. வேனிற்கால நட்சத்திரங்கள் என்று கேள்விப்பட்டது உண்டா? அதைப் போல.

அன்றிலிருந்து என் வேலையில் புது சிரத்தை வந்தது. மனதில் கலக்கமும், வருத்தமும் தோன்றும் போதெல்லாம் அவள் கண்களை பார்த்துக் கொள்வேன். ஒரு புது உற்சாகம் தோன்றி குதூகலத்தோடு வேலையை ஆரம்பிப்பேன். சமயங்களில் அவளும் என்னைப் பாத்துக் கொண்டிருப்பாள். சமயங்களில் அந்தக் கண்களில் அமைதிக் கலந்த ஒரு வித வேதனைத் தாண்டவமாடும்.
நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. இப்படியே அவளைப் பார்த்துக் கொண்டே, எங்கேயாவது முட்டிக் கொள்வது என் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது .
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கண்ணீர் ததும்ப என் முன் வந்து நின்றாள். நான் பதறிப் போய், 'என்னமா.. என்னாச்சு?' என்று கேட்டேன்.
அவள் பதிலேதும் சொல்லாமல் விசும்பிக் கொண்டே, 'எங்கப்பா வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்லிட்டார்' என்றாள்.
'என்னவாம்?'
'கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றார்.'
'பண்ணிக்க வேண்டியது தானே!!
அவள் என்ன நினைத்தாளோ ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய் விட்டாள். எனக்கு வருத்தமாக போய்விட்டது .
மறுநாள் அவள் வீட்டுக் கதவைத் தட்டினேன். ஸ்டெல்லா தான் திறந்தாள். என் எதிர்பாராத வருகை அவளை ஆச்சர்யப்படுத்தியிருக்க வேண்டும்.
'அப்பா இருக்காரா?'
'ம்ம்.. உள்ள வாங்க.'
நான் உள்ளே சென்றேன். ஒரு முரட்டு ஆசாமி, 'யாருப்பா நீ.. என்ன வேணும்?'
'நானும் ஸ்டெல்லாவும் ஒரே ஆபீஸ்-ல தான் வேலைப் பார்க்கிறோம்.'

எனக்கு பதற்றமும், பயமும் வயிற்றைக் கலக்கியது .
'ஓ.. சரி. உக்காருங்க.'
என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தேன். ஒரே நிசப்தம்.
'வேலைல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?'
'பரவல்லைங்க.'
மீண்டும் அமைதி.
'ஸ்டெல்லாவுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்.'
'ஆமாமா.'
'எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம். உங்க சம்மதத்தோட..' என்று விழுங்கினேன்.
அந்த மனிதர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
'உன் பெயர் என்ன?'
சொன்னேன்.
'நாளைக்கே "எங்க ஆளா" மாறிட்டு வந்து நில்லு. அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீ போலாம்.'
நான் எதுவும் பேச முடியாமல் தயங்கி நின்றேன்.

'கெளம்பறயா?? இல்ல கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளட்டுமா?'

அவமானம் தாங்க முடியாமல் நான் வேகமாக வெளியேறினேன். ஸ்டெல்லாவை ஏறிட்டும் பார்க்கவில்லை. இதயம் கனத்தது. பொங்கி வரும் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடந்தேன்.
அதன் பிறகு ஸ்டெல்லா வேலைக்கு வரவில்லை. நானும் அவளைப் பார்க்கவில்லை. ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாள் எங்கள் அலுவலக வாசலில் ஸ்டெல்லா காத்திருப்பதாக கிளார்க் அழைத்தான் .
என் எதிரில் நின்றுக் கொண்டிருந்தாள். அழுது அழுது வாடிப் போயிருந்தது அந்த ஜீவ களையுள்ள முகம். பார்க்க பரிதாபமாய் இருந்தாள்.
'என்ன சொல்றார் உங்கப்பா?'
'அன்னிக்கு உங்ககிட்ட சொன்னத தான் இப்பவும் சொல்றார்.'
'இப்பவே நீ எங்க சாதி பொண்ணாயிடு. இங்க வந்துடு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சரியா?'
'எங்கப்பா என்னையும் கொல்லுவார். உங்களையும் வெட்டுவார்' என்று பரிதாபமாய் சிரித்தாள். பரிகாசமாகவும் சிரித்திருக்கலாம்.

அப்போது எங்கள் கிளார்க் லபோதிபோவென்று உள்ளே வந்தான். 'எம்மா.. உங்கப்பா வந்துட்டாரு. வாசல்ல நின்னு கத்திட்டு இருக்காரு.. போம்மா சீக்கிரம்.'
அதற்குள் அந்த மனிதர் உள்ளே வந்து அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். எனக்கு கோபம் வந்து நிறுத்துமாறு கத்தினேன்.
அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டார்.
நாட்கள் கடந்தது. ஸ்டெல்லா மறந்தே போய் விட்டாள். நான் அவளின் நினைவை மறக்க விரும்பினேன்.
கிளார்க் என்னிடம் தயங்கி தயங்கி ஒரு விஷயத்தைச் சொன்னான்.

'ஸ்டெல்லாவிற்கு கல்யாணம் ஆகிட்டது. ரொம்ப மோசமான குரூபி.'
அந்த வார்த்தை ஈட்டியாய் குத்தியது.
வருடங்கள் சென்றது. சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து அதிலேயே முழ்கிக் கிடந்தேன். எந்நேரமும் வேலை வேலை என அலைந்தேன். என் தங்கைக்கு கல்யாணத்தை முடித்தேன். சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டினேன். ஸ்டெல்லா மறந்தே போய்விட்டாள். அப்பொழுது என் நண்பனின் மூலமாக ஒரு செய்தி கேள்விப் பட்டேன். ஸ்டெல்லா அந்தக் குரூபியோடு வாழ முடியாமல், தகப்பனார் வீட்டுக்கே வந்தாள் என்றும், ஆனால் அவளை வலுக்கட்டாயமாக அவனிடமே கொண்டு விட்டுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் வெளியூர் பயணத்திற்காக, ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், நான் திரும்பினேன் .

ஸ்டெல்லா. வயதான ஸ்டெல்லா. தோல் சுருங்கி, கன்னங்கள் ஒடுங்கி மெலிந்துப் போயிருந்தாள். அந்தக் கண்களின் பிரகாசம் மட்டும் மாறவே இல்லை. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பேச நா எழவில்லை.
'எப்படியிருக்கீங்க சமீர்?'
'ம்ம்.. நல்லாருக்கேன். நீ எப்படி இருக்கே?'
'ம்ம்.. எங்க இந்தப் பக்கம்?'
சொன்னேன். ஆனால் அவள் கவனித்ததாக தெரியவில்லை.
'கல்யாணமாயிடுச்சா?'
'ம்ம்..'
'நான் அவங்களைப் பாக்கலாமா?'
என் மனைவியை அழைத்தேன். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ரயிலின் சத்தம் கேட்டதும் கிளம்பி விட்டாள். அதன் பிறகு நான் ஸ்டெல்லாவை பார்க்கவேயில்லை.