Monday, September 27, 2010

குங்குமம் வழியில்....

நூலகத்தில் கேட்பாரற்று கிடந்த அருமையான கவிதைகள் படிக்கக்கிடைத்தது..

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..



'' என்
ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும்
இலவச இணைப்பாக
லட்டு ஒன்று தரலாமென
நினைக்கிறேன்
லட்டு ஒன்றுக்கு
புத்தகம் இலவசமெனச்
சொல்லிவிட்டால்
என்ன செய்வது?''

முற்போக்கு

ஒரு முற்போக்கு
இயக்கத்தவர்
மிகுந்த கோபத்துடன்
'விதவை மறுமணம்' பற்றி
அவசரம் அவசரமாகக்
குறும்படம் எடுத்தனர்.

நட்பிருந்தாலும்
தகுதியான விதவைக்கு
தாலிகட்டாத
'சபைப்பேச்சு' மனிதர்கள்.

பொய் கேள்வியும் பொய் பதிலும்

தமிழன் ஒருவன்
ஆர்வமாய் என்
சாதியை கேட்டான்.

'தமிழன்' என்றேன்
நான்.

தமிழன் என்பது
சகலர்க்கும் தெரிந்த மெய்
சாதியை சொல்
என்றான் அவன்

'முதலியார்' என்றதும்
முழு சம்மதமாய் -
ஓராண்டு கழித்து
ஓடிவந்து கேட்டான்
'நீங்கள் வன்னியராமே!'

மனிதர்கள்

இந்து வெறியன்
மசூதியை இடிக்க,

இஸ்லாம் வெறியன்
எதிரி என்று தாக்க,

இடையில் மடிந்தனர்
இவை எதுவும்
தெரியாத
'மனிதர்கள்!'

விலகல்

சாதாரணமானவளாய்
நான் நினைத்துவிடாமல்
இருக்க

நீ
ஒவ்வொரு முறையும்
கால்மணி நேரமாவது
காக்க வைக்கிறாய்!

நீ 'கர்வக்காரியோ'
என்றெண்ணி

நான்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி போகிறேன்!

செவி வழியில்

நானும் கருப்பு
அவனும் கருப்பு

நானும் சைவம்தான்
அவனும் சைவம்தான்

அவனை போலவே
எனக்கும் உறுப்புக்கள்

நான் படித்த பள்ளியில் தான்
அவனும் படித்தான்

தேநீரைக்கூட
அண்ணாந்து குடிக்கும்
அர்த்தமுள்ளவர்கள் நாங்கள்
என்றாலும்

நாங்கள் கேட்டுக் கொண்டால்தான்
தெரிகிறது
எங்கள் சாதி.

உண்மைதான்

''மரணம் விரைவில் வருகிறது
மனம் திரும்புங்கள்''என்றார்
பாதிரியார்

மனம் திரும்பினோம்;

அலையடித்துச் சர்ச்சில்
அழிந்து போனார்கள்
அறுபது பேர்!

கவிதை

புரியக்கூடாது எனச்
சபதமெடுத்து
என் நண்பர்
புதுக்கவிதை எழுதினார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மகிழ்ச்சியோடு சொன்னார்

'எது புரியவில்லையோ
அதுதான் நல்ல கவிதை' என்று.

திருமணதிற்கு முன்..

விரும்புகிறாள் என
உறுதியாகத் தெரிந்தும்

யாருமில்லையென
என் இருவிழிகள்
அறிந்தும்

''தொட்டுத் தொலையகூடாதா'' என
அவள்
உதடுகள் சைகையில் உலறியும்

காவல் காத்து நிற்கிறது
பாழாய்ப் போன
என் 'பண்பாட்டுக் கூச்சம்'

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும்


அன்று
கொலையும் செய்தாள்
பத்தினி

அந்நியன் தொட்டானென்று!

இன்று
கொலைகள் செய்தாள்
பெண்மணி

கணவன் தொடுகிறானென்று !

தீத்துண்டுகள்

மதுக்கடை அதிபர்
திருமண மண்டபம் கட்டினார்

மது அருந்த வேண்டாம் என்ற
அறிவிப்புடன்..

--
நான்கு பூனைகள்
குறுக்கே ஓடியும்

விழிப்புணர்வுடன் நடந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை.

--
ஒரே அனுபவத்தை
ஆயிரம் முறை பட்டும்
திருந்தி
நிமிர்ந்த போது
எனக்கு
வயது முப்பது.

பசி நல்லிணக்கம்


பல கடவுளை
நம்பி
பயனில்லை என
வெம்பி

ஒரே ஏசுவை
நம்பி

தன் பெயரை
மாற்றிக்கொண்டாள் சரஸ்வதி

நேற்று
அப்துல் காதர் தந்த
ஆயிரம் கடனை
அடைப்பதற்காக

முன்னூறு ரூபாய்
அதிகமாய் உள்ள
முனுசாமி கம்பெனியில்
சேர்ந்து

வெள்ளிக்கிழமை தோறும்
திருப்பதி ஆண்டவருக்குத்
தீபம் காட்டும் அவளிடம்

''மத நல்லிணக்கம்
தெரியுமா'' என்றேன்

அது
''பசியை விடவும்
பெரியதா'' என்றாள்.

--ரவிதாசன்.

Monday, September 20, 2010

அழியா ஓவியம்


சென்ற வாரத்தில் ஒரு நாள் என் அத்தையுடன் பவானி பயணம். சேலம் பேருந்தில் ஏறினோம்.

கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. அத்தையும் இன்னபிறரும் நின்றபடி இருக்க, நான் டிரைவருக்கு எதிர்தார்ப்போல முன் கண்ணாடியை ஒட்டி ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டேன்.

பயணத்தில் ஏதேனும் ஒரு சிந்தனையில், அல்லது வேடிக்கையில் அனைவரும் லயிந்திருக்க, சிலர் நித்திய சயனத்திலும்.

எனக்கு போரடித்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தபடி இருந்தேன்.

அதில் ஒரு முதுகலை பட்டதாரி போன்ற தோற்றத்தில் ஒரு இளைஞன். நீளமான முடி டென்னிஸ் ரபேல் நடாலை போல. அவனின் கண்கள் ஒரே பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. அவ்வளவு அழகான கண்கள்.

அழகு என்றால் எதனோடு ஒப்பிட்டு சொல்வது?

ஒரு சில கோவில் சிற்பங்களில் நடனமாடும் மாந்தர்கள் இருப்பார்கள். அவர்களின் கண்கள் பாதி திறந்து, பாதி மூடிய நிலையில் ஆனந்த மயமாக தங்கள் நடனத்தில் லயிதிருப்பார்கள்.

அந்த கண்கள் அந்த இளைஞனிடம் !

அந்த கண்களில் தான் எவ்வளவு சாந்தம், அமைதி !

நான் பேந்த பேந்த அந்த கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

'பேந்த பேந்த' காரணம் பக்கத்தில் அத்தை.

எனக்கு புதுமை பித்தனின் 'சிற்பியின் நரகமும்' , ஆஸ்கர் ஒய்ல்டின் 'அழியா ஓவியமும்' நினைவுக்கு வந்தன.

கோவிலுக்காக செதுக்கிய அழகிய சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் அது தன் அழகை இழந்து கோரமாக மாறிவிடுவதை கண்டு மனம் வெம்பும் சிற்பி. அவனுக்கு அது நரகம். புதுமை பித்தனின் பிரமாதமான கதை.

ஒரு ஓவியம் ஒருவனை படுத்தும் பாடுதான் அழியா ஓவியம். இரண்டு கதைகளும் படித்தவர்களால் மறக்க முடியாதவைகள்.

இரண்டிலுமே கண்களை தான் பிரமாதப்படுத்தி இருப்பார்கள்.

கண்களோடு தொடர்புடைய நிகழ்சிகள் யாவும் நம் நினைவை விட்டு அகல்வதில்லை.

சிற்பங்களின் கண்கள் எப்போதும் அழகானவை.

சிலைகளும் அவ்வப்போது எழுந்து உயிர்பெற்று வந்துவிடுமோ...

சிந்தனையை நீக்கி அவனை மீண்டும் பார்த்தேன். அழகிய கண்களை பெற்ற பாக்கியவான்!

இப்போது தான் 'செல்போன் கேமரா' வின் அவசியத்தை உணர்ந்தேன்.

2 மணிநேரம் ஓடி பவானியை நெருங்கிக்கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய பாராட்டுதலையாவது அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனது நச்சரிக்க,

யோசித்தேன்.

திடீரென்று கவிதையும் வந்து தொலைக்கவில்லை.

''அழகான கண்கள்''
பத்திரமா பாத்துக்கோங்க''

என்று ஒரு சீட்டில் எழுதிகொடுத்துவிட்டு இறங்கி விடலாமா?

ஒருவேளை என்னை 'லூசு' என்று நினைத்து விட்டால் என்ன செய்வது? முன் பின் அனுபவமில்லாத இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு இறங்கி நடந்தேன்.

அத்தையும் நானும் நடந்து சென்றுகொண்டிருந்தோம்.
''ஏண்டி, உனக்கு எதிர்த்தாப்போல ஒரு பையன் உக்காந்திருந்தானே பார்த்தியா?'' அத்தை.

''ஆமா'' (அந்த ரபேல்)

''அவன் பஸ்ஸு ஏறுனதில இருந்து என் மூஞ்சிய மூஞ்சிய பாக்கராண்டி. இந்த காலத்து பசங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகுதோ. நானே பாட்டி!'' என்றாரே பார்க்கணும்.

என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் குபீர் என சிரித்துவிட்டேன்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது.

அவனும் யாரையோ பார்த்தபடிதான் இருந்தான். ஆனால் அது அத்தை என்பதை நான் அறியவில்லை.

முன்னால் சென்று அத்தையின் முகத்தை உற்று பார்த்தேன்.

''அப்படி ஒன்னும் சிற்பக்கலை ஒண்ணும் தெரியலையே..
ஒரு வேலை அவன் கண்ணுக்கு ஏதும் தெரிஞ்சதோ என்னவோ '' என்றேன் சிரித்தபடி.


Tuesday, September 14, 2010

சன் டிவி-நமக்கு நாமே

சென்ற சனிக்கிழமை இரவு சன் செய்தி பார்க்க வேண்டியதாகி விட்டது.

முக்கியச் செய்தியில் முதல் செய்தியாக அதிமுக்கிய செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது.

என்ன செய்தி?

கங்கையின் வெள்ளமா?
கலைஞரின் அறிக்கையா?
நாடாளுமன்ற சண்டை காட்சியா ?
தெலுங்கானாவின் தெருப்போராட்டங்களா?

இதெல்லாம் ஒரு செய்தியா? இதையெல்லாம் ஒளிபரப்ப சன் டிவிக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

அந்த முக்கியச் செய்தியாகப்பட்டது என்னவெனில்,
தியேட்டர்களில் எந்திரனின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு காவடி எடுத்து , பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்து 'புண்ணியத்தை' தேடிக்கொண்ட ரசிகர்கள்.

இதை மிகவும் பெருமையுடன் ஒளிபரப்பிகொண்டிருந்தார்கள்.

கங்கையில் வெள்ளம் வந்தால் என்ன?
எங்கே குண்டு வெடித்தால் என்ன?

அவரவர்க்கு அவரவர் செய்திதானே முக்கிய செய்தி.

தங்களின் விளம்பரயுக்தியின் மீது சன் டிவிக்கு அபார நம்பிக்கை.

தங்களின் பல படங்கள் தியேட்டர்களில் காற்றுவாங்குவதையும் சூப்பர் ஹிட் என்று சொல்லி அங்கே ஆட்களை திரட்டி ஆட வைத்து அதை செய்தியில் காட்டுவதை 'கொள்கையாக' கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு என்ன, திரண்டு ஆடுவதற்கு 'கூலிக்கு' ஆட்களைப் பிடித்தால் போயிற்று.

தங்களை தாங்களே புகழ்ந்து கொள்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி பிரியம் போல.

இதற்கு பெயர்தான் 'நமக்கு நாமே' திட்டம் என்பதா?

திடீரென்று மனதில் ஒரு பயம்,பீதி.

ஓடாத மிக மோசமான படத்தையே 'மெகா ஹிட், சூப்பர் ஹிட்' என்று சொல்லி 6 மாதத்திற்கு தன் அனைத்து கிளைகளிலும் ஒளிபரப்பி நம்மை படுத்திஎடுப்பார்கள்.

இப்போது ஷங்கரும், ரஜினியும் கிடைத்து விட்டால் கேட்கவா வேண்டும்.என்ன செய்ய போகிறார்களோ.

ஒவ்வொரு முறையும் ஆளாளுக்கு புகழ்ந்து பேசி நம் காதில் ஈயத்தை பாய்ச்சுவார்கள்.

'..' வென வேடிக்கை பார்க்கும் மக்களை கண்டால் தான் அவர்களுக்கு என்ன ஒரு குஷி.

இப்படித்தான் படத்தின் ட்ரைலர் வெளியிடுவதையே 'ட்ரைலராக' ஒரு வாரம் காட்டிகொண்டிருந்தார்கள் .
அதை முக்கிய செய்தியாகவேறு காட்டி திருப்திப் பட்டுகொண்டார்கள்.

ட்ரைலருக்கே பட்டாசு என்பதெல்லாம் சன் டிவியின் வழக்கமான பப்ளிசிட்டி' செட் அப் 'ஆகத்தான் தோன்றுகிறது. ஆளில்லாத அவர்களின் மற்ற படத்திற்கே ஆடும் ரசிகர்கள் ட்ரைலருக்கும் ஆடிவிட்டு போகிறார்கள்.

சன் டிவியின் விளம்பர யுக்தி சந்தையில் விற்கப்படும் காய்கறி விற்பனையை சார்ந்தது.

அடுத்தவர்களின் அந்தரங்கம் எனில் அந்த சந்தையில் கூறு போட்டு கூவி விற்பார்கள். இலவசமாக கூட கிடைக்கலாம். அவர்களை பொறுத்த வரை பார்க்க கூட்டம் சேர்ந்தால் போதும். உதாரணம்: நித்யா.

அதுவே தங்களின் சொந்த சரக்கு எனில் ஓடி ஓடி திருட்டு வி சி டி க்களை பிடிப்பார்கள்.

மக்கள் அனைவருக்கும் அறிவிப்பது என்னவெனில் எந்திரன் வரும் வரை யாரும் சாப்பிடாதிருங்கள் . தூங்காதிருங்கள். வெளிவரும் எந்திரன் சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும்.


எனவே விளம்பரம் என்ற பெயரில்,

ஒரு சுறாவளி புயல் வீசப்போகிறது.தயாராயிருங்கள்!
ஒரு கொலை வெறித்தாக்குதல் நடக்கப்போகிறது. தயாராயிருங்கள்!






--
yalini

Friday, September 10, 2010

சாந்தி (சண்டை) தெரு


நான்கு வீடுகளை கொண்ட காம்பௌன்ட் . கீழே இரண்டு குடியிருப்புகள். மாடியில் இரண்டு. கீழே வசிப்பவர்களின் வரலாறுகள் தெரியவில்லை. மாடியில் ஒன்றில் வீட்டு உரிமையாளரும் , 'டீச்சரம்மா ' என்ற அடைமொழி கொண்ட பெண்ணின் குடும்பமும் .

இந்த காம்பௌன்டை ஒட்டி சிமென்ட் சீட் போடப்பட்ட மிக மோசமான சுவர்களை கொண்ட ஒரு வீடு . அதில் அய்யர் அம்மா என்றழைக்கப்ப்படும் 60 வயது முதியவர் .அவர் அய்யர் அல்ல . அய்யருக்கும் அவருக்குமான 'வரலாறும் ' கிடைக்கப்பெறவில்லை . பின் வரும் சம்பவங்கள் நடக்க காரணமான , காரணமானவர்கள் வசிக்கும் பிரதான சாந்தி தெரு .

எப்போதும் போல ஒரு நாள் பொழுது புலர்ந்தது. கிழே வசிக்கும் பெண்மணி ஒருவர் வழக்கம் போல துணி துவைப்பதற்காக பக்கெட்டோடு வெளியே வந்தார்.

கல்லோ ரோட்டின் ஓரத்தில். காம்பௌண்டை ஒட்டி.
துணியை துவைக்க ஆரம்பித்தார்.

ஒரு பாவமும் அறியாத அந்த கல்லை தன் துணிகளின் மூலம் அடித்து துவைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

ஈரத்தோடு இருக்கும் ஒரு பொருளை தூக்கி அடித்தால், அதில் இருக்கும் தண்ணீர் சிதறி வெளியேறுவது தானே இயற்பியல் நியதி (?!)

அதன் படியே அந்த பெண்ணும் துவைத்த போது அதிலிருந்து அழுக்கு தண்ணீர் சிதறி வெளியேறியது.

இதில் என்ன பாதகம் என்கிறீர்களா?

பாதகம் இதுதான். சிதறி வெளியேறிய அழுக்கு தண்ணீர், அவர் அடித்த அடியில் சிதறலாக பறந்து சென்று பக்கத்து வீட்டு 'அய்யர்' அம்மாவின் சுவரோடு ஒட்டி உறவாடியது.

அடுத்தது என்ன?

அய்யர் அம்மா ஆக்ரோஷ அம்மாவாக வெளியே வந்தார். அந்த பெண்மணியை வாக்கு வாதத்திற்கு அழைத்தார்.

வாக்குவாதம் முற்றினால் சண்டையாகும். ஆகியது.
சண்டை தெருச்சண்டையானது .

இந்த நேரடி சண்டைக்காட்சி ஒளிபரப்பை பார்க்க தெருவே கூடியது .

அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க இருவரின் குடும்ப வம்சங்களும் பிரிந்து மேயப்பட்டன . இருவரின் பிறவி ரகசியங்களும் ஆராயப்பட்டன. இருவரின் ரகசிய உறவுகளும் தெருவில் அம்பலத்திற்கு வந்தன.

இவை இல்லாத பெண்களின் சண்டை ஏது?

சண்டையில் அய்யர் அம்மாவிற்கு உதவியாளர் தேவைப்பட, தன் மகனை அழைத்தார். 45 வயது மகன் 'ரவுடி' என்ற பெயருக்கு தகுதியானவன். கடுகடுவென்ற முகம். மலை போன்ற தோற்றம். தெருவில் உள்ள அனைத்து குடும்பங்களோடும் சண்டை செய்து பெயர் பெற்றவன். இவை போதுமான தகுதிகள் தானே !

தாயாரின் அழைப்பை கேட்டு விழுந்தடித்துக்கொண்டு வந்தவன், தாயை வணங்கினான். அவள் இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை' சொல்லி அதனோடு தானாக தயாரித்த 'கதை, திரைக்கதையையும்' சேர்த்து சொல்லி ஒப்பாரி வைத்தாள்.

ஆக்ரோஷமான அவனுக்கு கையில் நரம்புகள் தெறிக்க, ஜெட் வேகத்தில் அந்த கல்லை அணுகினான்.

தன் மொத்த பலத்தையும் சேர்த்து அந்த கல்லை உடைத்தெடுத்து தெருவில் வீசியெறிந்தான். பின் சுற்றிலும் பார்வையை வீசினான்.

ஒரு சின்ன பாரட்டுதலையோ, கை தட்டலையோ எதிர்பார்த்தான் போலும்
அதை புரிந்து கொள்ளாத அம்மக்கள், அதிர்ச்சியோடு அவனையே பார்த்தனர். இதனால் கோபமாக சென்றுவிட்டான்.

அந்த தெருவாசிகள் இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ' பற்றி பிரமாதமாக பேசிக்கொண்டு கலைந்தனர்.

''நான் என்னடா பாவம் பண்ணேன்'' என்று பரிதாபமாக தெருவில் கிடந்தது அந்த கல்.

அன்று மாலை..

மேல் வீட்டு டீச்சரம்மா, மிக நாகரீக பெண்மணி என பெயர் பெற்றவர். காரணம் எதையும் கண்டு கொள்ள மாட்டார். யாரிடமும் பேசமாட்டார். காலையில் நடந்த களேபாரத்தையும் வழக்கம் போல கண்டும் காணாமல் சென்றுவிட்டார்.

எப்போதும் போல மாலை வந்தது. சிறிது நேரத்தில் பெரிய கூப்பாடு போட்டுக்கொண்டு கிழிறங்கி வந்தார்.

காரணம்?

அவரின் 4 ம் வகுப்பு படிக்கும் மகன் பள்ளி விட்டு திரும்பி வரும்போது தெரு முனையில் இருந்த நாய் துரத்தி இருக்கிறது. பயந்து போன அவன் தான் தாயிடம் சொல்லி அழுது விட்டான்.

விளைவு?

இந்த டீச்சரம்மா நேராக சென்று அந்த நாயின் உரிமையாளரை பார்த்து இதற்கு பதில் சொல்லுங்க என கேட்டார்

ஆனால் அந்த ஆசாமியோ, தங்கள் நாய் அப்படிப்பட்டதல்ல என்றும் இந்த தெருவில் வேறு யாரும் இப்படி தங்கள் நாயின் மீது பழி கூறியதில்லை என்றும் ஆதாரம் இருந்தால் சமர்பிக்குமாறும் மிக அசட்டையாக அவளை பார்த்தான்.

இதற்கிடையில் அந்த தெருவில் நாய்கடி வரலாறுகளை ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள்.

இந்த பதிலை கேட்ட அந்த பெண் நாகரீகம் துறந்தார்.

பத்ரகாளியானார் .

நாயின் உரிமையாளரை நாயாக பாவித்து திட்ட ஆரம்பித்து விட்டார். கணவனுக்கு ஆதரவாக அவர் மனைவியும் தெருவில் இறங்கினார். சண்டையில் உபயோகப்படும் அத்தனை வார்த்தைகளும் அவர்களின் வாயில் தாண்டவமாடின.

பிறகு என்ன?

நாய் சண்டை தெருச்சண்டையானது.

மீண்டும் ஒரு நேரடி ஓளிபரப்பு தெருவாசிகளுக்கு

இதனை களேபாரத்திர்க்கும் காரணமான அந்த நாய் இவர்களின் சண்டையை பார்த்து மிரண்டு ஓடியது.

அதன் கண்களில் மிரட்சி. பயம்

';இவர்கள் என்ன மனிதர்கள் தானா. என்னை 'நாயே ' என்பவர்கள் , இப்படி பேயா நடந்து கொள்கிறார்களே! என்னை திட்ட இவர்களுக்கு என்ன யோக்கியதை?. மடையர்கள் ! '' என அதன் மனதில் எண்ண ஓட்டங்கள்.

நாய் இத்தனையையும் சிந்திக்கிறதா ?

ஆம். சிந்திக்கிறது .

மனிதன் நாயாக மாறும்போது, நாய் மனிதன் ஆகாதோ.

நீதி: மனிதர்களே !. நீங்கள் மனிதர்களாக இருங்கள். நாயாக, நரியாக, மாறி அவைகளிடம் மனித மானத்தை வாங்காதீர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் எங்கள் சாந்தி தெருவில் சென்ற வாரத்தில் அரங்கேறியவை. பெயரளவில் இருக்கும் சாந்தி, தெருவில் இல்லாததால் பெயர் மாற்றத்திற்கான பரிசீலனையில் உள்ளது.

கனவு



ஜீவா காந்தம்: உடலில் உள்ள உயிர் சக்தி துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளின் பெயர் ஜீவகாந்தம்.

உடலில் உள்ள உயிர் சக்தி துகள்களில் இருந்து வெளியாகும் ஜீவகாந்த அலைகள் அனைத்தும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பொதுவாக எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும், திண்மை உடைய பகுதி மத்தியில் போய் சேர்வதும், லேசான பகுதி புறத்தே போய் சேர்வதும் ' துல்லிய சமதளச் சீர்மை'. இந்த இயல்பின் படி ஜீவ காந்தத்தின் பெரும் பகுதி உடலின் மையப்பகுதிக்கு வந்து சேருகிறது. இந்த மையப் பகுதியே 'கருமையம் அல்லது ஆன்மா' என்று அழைக்கப்படுகிறது.

ஜீவகாந்தம் தன்மாற்றம் பெற்று செலவாகின்ற இடங்கள் பல. அவற்றில் பஞ்சேந்திரியமும் மனமும்(எண்ணமும்) அடங்கும். இந்த உலகில் தோன்றிய முதல் உயிரினத்தில் இருந்து இன்று வரை நாம் (அ) நம் முன்னோர்கள் ஆற்றிய செயல்கள் அனைத்துமே இந்த கருமையத்தில் பதிவாக பதிந்துள்ளன. இவையே அவ்வப்போது எண்ணகளாகி செயல்களாக மலர்கின்றது.

மனிதன் துங்கும் போது மன இயக்க செயல் அல்லது எண்ண ஓட்டங்கள் முழுமையாக நின்று போகாமல் சிறிய அளவில் ஏற்படுகின்ற காந்த கசிவு மின் கசிவாகி மூலையில் செயல் படும்போது கனவுகள் தோன்றுகின்றன. அதாவது கருமையத்தில் உள்ள பதிவுகள் எண்ணங்களாக , செயலார்வமாக மலர்ச்சி பெற்று விழிப்பில் (பகலில்) இருக்கும் போது இயங்குகின்றன.

இதே ஜீவகாந்த மின்கசிவு துங்கும் போது ஏற்பட்டால் இதை 'கனவு' என்று சொல்கிறோம். மூளையில் விழிப்பின் போது ஏற்படும் ஜீவகாந்த கசிவு எண்ணமாகிறதென்றால் அதே ஜீவகாந்த கசிவு தூக்கத்தில் ஏற்படும் போது கனவு என்று பெயர் பெறுகிறது. பகலில் எண்ணம். இரவில் கனவு. இத்தகைய கனவு தூக்கத்தில் மட்டும் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. விழிப்பு நிலையில் கூட நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது கூட கருமைய பதிவுகள் எண்ணங்களாக மலர்ச்சி பெற்றுக்கொண்டே இருப்பதை உணரலாம். இதை 'பகற்கனவு' என்று சொல்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப, உணவின் தரம் , மற்றும் குணங்களுக்கு ஏற்ப , அன்றாடம் அல்லது அவ்வப்போது மனம் ஈடுபட்டு செயல்படும் நிலைமைக்கு ஏற்ப, எண்ணங்களின் தன்மைகள் கனவின் தன்மைகளாக மாறும். எனவே கனவுக்கு தனியாக மதிப்பளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

Friday, September 3, 2010

டேக்ஸ் கட்டாத கோடீஸ்வரர்கள்.


சென்ற வாரத்தில் ஒரு நாள் அவினாசி பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ் ஏற சென்றேன். வேகமாக சென்று பஸ்ஸை நெருங்கும் போது ஒரு பிச்சைக்காரப் பெண் திடீரென குறுக்கே வந்து பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டாள்.

எனக்கு ஒரே எரிச்சல். 'சுத்த நாகரிகம்' இல்லாமல் குறுக்கே வந்து நிற்கிறாளே எரிச்சல் படுத்துகிராளே என்று.

சரிதான்.. பிச்சைக்காரர்களுக்கு ஏது நாகரிகம்?!

அவள் கையில் குழந்தை வேறு. அங்கு நிற்கும் அனைவரின் பார்வையும் என்மீதே இருப்பது போன்ற பிரமை. அவளுக்கு ஏதும் தராமல் முறைத்துக்கொண்டே பேருந்தில் ஏறினேன்.

ஓட்டுனர், நடத்துனரை காணவில்லை. சாவகாசமான பின் அவளை பார்த்தேன். வருவோரையெல்லாம் 'மடக்கி'கொண்டிருந்தாள். பரட்டை தலையுடன் கையில் குட்டி குழந்தை. பிச்சைக்காரர்களுக்கு வர்ணனை எதற்கு?. அவர்கள் தான் அனைவருக்கும் தெரிந்த 'பொது ஜனமாயிற்றே!'

இளம் வயது பெண். பாவம் காசு ஏதும் போட்டிருக்கலாமோ?

சிறிது நேரம் கழித்து டிரைவர் வந்தார். நடத்துனர் அப்பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். என்ன என்று எட்டிப் பார்த்தேன்.

நடத்துனர் கேட்பதற்க்கெல்லாம் அப்பிசைக்காரி 'கட்டுப்படாது' என்கிறாள். இவரும் விடுவதாக இல்லை. வாக்கு வாதம் போய்க்கொண்டே இருந்தது. போக போக நடத்துனர் அப்பிசைக்காரியிடமே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

நான் புரியாமல் டிரைவரை பார்த்தேன். அவருக்கோ ஒரே சிரிப்பு. நடத்துனர் அப்பெண்ணிடம் மல்லுக்கட்டிகொண்டிருந்ததை பார்த்து இவருக்கு வேடிக்கை போலும் .

''என்ன சார்?'' என்றேன் அவரிடம்.

''500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுட்டு இருக்கார். அந்த அம்மா கொடுக்க மாட்டேன்றது. அதான்'' என்றார்.

ஏனாம்?'' என்று கேட்டேன்.

''நேத்து வரைக்கும் 100 க்கு 5 ரூபா கமிசன் வாங்கிச்சு. இப்போ 7 ரூபா கேக்குது.''

என்ன, கமிசனா? '' என்றேன் ஆச்சர்யமாக.

''ஒரு நாளைக்கு 1000 ரூபா வரைக்கும் 'வசூல் பண்ணுது'. இங்க பஸ்சுல எல்லாம் சில்லறை தட்டுப்பாடு இருக்கிறதால, இவங்க கிட்ட சில்லறை வாங்க போட்டா போட்டி. யார் அதிகமா கமிசன் தராங்களோ அவங்களுக்கு காச தரும்'' என்றார் டிரைவர்.

' பிசினஸ் டீலிங் ' முடிந்து வெற்றி பெருமிதத்துடன் வந்தார் நடத்துனர்.

''ஒரு நாளைக்கு 1000 ம்னா.. மாசம் 30000 ரூபா. லீவு நாள்ள, விசேச நாள்ள எல்லாம் இன்னும் அதிகம். எப்படியும் 40000 ஆயிரம் வருமானம் இவங்களுக்கு. மதியம் வரைக்கும் ஆனா வசூல் தான் இந்த 500 '' என்றார் நடத்துனர்.

எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.

அரசு சுதாரிப்பது நல்லது. பிசைக்காரர்களிடன் வரி வசூலிப்பது நல்ல வருமானத்தை தர வல்லது.

நாமெல்லாம் மாதம் முழுக்க 'மாங்கு மாங்கென்று' வேலை செய்தாலும் 4 இலக்கத்தை தாண்டுவதே கனவாக இருக்கிறது. சிலருக்கு மட்டும் தான் அது.

நான் இப்போது அவளை பொறாமையுடன் பார்த்தேன்.

பிச்சை எடுப்பது நல்ல தொழில் போலவே !

என்ன கேவலமான தொழிலா? மானம் மரியாதையை என்னாவது என்கிறீர்களா?

நமது அ.உ.க்களும், மா.மி.க்களும் கூட இதை தான் செய்கிறார்கள். பெட்டி பெட்டியாக தலைமுறை தலைமுறைக்கும் சேர்த்து வைத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் என்ன கேவலமா பார்கிறார்கள்?

அவர்கள் தன்மானத்தோடு வாழவில்லையா?

என்ன அவர்கள் கெஞ்சி கேட்கிறார்கள். இவர்கள் அதட்டி கேட்டு பிடிங்கிக் கொள்கிறார்கள்.

அசல் பிச்சைக்காரர்களுக்கு அது தான் தொழிலே! இவர்கள் சம்பளமும் பெற்றுக்கொண்டி 'சைடு பிசினஸ்'

அவர்கள் அழுக்காகவும், சிலர் ஊனமுற்றும் இருப்பார்கள். இவர்கள் நல்ல கையும், காலும், முக்கும், முழியுமாகவே இருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நாகரிக மாந்தர்கள், நாளைய தலைவர்கள், நாமெல்லாம் லட்சியத் தலைவர்களாக நினைப்பவர்கள் எல்லாம் தன்மானம் இல்லாத போது, நாமேன் அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பானேன் !.

ஒரு நான்கு மாதம் மாறு வேஷத்தில் பிச்சையை முடித்துக்கொண்டு விட்டு பிறகு தன்மானம் வளர்க்கலாம்.

நாமும் நம் உயர் அதிகாரிகளிடமும் பயந்து பயந்து எத்தனை காலம் வாழ்வது. இவர்கள் எந்த அதிகாரிகளுக்கு பயப்பட வேண்டும்!.

அரசு அலுவலகங்கள் போவதென்றால் நம் மரியாதையை, தன்மானத்தை எல்லாம் வீட்டிலேயே மூட்டை காட்டி வைத்து விட்டல்லவோ செல்லவேண்டி இருக்கிறது !

வேஷம் தரித்து மறைந்து வாழ்வதில் உள்ள சுதந்திரம் எதில் உண்டு !